Advertisements

அழகிரி அவுட்… அடுத்து கனிமொழி?

மு.க.ஸ்டாலினுக்கு, தலைவர் மகுடம் சூட்டப்பட்டுவிட்டது. பொருளாளர் துரைமுருகனுடன் சேர்ந்து, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். இதெல்லாம் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செய்திகள். இப்படி திரைக்கு வராத செய்திகள் உம்மிடம் தானே இருக்கும்… கொஞ்சம் எடுத்துவிடும்!’’
– அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாரிடம் கொக்கி போட்டோம். அர்த்தம் பொதிந்த புன்னகையைத் தவழவிட்டவர், ‘‘ஸ்டாலினின் காய் நகர்த்தலில், அழகிரி எப்போதோ வெட்டுப்பட்டு வெளியேறிவிட்டார். இப்போது கனிமொழிக்கு எதிரான வியூகம் வகுக்கப்படுகிறது’’ என்று சொன்னார்.

‘‘என்ன இது? தலைவர் பதவியேற்ற அண்ணனுக்கு, அங்கேயே முத்தமெல்லாம் கொடுத்து வாழ்த்தினாரே தங்கை? ‘டெல்லியில் இனி கனிமொழிதான் எல்லாமே என்று பேசிமுடித்துவிட்டார்களாம்’ என்று கடந்த முறைகூட சொன்னீரே?’’ என அதிர்ந்துபோய்க் கேட்டோம்.
‘‘உண்மைதான். ஆனால், பொதுக்குழு மேடையில் கனிமொழி உதிர்த்த வார்த்தைகளை நீர் கவனிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் நன்றாகவே கவனித்துவிட்டனர். அதுதான், கனிமொழிக்கு எதிரான அம்பாக மாறிவிட்டதாம்.’’

‘‘அப்படி என்னதான் பேசினார்?’’
‘‘பொதுக்குழுவில் தன் பேச்சைத் தொடங்கியதும், ‘முன்னாள் பொருளாளர் (ஸ்டாலின்) போல் இல்லாமல், புதிய பொருளாளர் (துரைமுருகன்) மகளிர் அணிக்கு நிறைய பொருள் கொடுத்து உதவவேண்டும்’ என்று சொன்னார் கனிமொழி. இப்படி பஞ்ச் வைத்ததை ஸ்டாலின் தரப்பு ரசிக்கவில்லை. தன் பேச்சில், ‘தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் தலைவர் அல்ல; தொண்டர்கள் ஏற்றுக்கொண்டவர்களே உண்மையில் தலைவர்கள்’ என்றும் கனிமொழி சொன்னார். இதை, கனிமொழி சாதாரணமாகவே சொன்னார். ஆனால், ஸ்டாலின் தரப்பினர் வேறுமாதிரி அர்த்தப்படுத்திக்கொண்டனர். இந்த இரண்டு இடங்களைத் தவிர மற்றபடி ஸ்டாலினின் தலைமைப்பண்பையும் ஆளுமையையும் குறிப்பிட்டு நெகிழ்ச்சியாகவே பேசினார் கனிமொழி. ஆனாலும், எல்டாம்ஸ் ரோடு கிச்சன் கேபினட், கனிமொழிக்கு எதிராக ஸ்டாலினிடம் தூபம் போட ஆரம்பித்துவிட்டதாம்.’’
‘‘அடடே!’’
‘‘கனிமொழியைப் பொறுத்தவரையில் 2014-க்குப் பிறகு, ஸ்டாலினுடன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாதானமாகத்தான் சென்று கொண்டிருக்கிறார். அதற்காக, அழகிரியையே தள்ளிவைக்கவும் கனிமொழி தயங்கவில்லை. ஆனால், எல்டாம்ஸ் ரோடு கிச்சன் கேபினட் மட்டும், கனிமொழியை அப்புறப்படுத்தும் எண்ணத்தை ஆரம்பத்திலிருந்தே மாற்றிக் கொள்ளவில்லை.’’
‘‘கனிமொழிமீது அப்படியென்ன கோபமோ?’’
‘‘கோபமெல்லாம் இல்லை. யாரும் இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம். அதாவது, அழகிரியை ஒரு தொண்டராக வைத்திருந்தால்கூட ஆபத்து என்றுதான் கட்சிக்குள் நுழையவிடாமல் செய்துகொண்டுள்ளனர். கருணாநிதி இருந்தபோதே, அவராலேயே அழகிரியை வெளியேற்றச் செய்தனர். இப்போது, அழகிரியைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதற்குக் காரணமாக, ‘கருணாநிதியாலேயே நீக்கப்பட்டவர்’ என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். இதை மீறி அழகிரியால் முட்டிமோத முடியவில்லை. அதனால்தான், ‘ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டேன். கட்சியைக் காப்பாற்றத்தான் தொண்டனாக இணைய ஆசைப்படுகிறேன்’ என்று பேட்டியெல்லாம் கொடுக்கிறார். ஆனாலும், அழகிரிக்கு க்ரீன் சிக்னல் விழவில்லை. அடுத்து, கனிமொழியைக் கட்டம் கட்டும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன.’’
‘‘ம்ம்ம்…’’ 
‘‘ஸ்டாலின் கன்னத்தில் முத்தம் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்த கனிமொழியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம டிரெண்டிங். ஆனால், அந்த புகைப்படம் தி.மு.க-வின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, மு.க.ஸ்டாலினின் சமூக வலைதளப் பக்கங்கள் எதிலும் இடம்பெறவில்லை. அவ்வளவு ஏன்… ‘பொதுக்குழுவில் திரண்டிருந்தவர்கள்’ என்று குறிப்பிட்டு முரசொலி வெளியிட்டிருந்த போட்டோவில்கூட கனிமொழியின் முகம் இல்லை. இப்போது மகளிரணித் தலைவி பதவியிலிருந்து கனிமொழியைத் துரத்த காய்கள் நகர்த்தப்படுகின்றன.’’
‘‘மகளிரணி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா?’’ 
‘‘தி.மு.க-வில் மகளிரணி என ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். சம்பிரதாயமாக இருந்த அந்த அணியை, ஆக்டிவாக மாற்றியது கனிமொழிதான். இவர் தலைவியாக வருவதற்கு முன், மகளிரணியின் வேலைகளையும் மாவட்டச் செயலாளர்கள்தான் செய்வார்கள். இவர் வந்தபிறகு, அந்த அணியின் மேடையில்கூட மாவட்டச் செயலாளர்களை ஏற்றுவதில்லை. அனைத்து வேலைகளையும் மகளிரை வைத்தே கனிமொழி செய்துவந்தார். தி.மு.க-வின் இளைஞரணி போல், மகளிரணியும் கொஞ்சம் பிரகாசிக்க ஆரம்பித்தது. மகளிரணித் தலைவியாக கனிமொழி இருப்பதில் மற்றொரு வசதி, அவர் அதிகாரபூர்வமாக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்யலாம்’ என்பது. அந்த வகையில், இந்தப் பதவியைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதுமே தனக்கான செல்வாக்கை உருவாக்கி வைத்துள்ளார் கனிமொழி. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்பைப் பறித்து டம்மியாக்கப் போகிறார்களாம். அதற்கு பதிலாக, துணைப் பொதுச்செயலாளர் பதவியைக் கொடுக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.’’ 
‘‘துணைப் பொதுச்செயலாளர் பதவி முக்கியத்துவம் இல்லாத ஒன்றா?’’
‘‘தற்போதைய துணைப் பொதுச்செயலாளர்கள் யார் யார் என்பதைத் தெரிந்துகொண்டால், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர்தான் இந்தப் பொறுப்பில் உள்ளனர். இவர்களில் ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தவர். அதனால், அவரை ஓரளவுக்குக் கட்சிக்காரர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குக் கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர்கள் இப்படிப்பட்ட பொறுப்பில் இருப்பதே பலருக்குத் தெரியாது. கட்சியின் மூத்த நிர்வாகிகளை சமாதானம் செய்வதற்காகக் கொடுக்கப்படும் கௌரவப் பதவி அது. ஒரே பலன், தி.மு.க-வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் நடைபெறும்போது மேடையில் இடம்பிடிக்கலாம். அவ்வளவுதான்! மகளிரணியைப் பறித்துவிட்டு இந்தப் பதவியைக் கனிமொழியிடம் கொடுத்துவிட்டால், அவர் மாவட்டங்கள்தோறும் செல்வதையும், அடிமட்டத் தொண்டர்களிடம் நெருங்குவதையும் தடுத்துவிடலாம். அப்படியே கொஞ்சம்கொஞ்சமாக ஓரங்கட்டி உட்கார வைத்துவிடலாம் என்பதுதான் திட்டமாம்.’’
‘‘கனிமொழி தரப்பின் முடிவென்னவோ!’’
‘‘இந்த நகர்வுகள் பற்றி கனிமொழியின் கவனத்துக்கு வந்ததுமே, தனக்கு வேண்டிய சிலரிடம் ஆலோசித்தார் அவர். ‘மகளிரணியுடன் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், மகளிரணித் தலைவி பதவியை மட்டும் விட்டுவிடாதீர்கள்’ என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கனிமொழியும் அதில் உறுதியாக இருப்பது என்று தீர்மானித்துவிட்டாராம்.’’
‘‘சரி, கனிமொழியைத் தவிர்த்து வேறு முட்டல், மோதல்கள் இல்லையோ?’’
‘‘ஏன் இல்லாமல்? ஆளாளுக்கு ஏதாவது ஒரு பதவியைக் குறிவைக்கத்தான் செய்கிறார்கள். தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்த துரைமுருகன், இப்போது பொருளாளராகிவிட்டார். அந்தப் பதவியை டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் குறிவைக்கிறார்கள். இது நியமனப் பதவிதான். பெரிதாக பொறுப்புகள் ஏதும் இருக்காது. என்றாலும், கட்சியின் அதிகார வரிசையில் நான்காவது இடம், இந்தப் பதவியில் இருப்பவருக்கே கிடைக்கும். அதனால், இந்தப் பதவியை பிடித்துவிட மூவருமே தீவிரமாக மோதுகிறார்களாம்.’’
‘‘சரி, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பற்றி ஏதாவது தகவல்கள் உண்டா?’’
‘‘தேர்தல் தேதி எதையும் அறிவிக்கவில்லை தேர்தல் ஆணையம். அதனால், தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் அமைதியாகவே உள்ளனர். தினகரன் தரப்பில்தான் வேலைகள் ஜரூராக இருக்கின்றன. திருப்பரங்குன்றத்துக்கு முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, திருவாரூருக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் என்று வேட்பாளர்களை இறுதி செய்துள்ளார்களாம். வழக்கம்போல திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர், வேலூர் மகாதேவன்மலை சித்தர் ஆகியோரிடம் குறிகேட்ட பிறகுதான், தினகரன் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.’’
‘‘ம்… சீக்கிரமே இந்த இரண்டு தொகுதிகளிலும் பணமழை பொழியும் என்று சொல்லும்.’’
‘‘சரியாகச் சொன்னீர். பலத்த எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, அனைத்துக்கட்சிகளிலும் இருக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். எப்படியும் தினகரன் புண்ணியத்தில் தொகுதி களைகட்டும். நாமும் கொஞ்சம் அறுவடை செய்துகொள்ளலாம் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. இவர்களில் பலர், தினகரனின் ஸ்லீப்பர் செல்களாகக்கூட பணியாற்றத் தயாராகிவருகிறார்களாம். இதனால், அ.தி.மு.க-வில் அதிருப்தியில் இருப்பவர்களைச் சரிக்கட்டும் வேலைகள் நடக்கின்றன’’ என்ற கழுகார், ‘‘எதற்கும் உம் நிருபர்களை இப்போதே இரண்டு தொகுதிகளிலும் ஒரு கண் வைக்கச் சொல்லும்’’ என்றபடியே பறந்தார்.

Advertisements
%d bloggers like this: