Advertisements

தளபதி to தலைவர்… காத்திருக்கும் தலைவலிகள்!

தி.மு.க பொதுக்குழுதான், அந்தக் கட்சியின்  திசைவழியைத் தீர்மானிக்கும் முக்கியச் செயல்பாடு. கருணாநிதி இருந்தவரை அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால், தற்போது நடக்கப்போவது, கருணாநிதி இல்லாத காலத்தில் நடைபெறும் முதல் பொதுக்குழு. கருணாநிதியின் வாரிசுகளில் ஒருவரான அழகிரி தன்னைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு பக்கம் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்க, மற்றொரு வாரிசான ஸ்டாலினுக்குத் தலைவர் பட்டம் கட்டப்போகும் இந்தப் பொதுக்குழுவை, அரசியல் களத்தைத் தாண்டி அனைவரும் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தள்ளிப்போன பொதுக்குழு!


2016-ம் ஆண்டு நடக்க வேண்டிய தி.மு.க பொதுக்குழு நடக்கவில்லை. காரணம், கருணாநிதிக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால், 2017 ஜனவரி 4-ம் தேதி அது நடைபெற்றது. அதில் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின் அப்போது செயல் தலைவர் என்ற பதவியைப் பெற்றார். அத்துடன், அவரிடம் பொருளாளர் பதவியும் இருக்கிறது. 2017-ல் நடக்க வேண்டிய பொதுக்குழுவும் கருணாநிதியின் உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போனது. அது ஆகஸ்ட் 19-ம் தேதி வானகரம் திருமண மண்டபத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதுவும் கருணாநிதி உடல்நிலையால் தள்ளிப்போனது. இந்த நிலையில், அவர் மரணத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் செயல் தலைவர் ஸ்டாலின் தலைவராக ஆவதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

புதிய பொருளாளர்!
தி.மு.க-வில், பொருளாளர் பதவி மிக முக்கியத்து வம் வாய்ந்தது. கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், மு.க.ஸ்டாலினும் அந்தப் பதவியை வகித்தவர்கள் என்பதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். அண்ணா காலத்தில் கருணாநிதி அந்தப் பதவியில் இருந்தார். அதன்பிறகு, அந்தப் பதவிக்கு எம்.ஜி.ஆர் வந்தார். அப்போதுதான், கருணாநிதிக்கு எதிராக அவர் கணக்குக் கேட்டது, கலகம் செய்தது எல்லாம். தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.தி.மு.க உதயமானது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு, 1994 வரை அந்தப் பதவியில் சாதிக் பாட்சா இருந்தார். அவருக்குப் பிறகு, ஆற்காடு வீராசாமியிடம் அந்தப் பதவி ஒப்படைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் விரும்பி அந்தப் பதவியைக் கேட்டுப்பெற்றார். அதில் மனம் உடைந்துபோன ஆற்காடு வீராசாமியை சமாதானம் செய்வதற்காகவே, தி.மு.க விதியைத் திருத்தித் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கி, அதில் அவரை அமர்த்தினார் கருணாநிதி. உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அந்தப் பதவியிலிருந்தும் ஆற்காடு ஒதுங்கிக்கொண்டார். அதனால், அது துரைமுருகனுக்குப் போனது.
2008 முதல் இப்போதுவரை பொருளாளர் பதவி ஸ்டாலின் வசம்தான் உள்ளது. அந்தப் பதவியைக் கைப்பற்ற துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு போன்றோர் கடும் முயற்சியில் இறங்கினர். இந்த ரேஸில் முன்னணியில் இருந்தவர் எ.வ.வேலுதான். கட்சிக்குப் பெருமளவு நிதி கொடுத்துப் பெரிய புரவலராகத் திகழ்ந்த அவர்மீது, ரஜினியுடன் நெருக்கம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தி.மு.க அறக்கட்டளை விஷயத்தில் நிகழ்ந்த ஒரு குளறுபடியும் அவரைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே, சீனியாரிட்டி அடிப்படையில் அந்தப் பதவி துரைமுருகன் வசம் போகிறது.
முதன்மைச் செயலாளர்!
துரைமுருகன் இதுவரை வகித்துவந்த முதன்மைச் செயலாளர் பதவி இப்போது டி.ஆர்.பாலுவுக்குச் செல்கிறது. இதுதான் புது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘‘கட்சியில் டி.ஆர்.பாலு சீனியர். அவர் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், முதன்மைச் செயலாளராகவும், துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். தி.மு.க-வின் முக்கிய வாக்கு வங்கியான முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. சற்குண பாண்டியன் மறைந்த பிறகு நாடார் சமூகத்துக்கும் மேடையில் இடமில்லை. தமிழகத்தின் பெரும்பான்மை சாதியினர் பலருமே குறிப்பிட்ட கட்சிகளின் வாக்கு வங்கிகளாக மாறிவிட்டனர். சின்னச்சின்ன ஜாதிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு மரியாதை கொடுத்தே தி.மு.க வளர்ந்துவந்தது. இந்த வாக்கு வங்கிதான் வட மாவட்டங்களிலும் மத்திய மாவட்டங்களிலும் தி.மு.க-வுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. ஆற்காடு வீராசாமி பதவி விலகியபிறகு, அவர்களுக்கும் முக்கியத்துவம் இல்லை. இது பெரும் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது’’ என்கிறார்கள் தி.மு.க-வின் முன்னணி தலைவர்கள் சிலர்.
மற்ற முன்னணிப் பதவிகள்!
தி.மு.க செயற்குழு, பொதுக்குழு மேடைகளில் அமரும் வாய்ப்பு… தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் துணைப் பொதுச் செயலாளர்களுக்குக் கிடைக்கும். தி.மு.க-வில் நான்கு துணைப் பொதுச் செயலாளர்கள். பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு, ஓர் இடம் தலித் என்ற வகையில் இதில் பங்கீடு இருக்கும். சற்குண பாண்டியன் இறந்துவிட, வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆகியோர் மட்டுமே இப்போது துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ளனர். சற்குண பாண்டியன் இடத்துக்குப் புதியவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பதவி தனக்குக் கிடைக்கும் என கனிமொழி எதிர்பார்க்கிறார். ஆனால், அவருக்கு இந்தப் பதவி இப்போதைக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். ஏனெனில், சற்குண பாண்டியன் இடத்தில் வேறு யாரையும் இப்போது நியமிக்கும் எண்ணம் இல்லை. ஈரோடு மண்டல மாநாட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. அதனால், அவரது இடத்துக்கு வேறு யாரையாவது கொண்டுவரலாம் என்று பேச்சு எழுந்தது. வி.பி.துரைசாமிக்கு பதிலாக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசாவை நியமிக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், ‘‘அழகிரி குழப்பம் இருக்கும் நேரத்தில் புதிய குழப்பங்கள் வேண்டாம் என்பதால், துணைப் பொதுச்செயலாளர்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என ஸ்டாலின் தீர்மானித்திருக்கிறார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  

அழகிரி அழைப்பு!
இப்போது ஸ்டாலின் கண்களுக்குத் தலைவர் நாற்காலி பெரிதாகத் தெரிந்தாலும், அதைவிட பூதாகரமாக அழகிரியின் உருவம் தென்படுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கும் அழகிரி, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகிவிட்டார். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், பொறுப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் அதிருப்தி கோஷ்டியினரின் பட்டியல் இப்போது அவர் கைகளில் இருக்கிறது. சென்னையில் ஆரம்பித்து காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை என வடமாவட்டங்களில் இருக்கும் அதிருப்தியாளர்கள் பலருக்கும் அழகிரி தரப்பிலிருந்து போன் போகிறது. முக்கியமான நபர்களிடம் அழகிரியே பேசுகிறார். ‘‘நீங்கள் வரவேண்டாம். ஆனால், உங்கள் ஆதரவாளர்களை அனுப்பி வையுங்கள். இப்போதைக்கு உள்ளே இருந்தபடி அமைதியாகச் செயல்படுங்கள். நேரம் வரும்போது வெடித்துக் கிளம்பலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, பலரும் தொண்டர்களை அனுப்பிவைப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளனர். அதனால்தான், ‘‘அமைதிப் பேரணிக்குத் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தி.மு.க-வில் தொண்டர்கள்தான் தலைவர்கள்’’ என்று அழகிரி கூறினார்.
அழகிரிக்கு அடுத்து…
அழகிரி சவாலைக் கடந்துவருவதை அவ்வளவு கடினமான காரியமாக ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் நினைக்கவில்லை. ஆனால், அதைத் தாண்டிய பெரிய தலை வலிகள் ஸ்டாலினுக்குக் காத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் அதிகமில்லை. இப்போது தி.மு.க-வின் தலைவராவதில் ஸ்டாலினுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுதான், இது அவருக்கு முள்கிரீடமா என்பதைத் தீர்மானிக்கும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் களத்தில் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தல். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரையில், அவர் எழுதப்போகும் முக்கியமான அரசியல் தேர்வு இது.
‘‘தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெறலாம். பி.ஜே.பி தமிழகத்தில் வலிமையாக இல்லையென்றாலும், அவர்களால் இங்கு வலிமையான கூட்டணியை அமைக்க முடியும். தேர்தல் ஆணையம், ஊடகங்கள், பணம், அரசு அதிகாரம் போன்றவற்றுடன் பி.ஜே.பி கைகோத்துள்ளது. கூடவே, ஆளும் அ.தி.மு.க-வும் அவர்களுடன் இணைந்து போட்டியிடுவார்கள். ரஜினி ஒரு பக்கம் வேகம் காட்டுகிறார். அவருடன் கூட்டணி வைக்க பல அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இவர்களின் வாக்கு சதவிகிதம் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. தி.மு.க கவலை கொள்ளும் அளவுக்கு கமல் கட்சியின் தாக்கம் இல்லை. ஆளும்கட்சியே அச்சப்படும் அளவுக்கு அயராது வலம்வருகிறார் டி.டி.வி.தினகரன்.
சமாளிப்பாரா ஸ்டாலின்?
ஆளும் அ.தி.மு.க-வுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், அவர்களுக்குப் பெரிய இழப்பு ஏதுமில்லை. ரஜினியின் இலக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுவிட்டு அவர் இமயமலை போய்விடலாம். கமல்ஹாசனும் தேர்தல் தோல்வியைப் பற்றிப் பெரிதாகக் கவலைகொள்ள மாட்டார். தினகரனுக்கும் ‘வந்தால் லாபம், இல்லையேல் நஷ்டம் ஏதுமில்லை’ என்கிற நிலைதான். ஆனால், தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த தி.மு.க-வுக்கு இது அமிலப் பரிசோதனை’’ என்கிறார் தி.மு.க முன்னணித் தலைவர் ஒருவர்.

‘‘அதிகார பலமும் பணபலமும் இணைந்த  பி.ஜே.பி-அ.தி.மு.க கூட்டணி, தினகரன் கட்சி, பா.ம.க என அத்தனை பேரும் தி.மு.க-வை வீழ்த்தவே வியூகம் வகுக்கப்போகின்றனர். ரஜினி தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினால், அவரின் ஏவுகணையும் ஸ்டாலினை நோக்கியே பாயும். அவருக்கு உறுதுணையாக மு.க.அழகிரி கண்ணிவெடிகளைக் களம் முழுவதும் புதைத்துவிட்டு வருவார்.
இவற்றையெல்லாம் சமாளிக்க ஸ்டாலினிடம் என்ன திட்டம் உள்ளது? ஆளும்கட்சி மீதான அதிருப்தி நியாயமாக தி.மு.க-வின் ஆதரவு வாக்குவங்கியாக மாற வேண்டும். அது இங்கு நடக்கவில்லை. ஸ்டாலின் குடும்பத்தினரின் ஊடுருவலால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உட்கட்சிப் பூசலால் கீழ்மட்ட நிர்வாகிகள் ஆர்வம் இழந்துள்ளனர்.
தேர்தல் கள நெருக்கடிகளையும், கட்சி நெருக்கடிகளையும் கருணாநிதி போல சாதுர்யமாக ஸ்டாலின் சமாளிப்பாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்தில் நாவலர், செ.மாதவன், ப.உ.சண்முகம் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் விலகிய போதும்… வைகோவுடன் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக சீனியர்கள் வெளியேறி, கட்சியின் கொடிக்கே ஆபத்து வந்த இக்கட்டான காலகட்டத்திலும் தனது ஆளுமையால் கட்சியைக் காப்பாற்றினார் கருணாநிதி. நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டபோதெல்லாம் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, முரசொலி மாறன், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சீனியர்களின் ஆலோசனைகளைக் கேட்டார் கருணாநிதி. ஆனால், ஸ்டாலின் தன் குடும்ப நண்பர்களின் ஆலோசனையை மட்டுமே கேட்கிறார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, தயாநிதி மாறன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள் யாரும் ஸ்டாலினின் நாற்காலியில் அமர்ந்திட நினைக்கவில்லை. ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். இதை உணர்ந்து கட்சி நடவடிக்கைகள் அமைந்தால் தான், அசுரப்பாய்ச்சலை தி.மு.க-வால் நிகழ்த்த முடியும்’’ எனக் கள யதார்த்தத்தை உணர்த்துகிறார் இன்னொரு மூத்த நிர்வாகி.


தி.மு.க-வின் இரண்டாவது தலைவர்!
த்து முறை தி.மு.க தலைவர் பதவியைத் தக்கவைத்திருந்த கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, தி.மு.க-வின் இரண்டாவது தலைவராக முடிசூடவிருக்கிறார் ஸ்டாலின். தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வாக ஆகஸ்ட் 28-ம் தேதி தி.மு.க பொதுக்குழு அமையவுள்ளது. 

தி.மு.க தொடங்கப்பட்டது முதல் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை தி.மு.க-வில் 15 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. ஆரம்ப கால நான்கு தேர்தல்களில், பொதுச்செயலாளர் பதவிக்கு அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, தி.மு.க-வில் தலைவர் என்ற பதவி இல்லை. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அப்போது முதல் 2015-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது உட்கட்சித் தேர்தல் வரை தொடர்ந்து 10 முறை கருணாநிதியே தலைவரானார். கருணாநிதியின் மறைவால், இப்போது தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஸ்டாலின் வசம் பொருளாளர் பதவியிருப்பதால், அந்தப் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். தலைவர், பொருளாளர். பொதுச்செயலாளர் ஆகிய மூன்று பதவிகள் காலியானால், 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி, காலியான பதவிகளை நிரப்ப வேண்டும் என்ற கட்சி விதி உள்ளது. அதன்படியே, இந்தப் பொதுக்குழுவில் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள 1,900 பேர் கூடி, தலைவராக ஸ்டாலினையும், பொருளாளராக துரைமுருகனையும் போட்டியின்றித் தேர்வு செய்ய உள்ளார்கள்.
ஸ்டாலினிடம் செயல் தலைவர் பதவியும் உள்ளது. அந்தப் பதவி ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சட்டத் திருத்தம் செய்து செயல் தலைவர் பதவி ரத்து செய்யப்பட உள்ளது.             

Advertisements
%d bloggers like this: