Advertisements

மணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா?

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் மணி பேக் பாலிசி சிறந்த காப்பீட்டுத் திட்டமாக நம் மக்களால் கருதப்படுகிறது.  இந்த பாலிசியில் ஆயுள் காப்பீடு மற்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட தொகை பாலிதாரருக்கு வழங்கப்படுகிறது. பாலிசி முதிர்ச்சி அடையும் வரை இந்தத் தொகை வழங்கப் படுகிறது. பாலிசி முதிர்ச்சி அடைந்தவுடன், முதிர்ச்சித் தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படுகிறது.

இந்த பாலிசி மூலமான இடைக்கால தொகை, பாலிதாரர் உயிருடன் இருந்தால்தான் வழங்கப்படும். எதிர்பாராதவிதமாக பாலிசிதாரர் இறந்துவிட்டால், அந்த பாலிசியின் முதிர்ச்சித் தொகை, பாலிதாரரின் வாரிசுக்கு வழங்கப்படும்.

மணி பேக் பாலிசி மற்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் போன்று பாலிசிதாரருக்கு ஆயுள் காப்பீடும், வருமானமும் அளிப்பதாக உள்ளது. எனவே, இந்தத் திட்டம் சிறந்த முதலீட்டுத் திட்டமாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்திலிருந்து முதிர்வுக் காலத்திற்குமுன்பே முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இப்படிப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள மணி பேக் பாலிசி குறித்து இன்ஷூரன்ஸ் ஆலோசகரும்,  வெல்த்லேடர் நிறுவனத்தின் நிர்வாக தலைவருமான ஸ்ரீதரனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது,

‘‘மணி பேக் பாலிசி என்பது, ஒரு குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பாலிதாருக்கு அளிப்பதாகும். இதில் 15, 20, 25 ஆண்டுகள் எனப் பல வகைகளில் பாலிசித் திட்டங்கள் இருக்கின்றன. இதில் நாம் தேர்ந்தெடுக்கும் பாலிசித் திட்டத்தின் அடிப்படையில், நாம் கட்டும் பிரிமீயத் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்ப அளிப்பார்கள்.

உதாரணமாக, நாம் ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை கொண்ட பாலிசியை 20 ஆண்டுகளுக்கு எடுக்கிறோம் என்று வைத்து கொள்வோம். இதற்கு ஆண்டுக்கு ரூ.6,000 பிரிமீயம் செலுத்த வேண்டும்.
அதாவது 20 ஆண்டுகளில் ரூ.1,20,000 கட்ட வேண்டும். 4-வது ஆண்டில், பாலிசித் தொகையிலிருந்து 25 சதவிகிதத்தை அதாவது, 25,000 ரூபாயை நமக்கு அளிப்பார்கள். இதே போல, 8, 12, 16-வது ஆண்டிலும் ரூ.25,000 வழங்கப்படும். பின்னர், பாலிசி முதிர்ச்சி அடைந்த 20-வது ஆண்டில், போனஸ் சேர்த்து பாலிசிதாரருக்கு ஒரு தொகையை வழங்குவார்கள்.
இதற்கிடையில், பாலிசி எடுத்துள்ள சமயத்தில், பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்து விட்டால், அந்த காப்பீட்டுத் தொகை முழுமையாக, அவருடைய வாரிசுக்கு வழங்கப்படும்.
இந்த மணி பேக் பாலிசி திட்டத்திலிருந்து முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் வருமானம் 2-3% மட்டுமே. இதற்குக் காரணம், இந்தத் திட்டத்தில் நாம் பிரீமியத் தொகை கட்டக் கட்ட அந்தத் தொகையை முன்கூட்டியே எடுத்து நமக்குத் தந்துவிடுவதாகும். எனவே, இந்த பாலிசித் திட்டத்தில் முதலீட்டு வளர்ச்சி என்பது இருக்காது.
தவிர, இந்த மணி பேக் பாலிசி திட்டத்தை நாம் ஒரு முதலீட்டுத் திட்டமாகவும் பார்க்க முடியாது.
இந்தத் திட்டத்தில், பிரிமீயத் தொகை வயதுக்கேற்ப மாறுபடும். ரூ.6,000 – ரூ.7,000 பிரிமீயம் தொகை செலுத்தினால், ரூ.1 லட்சம்தான் காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது. இந்த நிலையில், இந்த மணி பேக் பாலிசி எடுத்துள்ள வருமானம் ஈட்டும் நபர் மறைந்து விட்டால், இந்தக் காப்பீட்டுத் தொகையை வைத்து, அந்தக் குடும்பத்தினால் நிச்சயமாக  குடும்பத்தை நடத்த முடியாது. எனவே, இந்த பாலிசியை ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டமாக நாம் பார்க்கக்கூடாது.
மணி பேக் பாலிசியை எடுப்பதற்குப் பதிலாக வருமானம் ஈட்டும் ஒவ்வொரு நபரும் தனிநபர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொண்டால், பாலிசிதாரர் இறக்கும் தருவாயில் அவரது குடும்பத்திற்குக் கணிசமான தொகை சென்றடைவதால், பாலிசிதாரரின் குடும்பம் பணக் கஷ்டமின்றி வாழ உதவியாக இருக்கும்’’ என்றார்.

லைஃப் இன்ஷூரன்ஸ் மணி பேக் பாலிசி குறித்து இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் திருப்பதி கூறும்போது,  ‘‘லைஃப் இன்ஷூரன்ஸ் மணி பேக் பாலிசியில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. நாம் ரூ.1 லட்சம் பணம் கட்டினால், 20 ஆண்டுகள் கழித்து அது இரண்டு மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
நீண்ட கால நோக்கில் சிறந்த முதலீடாக இருக்காது என்றபோதிலும் தங்களின் பிள்ளைகளுக்குப் பள்ளி, கல்லூரி கட்டணம் கட்ட  ஏதுவாக இருக்கும் எனக் கருதுபவர்களும்,  குடும்பச் செலவுகளுக்கு அவ்வப்போது பணம் வேண்டும் என நினைப்பவர்களும் குறுகிய கால இலக்குகளுக்கு மணி பேக் பாலிசி தங்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனக் கருதி பலரும் எடுக்க விரும்புகிறார்கள்’’ என்றார்.
மணி பேக் பாலிசி எடுத்துள்ள அமலி என்பவருடன் பேசினோம். ‘‘மணி பேக் பாலிசியை நான் 20 ஆண்டுகளுக்கு எடுத்திருந்தேன். இதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகக் குறைவான தொகையே கிடைத்தது. இதன்பின்னர், பாலிசி முதிர்வடைந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பெரிய தொகை எதுவும் திரும்பக் கிடைக்கவில்லை. மணி பேக் பாலிசி என்பது என்னைப் பொறுத்தவரை, லாபகரமான முதலீடாகத் தெரியவில்லை’’ என்று தன் முதலீட்டு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
மணி பேக் பாலிசி எடுக்க வேண்டும் என நினைப்பவர்கள், பாலிசியை எடுப்பதற்கு முன், நிதி ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது!

Advertisements
%d bloggers like this: