பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது எப்படி?

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் குழந்தை என்னும் பருவத்தை கடப்பதற்குள் அவர்களுக்கு எல்லா வித நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து விட வேண்டியது பெற்றோர்களின் முக்கிய

கடமையாகும். குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடங்கள் கடலளவு பெரிதாக இருந்தாலும், முக்கிய பாடங்களை சிறு சிறு துளிகளாக குழந்தைகளிடம் சேர்த்து, அவர்களை வாழ்க்கைக் கடலில் நீந்துவதற்கு தயாராக்க வேண்டியது பெற்றோரின் கடமை ஆகும்.

இந்த பதிப்பில் வாழ்க்கையை வழிநடத்த இன்றைய காலங்களில் மிக முக்கியமாக இருக்கும் ஒரு விஷயத்தை குறித்து பார்க்க போகிறோம். பணம் இல்லாமல் ஒரு நாளை கழிப்பதே அரிதான விஷயம் ஆகிவிட்ட இன்றைய சூழலில், பணத்தை எப்படி சேமிப்பது, அதன் முக்கியத்துவம் மற்றும் பணத்தை எப்படி நிர்வகிப்பது போன்ற விஷயங்கள் குறித்து படிக்கலாம், வாருங்கள்!

பணம் என்றால் என்ன?

குழந்தைகள் இரண்டு முதல் மூன்று வயதை அடையும் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பணம் என்றால் என்ன? அதை எதற்கு பயன்படுத்தலாம்? பணம் கொடுத்தால் என்ன கிடைக்கும் – எது கிடைக்காது? பணத்தை எப்படி சேமிப்பது போன்ற விஷயங்கள் குறித்து கற்றுத்தர வேண்டும். இரண்டு வயது என்பது மிகவும் குறைவு இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும் என்று காலம் தாழ்த்தாமல், எது கூறினாலும் அப்படியே பதியும் இந்த வயதில் இருந்தே நற்பண்புகளை கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்!

பணத்தின் அருமை!

பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு உணர்த்த எது எந்த ரூபாய் என்று முதலில் கற்பிக்க வேண்டும். பின் ஒரு உண்டியல் டப்பாவை குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு போல் அறிமுகப்படுத்தி, குழந்தைகள் அதில் எவ்வளவு காய்ன்கள் அதவது நாணயங்கள் சேர்த்து வைக்கின்றனர் என்று கூறி, குழந்தைகளின் பண சேமிப்பு பழக்கத்தை தொடங்கி வைத்து ஊக்குவிக்கலாம்.

குழந்தைகளுக்கு பணத்தை அறிமுகப்படுத்தி, உண்டியல் முறையை கற்றுக்கொடுத்ததோடு அவர்களுடன் நீங்களும் ஒரு டப்பாவில் நாணயங்கள் சேர்த்து யார் முதலில் அதிகம் சேர்ப்பார்கள் என்று ஒரு போட்டி போல் குழந்தைக்கு பணத்தின் அருமை மற்றும் ஆரோக்கியமான, நேர்மையான போட்டி முறை இரண்டையும் கற்றுக்கொடுத்து விடலாம்.

பணம் எப்படி வரும்?

குழந்தைகள் நான்கு முதல் ஐந்து வயது காலகட்டத்தை அடையும் பொழுது பணம் எங்கிருந்து எப்படி வருகிறது, நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்,எதனால் உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது போன்ற அடிப்படை விஷயங்களை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி, சம்பாதித்த பணம் எப்படி செலவாகிறது என்றும் கற்றுக் கொடுங்கள்!

காத்திருப்பு!

அப்பொழுது தான் குழந்தைகள் பணம் சம்பாதிக்க எத்தனை நாட்கள் ஆகின்றன என்றும், அது எப்படி ஒரு நொடியில் செலவு செய்யப்படுகிறது என்றும் புரிந்து கொள்வார்கள். இதிலிருந்து வாழ்வின் அடிப்படை சாராம்சமான பண்டமாற்று முறை குழந்தைக்கு விளங்க ஆரம்பிக்கும். மேலும் பணம் கையில் கிடைக்க எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள்; இதன் மூலம் காத்திருப்பு என்ற பாடமும் குழந்தைகளுக்கு கற்று கொடுத்தது போலாகி விடும்.

பணத்தை கொடுங்கள்!

குழந்தைகளின் ஆறு முதல் எட்டு வரையிலான வயதில் குழந்தைகளுக்கு அவர்தம் கையில் பணத்தை கொடுத்து, கொடுத்த பணத்தை குழந்தைகள் எப்படி செலவு செய்கின்றனர் என்று தள்ளி இருந்து பாருங்கள்! பணத்தை அவர்கள் வீணாக்கினாலும், நல்ல முறையில் செலவிட்டாலும் ஒன்றும் கூறாமல் குழந்தைகள் நீங்கள் கொடுத்த பணியை முழுமையாக முடித்த பின் அவர்களிடம், பணத்தை செலவிடும் பொழுது அவர்கள் என்ன தப்பு செய்தார்கள், என்ன நல்லது செய்தார்கள், அவர்கள் எதை மாற்ற வேண்டும் என்பது போன்ற விஷயங்களை குறித்து தெளிவாக விளக்கி கற்றுக் கொடுங்கள்!

தான தர்மம்!

6 முதல் 8 வயதிலேயே குழந்தைகளுக்கு பணத்தை கொடுத்து செலவு செய்ய சொல்லி பயிற்சி அளித்தது போல், குழந்தைகளுக்கு தான தர்மம் என்னும் தலைப்பை பற்றியும் விளக்க வேண்டியது அவசியம். ஏனெனில் கையில் காசு கிடைத்தவுடன் தனது தேவை முடிந்த பின், மீதி உள்ள பணத்தை சேமிப்பு பத்தி தானம் பாதி என்ற முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்!

மேலும் குழந்தைகளுக்கு யாருக்கு தானம் அளிக்க வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்றும் கற்பியுங்கள்!

தேவை vs விருப்பம்!

குழந்தைகளின் 9 முதல் 12 வயது வரையிலான காலகட்டத்தில் அவர்களுக்கு எது அத்யாவசிய தேவை மற்றும் எது ஆடம்பரம் என்று இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துரைக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பணம் சேமிக்க பயன்படுத்தப்படும் சாதனங்களான வங்கிகள், சேமிப்பு கணக்குகள் போன்றவற்றை எடுத்துக்கூறி வங்கிக்கு அழைத்துச் சென்று நேரிலும் காட்டி விடுவது நன்று.

மேலும் குழந்தைகளுக்கு இன்றைய கால டிஜிட்டல் பண பரிமாற்ற முறைகளான பனமற்று செயலிகள் – apps, கார்டுகள் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை குறித்த தகவல்கள், வேறுபாடுகள், பயன்பாடுகள் பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்க வேண்டும்.

பாக்கெட் மணி!

பாக்கெட் மணி என்னும் பழக்கம் குழந்தைகளிடத்தில் அறிமுகப்படுத்துவதும், படுத்தாததும் பெற்றோரின் விருப்பம்! குழந்தைகளின் கையில் பணம் கொடுத்து நல்வழி படுத்துவதும், பணம் கொடுத்து அவர்களை பாழாக்குவதும் ஒரு வகை! மற்றொன்று பணம் கொடுக்காமல் பணத்தை பற்றிய ஏக்கத்தை குழந்தையின் மனதில் விதைப்பது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துவது – இந்த வெறி திருட்டாக கூட மாறலாம்.

ஆகையால் உங்களுக்கு குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும், நீங்கள் எப்படி, குழந்தையின் குணநலன் எப்படி போன்ற விஷயங்களை ஆராய்ந்து குழந்தைக்கு பாக்கெட் மணி கொடுக்கும் பழக்கத்தை கடைபிடியுங்கள்!

பணம் சம்பாதிப்பது எப்படி?

குழந்தைகள் 13 முதல் 15 வயதை அடையும் பொழுது, தனது திறமையை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி, எந்த தொழில் செய்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் போன்ற வாழ்க்கையை தீர்மானிக்கும் தகவல்கள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறி விளக்க வேண்டும். குழந்தைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் பணம் பரிசாக வழங்கப்படும்; அதைக்குறித்த தகவல்களை எடுத்துக்கூறி குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தால், இப்போட்டிகளில் அவர்கள் பங்கேற்க வழிவகை செய்து தரலாம்.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!

நீங்கள் பணத்தின் மதிப்பு, சேமிப்பு, சம்பாதிப்பு பற்றி கற்றுக் கொடுக்கும் பொழுது குழந்தைக்கு பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று புரிந்து விடக்கூடாது. இந்த விஷயங்களை ஒரே நாளில் அல்லது ஒரு வாரம், ஒரு மாதம் என பணம் பணம் என்று அதையே பேசி, அதை பற்றியே சொல்லிக்கொடுத்து குழந்தையின் மனதை கெடுக்காமல், தற்செயலாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளின் மூலமாக குழந்தைக்கு பணம் மற்றும் வாழ்க்கை எப்படி ஒன்றோடு ஒன்று கலந்துள்ளது. மனதில் பணம் குறித்து ஏற்படும் ஒரு சின்ன வித்தியாசம் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வரும் என்று வாழ்க்கைப்படத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

One response

  1. விஜயகுமார்

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு பாராட்டுகள்

%d bloggers like this: