Advertisements

தி.மு.க-வை நெருங்கும் தாமரை!

தேசிய அளவில் காங்கிரஸ் அமைத்துள்ள மதச்சார் பற்ற கூட்டணியில் தி.மு.க முக்கியமான அங்கமாக இருக்கிறது. அந்த தி.மு.க-வை தங்கள் கூட்டணிக் கட்சியாக மாற்றிவிட முடியும் என நம்பிக்கையாகக் களமிறங்கியுள்ளது பி.ஜே.பி’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘என்ன புதிர் போடுகிறீர்… இதெல்லாம் நடக்குமா?’’ என்றோம்.

‘‘ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவுள்ள கருணாநிதி புகழஞ்சலிக் கூட்டம், இதற்கான அச்சாரமாக இருக்கும் என்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் அமித் ஷா. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வரவில்லை; குலாம் நபி ஆசாத் பங்கேற்கிறார். அமித் ஷா நினைத்திருந்தால், இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரையாவது அனுப்பி யிருக்கலாம். ஆனால், அவரே பங்கேற்க வருகிறார். ‘ஆயிரக்கணக்கில் திரண்டி ருக்கும் தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசக் கிடைக்கும் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொள்வேன்’ என டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் சிலரிடம் அமித் ஷா சொன்னாராம்.’’

‘‘இது மரியாதை நிமித்தம் செய்யும் ஒரு விஷயம்தானே! இதை வைத்தே கூட்டணி என முடிவு செய்துவிட முடியுமா என்ன?’’
‘‘இதைத் தனியாகப் பார்க்காதீர். தொடர்ச்சியாக நடந்துவரும் சம்பவங்களை அப்படியே கோத்துப் பார்த்தால், தி.மு.க-வை தாமரை எந்த அளவுக்கு நெருங்கி வருகிறது என்பது புரியும்; தாமரைக்கு இணக்கமாக தி.மு.க செல்வதும் புரியும். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், ‘அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளோம்’ என பிரதமர் மோடி அறிவித்தார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள் மற்றும் பி.ஜே.பி தலைவர்கள் பலர் மருத்துவமனைக்கு வந்து உடல்நலனை விசாரித்தனர். கருணாநிதி மறைவை தேசிய துக்கமாக மத்திய அரசு அறிவித்தது. எப்போதும் இல்லாத அங்கீகாரமாக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்காத ஒருவருக்காக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இரங்கல் தெரிவித்து, சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. தி.மு.க முன்னணித் தலைவர்கள் சிலரே, ‘காங்கிரஸ் ஆட்சி இருந்தால்கூட, இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்குமா என்பது தெரியவில்லை’ என்றார்கள்.’’
‘‘ஓஹோ!’’
‘‘இதேபோன்ற அணுகுமுறையை தி.மு.க தரப்பிலும் பார்க்க முடிந்தது. வாஜ்பாய்க்கு உடல்நிலை மோசமானதும், ‘அவர் உடல்நலம் பெற வேண்டும்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஸ்டாலின், வாஜ்பாய் மறைந்ததும் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார். வாஜ்பாயின் அஸ்தி தமிழக பி.ஜே.பி அலுவலகமான கமலாலயத்துக்கு வந்து சேர்ந்ததும் ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தினார். இவற்றை நம்பிக்கை சிக்னல்களாக தமிழக பி.ஜே.பி தலைவர்கள் சிலர் பார்க்கிறார்கள்.’’
‘‘பி.ஜே.பி ஏன் தி.மு.க-வை நெருங்குகிறது?’’
‘‘மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தது. ‘தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்தால் 30 முதல் 37 தொகுதிகளில் வெல்ல முடியும்’ என்பதுதான் அந்த சர்வேயின் ரிசல்ட். அது டெல்லி தலைவர்களை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. வட மாநிலங்களில் ஏற்படும் இழப்புகளை சரிக்கட்ட புதுப்புது இடங்களைத் தேட வேண்டிய கட்டாயத்தில் பி.ஜே.பி இருக்கிறது.’’
‘‘அதற்குத்தான் அவர்கள் ஏற்கெனவே பல முயற்சிகளைச் செய்தார்களே?’’
‘‘ஆமாம். ஓ.பி.எஸ் மூலம் ஆட்டம் ஆடிப் பார்த்தார்கள். அது பலன் கொடுக்கவில்லை. ரஜினியை நம்பியும் ஒன்றும் நடக்கவில்லை. ‘நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வந்தால்தான் தேர்தலைச் சந்திப்பேன்’ என்று ரஜினி கறார் காட்டுகிறார். ஆளும் அ.தி.மு.க தரப்புமீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியையும் புரிந்துகொண்டார்கள். அதனால் தி.மு.க-வுடன் நெருங்கப் பார்க்கிறார்கள். ஸ்டாலின் மருமகன் சபரீசனுடன் பி.ஜே.பி டெல்லி பிரமுகர்கள் சிலர் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். இதுதவிர கல்வி வள்ளலாக இருக்கும் தி.மு.க பிரமுகர் ஒருவரும் டெல்லியின் தொடர்பில் இருக்கிறார். ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மூன்றாவது இடம் வந்த கன்னியாகுமரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட சில இடங்களை மட்டும் ஒதுக்கினால் போதும்’ என்று கேட்கின்றனர்.’’
‘‘இதற்கு ஸ்டாலின் என்ன சொல்கிறார்?’’
‘‘ஸ்டாலின் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இங்கு பி.ஜே.பி-யுடன் சேர்வது எதிர்காலத்தில் டெல்லியில் தனக்கு பெரிய பாதகமாகப் போய்விடும் என்று ஸ்டாலின் கருதுகிறார். மேலும், பி.ஜே.பி-யுடன் சேர்வது தமிழகத்தில் தங்களுக்கு சரிவை ஏற்படுத்தும் என்றும் நினைக்கிறார்.’’
‘‘ஒருவேளை தி.மு.க ஒத்துவரவில்லை என்றால், அழகிரியை வைத்து பி.ஜே.பி ஆட்டம் காட்டுமா?’’
‘‘அழகிரி அதற்கு ஒத்துவரமாட்டார். ‘அப்படிச் செய்தால், சொந்தக் கட்சிக்காரர்களே நம்மை துரோகியாகப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்’ என்று தன் ஆதரவாளர்களிடம் சொன்னாராம் அழகிரி. ஆனால், ரஜினியுடன் சேர்வது பற்றி அழகிரிக்கு ஓர் ஊசலாட்டம் இருக்கிறது. தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘நானும் ரஜினியும் சேர்ந்தால் என்ன நடக்கும்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ‘ரஜினியுடன் சேர்ந்தால், நீங்கள் இரண்டாம் இடத்துக்குப் போய்விடுவீர்கள். அதில், ரஜினிக்குத்தான் லாபம். உங்களுக்கு எந்த லாபமும் இல்லை’ என்று அவரின் நலம்விரும்பிகள் சொல்லியிருக்கிறார்கள்.’’

‘‘பி.ஜே.பி-யின் இந்த முயற்சியை ஆளும் அ.தி.மு.க எப்படிப் பார்க்கிறது?’’
‘‘ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க செயற்குழுவில், காரசாரமான பேச்சு நடந்துள்ளது. கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் ‘நம்மை அடிமை ஆட்சி என  கிண்டல் செய்கிறார்கள்’ என்று பேச, உடனே முதல்வர் எடப்பாடி எழுந்து, ‘நாம் மத்திய அரசுக்கு பயந்து ஆட்சி செய்யவில்லை. அம்மா வழியில் ஆட்சி செய்கிறோம். ஆதரிக்க வேண்டியதை ஆதரிப்போம். எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம்’ என்றார்.  ‘இனி பி.ஜே.பி-க்கு எதிரான அரசியல்தான் நம்மை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வைக்கும்’ என்று சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கு ஏற்றபடி, சில செயல்பாடுகளும் முடிவு செய்யப்பட்டுள்ளன.’’ 
‘‘அ.தி.மு.க செயற்குழுவில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போட்டிருக்கிறார்களே?’’
‘‘2017 ஜனவரி 4-ம் தேதி கூடிய தி.மு.க பொதுக்குழுவில் முதல் தீர்மானமே, ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தீர்மானம்தான். அதேபோன்ற அரசியல் நாகரிகத்தை அ.தி.மு.க-வும் பின்பற்றியுள்ளது.  செயற்குழுவின் நிறைவாகப் பேசிய பன்னீர், டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்றபோது நடந்ததைச் சொன்னாராம். ‘அது எனக்கு நேர்ந்த அவமானம் அல்ல. கட்சிக்கு நேர்ந்த அவமானம். அம்மா இருந்தபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகளில் ஜெயித்தோம். இப்போது 39 தொகுதிகளிலும் ஜெயித்தால்தான் நமக்கு மரியாதை. அப்போதுதான் எல்லோருக்கும் பதவி இருக்கும். ஆட்சியும் நிலைக்கும்’ என்று உருக்கமாகச் சொன்னாராம் பன்னீர். இந்த செயற்குழுவிலும் தோப்பு வெங்கடாசலம், ராஜன் செல்லப்பா, ஜக்கையன் போன்ற     எம்.எல்.ஏ-க்கள் சலசலப்பு கிளப்ப முயற்சி செய்தார்கள். செயற்குழு முடிந்ததும் தோப்பு வெங்கடாசலத்தைத் தனியாகக் கூப்பிட்டு, எடப்பாடியும் பன்னீரும் கால் மணி நேரம் பேசினார்களாம்’’ என்ற கழுகார், பறந்தார்.

Advertisements
%d bloggers like this: