இவங்களுக்கும் வரலாம் ஸ்ட்ரெஸ்

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் ஆரோக்கியத்தின் மீது  எல்லோருக்குமே கவனம் இருக்கும். அதிலும் குறிப்பாக நாய் வளர்க்கிறவர்கள் அதன் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். அதன் நடவடிக்கைகள் திடீரென மாறும்போது பலரும் என்ன செய்வதென்று தெரியாமல்

பதறிவிடுகிறார்கள்.செல்லப்பிராணிகளுக்கும் ஸ்ட்ரெஸ் வரும் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? செல்லப்பிராணிகள் எப்போது பதற்றமடையும், எப்போதெல்லாம் அவற்றின் நடவடிக்கைகள் மாறும்? கால்நடை மருத்துவர் அசோகன் விளக்குகிறார். 

* நாய்களும் மனிதர்கள் போலவே பதற்றமடையும். வளர்ப்பவர்கள் அதைக் கவனித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை பதற்றமடையும் விஷயங்களுக்குச் சில உதாரணங்களைச் சொல்ல முடியும்.

* வீடு மாறி புது வீட்டிற்கு வரும்போது நாய்கள் இயல்பாகவே பதற்றப்படும்.

* புதிய இடத்தில் இருக்கிற நாய்களை எதிர்கொள்ள முடியாமல் பயப்படும் அல்லது பதற்றமடையும்.

* பட்டாசு வெடிக்கும்போது எந்தப் பக்கம் ஓடுவது என்று குழம்பும்; பதறும்.

* வசிக்கிற  பகுதியில் அடுத்த ஒரு வாரத்தில் வயதான முதியவர்கள் இறப்பது குறித்து முன் கூட்டியே அறிந்து நாய் ஊளையிடும். இது இயல்பாக நடக்கிற விஷயம்தான். இதற்காக நாம் பதற வேண்டியதில்லை.

* இயற்கைப் பேரிடர் பற்றியும் சிலநேரம் நாய்களுக்கு முன்கூட்டியே தெரியும். அதனாலும் நாய்கள் பதற்றமடையும்.

* முதல் பயணத்தின்போது பயப்படும். மற்றபடி அடுத்தடுத்த பயணங்களில் நாய் அதன் உரிமையாளரோடு பயணிப்பதால் பதற்றமடைய வாய்ப்பில்லை.

புது  வீட்டிற்குக் குடி போகும்போது பழைய வீட்டை விட்டு வராத உயிரினம் பூனை.  அப்படியே புது வீட்டிற்குக் கொண்டு சென்றாலும் எப்படியாவது மீண்டும் பழைய வீட்டிற்கே வந்து விடும். ஆனால் நாய் எந்த இடத்திற்குக் கொண்டு சென்றாலும் அந்த இடத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும். பெரும்பாலும் நம்முடைய கட்டளைகளை நாய்கள் ஏற்றுக் கொள்ளும்.  நாய்களை எளிதில் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லலாம்.

%d bloggers like this: