அறிவாலயத்தை ஆக்கிரமித்த ஆக்டோபஸ்கள்! – களம் இறங்கிய ஸ்டாலின்

ட்சியில் தி.மு.க இருந்தாலும் இல்லா விட்டாலும், அண்ணா அறிவாலயம் எப்போதும் பரபரப்பாகவே செயல்படும். ஆனால், இப்போது அங்கு ஓர் அமைதி நிலவுகிறது. செயல்தலைவர் ஸ்டாலின் சுழற்றிய சாட்டைதான், இந்த ஒட்டுமொத்த மாற்றத்துக்கும் காரணம்’’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.
தி.மு.க-வின் எந்த நிகழ்வாக இருந்தாலும் அது அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள்

கூட்டத்தை சமீபத்தில் முரசொலி அலுவலகத்தில் நடத்தினார் ஸ்டாலின். அதே போல், முக்கிய தி.மு.க நிர்வாகிகள் சந்திப்பை அறிவாலயத்தில் நடத்தாமல், தன் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடத்திவருகிறார். இதற்குப் பின்னணியில் சொல்லப்பட்ட காரணம், ‘அறிவாலயத்தில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அது உடனடியாக வெளியே கசிந்துவிடுகிறது’ என்பதுதான். இதனால், தன் டிரைவர் பாலுவை அதிரடியாக நீக்கினார் ஸ்டாலின். ஆனால், பாலுவைத் தாண்டிய பலர் அறிவாலய வளாகத்தில் இருக்கிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “அண்ணா அறிவாலயத்தின் நிர்வாகப் பொறுப்பில் பத்மநாபன், ஜெயக்குமார் ஆகியோர் உள்ளனர். அறிவாலயத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவருகிறார் ஜெயக்குமார். பத்மநாதனும் நீண்டகாலமாக அங்கு பணிபுரிகிறார். ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் கட்சிப் பொறுப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்தவர் ஜெயக்குமார்.
2015-ல் நடைபெற்ற கட்சியின் உள்கட்சித் தேர்தலுக்கு மாவட்டவாரியாக ஒரு தேர்தல் குழு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில் ஜெயக்குமாருக்கு வேண்டப்பட்ட நபர்களே அதிகம் இடம்பெற்றனர். அங்கிருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. தோல்வி குறித்து ஆராய ஒரு குழுவை ஸ்டாலின் நியமித்தார். அந்தக் குழு கொடுத்த பரிசீலனைகளில் முக்கிய விஷயம், ‘நிர்வாகிகள் தேர்வில் தவறு நடந்துள்ளது’ என்பதுதான். அதன் தொடர்ச்சியாக, மாவட்டவாரியாக புகார்கள் அறிவாலயத்துக்குக் குவிய ஆரம்பித்தன. அவற்றில் பல புகார்கள், ஸ்டாலின் பார்வைக்கே செல்லாமல் தடுக்கப்பட்டன. ஜெயக்குமாரும், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் இதைச் செய்தார்கள். ஸ்டாலின் டிரைவர் மாற்றப்பட்டதற்கும், இந்தக் கூட்டணியுடன் அவர் தொடர்பில் இருந்ததும் ஒரு காரணம்’’ என்றனர்.
பிறகு ‘கழக உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு’ சந்திப்புகளை நடத்திய ஸ்டாலின், சில மாவட்டங்களில் நிர்வாகிகளைக் களையெடுத்தார். அவரால் களையெடுக்கப்பட்டவர்கள் பலர், 2015-ல் ஜெயக்குமார் ஆட்களால் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள். 

ஆனால், இவர்களை நீக்கிவிட்டுப் புதிதாக ஸ்டாலினால் நியமிக்கப்பட்டவர்கள் பலரும் மாவட்டச் செயலாளருக்கு வேண்டியவர்கள் என்பதும் இப்போது பிரச்னை கிளப்பியிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஒருவரை ஸ்டாலின் நீக்கினார். அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்புக்கு வந்திருப்பவர், மாவட்டச் செயலாளரின் டிரைவர். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் ஒரு மாவட்டச் செயலாளரின் மருமகனின் பொறுப்பு பறிபோனது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சந்தோஷப்பட முடியவில்லை. அதற்குப் பதிலாகத் தன் மகனுக்குப் பொறுப்பு வாங்கிக் கொண்டார் அந்த மாவட்டச் செயலாளர். சிவகங்கை மாவட்டத்தில் தனக்கு ஆகாத ஒன்றியச் செயலாளரின் பதவியைப் பிடுங்கி, தன் நண்பருக்குக் கொடுத்துள்ளார் மாவட்டச் செயலாளர். ஸ்டாலின் நடத்திய சந்திப்புகளின்போது வந்த புகார்களின் அடிப்படையில் நிர்வாகிகள் நீக்கமும் நியமனமும் இல்லாமல், மாவட்டச் செயலாளர்களின் ஆட்களே பதவிகளைப் பெற்றிருப்பது, பல மாவட்டங்களில் தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றைச் சிலர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டுபோனார்கள். ‘எங்கோ தப்பு நடக்கிறது’ என்று புரிந்துகொண்ட ஸ்டாலின், அதன்பிறகு தான் அறிவாலயத்தில் ஜெயக்குமாரின் பணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டு, அந்தப் பணிகளை ஓ.எம்.ஜி குரூப் மூலம் செய்ய ஆரம்பித்துள்ளார். புகார்களைப் பெறுவது, அதை ஸ்டாலின் பார்வைக்கு வைப்பது போன்ற வேலைகளை இப்போது அந்தக் குழு செய்ய ஆரம்பித்துவிட்டது. ‘அறிவாலயத்தில் இனி முக்கியக் கூட்டங்களை நடத்த வேண்டாம்’ என அந்தக் குழு ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகக் கட்சியின் எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்துள்ள ஜெயக்குமாரை அறிவாலயத்தைவிட்டு நீக்க முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு தவிக்கிறார் ஸ்டாலின்.
இந்த ஓ.எம்.ஜி குரூப்புக்கு, அன்பகம் கலை ஆலோசனை வழங்குகிறார். ‘‘அதிலும் சில குறைபாடுகள் உள்ளன. கலை தனக்கு வேண்டியதை இந்த குரூப் மூலம் சாதித்துக்கொள்கிறார்’’ என்று கிசுகிசுக்கிறார்கள். அறிவாலய மாற்றங்கள் குறித்து அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். ‘‘கட்சி நிர்வாகிகள்மீதான புகார்களைக் காலையிலும் மாலையிலும் ஸ்டாலினே நேரடியாக வாங்குகிறார். அப்படி இருக்கும்போது, புகார்கள் அவர் கைக்குப் போவதை நான் எப்படித் தடுக்க முடியும்? அவற்றை விசாரிக்க வேண்டியது மட்டுமே எங்கள் வேலை. ஸ்டாலினை யாரும் ஏமாற்ற முடியாது’’ என்றார் அவர். ஜெயக்குமாரிடம் பேசியபோது, ‘‘நான் இங்கு ஓர் ஊழியர். கட்சி விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. இந்தப் புகார்கள் எல்லாமே தவறானவை’’ என்றார். 
‘‘மாவட்டங்களில் களையெடுப்புக்கு முன்பாக அறிவாலயத்தின் ஆக்டோபஸ்களை ஒதுக்க வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். ஆட்சியைப் பிடிப்பது பற்றி அதன்பிறகே யோசிக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து விட்டார்’’ என்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள் சிலர்.

%d bloggers like this: