Advertisements

ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

அந்த அழுக்குத் துணி
பெரும்பாலான சமையலறையில் இருக்கும் பிடிதுணி, பாத்திரங்களைப் பிடித்து அடுப்பிலிருந்து இறக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. உணவு சிந்தினால் அதைத் துடைக்க, சமையல் மேடையைச் சுத்தம் செய்ய என எல்லாவற்றுக்கும் அதைப் பயன்படுத்தும்போது, அந்த அழுக்குத் துணியில் நுண்கிருமிகள் சேர்ந்துவிடும். பின்னர் அதையே உணவுப் பாத்திரத்தை எடுப்பதற்கும் பயன்படுத்தும்போது, அந்தக் கிருமிகள் உணவில் பரவ வாய்ப்பாகிவிடும்,

நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உணவுப் பாத்திரங்களைக் கையாள, தனித் துணி பயன்படுத்துவதுடன், அதைத் தினமும் துவைத்துப் பயன்படுத்துவது அவசியம். கிச்சன் க்ளீனிங்குக்குப் பயன்படுத்தும் மற்ற துணிகளையும் தினமும் வெந்நீரில் அலசி, வெயிலில் காயவைத்துப் பயன்படுத்துவது நல்லது.


ஸ்க்ரப்பர் டிப்ஸ்
எப்போதும் ஈரமாக இருக்கும் இடம், நுண்கிருமிகள் வளர்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவதாக இருக்கும். எனவே, பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்தும் ஸ்கரப்பரை நாள் முழுக்க ஈரப்பதத்துடனேயே வைக்காமல், வேலை முடிந்த பின்னர் தண்ணீர் உலரும் வகையில் காயவைக்க வேண்டும். மேலும், ஒரு பாத்திரத்தைக் கழுவி முடித்த பின்னர், அந்தக் கசடுகள் ஒட்டியிருக்கும் ஸ்க்ரப்பரை ஒருமுறை தண்ணீரில் அலசிவிட்டு அடுத்த பாத்திரத்தைக் கழுவுவது நல்லது. மாதம் ஒருமுறை ஸ்கரப்பரை மாற்றவும்.


பல்லி, கரப்பான், எலி மருந்துகளில் கவனம்!
பல்லி, கரப்பான், எலி மருந்துகளைச் சாக்பீஸ், பவுடர், ஸ்பிரே என எந்த வடிவில் பயன்படுத்தினாலும், அதற்கு  முன்னர்  கிச்சனில்  உள்ள பொருள்களையெல்லாம் மூடிவைக்க வேண்டியது முக்கியம். அதேபோல, பூச்சிக்கொல்லி பயன்படுத்திய அன்றும், அதற்கு மறுநாளும் கிச்சனில் ஒவ்வொரு பொருளையும் கழுவிய பின்னரே பயன்படுத்தவும்.


பாத்திரங்களில் தேங்கும் சோப்பு
பாத்திரம் கழுவும்போது டிஷ் வாஷிங் பார்/லிக்விட் பாத்திரங்களில் எஞ்சாதபடி நன்றாக அலச வேண்டும். குறிப்பாக, கைக்குழந்தைகள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களில் இந்தக் கவனம் மிக அவசியம். இல்லையெனில், அந்த ரசாயனங்கள் உணவு, தண்ணீரில் கலந்து உடலினுள் செல்ல நேரிடும்போது வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.


கண்ணாடிப் பாத்திரங்கள் கைகொடுக்கும்
வீட்டில் மளிகைப் பொருள்கள் வாங்கும்போது, ஏற்கெனவே ஒரு பொருள் இருப்பது தெரியாமல் அதிகமாக வாங்கிவிட்டு, ‘அய்யய்யோ… முதல்ல வாங்கின பருப்பே இன்னும் ஒரு கிலோ இருக்கே’ என்று புலம்புபவர்கள் பலர். இதற்குத் தீர்வாக, மளிகைப் பொருள்களைக் கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது உள்ளிருப்பது வெளியே தெரியும்படியான ட்ரான்ஸ்பரன்ட் டப்பாக்களில் ஸ்டோர் செய்யலாம். இதன் மூலம், ஒரு பொருளின் இருப்பை எளிதில் அறியலாம்.

அடுத்ததாக, வாங்கிய மளிகைப் பொருள்களை டப்பாக்களுக்கு மாற்றும்போது, அதில் ஏற்கெனவே இருக்கும் மிச்சத்துடன் சேர்த்துக் கொட்டுவதைத் தவிர்க்கவும். அப்படி மிச்சம் இருந்தால், அதை எடுத்துவைத்துவிட்டு, அந்தப் பாத்திரத்தைச் சுத்தமாகக் கழுவி, ஈரம் உலர்ந்த பின்னரே புதிதாக வாங்கி வந்திருக்கும் மளிகைப் பொருள்களை ஸ்டோர் செய்யவும். இதன் மூலம் பொருள்கள் எளிதில் கெட்டுப்போவதையும், வண்டுகள் வருவதையும் தடுக்கலாம்.


ஃப்ரிட்ஜை கவனமாகப் பயன்படுத்துங்கள்
காய்கறிகள், பழங்களைக் கெடாமல் வைத்து உபயோகிக்கவே ஃப்ரிட்ஜ் என்ற சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஒரு வேளைக்குத் தேவையானதை மட்டுமே சமைக்கவும். ஃப்ரிட்ஜின் பின்புறத்தில், வெளியேறிச் சேகரமாகியிருக்கும் தண்ணீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அப்புறப்படுத்தவும். பல வீடுகளில் டெங்கு கொசுவின் பிறப்பிடம் அதுவாகவே இருந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.


காய்கள் நறுக்கும் முன்னர்..!
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, சிறிது கல் உப்பு சேர்த்து, சமைக்க ஆரம்பிக்கும் முன்னர், காய்கறிகளை அந்தப் பாத்திரத்தில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் துடைத்துவிட்டு, காய்கறிகளை நறுக்கிப் பயன்படுத்தவும். இதன் மூலம், பூச்சிக்கொல்லி, செயற்கை உரம், மண், கசடு எனக் காய்களின் தோலில் தேங்கியிருந்தவை எல்லாம் நீங்கிவிடும்.


ஆர்ஓ ப்ளான்ட் அலர்ட்!
தண்ணீர் சுத்திகரிக்க ஆர்ஓ ப்ளான்ட் நிறுவியிருப்பவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதன் ஃபில்டரை மாற்ற வேண்டும். இல்லையெனில் சிறுநீரகக் கோளாறுகள் வர வாய்ப்பு உண்டாகும்.


டஸ்ட் பின்… டெய்லி க்ளீனிங்!
குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்து அகற்றுவது அவசியம். கிச்சன் குப்பைத் தொட்டியில் உணவு, காய்கறி, பழக் கழிவுகள் எனக் கொட்டும்போது, அந்த ஈரப்பதம், துர்நாற்றம் மற்றும் கிருமிகள், புழுக்கள் உண்டாகும் சூழலைத் தரும்; நோய்கள் எளிதில் பரவும். எனவே, தினமும் குப்பையை அகற்றி, டஸ்ட் பின்னைக் கழுவிவிடவும்.


அலமாரி மேட்கள் அகற்றவும்
கிச்சன் அலமாரித் தட்டுகளின் மேல் விரிக்கப்பட்டிருக்கும் நியூஸ் பேப்பர் அல்லது மேட்களை, மாதம் ஒருமுறை மாற்ற வேண்டியது அவசியம். மாறாக, அழுக்குகள் படிந்து பிசிபிசுப்புத்தன்மை ஏற்படும்வரை விட்டுவைத்தால், அது சுகாதாரத்துக்கு எதிரானதாகிவிடும்.


கிச்சன் சாதனங்கள்
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கத்தி, அரிவாள்மணை, துருவி, தயிர் மத்து, முறம், சப்பாத்திக் கட்டை போன்ற பொருள்களைப் பயன்படுத்தியதும் கழுவி, வெயிலில் காயவைக்கவும். இவை மெட்டல் பொருள்களாக இருந்தால் துரு படிந்து, பயன்படுத்தும்போது பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற பொருள்களில், கழுவிப் பயன்படுத்தாவிடில், அவற்றில் காய்ந்துபோயிருக்கும் உணவுப்பொருள் துகள்கள் சமைக்கும் உணவில் கலந்துவிடும்.

Advertisements
%d bloggers like this: