Advertisements

பன்னீர் VS பழனிசாமி… பதவிச்சண்டையில் புது இன்னிங்ஸ்

காவேரி மருத்துவமனையில் இருக்கிறேன்’ என்ற கழுகார், வாட்ஸ் அப் மூலம் சில செய்திகளை அனுப்பியிருந்தார்…
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு மத்திய அரசின் உளவுப் பிரிவான ஐ.பி., தமிழக சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பல ஐ.பி அதிகாரிகள் உள்ள நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்பான ரிப்போர்ட்களை அனுப்புவதற்காக எஸ்.பி லெவலில் உள்ள அதிகாரி ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்துள்ளனர். அந்த சிறப்பு அதிகாரி, ‘ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், தி.மு.க தொண்டர்கள் தரப்பிலிருந்து பெரிய அளவில் சச்சரவுகள் வராது’ என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார் அவர். 

புல்லட் பரிமளம், டி.டி.வி.தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச வந்தாரா, அல்லது கொடும்பாவி கொளுத்த வந்தாரா என்பது குறித்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது. அ.ம.மு.க-வின் காஞ்சிபுரம் நகரச் செயலாளராக இருந்த இவர், அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர். ஜெயலலிதா காலத்தில் மூன்று முறை பரிமளம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருந்தும், தினகரன் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த நிலையில், மாவட்டச் செயலாளர் மொளச்சூர் பெருமாளுக்கும் பரிமளத்துக்கும் பிரச்னை. கட்சியின் மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் முன்னிலையில் மாவட்டச் செயலாளருடன் தகராறு செய்தாராம் பரிமளம். தகவல் தெரிந்து, பரிமளத்தைக் கட்சியிலிருந்து நீக்கினார் தினகரன். அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடந்தது.
மறுநாள் ஜூலை 30-ம் தேதி காலை 11 மணிக்கு தினகரன், வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றார். அவர், புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போகிறார் என்று கட்சியினர் பேசிக்கொண்டனர். ஆனால் தினகரன், கமிஷனர் ஆபீஸ் போகாமல் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டார். பிறகு வெற்றிவேல் மட்டும் போய், தினகரன் குடும்பத்துக்குப் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். இந்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் ‘தேவை இசட் பிளஸ் பாதுகாப்பு..!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்துள்ளது. தினகரன் வீட்டு சம்பவத்துக்கும் இந்தக் கோரிக்கைக்கும் முடிச்சுப்போடுகிறது போலீஸ்.

 

தமிழகம் முழுவதும் போய்க் கூட்டங்கள் நடத்தினாலும், சொந்த ஊரான மன்னார்குடியில் அவரால் கூட்டம் நடத்த முடியவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அறிவித்து, போலீஸ் தடை விதித்துவிட்டது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போய் உத்தரவு வாங்கி, ஆகஸ்ட் 5-ம் தேதி மன்னார்குடியில் பேசவிருக்கிறார் தினகரன். ஒரு பக்கம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இன்னொரு பக்கம் திவாகரன் என இருவரையும் என்ன விமர்சனம் செய்வாரோ என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில்.
அ.தி.மு.க-வில் புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தினகரன் தரப்பு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவித்ததும் அ.தி.மு.க.-வும் சுறுசுறுப்பாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியை ஆரம்பித்தது. முதலில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடைபெற்றுள்ளது. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தரும் முனைப்பில் இருந்துள்ளார். ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லையாம். முருகையா பாண்டியன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர், ‘பிரிந்து சென்றவர்களுக்கு முக்கியப் பொறுப்பு கொடுப் பதாக இருந்தால், நாங்கள் தினகரன் அணிக்கே சென்றிருப்போமே’ என எகிறியுள்ளனர். இதனால், பொறுப்பாளர்கள் நியமனத்தில் ஆரம்பமே சிக்கலாகியுள்ளது.

ஜூலை 29-ம் தேதி இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலிருந்து சென்னை திரும்பினார். அவர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியைப் பார்க்கிறார் என்று தகவல் பரவியது. இதனால், காவேரி மருத்துவமனைக்குச் செல்லும் ஆவலில் இருந்த நான்கு பேர், ஒரு பிளான் செய்தனர். விமான நிலையத்திலிருந்து முதல்வரின் கார் அணிவகுப்பு வந்தபோது, அதில் இணைந்துவிட்டனர். ஆனால், முதல்வர் நேராக தன் வீட்டுக்குப் போனார். இரவு நேரத்தில் எதுவும் தெரியாமல், இவர்களும் கூடப் போயுள்ளனர். முதல்வர் வீட்டை அடைந்ததும் இந்தப் பாதுகாப்பு விதிமீறலைப் பார்த்துப் பதறிய பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களைக் கைது செய்தனர். ‘‘முதல்வரின் பயணத்தின்போது சில நிமிடங்கள் போக்குவரத்தை நிறுத்துகிறோம். ஆனால், காஸ்ட்லி பைக்குகளில் வரும் சில இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிக்னலில் நின்றாலும், மீண்டும் போக்குவரத்தை அனுமதித்ததுமே தாறுமாறான வேகத்தில் வந்து, முதல்வரின் கார் அணிவகுப்பை அவர்கள் நெருங்குகிறார்கள். அடிக்கடி இப்படி நடக்கிறது’’ என்று முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அதிர்ச்சியுடன் சொல்கிறார்.
காவேரி மருத்துவமனையின் நான்காவது மாடியில் கருணாநிதி சிகிச்சை பெறுகிறார். குடும்ப உறவுகள், சீனியர் தலைவர்கள் சிலருக்கு மட்டுமே அந்தத் தளத்துக்குச் செல்ல அனுமதியளித்துள்ளார் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் பலர் கீழ்தளத்திலேயே உள்ளனர். ஆனால், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமான ஓ.எம்.ஜி குரூப் இளைஞர்கள், பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி போன்றவர்கள் சர்வசாதாரணமாக நான்காவது தளத்துக்குப் போவதும் வருவதுமாக உள்ளனர். இதைப் பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் புலம்பியுள்ளனர். கீழே தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் பலரும், அழகிரி வரும்போது, அவர் பின்னால் படையெடுத்ததையும் பார்க்க முடிந்தது.
கருணாநிதிக்கு நான்கைந்து விதமாக ஆன்டி பயாடிக் மருந்துகளை மாற்றி மாற்றித் தந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அவற்றில் ஒன்று நல்ல முன்னேற்றம் தந்ததால், ‘மேலும் சில நாள்களுக்கு அவருக்குப் பிரச்னை இல்லை’ என டாக்டர்கள் நம்பிக்கை தந்தார்கள். முதல்வர் போய்ப் பார்த்தபோது, ‘‘செயற்கை சுவாசம் இல்லாமல், அவர் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து, இப்படி நிலையாக இருப்பதே ஆச்சர்யமான விஷயம்’’ என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

Advertisements
%d bloggers like this: