Advertisements

காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்லை?

காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?’ எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது.

”காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்லை?” - #CauveryFAQs

காவிரியில் தண்ணீர் வராதபோது, ‘கர்நாடகக்காரன் அரசியல் பண்றான்’ என்றும், மழை மொழிந்து அதிகமாக தண்ணீர் வரும்போது, ‘வீணாக காவிரி நீர் போய் கடலில் கலக்கிறது’ என்றும் தமிழகத்தில் பரவலாக பேசப்படும். மூன்று வருடம் கழித்து, இப்போது தென்மேற்கு பருவமழை சக்கைப்போடு போட்டதின் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை அடைந்து, காவிரியில் இருகரைகளை தொட்டுக் கொண்டு தண்ணீர் போகிறது. இப்போதும்,’காவிரியின் உபரி நீர் வீணாக போய் கடலில் கலக்க போவுது’ என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில், “கடல்தான் மழைக்கான ஆதாரம். இப்போது தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பெய்ததால்தான், மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இவ்வளவு தண்ணீர் செல்கிறது. அப்புறம், கடலில் உபரி நீர் ‘வீணாக’ கலக்குதுன்னு சொல்றது கொடுமை. கடலுக்கு போகும் தண்ணீரை ‘வீண்’ என்று சொல்பவர்கள் தண்ணீரை வியாபாரமாக்குபவர்கள்; வீண் என்ற சொல் அத்தகையவர்களின் பொருளாதார சொல்லாடல்” என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் வெடிக்கிறார்கள்.

காவிரி

இதுபற்றி,நம்மிடம் பேசிய நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், “இப்படி  ‘காவிரி நீர் வீணாகக்  கடலில் கலக்கிறது ‘ன்னு பேசும் ஆள்கள் விபரம் தெரியாத, இயற்கையின் சுழற்சியை அறியாதவர்கள். ஆற்று நீர் கடலில் கலப்பது  ‘வீண் ‘ என அவர்கள் எந்த அடிப்படையில் பேசுகிறார்கள் .? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வீண். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீர் காலம் காலமாகப் பயணித்து கடலில் கலந்ததைத் தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல், அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது எனச்  சொல்ல தொடங்கியது நாம்தானே? அது கடலில் கலப்பது வீண் எனச்  சொல்வது அறியாமைதான் அது அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதையாக மாறிபோகும். காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும். ஆனால், காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டு வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து, வண்டல் மண் டெல்டாவில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது.

ஒவ்வொரு கடலிலும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியைச் சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆறுகளின் நீர்தான். அதைவிட முக்கியமாகக் கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும். இதற்கு எடுத்துக்காட்டு சீனா. சீனா நாட்டில் உள்ள மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணை. அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சளற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன கொடும் நிகழ்வு நடந்திருக்கு. நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதைச் சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியைக் கடலுக்கே விட்டுவிடுகிறது” என்றார்.

அடுத்து பேசிய, தற்சார்பு விவசாயிகள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன், “காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்கும் சொந்தமானது. நாமும் இயற்கையின் ஓர் அங்கம். நாம் மட்டுமே அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர்ச் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கைச் சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை. 

காவிரி தீர்ப்பில்கூட,’10 டி.எம்.சி தண்ணீர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வெறுமனே ஆற்றில் போகனும்’ன்னு என்ற உத்தரவு சொல்லப்பட்டிருக்கு. அதில், அதிகமாகத் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது என்பது நமக்கு நாமே வெட்டிக் கொள்கிற சவக்குழி. அப்படி தடுப்பணைகள் கட்டி அவ்வளவு நீரை நாம் என்ன செய்ய முடியும்? கீழப்பவானி வாய்க்காலில்கூட 2300 கன அடி தண்ணீரைத்தான் கொண்டு போக முடியுது. எல்லா காவிரி கிளை வாய்க்கால்களிலும் அதிகபட்சம் இருபதாயிரம் கன அடி நீரைத் கொண்டு போக முடியும். 50 ஆயிரம் கன அடி நீரை, எங்கு நாம் தேக்குவது? கடலுக்குச் செல்லும் தண்ணீரை வீண் என்பது நுகர்வு கண்ணோட்டம். 

கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கு, ஆனால், நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறது என்கிறார்கள். முதலில் ஒரு அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும். அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும், நம் மேட்டூர் அணையும் அப்படி கட்டப்பட்டதுதான். மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்டமுடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் ,நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களைக் காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

ஆனால்,’காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?’ எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரைத் தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என நான்காகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை. அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் ஆறு வெள்ள நீர் எவ்வளவு திறக்கப்பட்டாலும் தாங்கும். அந்த வெள்ளநீரைப் பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி. காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி. நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால், மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது. அதனால்,நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாப்பது மட்டும்தான். இங்கிருக்கும் ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர். ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர். அதனால், ‘கடலில் வீணாகக் காவிரி நீர் கலக்கிறது’ என்று சொல்லும் தண்ணீரை வியாபாரமாக்கும் பன்னாட்டுக் நிறுவனங்களின் உளறலை நாமும் செய்யக்கூடாது” என்று முடித்தார்.

Advertisements
%d bloggers like this: