கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள் 

கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலி (What is Ovulation Pain?)

சில பெண்களுக்கு சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் சமயத்தில் வயிற்றின் ஒரு புறம் வலி ஏற்படுவதுண்டு. இது மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படுவதால், இதனை மிட்டல்ஸ்மெர்ஸ் (ஜெர்மன் மொழியில் ‘நடு வலி’ என்று பொருள்) என்றும் அழைப்பர். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் கொண்டது எனில், இந்த வலி 14வது நாள் ஏற்படும்.

பெண்களில் சுமார் பாதி பேருக்கு, வாழ்வில் ஒருமுறையேனும் கருமுட்டை வெளியிடப்படும்போது தோன்றும் இந்த வலி ஏற்பட்டிருக்கும். சுமார் 20% பெண்களுக்கு எல்லா மாதங்களும் இந்த வலி இருக்கும். இது மாதவிடாயுடன் தொடர்புடைய ஒரு சாதாரண நிகழ்வு தான்.

கருமுட்டை வெளியிடப்படும்போது ஏன் வலி ஏற்படுகிறது? (Why does ovulation pain happen?)

இதற்கான துல்லியமான காரணம் என்னவென்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சினைப்பையின் சுவரைத் துளைத்துக்கொண்டு முட்டை வெளிவரும்போது, சிறிதளவு திரவம் அல்லது சிலசமயம் இரத்தம் வந்து அது அருகிலுள்ள நரம்புகளில் எரிச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்த வலி உண்டாகக்கூடும் என்று கருதப்படுகிறது. முட்டை உடனே வெளியேறியவுடன் அல்லது உடல் அந்தத் திரவம் அல்லது இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டவுடன் வலி மறைந்துவிடுகிறது.

இந்த வலியின் அறிகுறிகள் (What are the symptoms of ovulation pain?)

இந்த வலி மந்தமான, தசைப்பிடிப்பு போல் இருக்கலாம் அல்லது திடீரென்று தோன்றும் குத்தும் வலி போல் இருக்கலாம். சில நிமிடங்கள் வரை இருக்கலாம் அல்லது ஓரிரு நாள் நீடிக்கலாம்.

வலியானது, வயிற்றின் வலது மற்றும் இடது சினைப்பைகளில் எது கருமுட்டையை வெளியிடுகிறதோ, அதற்கேற்ப ஏதேனும் ஒரு பக்கத்தில் ஏற்படக்கூடும்.

கருமுட்டை வெளியீட்டினால் ஏற்படும் வலி என்பதை எப்படிக் கண்டுகொள்வது? (How to recognise that the pain is due to ovulation?)

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளுக்குப் பிறகு வரும் இரண்டு வாரங்களில், அதாவது மாதவிடாய் சுழற்சியின் மத்தியில் வலி ஏற்பட்டால், அது கருமுட்டை வெளியிடப்படுவதால் ஏற்படும் வலி என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். வழக்கத்தை விட குறைந்த அல்லது நீண்ட மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்கு, மாதவிடாய் தொடங்குவதற்கு சுமார் 14 நாட்களுக்கு முன்பு வலி ஏற்படலாம்.

இந்தப் பிரச்சனையை உறுதிப்படுத்த, மருத்துவர் உங்கள் மாதவிடாய் சுழற்சியை அட்டவணையாகக் குறிக்குமாறு கேட்டுக்கொள்வார், நீங்கள் எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறது, எந்த இடத்தில் வலி உண்டாகிறது (பொதுவாக அடிவயிற்றில் வலி இருக்கும்) என்பதையெல்லாம் நீங்கள் அதில் குறித்துக்கொண்டே வர வேண்டும்.

எண்டோமெட்ரியோசிஸ் அல்லது சினைப்பைப்புற்றுநோய் போன்ற பிற பிரச்சனைகள் வலிக்குக் காரணமல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மருத்துவர் வயிற்றுப் பகுதி மற்றும் கீழ் இடுப்புப் பகுதிப் பரிசோதனைகளையும் செய்யக்கூடும். உடல் பரிசோதனைகளின்போது உங்களுக்கு கடுமையான வலி இருந்தால் அல்லது பிற பிரச்சனைகள் கண்டறியப்பட்டால், வலிக்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்காக எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசவுண்ட் சோதனைகள் அல்லது குறிப்பிட்ட சில இரத்தப்பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலி குறித்து கவலைப்பட வேண்டுமா? (Should I be worried about ovulation pain?)

இந்த வலி சாதாரணமானது, பெரும்பாலும் இதனால் தீங்கு எதுவும் ஏற்படாது. இருப்பினும், சிலருக்கு அது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக ஏற்படலாம். அந்த வலியும் கருமுட்டை வெளியீட்டினால் ஏற்டும் வலி போலவே தோன்றலாம், அது போன்ற சில பிரச்சனைகள் பின்வருமாறு:

எண்டோமெட்ரியோசிஸ்: சினைப்பைகள் மற்றும் ஃபெல்லோப்பியன் குழாய்களைத் தாக்கும் அழற்சி நோய். இந்த நோயாலும், கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில் வலி ஏற்படலாம்.

பால்வினை நோய்த்தொற்றுகள்: கிளாமிடியா போன்ற பால்வினை நோய்த்தொற்றுகளாலும் ஃபெல்லோப்பியன் குழாய்களில் அழற்சி அல்லது வடுக்கள் ஏற்பட்டு அதனாலும் கருமுட்டை வெளியிடப்படும் சமயங்களில் வலி உண்டாகலாம்.

வடுத்திசு: அறுவை சிகிச்சைப் பிரசவம் நடந்திருந்தால் அல்லது குடல் வாழ் அழற்சிக்கான அறுவை சிகிச்சை நடந்திருந்தால், அதனால் ஏற்பட்டிருக்கும் வடுத்திசுக்கள் சினைப்பைகளுக்கும் அருகிலுள்ள பகுதிகளுக்கும் தடங்கல் ஏற்படுத்துவதாலும், கருமுட்டை வெளியிடப்படும் சமயங்களில் வலி உண்டாகலாம்.

எப்போது மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்? (When to consult a doctor?)

வலி கடுமையாக இருந்தால் அல்லது தாங்க முடியாத அளவுக்கு இருந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். எந்த நாளில், எப்போது வலி எப்படி உள்ளது என்பதை ஒரு டைரியில் தொடர்ந்து குறித்துக்கொண்டே வர வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கும், அதன் கால அளவுக்கும், வலிக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என மருத்துவர் கண்டறிய இந்த விவரம் பயன்படும்.

கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில் பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்:

காய்ச்சல்

வாந்தி

சிறுநீர் கழிக்கும்போது வலி

மாதவிடாய் சுழற்சியின் நடுப் பகுதியில் வலி ஏற்பட்டு, அது ஒரு நாளுக்கு மேல் நீடித்தல்

கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில் ஏற்படும் வலிக்கான சிகிச்சை (How is painful ovulation treated?)

கருமுட்டை வெளியிடப்படும் சமயத்தில் ஏற்படும் வலியானது வழக்கமாக, 24 மணிநேரத்தில் தானாக சரியாகிவிடும். அதற்கு சிகிச்சை எதுவும் தேவைப்படாது.

சிறிது நேரம் வெந்நீரில் குளிப்பது, வயிற்றில் சிறிது நேரம் ஹாட் பேட் போடுவது அல்லது மருந்து கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்றவை இந்த வலியைக் குறைக்கலாம்.

வலியைத் தணிக்க, ஸ்டிராய்டு-அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) பயன்படுத்தப்படலாம், ஆனால் கர்ப்பமுறத் திட்டமிட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது, ஏனெனில் அவை கருமுட்டை வெளியிடும் செயலில் குறுக்கிடக்கூடும்.

அதிக வலி இருக்கும் பெண்களும், கருத்தடை மாத்திரைகள் அல்லது கருத்தடை ஊசி போன்றவற்றின் மூலம் கருமுட்டை வெளியீட்டைத் தடுப்பது போன்ற பிற சிகிச்சை முறைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

%d bloggers like this: