கிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்

காஸ்ட்லி க்ரீம்களிலும்  பார்லர் சிகிச்சைகளிலும் மட்டுமல்ல, உங்கள் வீட்டுக் கிச்சனிலும் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம். கைக்கெட்டும் தூரத்தில் உள்ள பொருள்களைக் கொண்டு, அரைமணி நேரத்தில் உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ளும்ம் வழிகளைச் சொல்கிறார்

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.

3 இன் 1 பேக்
ஓர் எலுமிச்சைப் பழத்தை எடுத்து அதன் மேல்பகுதியில் துளையிட்டு, சாறு முழுவதையும் நீக்குங்கள். அதற்குள் முட்டையின் வெள்ளைக்கருவை நிரப்பி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும். மறுநாள் காலை, எலுமிச்சைப் பழத்தின் உள்ளே இருக்கும் வெள்ளைக்கருவை எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலரவிடுங்கள். உங்கள் சருமம் இறுக்கமடைவதை உணர்வீர்கள். பிறகு, கைகளைத் தண்ணீரில் நனைத்து, முகத்தில் மெதுவாகத் தடவி, கழுவவேண்டும். இது சருமச் சுருக்கங்களை நீக்கும்; சருமத்தின் தொய்வைத் தடுக்கும்; பளிச்சென மாற்றும்.  40 வயதுக்கு மேலானவர்கள் இதை வாரம் இரு முறை செய்யலாம்.
இனி எண்ணெய் வழியாது
எண்ணெய் அதிகம் வழியும் சருமம் என்றால், அடிக்கடி வெறும் தண்ணீரில் முகம் கழுவுங்கள். நன்றாகப் பழுத்த ஒரு தக்காளியின் கூழ், 4 துளிகள் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் உலர்ந்த எலுமிச்சைப் பழத்தோல் பொடி அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால், எண்ணெய் வழியும் சருமம் மெருகு பெறும்.

 

சீக்ரெட் ப்ளீஸ்!
40 வேர்க்கடலை, 10 பாதாமுடன் பன்னீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். அடுத்த நாள் அவற்றின் தோலை நீக்கி, கிளிசரின், தேன், பன்னீர், வைட்டமின் ஈ ஆயில், பேபி ஆயில்  தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும். இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பளபளக்கும். 20 நாள்கள் தொடர்ந்து இதைச் செய்து வந்தால், எதிர்கொள்கிற எல்லாருக்கும் உங்கள் சரும அழகின் சீக்ரெட்டைச் சொல்ல வேண்டியிருக்கும்.
முட்டை மேஜிக்
முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை நன்கு கலந்து கொள்ளவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதை வாரத்தில் மூன்று முறை செய்துவந்தால், சரும நிறம் கூடும்; சுருக்கங்கள் குறையும். 
அழகு தரும் அவகேடோ
சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான வைட்டமின் ஈ சத்து, அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்டில் உள்ளது. அவகேடோ பழத்தை மசித்து, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் உடனடியாக மிளிரும்.
கேரட் சாறும் ஸ்லீவ்லெஸ் உடையும்
அக்குள் பகுதி மட்டும் சிலருக்கு மிகவும் கறுப்பாக இருக்கும். இதனால், ஸ்லீவ்லெஸ் உடை அணியத் தயங்குவார்கள். இரண்டு  டேபிள்ஸ்பூன் கேரட் ஜூஸ்,  ஒரு டேபிள்ஸ்பூன் தேன், வைட்டமின் ஈ ஆயில் (இரண்டு 400 மி.கி கேப்சூல்களின் எண்ணெய்) மூன்றையும் கலந்து, அக்குளில் தடவிச்  சிறிதுநேரம் வைத்திருந்து கழுவினால் நிறம் மாறும்.

%d bloggers like this: