Advertisements

அழகே… என் ஆரோக்கியமே…

அழகியல் துறையின் அசைக்க முடியாத சிகிச்சை!
அழகியல் மற்றும் சரும நல மருத்துவத்துறைகளில் Platelet Rich Plasma Therapy என்கிற PRP முக்கிய பங்களிக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி, முகப்பொலிவு சிகிச்சை, முடி மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் இந்த சிகிச்சை இன்றியமையாதது. ரத்த அணுக்கள் அதிகம் உள்ள Platelets-ஐ தட்டணுக்கள் என்று அழைப்பார்கள்.இந்த செல்களின் முக்கிய வேலை நமக்கு அடிபடும்போது ரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுப்பது. அதனால்தான் சிறிது ரத்தம் வெளியேறியவுடன் தானாகவே அது நின்றுவிடும். வழக்கமாக ஒரு க்யூபிக் மில்லி மீட்டர் ரத்தத்தில் 4 லட்சம் வரை இந்த செல்கள் இருக்கும். டெங்கு காய்ச்சல் வரும் சிலருக்கு நோயின் வீரியம் அதிகம் இருந்தால், இந்த பிளேட்லெட்டின் அளவு மிக குறையும்போது, உடலில் பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிடும். அந்த அளவுக்கு நம் ரத்தத்தில் உள்ள ஒரு முக்கியமான செல் இது.

பிளேட்லெட் அதிகமுள்ள பிளாஸ்மா என்பது ஒருவரது ரத்தத்தில் இருந்தே அதை தயாரிப்பது. ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் ரத்தத் தட்டணுக்கள் இருக்கும். ஒருவரது ரத்தத்தை 8-10 ml எடுத்து ஒரு டெஸ்ட் ட்யூபில் விட்டு Centrifuge Machine-ல் அதை சுழல விடும்போது, அதனுடைய எடை Specific gravity-க்கு ஏற்ப அவை ஒவ்வொரு இடத்திலும் படியும். சிவப்பு ரத்த அணுக்கள் கீழே படியும்.
இடைப்பட்ட இடத்தில் வெள்ளை ரத்த அணுக்கள், எடை குறைவான பிளேட்லெட்ஸ்கள் Buffy Coat என்று சொல்லப்படும் வெள்ளையான இடத்தின் மேலே படியும். முதற்சுழற்சி மிதமாகச் செய்து, அடுத்த சுழற்சியை வேகமாகச் செய்யும்போது பிளேட்லெட்ஸ் கீழே ஒரு பட்டன்போல் படியும். மேலே உள்ள வெறும் பிளாஸ்மாவை நீக்கிவிட்டு கீழே உள்ள பிளேட்லெட்ஸை பிளாஸ்மாவில் கலந்து ஊசியின் மூலம் தேவையான இடத்தில் செலுத்துவதே இந்த சிகிச்சை. முதற்சுழற்சியில் பிளேட்லெட்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்வதை தவிர்க்க சோடியம் சிட்ரேட்டை சிறிது கலப்பார்கள்.
இரண்டாவது சுழற்சி முடிந்தபின் கால்சியம் க்ளோரைட் கலந்து பிளேட்லெட்ஸை கொஞ்சம் செயல்படுத்த ஏதுவாக செய்த பின்பு அதை ஊசியின் மூலம் செலுத்துவார்கள். இதை தயாரிப்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. வழக்கமாக ரத்தத்தில் உள்ளதைவிட பிளேட்லெட்ஸ் ஒன்றரை மடங்கிலிருந்து ஆறேழு மடங்கு வரை அதிகமாக தயாரிப்பது எப்படி என்ற ரீதியில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
Platelet Rich Plasma ( PRP) சிகிச்சையில் உள்ள விந்தைதான் என்ன?
வளர்ச்சிக் காரணிகள் (Growth Factors) இருப்பதால், செல்களின் மீளுருவாக்கத்துக்கு( Regeneration) மிகவும் உதவி புரிகின்றன. மெல்லிய ரத்தக் குழாய்கள் உருவாகவும், புதிய முடிகளின் வேர்கால்களை வளர வைக்கவும் பயன்படுகின்றன. மேலும், ரத்தக் குழாய்களின் உள்ளே Endothelial cells உருவாகவும் உதவுகின்றன.
தோலின் தொய்வை நீக்கி புது கொலாஜன் உருவாகவும் மற்றும் திசுக்களை தேவையான இடத்தில் உருவாக வைக்கின்றன. தோல் நோய் நிபுணர்கள் தவிர இந்த PRP சிகிச்சை முறை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு நோய் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பி.ஆர்.பி சிகிச்சை முதன்முதலில் 1970-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலியில் 1987-ம் வருடம் ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரியின்போது உபயோகப்படுத்தப்பட்டது. 2007-ம் வருடத்திலிருந்து இதைப் பற்றிய நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்த பின்னர், இப்பொழுது வரை மிக பிரபலமான சிகிச்சை முறையாக உள்ளது.
அழகியல் மற்றும் தோல் மருத்துவத் துறையில் இது பின்வரும் விஷயங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.முடி கொட்டுதலை கட்டுப்படுத்தவும், புதிய வேர்க்கால்களை உருவாக்கவும், ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் சிகிச்சையில், இளம் வழுக்கை வைத்தியத்திற்கு, பரு தழும்பு சிகிச்சைக்கும், முகத்தை பொலிவாக வைப்பதற்கும், நாட்பட்ட ஆறாத புண்களை ஆற வைப்பதற்கும் பி.ஆர்.பி பயன்படும்.
இளம் வழுக்கையால் பாதிக்கப்படுபவர்கள் ஆரம்ப நிலையிலேயே இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால் அவர்களது முடியின் வேர்க்கால்கள் சேதமாவதைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியை ஓரளவு வளர வைக்க முடியும். முடியின் வேர்கள் அழுத்தமாவதற்கு முன்பே இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது இது நன்கு பலனளிக்கும்.
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, ஓரிடத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிகளை தேவையான இடத்திற்கு மாற்றி வைக்கும் வரை, பாதிப்பு ஏற்படாமலிருக்க PRP சிகிச்சை உதவும். பரு தழும்பு சிகிச்சையில், பிளேட்லெட் ரிச் பிளாஸ்மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, தழும்பின் அடியில் ஊசியின் மூலம் செலுத்தும்போது பரு தழும்புகள் மறையும். தொழுநோய், நீரிழிவு போன்ற நோய்களில் ஏற்பட்ட ஆறாத புண்களை ஆற வைக்கவும் இந்த சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த சிகிச்சையின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒருவருக்கு PRP சிகிச்சை செய்யும்போது அவருடைய ரத்தமே அவருக்கு உபயோகப்படுத்தப்படுவதால், எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், ஊசிகள் நிறைய இடத்தில் போட வேண்டியிருக்கும். அந்த வலியை குறைக்கவும் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை வலி நீக்கும் களிம்புகளை போட்டு, அதன்பின்னர் ஊசி போடுவதால், வலியைக் கண்டு பயப்படத் தேவையில்லை.
மிதமான வீக்கம் சில நாட்கள் இருக்கும். ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் வரை வீக்கம் இருக்கலாம். அதற்கு சாதாரண பாராசிட்டாமல் மாத்திரையை சில வேளைகள் எடுத்துக் கொண்டாலே போதும்.இந்த PRP சிகிச்சையை Vampire face lift சிகிச்சை என்றும் அழைப்பார்கள். பி.ஆர்.பி சிகிச்சையைப் பொறுத்தவரை ஒரே முறையில் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காது. மற்ற செய்முறைகள் போல் 4-6 வார இடைவெளியில் 4 முதல் 6 தடவை வரை செய்தால்தான் முதலில் நாம் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்கும்.
அதன்பின் கிடைத்த விளைவுகளைத் தக்க வைத்துக்கொள்ள வருடங்களுக்கு 2 முதல் 4 முறையாவது செய்ய வேண்டியிருக்கும். ஆனால், மேற்கூறிய எந்த ஒரு பிரச்னைகளுக்கும் (எ.கா: பரு தழும்பு, இளம் வழுக்கை, ஆறாத புண்) இதை மட்டும் ஒரு சிகிச்சையாக செய்தால் பலன் கிடைக்காது. மற்ற மருந்து, மாத்திரைகளோடு சேர்த்து இதையும் பின்பற்றினால்தான் பலன் கிடைக்கும்.
முக்கியமாக இந்த விஷயத்தையும் நினைவில் கொள்ளுங்கள்… மருத்துவத்தில் உள்ள எல்லோருக்கும் எந்த சிகிச்சைமுறையும் ஒரே மாதிரி பலனளிக்காது. தனிப்பட்ட நபரின் உடல்நிலை, பரம்பரைத் தன்மை என பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

Advertisements
%d bloggers like this: