Advertisements

ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்!” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்

மெரீனா கடற்கரையில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நான் அதைக் கவனித்துவிட்டு வருகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். டி.வி-யை ஆன் செய்தால், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் அழகிரி வந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. பிரஸ்மீட்டுக்காக குவிந்திருந்த மைக்குகளில் கலைஞர் டி.வி மைக்கைப் பார்த்து, ‘‘நான் சொல்றதை இதுல போடமாட்டாங்களேய்யா’’ என்றவர், அடுத்து சன் டி.வி மைக்கை சுட்டிக் காட்டி, ‘‘இதுலயும்தான்’’ என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.

கழுகார் வந்ததும், ‘‘நீர் சொன்ன தர்மயுத்தம் இதுதானே! கொஞ்சம் விரிவாகச் சொல்லும்… அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பமாகக் காரணம் என்ன?’’
‘‘காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இருந்த கடைசி நான்கு நாள்களும் தூக்கம் வராமல் தவித்துள்ளார் அழகிரி. அப்போது சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் தங்கியிருந்த அழகிரி, அழுவதும், அப்பாவை நினைத்து உருகுவதுமாக இருந்துள்ளார். தன் வாட்ஸ்அப் புரொஃபைல் போட்டோவாக இருந்த தனது படத்தை நீக்கிவிட்டு, கருணாநிதியின் இளவயதுப் படத்தை வைத்திருந்தார். தந்தையின் உடல்நிலை பற்றிய கவலை, கடும் அலைச்சல் காரணமாக ஏற்பட்ட முதுகுவலி என அமைதியற்ற மனநிலையில் இருந்தார் அழகிரி. அப்போது, தி.மு.க அதிருப்தி கோஷ்டியினர் சிலர் அவரைச் சந்தித்தனர். ‘நீங்கதான் கட்சியைக் காப்பாற்றவேண்டும். கார்ப்பரேட் கம்பெனி ஸ்டைலில் கட்சியை மாற்ற நினைக்கும் கோஷ்டியிட மிருந்து மீட்க வேண்டும்’ என்று சொன்னார்களாம்.’’

‘‘அவர்களிடம் அழகிரி என்ன சொன்னாராம்?’’
‘‘அவர் விரக்தியுடன் அவர்களைப் பார்த்து, ‘நானே கட்சியில் இல்லை. நான் என்ன செய்ய முடியும்?’ என்று அலுத்துக் கொண்டுள்ளார். அதற்கு ஆறுதல் சொல்வது போல் பேசிய சிலர், ‘உங்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என ஸ்டாலினுக்கு எண்ணம் இருக்கிறது. ஆனால், அவர் வீட்டில் கிச்சன் கேபினட்தான் அதைத் தடுக்கிறது’ என்று சொல்ல, அழகிரி டென்ஷனாகிவிட்டார். ‘அவுங்க சொன்னா… ஸ்டாலின் கேட்டு விடுவதா? இப்ப நான் சொல்கிறேன். செயல்தலைவராக இருந்தபடியே எல்லா அதிகாரத்தையும் ஸ்டாலின் கையில் வைத்திருக்கிறார். பிறகு எதற்கு அவருக்குத் தலைவர் பதவி? அந்தப் பதவி என்பது என் அப்பாவுக்குத்தான் நிரந்தரமானது. அவர் உட்கார்ந்த இருக்கையில் வேறு யாரையும்… குறிப்பாக ஸ்டாலினை அமரவிட மாட்டேன். அவர் பின்னால் இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு நான் யாரென்று காட்டுகிறேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டாராம். அந்த வேகத்தில்தான், ஆகஸ்டு 13-ம் தேதியன்று காலை, கருணாநிதி சமாதிக்குக் குடும்பத் துடன் வந்தார் அழகிரி. ‘கருணாநிதியின் விசுவாசிகள் தன் பின்னால் நிற்பதாக’ மீடியாக்களிடம் பேசினார். அதையடுத்து, ஆங்கில டி.வி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அழகிரி, ‘நான் கட்சிக்குள் மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்ப வில்லை; நான் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என ஸ்டாலின் அச்சப்படுகிறார். தி.மு.க-வில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. இப்போதுள்ள தலைவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள். அவர்களைக் கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும்’ என்று சரவெடி கொளுத்தினார். ஸ்டாலின் உட்பட குடும்பத்தினர் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை.’’
‘‘அதன்பின் என்ன நடந்தது?’’
‘‘நேராக கோபாலபுரம் போனவர், அம்மா தயாளு அம்மாளின் அறையில் சில நிமிடங்கள் இருந்துவிட்டு வெளியில் வந்தார். அடுத்து பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு அவர் போகிறார் என்று தகவல் பரவியது. ஆனால், அபிராமபுரத்தில் இருக்கும் மகன் துரை தயாநிதி வீட்டுக்கு அவர் போய்விட்டார்.’’
‘‘இதற்கு முன்பாக ஏதேனும் சமாதானப்படலம் நடக்காமல் இருந்திருக்குமா?’’
‘‘அழகிரிக்கு பதவி தருவது பற்றி குடும்பத்தினர் சிலர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அழகிரி தரப்பிலிருந்து நிபந்தனைகள் கடுமையாக இருந்தனவாம். ‘அறக்கட்டளையில் மகன் துரை தயாநிதியைச் சேர்க்க வேண்டும், மு.க.ஸ்டாலின் செயல்பாடுகளில் அவரின் மருமகன் சபரீசன் மற்றும் ஓ.எம்.ஜி குரூப் போன்றவர்கள் தலையிடக் கூடாது, கட்சி நிர்வாகிகள் சிலர் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்’ என அந்தப்பட்டியல் நீண்டது. கூடவே, அறிவாலயத்தில் தனக்கு தனி அறை ஒதுக்கும் அளவுக்கு முக்கியமான ஒரு பதவியை அழகிரி கேட்டாராம். ‘அதைக் கொடுத்தால், அவர் தினமும் அறிவாலயத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் போடுவார். எல்லா நிர்வாகிகளுக்கும் குழப்பமாகிவிடும்’ என நெருக்கமான தலைவர்கள் சிலர் ஸ்டாலினிடம் சொன்னார்களாம். அது மட்டுமல்ல, ஆகஸ்ட் 12-ம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். ‘இத்தனை ஆண்டுகள் அவர் இல்லாமல் கட்சியை நடத்தி விட்டோம். மீண்டும் அவர் வந்தால், எங்களைத்தான் முதலில் ஒழிக்க நினைப்பார். தினம் தினம் அவமானப் படுத்துவார். எங்களால் சமாளிக்க முடியாது’ என்றார் களாம் அவர்கள். இவை யெல்லாம் சேர்ந்து ஸ்டாலின் மனத்தை மாற்றிவிட்டன.’’
‘‘அழகிரியின் சரவெடிக்கு நெருப்புக் கொளுத்தியது பி.ஜே.பி என்கிறார்களே?’’
‘‘கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த பி.ஜே.பி-யின் தமிழ்நாடு பொறுப்பாளர் முரளிதர ராவ், மு.க.அழகிரி யிடம் தனியாக அரை மணி நேரம் பேசிக்கொண்டி ருந்தார். தமிழக அரசியல் நிலவரம், தி.மு.க-வின் லேட்டஸ்ட் நிலவரம் பற்றியெல்லாம் இருவரும் டிஸ்கஸ் செய்தார்களாம்.  இதுவரை பா.ம.க தலைவர் ராமதாஸை நேரில் அழகிரி சந்தித்ததில்லை. முதல் முறையாக, அஞ்சலி செலுத்தும் இடத்தில் ராமதாஸும் அழகிரியிடம் பேசியிருக்கிறார். ராகுல் வந்தபோது, அழகிரியை அழைத்தார்களாம். ‘அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் ராகுல் காந்தி சென்னை வந்தார். ஆனால், அப்போலோ மருத்துவமனைக்குப் போய் ஜெயலலிதாவை மட்டும் பார்த்துவிட்டு, என் அப்பாவைப் பார்க்காமல் திரும்பிவிட்டார். அப்படிப்பட்டவரிடம் இப்போது நான் ஏன் போய்ப் பேசவேண்டும்’ என்று கேட்டாராம் அழகிரி. பிரதமர் மோடி வந்தபோது, முதுகு வலி காரணமாக பின்பக்க அறையில் சேரில் அமர்ந்திருந்தாராம். இவர் எழுந்து போவதற்குள், பிரதமர் கிளம்பிவிட்டாராம்.’’

‘‘சகோதரர்களின் சண்டையில் சகோதரியின் நிலை என்ன?
‘‘கனிமொழியைப் பற்றித்தானே கேட்கிறீர்கள். அவரின் ஆதரவு உள்ளுக்குள் அழகிரிக்குத்தான் இருக்கிறது. அதை வெளிக்காட்டும் மனநிலையில் அவர் இல்லை. கருணாநிதி இறந்த மறுநாள் குடும்பத்தினர் அனைவரும் சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு நிற்க… திடீரென ஏதோ யோசித்தவராய் பின்னால் திரும்பி கனிமொழியைத் தேடினார் அழகிரி. அவரையும் முன்வரிசையில் நிறுத்தி அஞ்சலி செலுத்தச் சொன்னார். கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில், அதிநவீன மருத்துவ சிகிச்சைகளுக்குப் பிரசித்திபெற்ற பிரபல சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்செல்ல கனிமொழி விரும்பினார். கனிமொழியின் கணவர் அரவிந்த், சிங்கப்பூர் குடிமகன். தன் மகனும் கணவரும் சிங்கப்பூரில் இருப்பதால், கருணாநிதியை நன்றாக கவனித்துக்கொள்வார்கள் என்று சொன்னாராம் கனிமொழி. ஆனால், அதை ஸ்டாலினும் அவரின் குடும்பத்தினரும் விரும்பவில்லையாம். இதைக் கேள்விப்பட்ட அழகிரி கோபத்தின் உச்சத்துக்கே போனாராம்.’’
‘‘ஒருவேளை அழகிரியின் எதிர்ப்பை மீறி கட்சியின் பொதுக்குழு கூடி மு.க.ஸ்டாலினை தலைவராகத் தேர்தெடுத்தால் என்ன ஆகும்?’’
‘‘புதுக்கட்சி ஆரம்பிக்க மாட்டார். முன்பு ஒருமுறை செய்ததுபோல, தேர்தல்களில் ஸ்டாலின் நிறுத்தும் வேட்பாளர்களைத் தோற்கடிக்கும் நடவடிக்கையில் அழகிரி இறங்குவார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அழகிரியின் முதல் அதிரடி இருக்குமாம். ஸ்டாலின்மீது அதிருப்தியில் இருக்கும் பலர், இப்போதே அழகிரியைத் தொடர்புகொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர். எல்லோரையும் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார் அவர். ‘ஏதோ ஒரு விஷயத்துக்காக அழகிரி காத்திருக்கிறார். அது நிகழ்ந்ததும் அவர் கட்டளைகள் பிறப்பிப்பார். அப்போது தமிழகம் முழுக்க ஆதரவாளர்கள் வெடித்துக்கிளம்புவார்கள்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.’’
‘‘தினகரன் நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?’’
‘‘ஏற்கெனவே நீர் கூறியபடி உறுப்பினர் சேர்க்கை பற்றித்தான் பேச்சு நடந்துள்ளது. ‘ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அசைக்கமுடியாத சக்தியாவோம். நீங்கள் அனைவரும் நெருக்கடியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. நானும் உங்களைப் போல்தான் இருக்கிறேன். அதிலிருந்து விரைவில் மீண்டு உங்களுக்கு வேண்டிய உதவிகளைக் கண்டிப்பாகச் செய்வேன்’ என்று பொருளாதார நெருக்கடியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய நிர்வாகிகளை அதே கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தவர், ‘நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். பணிகளை நீங்கள் பாருங்கள்’ என்று ஜெயலலிதா பாணியில் சொன்னாராம்.’’
‘‘கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ராகுல் காந்திக்கு சரியாகப் பாதுகாப்பு தரவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளதே… போலீஸ் தரப்பில் எங்கே கோட்டைவிட்டனர்?’’
‘‘கருணாநிதி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்த ராஜாஜி ஹாலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஜெயராமன். ஜெயலலிதா உடல் இருந்தபோது எப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்ற வீடியோவைப் போட்டுக் காட்டி உயர் போலீஸ் அதிகாரிகளுக்குப் பயிற்சியும் கொடுக்கப் பட்டது. ராஜாஜி ஹாலில் வி.வி.ஐ.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும் பகுதியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாளி பிரியா கந்தபுனேனியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போதுமான போலீஸ் படை இல்லாததால், அந்தப் பகுதியைக் காலையிலிருந்து அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் சோர்ந்தே போய்விட்டார். ராஜாஜி ஹாலின் முன்பகுதியில் இருந்த மாதவரம் துணை கமிஷனர் கலைச்செல்வனுக்கு மயக்கம் ஏற்பட்டு இடையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் நிலையாகிவிட்டது. மேலும், கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி வந்ததும் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில்தான் ராகுல் காந்தி வந்தார். ராகுலின் பயண விவரங்களை எஸ்.பி.ஜி படையினர் முறைப்படி சென்னை போலீஸின் உளவுப்பிரிவுக்குத் தரவில்லை. திட்டமிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அவர் வந்துவிட்டார். அதனால்தான், அதில் குழப்பம். ஆனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை டி.வி-யில் பார்த்த டி.ஜி.பி., அதன்பிறகு ஏ.டி.ஜி.பி-க்கள் ரவி மற்றும் சுனில்குமார் சிங்கை அனுப்பி வைத்தார். இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்பதுதான் சென்னை போலீஸின் குமுறல்’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: