Advertisements

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்… இரு மடங்காக உயர்த்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் தொகை!

டந்த 1.4.2014 அன்று துவங்கி 30.6.2018 உடன் முடிவடைந்துவிட்டது தமிழக அரசு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கான ‘புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – 2014.’ இதற்குப் பதிலாக, கடந்த 1.7.2018 முதல் 30.6.2022 வரைக்குமான நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு புதுப்பலன்களைக் கொண்டு வந்துள்ளது ‘புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் – 2018.’

இந்தத் திட்டத்தின் பயன்கள்

* காப்பீட்டுக் காலமான நான்கு ஆண்டுகளுக்கு இதற்குமுன் கிடைத்த மருத்துவ உதவி (Medical Assistance) ரூ.  2 லட்சம் மட்டுமே. புதிய திட்டத்தில் இதன் மருத்துவ வசதி ரூ. 4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

 

* ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கும் மட்டுமே பயன் தந்துவந்த  இந்தத் திட்டமானது உடற்குறை உடைய ஓய்வூதியதாரரின் மகன் மற்றும் மணமாகாத மகளுக்கும் பயன்தரும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வகையான உடல் நலமின்மை, வாழ்வாதாரத்துக்குச் சம்பாதிக்க முடியாதபடி மனநலமின்மை, உடல் ஊனம் அல்லது பிற வகை இயலாமைகள் இருப்பவர்களும் மருத்துவ வசதி பெறலாம்.

* மணமாகாத / விவாகரத்தான / விதவையான ஓய்வூதியதாரரின் மகளுக்கும் சில நிபந்தனை களுடன் பொருந்தும்.

* அறுவை சிகிச்சை, கெமோதெரபி, ரேடியோ தெரபி, இம்யூனோதெரபி போன்ற உயிருக்கு ஆபத்தான அனைத்து சிகிச்சைகள்.

* ஈரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகள்.

* காம்ப்ளெக்ஸ் ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை போன்றவை.

* தீக்காயம் பராமரிப்பு போன்ற பல சிகிச்சைகள் செய்துகொள்வதற்கும் கிடைக்கும்.இத்துடன், விபத்துக்கான அவசரச் சிகிச்சைக்கும் திட்டமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கண்புரை அகற்ற

இந்தத் திட்டத்தின் மூலம் பலவகையான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மருத்துவ உதவி பெற அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், மூத்த குடிமக்கள் எல்லோருக்கும் பொதுவான கண்புரை சிகிச்சைக்கான வரம்பு ரூ.15,000 -லிருந்து ரூ.20,000 உயர்ந்துள்ளது. கர்ப்பப்பை அகற்றுவதற்கு ரூ.40,000 வரையும் மருத்துவ உதவி உயர்ந்துள்ளது.

எந்த மருத்துவமனையில்..?

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, திருவனந்தபுரம், டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை உட்பட மொத்தம் 913 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.  பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளிலும் இதற்கான சிகிச்சைகளைப் பெறலாம்.

மாதச் சந்தா எவ்வளவு?

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி  பொறுப்பேற்றுள்ள இந்தத் திட்டத்துக்கு ஜூன் 2018 வரையான மாதச் சந்தா ரூ.150, ஜூலை 2018 முதல் ரூ.350 வீதம் சந்தா தொகை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.

தமிழக அரசு ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதிய தாரர் அல்லாமல், உள்ளாட்சிகள், சட்டப்பூர்வ கழகங்கள் (Statutory Boards) தமிழக அரசு பொறுப் பேற்று நடத்தும் பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் திட்டத்தை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

மேலும், தன் நிறுவன நிதியிலிருந்து ஓய்வூதியம்  / குடும்ப ஓய்வூதியம் வழங்கிவரும் மாநில அரசின் இதர நிறுவனங்களும் பங்கு பெறலாம். ஆனால், நிறுவனப் பங்குத் தொகையை நிறுவனமே செலுத்த வேண்டும்.

Advertisements
%d bloggers like this: