ஞாபக மறதி பெரும் பிரச்னையா இருக்கா? இத செய்ங்க

பேத்தியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தார் அந்த முதியவர். நீண்ட வரிசை. பெயரை பதிவு செய்து விட்டு காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து, வரவேற்பறை பெண்ணிடம், “நாங்க எப்போ போகணும்?” என்று விசாரித்தார் முதியவர். “பேஷண்ட் பெயர் சொல்லுங்க,” என்றாள் டாக்டரின் உதவியாளர்.

பெரியவருக்கு தன்னுடைய பேத்தியின் பெயர் அப்போது நினைவுக்கு வரவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்த பேத்தியிடம், “பாப்பா… உன் பெயரென்ன?” என்று சத்தமாக கேட்கிறார்.

“தாத்தா… என் பெயர் தெரியாதா?” பேத்தி கொஞ்சம் கோபமாகவே கேட்டாள். “ஏய் உன் பெயரை சொல்லு…” மறுபடியும் கேட்டார் பெரியவர். “நந்தினி தாத்தா…” – பெயரைக் கூறிய பேத்தி, இத்தனை பேர் மத்தியில் தாத்தா, என் பெயர் தெரியவில்லை என்று சொல்லிவிட்டாரே என்று அவமானமாய் உணர்ந்தாள். ஆம், முதுமை வந்தால் மறதியும் வந்துவிடுவது இயல்புதான்,

மறதியை அறிவது எப்படி?

ஒருவருடைய தொலைபேசி அல்லது மொபைல் எண்ணை மனதில் நிறுத்த சிரமமாய் தோன்ற ஆரம்பித்தால், செய்து கொண்டிருக்கிற வேலையில் கவனம் செலுத்த முடியாமல், அடுத்து என்ன செய்வது என்ற திகைப்பு தோன்றினால் அல்லது கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியை அசைபோடும்போது, சம்மந்தப்பட்டவரின் முகம் நினைவுக்கு வந்தாலும் பெயர் ஞாபகம் வரவில்லையென்றால் முதுமையின் காரணமான மறதி வரப்போகிறது என்று நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.

காரணங்கள்

முதுமையடையும் போது மூளையின் செயல்திறன் குறையும். மூளையின் இயல்பான இயக்கத்தில் வரும் மாற்றமே பெரும்பாலும் மறதிக்குக் காரணமாகிறது.

“வயசாகிடுச்சு… எல்லாம் மறந்து போச்சு…” என்று சலித்துவிடாமல், உங்கள் ஞாபகசக்தியை சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளலாம். முயற்சித்து பாருங்கள்!

உடலுக்கு வேலை

உடலுக்கு வேலை தருவதுபோல், ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருங்கள். பெரிதாக மூளைக்கு வேலைதராத செயலாகக்கூட அது இருக்கலாம். எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருப்பது உடலையும் மூளையையும் விழிப்பாக வைத்திருக்க உதவும்; அவற்றின் இயக்கத்தில் பாதிப்பு நேருவதையும் தவிர்க்கலாம்.

புதியவற்றை கற்றுக்கொள்ளுங்கள்

புதிதாக ஏதாவது ஒரு மொழி அல்லது இசைக்கருவியை மீட்டும் பயிற்சி என்று புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் மூளையை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

மூளைக்கு வேலை

ஓய்வு நேரத்தில் குறுக்கெழுத்துப் புதிர், வினாடி வினா, எண் புதிர் என்று மூளைக்கு வேலை தரும் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுக்கொண்டிருங்கள். அது மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

திரும்ப திரும்ப சொல்லுங்கள்

தொடக்கப் பள்ளியில் வாய்ப்பாட்டை திரும்ப திரும்ப சொல்லி தருவதுபோல், நீங்கள் நினைவில் வைக்கவேண்டிய தொலைபேசி எண், நபர்களின் அல்லது இடங்களின் பெயர்கள் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் சொல்லி பாருங்கள். அவற்றை திரும்ப திரும்ப கூறும்போது எளிதாக மனதில் பதியும்.

நினைவுபடுத்துதல்

குறிப்பிட்ட இடைவெளியில் இந்த அவற்றை திரும்ப திரும்ப நினைவுபடுத்திப் பார்க்கலாம். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது தினமும் ஒருமுறை என்று திரும்ப திரும்ப எண்ணையோ பெயர்களையோ சொல்லி பார்த்தால் அவை எளிதாக மறந்து போகாது.

ஆக்டிவ்வா இருங்க… அத்தனையும் ஞாபகத்தில இருக்கும்!

One response

%d bloggers like this: