நமக்கு நாமே செய்யும் தீங்கு!

நாம் நல்லது என நினைத்துப் பின்பற்றும் சில பழக்கங்கள், நம்மை அறியாமலேயே நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிலாம். அதை உணர்ந்து, அந்தப் பழக்கங்களை விடவில்லையென்றால், மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.  நல்லது என்று நினைக்கும் பழக்கங்கள் இருக்கட்டும்…  தவறு என்று தெரிந்தே நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்கள், அவை ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா? –

விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர் சாருமதி மற்றும் உணவியல் நிபுணர் மேனகா.

எனர்ஜி டிரிங்க்ஸ்… புத்துணர்ச்சியா, ரிஸ்க்கா?
சோர்வு ஏற்படும்போதெல்லாம் பலர்  `எனர்ஜி டிரிங்க்ஸ்’  அருந்துவார்கள். அவை உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கும் என்று நம்பவும் செய்கிறார்கள். உண்மையில், அவை புத்துணர்வை  கொடுப்பது இருக்கட்டும்… ஆரோக்கியத்துக்கு வேட்டுவைப்பவை என்பது பலரும் அறியாததே.
பெரும்பாலான எனர்ஜி பானங்களில்  60 முதல் 70 சதவிகிதம் வரை கஃபைன் (Caffeine) மட்டுமே இருக்கும். அதோடு சுவைக்காகச் சர்க்கரையும் அதிகம் சேர்க்கப்படுகிறது. கொரானா (Guarana) என்கிற மூலிகைப் பொருளும், டாரைன் (Taurine) என்னும் அமினோ அமிலமும் இந்த பானங்களில் இருக்கின்றன.  இவற்றிலும் கஃபைன் அதிகமாக இருக்கிறது. மூளையிலுள்ள அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவும். எனர்ஜி டிரிங்கில் உள்ள கஃபைன், அடினோசினின் ஆதிக்கத்தைக் குறைப்பதால்தான் புத்துணர்ச்சி கிடைப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
என்னென்ன பாதிப்புகள்?
கஃபைனை அதிகம் உட்கொள்வதால் படபடப்பு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். ரத்த நாளங்களில் கஃபைன் படிந்து ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். அதிக அளவு சர்க்கரை, உடல் பருமன் ஏற்பட வழிவகுக்கும். கஃபைன், உடலிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் படிப்படியாக அழித்துவிடும். தினமும் கஃபைனை உணவோடு சேர்த்து உட்கொண்டால், ரத்தத்தில் சீரம் (Serum), கிரியாட்டினின் (Creatinine) அளவுகள் அதிகரித்து சிறுநீரகச் செயலிழப்புகூட ஏற்படலாம். சில நேரங்களில் கஃபைன், டாரைனுடன் சேரும்போது  திடீரென இதயத்துடிப்பு முடங்கவும் வாய்ப்பிருக்கிறது.  

வெறும் 30 நிமிடப் புத்துணர்ச்சிக்காக இந்த அளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா?
எனர்ஜி பானங்களால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
10 நிமிடங்களில்…
நாம் குடிக்கும் பானத்தில் உள்ள கஃபைன் ரத்தத்தில் முழுமையாகக் கலந்துவிடும்.
15 முதல் 45 நிமிடங்களில்…
எனர்ஜி டிரிங்க் ஓர் ஊக்கியாகச் செயல்பட்டு, உடலுக்கு உடனடிப் புத்துணர்வைக் கொடுக்கும்.  
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு…
அதிக அளவிலிருக்கும் சர்க்கரையை உட்கிரகிக்க, கல்லீரல் அதிக ஆற்றலைச் செலவிடும். அதனால் மீண்டும் உடல் சோர்வடையும், கண்கள் சுருங்கும், மந்தநிலை ஏற்படும்.


சர்க்கரை… இனிப்பான ஆபத்து! 
`ஒரு நாளைக்கு அதிகபட்சமாகப் பெண்கள் 25 கிராமும் ஆண்கள் 36 கிராமும் சர்க்கரையை உட்கொள்ளலாம்’ என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association). நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குச் சர்க்கரை அதிகம் கலந்திருக்கிறது.
உடல்நல பாதிப்புகள்
சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால், உடல் சோர்வு, களைப்பு உண்டாகும். அதோடு, உடல் பருமன், சர்க்கரைநோய், இதய நோய்கள் எனப் பல பிரச்னைகள் அணிவகுக்கும். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளில் கலோரி அதிகமிருப்பதால், அவை கொழுப்பாக மாற்றப்பட்டு ரத்தக்குழாய்களில் படியும். அதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். மாரடைப்புகூட ஏற்படலாம்.
அடிமையாக்கும் சுவை!
சர்க்கரை அதிகமுள்ள உணவுகள், ‘மகிழ்ச்சி ஹார்மோன்கள்’  (Happy Hormones) எனப்படும் டோபமைன், செரட்டோனின் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பைத் தூண்டுகின்றன. இவை மனதுக்கு இதமான தன்மையைக் கொடுக்கும். இதனால் மீண்டும் மீண்டும் இனிப்பான உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். நாளடைவில் அதுவே பழக்கமாக மாற வாய்ப்பிருக்கிறது. பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அதோடு நார்ச்சத்தும் இருப்பதால், அவை ரத்தத்தில் உடனடியாகச் சர்க்கரை அளவை அதிகரிக்காது. எனவே, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளுக்கு மாற்றாகப் பழங்களைச் சாப்பிடலாம். 
லேபிளைக் கவனியுங்கள்!
பொருள்களை வாங்கும்போதே, லேபிளைப் பார்த்து அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவைத் தெரிந்துகொள்ளுங்கள். பட்டியலில் முதல் மூன்று இடங்களில் சர்க்கரை இருந்தால்,  அந்த உணவில் சர்க்கரை அதிகமிருக்கிறது என்று பொருள். அது போன்ற உணவுகளைத் தவிர்த்திடுங்கள். 

இனிப்பான ஆபத்தைத் தவிர்ப்போம்!


தூக்கம் தொலைக்காதீர்!
இரவில் 8 மணிநேரம் தூங்கினால், செல்களுக்குச் சீரான இடைவெளியில் ஓய்வு கிடைக்கும்; அவை புத்துணர்வு பெற்று, ஆரோக்கியமாகச் செயல்படும். எல்லோருக்குமே ஒரு நாளைக்கு 7  மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். அதில் ஒரு மணி நேரம் குறைந்தால்கூட, அடுத்த நாள் வேலைத்திறனிலும் வழக்கமான செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும்.  

பிரச்னைகள் என்னென்ன? 

மூளையில் ‘பீனியல் சுரப்பி’ (Pineal Gland) என்ற  ஒன்று இருக்கிறது. இதை உடல் உறுப்புகளை நிர்வகிக்கும் `உயிரியல் கடிகாரம்’ (Biological Clock) என்கிறார்கள். இந்த பீனியல் சுரப்பிதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. இரவில் கண்விழித்து, வெளிச்சத்தில் வேலை பார்த்தால் இந்தச் சுரப்பி வேலை செய்யாது. அதனால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போகும். 

இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிவரை கல்லீரலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அப்போதுதான் கல்லீரல் கழிவுகளை உடைத்து வெளியேற்றுவதுபோன்ற உடல் ஆரோக்கியத்துக்கான வேலைகளைச் செய்யும். சரியாகத் தூங்காவிட்டால், கழிவுகள் உடலில் தங்கி, நோய்களுக்கு நுழைவாயிலாக மாறிவிடும். மேலும், கார்டிசால்  என்ற ஹார்மோனைச் சுரந்து மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்துவிடும்.    
இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, உடல்சோர்வு, குழப்பமான மனநிலை, தலைச்சுற்றல், கண் எரிச்சல், மயக்கம், செரிமானக்கோளாறு போன்றவை ஏற்படும். தூக்கமின்மையால் கவனம் பிசகுவதால், வாகனம் ஓட்டும்போது விபத்து நேரக்கூட வாய்ப்பிருக்கிறது.  அதேபோல `ஒருவர், ஒரு வார காலம் தூங்காவிட்டால் சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலைக்குச் (Pre Diabetes) செல்லவும் வாய்ப்பிருக்கிறது’ என்கின்றன சில ஆய்வுகள்.
ஆக, தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு வேலை செய்வது உடம்புக்கு நல்லதில்லை பாஸ்!


சிகரெட்… சிக்கல்!
உலகம் முழுக்கவே புகைபிடிக்கும் பழக்கம் பெரும் பிரச்னையாகத்தான் இருக்கிறது. வேலைப்பளு, டென்ஷன், பிரச்னைகள், போரடிக்கிறது… புகைபிடிப்பதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. காலையில் கண்விழித்தது முதல் இரவு உறங்கப் போகும்வரை சிகரெட் பிடிப்பவர்கள் இருக்கிறார்கள்.
நின்றுகொல்லும் நிகோடின்!
சிகரெட்டில் உள்ள நிகோடின் (Nicotine) மூளையை வசப்படுத்தி, ஒரு போலியான திருப்தியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். இதனால் மீண்டும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தூண்டிப் புகைப்பவர்களை அடிமையாக்கிவிடும். 
என்ன இருக்கிறது?
ஒரு சிகரெட்டில் நச்சு வாயுக்கள், வேதியியல் மூலக்கூறுகள், வடிகட்ட முடியாத நுண் மூலப் பொருள்கள் என ஏறக்குறைய 7,000 நச்சு ரசாயனங்கள் இருக்கின்றன. `அவற்றில்  கார்சினோஜென் (Carcinogen) என்ற புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களின் எண்ணிக்கை மட்டுமே 70’ என்கிறது அமெரிக்க நுரையீரல் சங்கம் (American Lung Association).
உடல்நல பாதிப்புகள்
வாய், உதடு, தொண்டை, உணவுக்குழாய், கல்லீரல், வயிறு, கணையம், சிறுநீரகம் என உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை உள்ள உடல் உறுப்புகளையும் புகைப்பழக்கம் பதம் பார்த்துவிடும். எதிர்காலத்தில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்னைகளுக்கும் காரணமாவது சிகரெட் பழக்கமே. 
புகை எப்போதும் உடலுக்குப் பகையே!

%d bloggers like this: