Advertisements

உருகும் உணர்வு நிமிடங்கள்!

ள்ளிரவில் கழுகாரிடமிருந்து போன். ‘‘கோபாலபுரத்தில் இருக்கிறேன்’’ என்றார் சுருக்கமாக. பின்னணியில் சைரன் ஓசைகள் ஒலித்து, நிலவரத்தை உணர்த்தின.
‘‘சொல்லுங்கள்’’ என்றோம்.
‘‘ஜூலை 26-ம் தேதி கோபாலபுரமே தி.மு.க தொண்டர்களின் உணர்வுக்குவியலில் தத்தளித்தது. ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு கூடிக்கொண்டிருந்தது. கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக எழும் வதந்திகளை மறக்கடிக்கச் செய்வதற்காக ஸ்டாலின் ஒரு விஷயத்தைச் செய்தார். 1969 ஜூலை 27-ம் தேதி

தி.மு.க-வின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். தொடர்ச்சியாக அந்தத் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஜூலை 27-ம் தேதி இந்த பொன்விழாவைக் கொண்டாடுமாறு ஸ்டாலின் அழைப்புவிடுத்தார். ஆனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து 26-ம் தேதி மாலை ஏழு மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை, நிலைமையையே தலைகீழாக மாற்றிவிட்டது.’’
‘‘ஏன் இந்த அறிக்கை?’’
‘‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து பலரும் விசாரிக்க ஆரம்பித்ததுதான் இந்த அறிக்கை வெளியாகக் காரணம். நேரில் வந்து பார்க்கலாமா என தலைவர்கள் பலர் ஸ்டாலினுக்கு போன் செய்து கேட்டனர். இதனால்தான் இப்படி ஓர் அறிக்கையை வெளியிடச் சொன்னார் ஸ்டாலின். ஆனால், அதுவே பரபரப்பை ஏற்படுத்தி, பல தலைவர்களை கோபாலபுரத்துக்கு வரவழைத்துவிட்டது.’’

‘‘என்ன ஆனது கருணாநிதிக்கு?’’
ஜூலை 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குச் சென்று, தொண்டையில் இருக்கும் ட்ரக்கியாஸ்டமி குழாயை மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் கருணாநிதி. அன்று இரவு அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. ட்ரக்கியாஸ்டமி மாற்று சிகிச்சையின்போது அவருக்கு மயக்க மருந்து தரப்பட்டது. அந்த மயக்கம் முழுமையாகத் தெளியவில்லையாம். சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றால், ஜூலை 25-ம் தேதி இரவு கடுமையான காய்ச்சல். கொஞ்சம் கூட அனல் குறையாததால், எல்லோரும் பதறிவிட்டனர். கருணாநிதியின் ஆஸ்தான டாக்டர்கள் வந்து பரிசோதித்தனர். டாக்டர் மோகன் காமேஸ்வரன் வெளிநாட்டில் இருந்தார். அவர் ஜூலை 26-ம் தேதி சென்னை வந்ததும், ஒரு மருத்துவர் குழுவுடன் வந்து பரிசோதித்தார். கருணாநிதியின் இதயத் துடிப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், நுரையீரலில் பிரச்னை உள்ளது. அதனால், மூச்சிரைப்பு ஏற்படுகிறது.’’
‘‘அடடா!’’
‘‘பேசமுடியாத நிலையிலும், தினமும் காலையில் தயாராகி, தன் நாற்காலியில் அமர வைக்கப்படுவார் கருணாநிதி. எதிரே இருக்கும் டி.வி-யில் செய்திகளோ, காட்சிகளோ ஓடிக்கொண்டிருக்கும். அவருக்கு எதைப் பார்க்கப் பிடிக்கும் என்பது உதவியாளர்களுக்குத் தெரியும். அதற்கு ஏற்றபடி சேனல்களை மாற்றிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இம்முறை மருத்துவமனைக்குப் போய் வந்தபிறகு அவரால் உட்கார முடியவில்லை. அடிக்கடி நினைவு தப்பிவிடுவதால், பெரும்பாலான நேரம் படுத்த படுக்கையில்தான் இருக்கிறார். அதனால், அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. வந்த சிலரையும், கீழ்தளத்திலேயே உட்காரவைத்துப் பேசி திருப்பி அனுப்பிவிட்டார்களாம். ‘நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், பார்வையாளர்கள் வருவதை டாக்டர்கள் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று காரணம் சொன்னார்களாம். டாக்டர்களும் மருத்துவப் பணியாளர்களும் மட்டுமே கருணாநிதி இருக்கும் அறைக்குப் போக முடிந்தது. இந்த சூழலில் வெளியான கருணாநிதியின் மருத்துவ அறிக்கை, பலரையும் பதறவைத்துவிட்டது.’’
‘‘அங்கே சூழல் எப்படி இருந்தது?’’
‘‘வதந்திகள் பரவத் தொடங்கியதும் கோபாலபுரம் முழுவதும் தொண்டர்களால் நிரம்பியது. ‘கலைஞரே மீண்டு வா’ என்ற தொண்டர்களின் கோஷம் கோபாலபுரத்தையும் தாண்டி ஒலித்துக்கொண்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக வந்திருந்த தொண்டர்கள் பலர் கதறி அழுதார்கள். சிலர், ‘கருணாநிதிக்கு ஒன்றும் ஆகாது’ என்று அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறியபடி இருந்தார்கள். ‘கலைஞர் நலமாகத்தான் இருக்கிறார். ஒன்றும் ஆகாது’ என்று சொல்லிய அரசியல் தலைவர்களின் முகம் வெறிச்சோடி இருப்பதைப் பார்த்த பெண் தொண்டர்கள் பலர் சத்தமாகவே அவர்களைக் கேள்வி கேட்டார்கள். ‘எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லிட்டுப் போங்கய்யா… நீங்க மௌனமா கெளம்பி போறதுதான் எங்களுக்கு பயமா இருக்கு’ என தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்கள்.’’

‘‘கருணாநிதி வீட்டுக்குள் நிலைமை எப்படி இருந்தது?’’
‘‘எப்போதும் கருணாநிதியை சந்தித்துவிட்டு சீக்கிரமாகவே தன் ஆழ்வார்பேட்டை வீட்டுக்குக் கிளம்பிச் செல்லும் ஸ்டாலின், இரவு 11.30 மணி வரை கோபாலபுரம் வீட்டில் இருந்ததுதான் அனைவரின் பயத்துக்கும் முக்கிய காரணம். வீட்டுக்குள் ஸ்டாலினுடன் முரசொலி செல்வம், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் இருந்தனர். கருணாநிதியைப் பார்க்க அந்த இரவில் முதலில் வந்தவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கொஞ்ச நேரத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி சகிதமாக வந்தார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். வீட்டின் கீழ்தளத்தில் இருக்கும் ஹாலில் ஸ்டாலினுடன் அவர்கள் உரையாடியதை வெளியிருந்து பலரும் பார்க்க முடிந்தது. அந்த உரையாடலில் தெரிந்த இறுக்கம், சூழலின் தீவிரத்தை உணர்த்தியது. ஸ்டாலினிடம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது அந்த நால்வரும் அமைதியாகவே இருந்தனர். அவர்களை வழியனுப்பவந்த ஸ்டாலின் முகமும் கவலை தோய்ந்து காணப்பட்டது. அடுத்தடுத்து வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் போன்றவர்களும் இதேபோலவே திரும்பி வந்தார்கள். யாருமே மாடிக்குப் போய் கருணாநிதியைப் பார்க்க முடியவில்லை. மாடியில் டாக்டர்கள் இருந்துகொண்டு சிகிச்சை தருவதாக சொல்லப்பட்டது.’’
‘‘ஓஹோ…’’   
‘‘கடைசியாக கமல்ஹாசனை வழியனுப்பிவிட்டு, சிறிது நேரத்தில் ஸ்டாலின் கோபாலபுரத்திலிருந்து கிளம்பினார். கிளம்பும்போது ‘கருணாநிதி நலமுடன் இருக்கிறார்’ என சொன்ன ஸ்டாலின், வெளியில் நின்றிருந்த நிர்வாகிகளிடமும் பேசினார். ‘தலைவர் நன்றாக இருக்கிறார் என்ற தகவலைச் சொல்லி, தொண்டர்கள் அனைவரையும் கலைந்து செல்லச் சொல்லுங்கள். அவர்கள் இங்கு இருந்தால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்படும்’ என ஸ்டாலின் சொல்லிவிட்டுப்போனார். இதை நிர்வாகிகள் எடுத்துச் சொல்லியும், ‘கலைஞர் பற்றிய விவரம் தெரியாமல் எங்களால் இங்கிருந்து நகர முடியாது’ என தொண்டர்கள் உறுதியாக நின்றிருந்தனர். இதைத் தொடர்ந்து வீடு முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு, தொண்டர்களைக் கலைந்து போகச் சொன்னார்கள். அப்படியும் பலரும் அங்கேயே இருக்க, இரவு 12 மணிவாக்கில் வீட்டின் கேட் பூட்டப்பட்டு, அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டனர். கோபாலபுரத்துக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய நபர்கள் உள்ளே போவதை போலீஸ் தடுத்தது. ஆனால், ஏற்கெனவே அந்தத் தெருவில் இருந்த தொண்டர்கள் பலரும் நகராமல் இரவு முழுவதும் அழுதபடியே இருந்தனர்’’ என்ற கழுகார், ‘‘பேட்டரி சார்ஜ் தீரப்போகிறது’’ என்று சொல்லும்போதே தொடர்பு அறுந்தது.

Advertisements
%d bloggers like this: