Advertisements

ஒரு கதை… உங்கள் குழந்தைகளின் உளவியலை மாற்றும்!

டை, காக்கா, பாட்டி… இந்த மூன்று வார்த்தைகளைப் படித்ததுமே கதை ஒன்று நினைவுக்கு வந்துவிடுகிறது அல்லவா! அதை முதன்முதலில் நமக்குச் சொன்னது யார், எந்த வயதில் கேட்டோம் என்பதெல்லாம் தெரியாது. ஆனால், இப்போதும் அதைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சொல்லச் சொன்னாலும், குழப்பமில்லாமல் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவோம். கதை என்பது நம் மனதின் ஆழத்தில் பதிந்துவிடுகிறது. கதை மட்டுமா? கிராமத்துக் கடை ஒன்றின் நிலக்காட்சி, ஓர் உணவுப் பொருளைப் பற்றிய அறிமுகம், `ஓர் இடத்தில் ஏமாற்றிப் பறிக்கப்படும் பொருள், இன்னோர் இடத்தில் பறிபோகும்’ எனும் நீதி எனப் பலவும் பதிந்திருக்கும்தானே! ஆக, கதை என்பது வெறும் கதை மட்டுமல்ல!

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகள் கதை சொல்லிக்கொண்டே உணவை ஊட்டும்போது வெறும் வயிறு மட்டுமா நிரம்புகிறது? ‘அஞ்சு கண்ணனு’க்கு பயந்து விரைவில் சாப்பிடும் எல்லாக் குழந்தைகளும் தங்கள் மனதில் உருவாக்கிக்கொண்டது ஒரே மாதிரியான ‘அஞ்சு கண்ணன்’களையா! கறுப்பு, சிவப்பு, மாநிறம், தலைமுடி நிறைய, மொட்டையாக, வண்ண ஆடைகள் என, குழந்தைகளின் கற்பனைத்திறனுக்குப் பெரிய வாசலைத் திறந்துவிடும் அற்புதமான விஷயம் அல்லவா கதைகள்! ஆனால், இப்போது வீடுகளில் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லப்படுகின்றனவா என்றால், இல்லை என்பதே எதார்த்தம்.
விடியற்காலையில், ‘அர்ச்சனை’களோடு எழுப்பப்படுகிற குழந்தைகள் பள்ளி, ட்யூஷன் என இயந்திரமாகச் சுழல்கின்றனர். சிறு சிறு தோல்விகளை எதிர்கொள்ளத் தெரிவதில்லை. உறவினர்களிடம் சரியாகப் பேசுவதுகூடக் கிடையாது. இவற்றையெல்லாம் சரிசெய்யக் கதைகள் உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கதைகளைக் குழந்தைகளிடமிருந்து பிரிப்பது ஆபத்தானது!

 

“குழந்தைகளுக்குக் கதை சொல்பவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். இது ரொம்பவே ஆபத்தானது” எனக் கவலையோடு பேசத் தொடங்குகிறார் கல்வியாளர் ‘ஆயிஷா’ நடராசன்.
“குழந்தையின் அறிவு, மன வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருப்பவை கதைகள்தாம். ‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்று `திருவிளையாடல்’ பாணியில் கேள்வி எழுப்பினால், ‘குழந்தைகளும் மொபைலும்/குழந்தைகளும் டி.வி-யும்’ என்றுதான் அனைத்து வீடுகளிலிருந்தும் பதில் கிடைக்கும் இன்று. கார்ட்டூன் சேனல்களும் குழந்தைகளுக்குக் கதைகளைத்தான் சொல்கின்றன. ஆனால், எதிர்க்கேள்வி கேட்கவிடாமல், சுயமாகக் கற்பனை செய்யவிடாமல் கதைகள் சொல்கின்றன. நாம் கதை கேட்கும்போது ‘ம்’ கொட்டுவோமே… அதுகூட நம் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்குப் பழங்கள், காய்கறிகள் சாப்பிடச் சொல்வதும், மன வளர்ச்சிக்கு யோகா செய்யவைப்பதும் வழக்கமானவை. ஆனால், இவற்றையெல்லாம்விட அடிப்படையானது, அவர்களைக் கதைகள் கேட்கவைப்பது. கதை கேட்கும் ஒரு குழந்தை அதை இன்னொரு குழந்தைக்குச் சொல்கிறது; அது மற்றொரு குழந்தையிடம் சொல்கிறது. ‘மற்றவருடன் சகஜமாகப் பேசு’ என்று நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டியதைக் கதைகள் செய்துவிடுகின்றன. கதை சொல்வது என்பது வெறுமனே தூங்க வைப்பதற்காகவோ, பொழுதுபோக்குவதற்காகவோ மட்டுமல்ல. கதையின் வழியே அறிவு பகிரப்படுகிறது. `நாயின் மேல் கல்லெறியக் கூடாது’ என்பதை அறிவுரையாகச் சொல்லாமல், கல்லடிபட்ட ஒரு நாய் பலரிடம் சென்று தன் வலிக்கு மருந்து கேட்பது போன்ற ஒரு கதையாகச் சொல்லிப் பாருங்கள். அந்த நாயைத் தன் நண்பனாகவே கருதத் தொடங்கிவிடும் குழந்தை. பாட்டி, பேரனிடம் கதை சொல்வது என்பது அவர்களுக்கிடையே சிதைக்க முடியாத பாலம் அமைப்பதாகும்.

 

கல்வி என்பது மனப்பாடம் செய்வது எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பாடங்களைக் கதைகளாக மாற்றிவிட்டால், தேர்வு குறித்த பயம் குழந்தைகளை நெருங்காது. தேர்வைத் துணிவோடு எதிர்கொள்வதற்கு மட்டுமல்ல, அதன் முடிவுகளால் வாழ்க்கையே முடிந்துவிட்டதைப்போலத் தவறான முடிவை நோக்கிச் செல்லவிடாமலும் இது தடுக்கும். கதை கேட்டு வளரும் குழந்தைகளுக்கு மன உளைச்சலோ, மனத் தடுமாற்றமோ வருவதில்லை. மாறாக, நிதானமாக ஒரு விஷயத்தைக் கையாளும் திறன் கைகூடுகிறது” என்கிறார் `ஆயிஷா’ நடராசன்.
ஈர்ப்பு, உற்சாகம், கவனம்… கதையின் கனிகள்!
பல ஊர்களுக்குச் சென்று கதைகளைச் சொல்லி வரும் ‘கதைக்களம்’ அமைப்பைச் சேர்ந்த சி.வனிதாமணி, “உண்மையில் அசாதாரணமான சூழலில்தான் குழந்தைகள் வளர்கிறார்கள். டி.வி., நியூஸ் பேப்பர் என எல்லாவற்றிலும் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பயத்தையே தருகின்றன. எதார்த்தம் அப்படித்தான் என்றாலுமே நாம் குழந்தைகளுக்கு நம்பிக்கையைச் சொல்லித்தானே வளர்க்க வேண்டும்? அதனால்தான் நான், குழந்தைகளிடம் விதைக்கப்படும் அந்த பயத்தைக் கலைக்கும்விதமான கதைகளைச் சொல்லி வருகிறேன். அவர்களிடம் ஏற்படும் முதல் மாற்றம், ஒருவர் தனக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதை சொல்கிறார் எனும் ஈர்ப்பு. அடுத்து, சோர்ந்திருக்கும் முகம் உற்சாகமாக மலர்வது. அதற்கடுத்து, நாம் சொல்வதில் மட்டுமே கவனம் குவிவது. இந்த மூன்றும் மிக முக்கியமானவை. கல்வி கற்பதற்கும் சரி, வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதற்கும் சரி… இவையே அடிப்படையானவை.
நாம் கதை சொன்ன சில நாள்கள் கழித்து, குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தைக் கண்கூடாகக் காணலாம். ‘படி… படி…’ எனச் சொல்லாமலேயே குழந்தைகள் புத்தகங்களை நோக்கிச் செல்வார்கள்… முதலில் கதைப் புத்தகங்களையும், பின்னர் பாடப்புத்தகங்களையும்! பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு அதிகம் கஷ்டப்பட வேண்டாம். அன்றாடம் நடக்கும் சம்பவங்களோடு கொஞ்சம் உப்பு, மிளகாய், மேகம், பூதம், அனகோண்டா போன்றவற்றைக் கலந்து கதைகளாக மாற்றுங்கள். அதுவே குழந்தைகளைக் கதையின் பக்கம் வரச் செய்துவிடும். ‘கதை நேரம்’ என்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்காமல், காலையில் பிரஷ் பண்ணத் தொடங்குவது முதல் இரவு தூங்கச் செல்வது வரை எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சிறு சிறு கதைகளைச் சொல்லுங்கள். உடனே, நீதிக்கதைகளைத் தூசி தட்டிவிட வேண்டாம். உங்கள் குழந்தைக்கு எந்த நேரத்திலும் தவறான விஷயத்தை உங்களால் சொல்ல முடியாது. அதனால், சாகசமான கதைகளைச் சொல்லி மகிழச் செய்யுங்கள். அதிலிருக்கும் நீதிகளை அவர்கள் தேடிக் கண்டடையட்டும்” என்கிறார்.
மன வளர்ச்சிக்கும் உறவுப் பாலத்துக்கும் அச்சாரம்!
கதைகளுக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும் உள்ள தொடர்புகளைப் பட்டியலிடுகிறார், குழந்தைகள் மனநல மருத்துவர் ஜி.கே.கண்ணன். 

 

“குழந்தைகளின் உணர்வுநிலை வளர்ச்சிக்குக் கதைகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. எப்படியென்றால், ஒருவரோடு நான் உரையாடும்போதுதான் அவர் என்ன நினைக்கிறார், அதற்கு நாம் எப்படி ரியாக்ட் செய்வது என்ற பயிற்சியைப் பெற முடியும். ஒருவர் கதை சொல்கிறார் என்றால், கைகளை நீட்டி, ஆட்டி சைகைகளோடு சொல்வார். அதைப் பார்த்ததும், கதையோடு பயணம் செய்யும் குழந்தைகளின் மூளையின் சிந்திக்கும் திறன் வளரும். ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களைக் (Perspective) கணிக்க முடியும். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று, ‘ஐந்து வயதுக்குள் ஒரு குழந்தை எத்தனைக் கதைகளைக் கேட்கிறதோ, எத்தனைக் கதைகளைப் படிக்கிறதோ அவைதான் ஏழு வயதில் அந்தக் குழந்தையின் படிக்கும் திறனையும் மொழித்திறனையும் முடிவு செய்கின்றன’ என்று கூறுகிறது. கதைகளில் சத்தத்துக்கான குறியைக் (Symbol) கேட்டு வளரும் குழந்தைகளின் எழுத்தும், வாசிப்பும், கற்பதைப் புரிந்துகொள்ளும் திறனும் மற்ற குழந்தைகளைவிடச் சிறப்பாக இருக்கிறது.
மூளை என்பது நாம் கவனிக்காததைக்கூடப் பதிவு செய்துகொள்கிறது. அதை  `Nondeclarative Memory’ என்று சொல்கிறோம். ‘நீங்கள் எப்படி சைக்கிள் ஓட்டுகிறீர்கள்?’ என்று வினாவாகக் கேட்டால், சொல்லத் தெரியாது. ஆனால், ஒரு சைக்கிளைக் கொடுத்தால் ஓட்டிவிடுவீர்கள். அதேபோல உங்களின் மூன்று வயதுக்கு முன்னர் நடந்த சம்பவங்களைத் இப்போது நினைவுகூர முடியாது. ஆனால், அது நீங்கள் பேசும் மொழியில் கலந்திருப்பதை உணர முடியும். நமக்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் கதைபோலவே புரிந்துகொள்கிறோம். அதனால்தான் ஒரு தோல்வியின்போது கதை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறோம். இதிலிருந்து மீளவும் நம்பிக்கைக் கதைகளே நமக்கு உதவுகின்றன.

மன வளர்ச்சிக்கும் உறவுகளுக்கும் அச்சாரமாகக் கதைகள் இருக்கின்றன. இதனால் ஏற்படும் நம்பிக்கையும் பிடிப்பும் மனச் சோர்வடையும் நேரங்களில் குழந்தைகளை மீளச் செய்கின்றன. மனதளவில் மற்றவர்களின் எண்ணவோட்டத்தையும் குழந்தைகள் புரிந்து கொள்ள உதவுகின்றன.’’
கதை நல்லது!

Advertisements
%d bloggers like this: