Advertisements

திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி… திருவாரூரில் உதயநிதி

பலம் காட்ட களமிறங்கும் வாரிசுகள்

‘‘இடைத்தேர்தல் முதலில் வருமா, உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா?’’ என்று புதிர் போட்டபடி வந்தார் கழுகார்.
‘‘நீரே சொல்லும்!’’ என்றோம்.
‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் ஜெயிப்போம். உள்ளாட்சித் தேர்தலிலும் ஜெயிப்போம்’ என்று சொல்கிறார். டி.டி.வி.தினகரனும் இதையே சொல்கிறார். கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், திடீரென மறைந்ததாலும் தி.மு.க மட்டும் இன்னும் தேர்தல் பற்றிப் பேசாமல் இருக்கிறது. ஆனால், இடைத்தேர்தல் விஷயத்தில் எல்லோரின் கவனமும் தி.மு.க-மீதுதான் இருக்கிறது.’’

‘‘காரணம்?’’
‘‘திருவாரூர் தொகுதிதான் காரணம். கருணாநிதி மறைவால் காலியாகியிருக்கும் இந்தத் தொகுதியில் அடுத்து நிற்கப்போவது யார் என்பதுதான் தி.மு.க-வில் மட்டுமின்றி, வெளியிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. சமீபகாலமாக தி.மு.க மேடைகளில் அதிகம் தென்படும் உதயநிதி ஸ்டாலின், இங்கு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பரவலான பேச்சு நிலவுகிறது. ‘தாத்தாவின் தாய்மண்ணிலிருந்து பேரனின் அரசியல் ஆரம்பமாகட்டும்’ என ஸ்டாலின் குடும்பத்தில் சிலர் விரும்புகின்றனர். கருணாநிதி மனதால் நேசித்த தொகுதி இது. தமிழ்நாட்டில் எங்கு நின்றாலும் ஜெயிக்கலாம் என்ற சூழல் இருந்தபோதுகூட, அவர் தன் இறுதிக்காலத்தில் தொடர்ச்சியாக இரு முறை இங்கு போட்டியிட்டார். கடந்த தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் ஜெயித்தார். அவர் போட்டியிட்ட தேர்தல்களிலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததும் திருவாரூரில்தான். அதனால்தான், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் என்ட்ரியை இங்கிருந்து தொடங்க வேண்டும் எனக் குடும்பத்தில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.’’
‘‘உதயநிதிக்கு அந்த எண்ணம் இருக்கிறதா?’’
‘‘சில மாதங்களுக்கு முன்பு, டெல்டா மாவட்டங்களில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்புப் பயணம் போனார். அப்போது, திருவாரூரில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் எல்லா இடங்களுக்கும் நடந்தே சென்று மக்களுடன் இணக்கமாகப் பழகினார். ‘கருணாநிதி இங்கு போட்டியிட்டபோது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், மற்ற கட்சியினரும் அவருக்கு ஓட்டு போட்டார்கள். அவர் மறைவால் காலியாகும் தொகுதியில், அந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் நிற்கும்போது, அதே அளவு ஆதரவு கிடைக்கும். முதல் தேர்தலில் இப்படிப் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்துவிட்டால் போதும்… அரசியலில் உதயநிதியை எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகிவிடும்’ என்கிறார்களாம் உதயநிதியின் அரசியல் வட்டார நண்பர்கள். ஆனால், ஸ்டாலின் குடும்பத்தில் சிலருக்கு ஒரே ஒரு நெருடல் மட்டும் இருக்கிறது. கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை  ஜெயித்திருந்தாலும், தி.மு.க-வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. சென்டிமென்ட்டாக அதை ஒரு தடையாகப் பார்க்கிறார்கள்.’’

‘‘எல்லாம் சரி… இதற்கு ஸ்டாலின் சம்மதிக்க வேண்டுமே?’’
‘‘தி.மு.க முன்னணி தலைவர்கள் சிலர், ‘ஏற்கெனவே அழகிரியின் உரிமைப்போரால் வெகுண்டு போயிருக்கும் ஸ்டாலின், நிச்சயம் உதயநிதியை இப்போது தேர்தலில் போட்டியிட வைக்கமாட்டார்’ என்கிறார்கள். ‘குடும்ப அரசியல் என்ற சர்ச்சை கிளம்பும் என்பதால், ஸ்டாலின் நிச்சயம் உதயநிதிக்கு தடை போட்டுவிடுவார். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன்தான் வேட்பாளர்’ என்கிறார்கள் அவர்கள். ஆனால், ‘தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடாவிட்டாலும், இன்னொரு வாரிசு நிச்சயம் இடைத் தேர்தல் களத்தில் பலம் காட்டக் குதிப்பார்’ என்கிறார்கள் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்.’’
‘‘இது என்ன புதுத் திருப்பம்?’’
‘‘அ.தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்த ஏ.கே.போஸ் மறைந்ததால், திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் எல்லோரும் இணைந்து அழகிரியை இங்கு தி.மு.க வேட்பாளராக நிறுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரின் ஆதரவாளர் களுக்கு இருந்தது. ஆனால், இப்போது மனக்கசப்பு முற்றியுள்ள நிலையில், அழகிரியின் மகன் துரை தயாநிதியை நிறுத்தித் தங்கள் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ‘தினகரன் அணி தனியாக வேட்பாளரை நிறுத்தும். ஆளும்கட்சியும் வேட்பாளரை நிறுத்திச் செலவு செய்யும். தி.மு.க-வும் வேட்பாளரை நிறுத்தட்டும். நாம், துரை தயாநிதியை சுயேச்சையாகக் களமிறக்கி மதுரையில் நம் பலத்தைக் கட்டுவோம். இடைத்தேர்தல்களில் நமக்கு இருக்கும் அனுபவம் யாருக்கு இருக்கிறது? நீங்கள் களத்தில் இறங்கினால், இங்கு தி.மு.க-வுக்காக வேலை செய்ய வரும் பலரும் ஒதுங்கிக்கொள்வார்கள். உண்மையான தி.மு.க நம் பக்கம்தான் இருக்கிறது என்பதைக் காட்டுவோம்’ என்கிறார்கள் அவர்கள். அழகிரி இதை சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கிறார்’’ என்ற கழுகாரை மற்ற விஷயங்கள் பக்கம் திருப்பினோம். 
‘‘கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விஷயத்தை வைத்து, அ.தி.மு.க-மீது பாய்ந்திருக்கிறாரே ரஜினி?’’
‘‘கருணாநிதியை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக அரசியல் செய்கிறார்கள். அதில், இது ரஜினி ஸ்டைல் என்று வைத்துக்கொள்ளும். திரையுலக சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட அந்த இரங்கல் நிகழ்ச்சி மேடையில் ரஜினியைப் பேச வைக்கும் எந்தத் திட்டமும் இல்லையாம். ரஜினி தரப்பிலிருந்து கேட்கப்பட்டபோது, சங்க நிர்வாகிகள் மட்டுமே பேசுவார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும், எதற்கும் தயாராகவே வந்து சேர்ந்திருக்கிறார் ரஜினி. அவருக்குப் பேசுவதற்கான வாய்ப்பு தானாகவே வந்துவிட, மைக் பிடித்தவர் முழங்கித் தீர்த்துவிட்டார். ‘நீங்கள் எல்லாம் பெரிய ஜாம்பவான்களா?’ என்றெல்லாம் ஆரம்பித்து, நேரடியாகவே முதல்வர் தொடங்கி, அமைச்சர்கள் வரை அ.தி.மு.க-வினரைக் காய்ச்சியெடுத்தார்.’’
‘‘நடிகர் சங்க நிர்வாகிகளுக்குத்தான் தர்மசங்கடமாகியிருக்கும்!’’
‘‘இருக்காதா… ரஜினி இப்படியெல்லாம் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கெனவே திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது, ஏகப்பட்ட கோரிக்கைகளை அரசு ஏற்றிருந்தது. அவற்றில் ஒன்றுகூட இதுவரை அரசாணையாக வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினி இப்படிப் பேசியது தமிழக அரசின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொடுத்துவிடுமோ என்கிற பதற்றம் நடிகர் சங்க நிர்வாகிகளுக்குத் தொற்றிக்கொண்டுவிட்டது.’’
‘‘இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதல்முறையாக கவர்னர் மாளிகையில் கொடியேற்றியிருக்கிறாரே?’’
‘‘வழக்கமாக குடியரசு தினத்தில்தான் கடற்கரை காந்தி சிலை அருகில் கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். சுதந்திர தினத்தில் தேநீர் விருந்து அளிப்பது தவிர கவர்னருக்கு வேறு பணிகள் கிடையாது. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அவர் தேசியக் கொடியை கவர்னர் மாளிகையில் ஏற்றியிருக்கிறார். இதற்காக, தனியாகக் கொடிக் கம்பம் எல்லாம் ரெடி செய்தனர். கவர்னர் மாளிகையின் காந்தி சிலை அருகே தேசியக் கொடியை பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். ‘போட்டி அரசாங்கம் நடத்துகிறார்’ என புரோஹித்மீது விமர்சனங்கள் உள்ள சூழலில் இதை நடத்தி முடித்திருக்கிறார்கள்.’’

‘‘கவர்னர் தந்த தேநீர் விருந்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புறக்கணித்திருக் கிறார்களே?’’
‘‘அதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுக்குப் பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம், புயலைக் கிளப்பியது. வழக்கமாக, முதல் வரிசையை இரண்டு பாகமாகப் பிரித்து, ஒரு பக்கம் நீதிபதிகளும், மற்றொரு பக்கம் அமைச்சர்களும் அமரவைக்கப்படுவார்கள். இம்முறை அதை மாற்றினர். இருக்கை ஒதுக்கீட்டை முன்கூட்டியே பார்வையிட வந்த உயர் நீதிமன்றப் பதிவாளரையும் அனுமதிக்கவில்லை. புரோட்டோகால் என்கிற மரபு வரிசை முறையை மாற்றியதற்கு முக்கிய காரணம், கவர்னரின் முதன்மை செயலாளரான ராஜகோபால்தான் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ‘ராஜ்பவனில் கவர்னரின் ஆட்சியைவிட ராஜகோபாலின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது’ என அங்கிருக்கும் அலுவலர்களே ஆதங்கப்படுகிறார்கள். இது தொடர்பாக ராஜகோபாலிடம் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டது. ஆனால், அதற்குச் சரியான பதில் இல்லையாம். அதனால்தான், தேநீர் விருந்தில் நீதிபதிகள் பங்கேற்கவில்லை. ‘ராஜகோபாலின் தலை சீக்கிரமே உருட்டப்படலாம்’ என்கிறார்கள் ராஜ்பவன் வட்டாரத்தினர். ஏற்கெனவே மதுரையில் நடந்த மீனாட்சி திருக்கல்யாண விழாவின்போது, நீதிபதிகள் மேடையில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த அதிகாரிகள், ‘அமைச்சர்கள் மேடைக்கு வருகிறார்கள்’ என்று சொல்லி நீதிபதிகளைக் கீழே இறக்கிவிட்டனர். இதுபற்றி ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, மீண்டும் இதுபோன்ற அவமதிப்பு நேர்ந்துள்ளது. இதிலாவது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ரமேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கண்டனத்தையும் அதிருப்தியையும் பதிவுசெய்திருக்கிறார்கள்.’’
‘‘தி.மு.க சார்பில் அகில இந்தியத் தலைவர் களுக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டு வருகிறதே?’’
‘‘மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, முக்கிய நகரங்களில் நினைவேந்தல் கூட்டங்கள் நடக்கின்றன. ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக டெல்லி தலைவர்களை அழைக்கும் வேலை கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பி.ஜே.பி சார்பில் அமித் ஷா உட்பட பலரையும் அழைக்கும் திட்டம் உள்ளது’’ என்ற கழுகார் பறந்தார்.

Advertisements
%d bloggers like this: