அம்பலமாகும் ஆவணங்கள்… ஆட்டம் காணும் அரசு!

ரியான நேரத்தில் கழுகார் அலுவலகத்தில் நுழைய… ‘‘வாங்க பிக் பாஸ்’’ என்று வரவேற்றோம்.
‘‘ம்… பிக் பாஸ் என்கிற வரவேற்பிலேயே பொடி வைக்கிறீர். உண்மையிலேயே பிக் பாஸ், தன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். அதாவது, ஆவணங்களை வைத்து ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது’’ என்றார் கழுகார். அவர் சொல்வதைக் கேட்கத் தயாரானோம்.

‘‘அ.தி.மு.க-வையும் இந்த ஆட்சியையும் இத்தனை நாட்களாக டெல்லி ஆட்சியாளர்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பதே, சில பல காரணங்களுக்காகத்தான். அதனால்தான், இரண்டாக இருந்தவர்களை இணைத்தார்; எதிர்த்தவர்களை துவம்சம் செய்தார்; தொடர்ந்து ஆட்சிக்கு முட்டும் கொடுக்கிறார் பிக்பாஸ். ஆனாலும், தற்போதைய அ.தி.மு.க மற்றும் அதன் ஆட்சியில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டார் பிக்பாஸ். பெரிதாக மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரும் அதில் இல்லை. தங்களின் சொல்படி ஆடுகிறார்கள் என்றாலும், பல சமயங்களில் காலைவாரிவிடுகிறார்கள் என்ற கோபமும் எழுந்திருக்கிறது. அதனால்தான், இந்த ஆட்சியே தேவையில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு, அவ்வப்போது ரெய்டுகள் எல்லாம் நடத்தப்படுகின்றன. அப்போதும் பிக்பாஸ் எதிர்பார்ப்பது போல் நடக்கவில்லை.’’
‘‘அதுதான் ஊரறிந்த விஷயமாயிற்றே!’’
‘‘அதனால்தான், கைவசம் இருக்கும் ஆவணங்களை வைத்தே இந்த ஆட்சிக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. இத்தனை காலமாக இருந்ததுபோல தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டும் காணாமல் இருக்கப்போவதில்லையாம் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மாநிலவாரியாகக் கூட்டணி கணக்குகளையும் சரிப்படுத்த நினைக்கிறது பி.ஜே.பி. அந்த வகையில் தமிழகக் கணக்குகளையும் தீர்க்கும் வேலைகள் முதலாவதாகத் தொடங்கப்பட்டுள்ளன.’’
‘‘கூட்டணிக் கணக்குக்கும் ஆவணங்களுக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘தமிழகத்தில் அ.தி.மு.க அல்லது தி.மு.க., இந்த இரண்டில் ஏதாவதொரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெறமுடியும். ஸ்டாலினின் பொதுக்குழு பேச்சு மூலமாக, கிட்டத்தட்ட கதவைச் சாத்திவிட்டோம் என்று ரெட் சிக்னல் போட்டுவிட்டது தி.மு.க. மிச்சமிருக்கும் ஒரே சாய்ஸ், அ.தி.மு.க மட்டுமே. ஆனால், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம் என்று நினைக்கிறது பி.ஜே.பி. அதனால்தான், அ.தி.மு.க எனும் கட்சிக்குள் ஆளுமையான சில நபர்களை நுழைத்து, அதன்பிறகு தேர்தலைச் சந்திக்க நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கு, எடப்பாடி தரப்பு ஆரம்பத்திலிருந்தே ஒப்புக்கொள்ள மறுக்கிறது.’’

‘‘ஓஹோ!’’
‘‘இவர்கள் நம்முடைய தயவில்தான் பதவியில் ஒட்டிக்கொண்டுள்ளனர். ஆனால், நாம் சொல்வதைக் கேட்க மறுக்கிறார்களே என்கிற கோபம் பி.ஜே.பி-க்கு நிறையவே இருக்கிறது. வரிசையாக ரெய்டு, வழக்குகள் என்று சுமந்திருக்கும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பி.ஜே.பி-யின் இமேஜ் பாதிக்கப்படும். ‘பி.ஜே.பி-யின் பினாமி அரசுதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு’ என்கிற பேச்சு பட்டிதொட்டியெங்கும் மக்களிடம் ஆழமாகப் பதிந்துகிடக்கிறது. இதையெல்லாம் உடைக்கும் வகையில்தான், ஊழல் கறைபடிந்தவர்கள் என்கிற முத்திரையை சிலர் மீது குத்தி, முடக்கிப்போடும் வேலைகள் துவங்கியுள்ளன. அதற்காகத்தான் இந்த ஆவண ஆட்டம். கறைபடிந்தவர்கள் என்கிற முத்திரையோடு அமைச்சரவையிலிருந்தும் அ.தி.மு.க-விலிருந்தும் சிலரை ஓரங்கட்டிவிட்டால், நாம் விரும்பும் சில ஆளுமைகளை அந்தக் கட்சிக்குள் நுழைக்க முடியும். அ.தி.மு.க புதுப்பொலிவு பெற்றுவிடும். அதன்பிறகு கூட்டணி போட்டால், மக்களின் எதிர்ப்பும் குறைந்துவிடும் என்று நம்புகிறது பி.ஜே.பி.’’
‘‘ஆஹா… என்னவொரு ராஜதந்திரம்?’’
‘‘இதில் முதல் சாய்ஸாகத்தான் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிவைத்துள்ளனர். முந்தைய வருவானவரித் துறை ரெய்டில் முதலில் சிக்கியவர் இவர்தான். பிறகு, குட்கா ஊழலிலும் பெயர் அடிபட்டு, சி.பி.ஐ விசாரணை வரை நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு இவருடைய சென்னை வீடு, புதுக்கோட்டையில் உள்ள வீடுகள், கல்குவாரி இங்கெல்லாம் வருவானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. அந்த ரெய்டின்போது அமைச்சரின் இலுப்பூர் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் உறைகளில் சுற்றி சின்னச்சின்ன பொட்டலங்களாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. அதில் சுமார் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் என்றும், செவிலியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் பணி நியமனத்துக்காக வாங்கப்பட்டது என்றும் விஜயபாஸ்கரின் அப்பா சின்னதம்பி வாக்குமூலம் அளித்ததாக தற்போது கசியவிடப்பட்டுள்ள வருமானவரித் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.’’
‘‘இதை அமைச்சர் தரப்பு மறுத்துள்ளதே?’’
‘‘மறுக்கத்தான் செய்வார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆவணங்கள் கத்தியாக பாய்ந்து வரும்போது கதறப் போகிறார்கள். விரைவில் சில அமைச்சர்கள் குறித்த ஆவணங்கள் வெளியாகப் போகின்றன என்று கடந்த வாரமே ஒரு செய்தி பரவியது. வழக்கம்போல இதுவும் வதந்தியாக இருக்கும் என்றே பலரும் அதைக் கடந்துவிட்டனர். ஆனால், அது உண்மையாகவே நடந்துவிட்டது. வருமானவரித் துறை மற்றும் மத்திய ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக உள்ள தமிழக அரசியல் புள்ளிகளிடம் விசாரித்தேன். ‘இது திட்டமிட்டே கசிய விடப்பட்டதுதான் என்பதில் சந்தேகமே இல்லை. இன்னும் மூன்று அமைச்சர்கள் குறித்து அதிரடியான சில ஆவணங்கள் சீக்கிரமே வெளியாகும்’ என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்கள்.’’
‘‘யார் அந்த மூவர்?’’
‘‘தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ரெய்டுகளின் ஃப்ளாஷ்பேக்கை ஓடவிடலாம். சத்துணவுக்கான முட்டைக் கொள்முதலில் மோசடி நடந்துள்ளது என்று சொல்லி, அந்த டெண்டரை எடுத்திருந்த கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் குறித்த தகவல்களும் அப்போது வெளியாகின. ஆனால், ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளிவர வில்லை. அந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் சிலவற்றில் முக்கியமான அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கு நெருக்கமானவர்கள் குறித்த விவரங்களும் உள்ளனவாம். ஒருவேளை அடுத்து பாய்ந்து வரப்போவது அந்த ஆவணங்களில் ஒன்றாக இருக்கலாம். அதாவது, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர்மீது முதலில் அம்பு பாயுமாம்.’’
‘‘அடுத்த அம்பு?’’
‘‘தமிழகத்தில் மணல் சாம்ராஜ்யம் நடத்திய சேகர் ரெட்டி வீட்டிலிருந்து வருமானவரித் துறை கட்டுக் கட்டாக பணத்தோடு, கத்தையாக ஆவணங்களையும் அள்ளியது நினைவிருக்கிறதா? அந்த ஆவணங் களையும் தூசு தட்டுகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அந்த ஆவணங்களில் எங்கெல்லாம் இருக்கிறது என்று சிவப்பு நிறை மையில் அடிக்கோடிட்டு வைத்துள்ளனர். சமீபத்தில் வீட்டுவசதி வாரியத்தில் மிகப்பெரிய டெண்டர் ஒன்று, முக்கிய நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டதாம். அந்த விவகாரத்தையும் வருமானவரித் துறை அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள். இதில் பன்னீரை சிக்கவைக்கும் வேலைகளும் நடக்கின்றன.’’
‘‘சரி, யார் அந்த மூன்றாவது அமைச்சர்?’’
‘‘கான்ட்ராக்டர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி நிறுவனங்கள் குறித்து ஏராளமான ஆவணங்கள் சிக்கின. முதல்வரின் மகன் மிதுன் குறித்த ஆவணங்களும் வருமானவரித் துறை வசம் சிக்கியுள்ளன. இதேபோன்ற இன்னும் சில விவரங்களும்கூட வருமானவரித் துறையால் பெரிய ஃபைலாக தயார்செய்யப்பட்டுள்ளது. ஆவணங்கள் வரிசையாக வெளியே வந்தால், ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படும். மக்கள் மத்தியில் ஊழல் நபர்கள் என்ற முத்திரை விழும். இதையெல்லாம் மூன்று, நான்கு மாத கெடுவுக்குள் செய்துவிட நினைக்கிறார்கள். அதாவது, டிசம்பர் இறுதிக்குள் இதையெல்லாம் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.’’
‘‘சரி, பெண் எஸ்.பி-யை பாலியல் டார்ச்சர் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி-யான முருகன் விவகாரத்தில் திடீர் திருப்பம் நடந்திருக்கிறதே?’’
‘‘சமாதானமாகப் போங்கள் என அந்த பெண் எஸ்.பி-யிடம் சிலர் தூதுபோயுள்ளனர். அவர்களையெல்லாம் உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டாராம் அந்த எஸ்.பி. இந்நிலையில்தான், ‘இந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்துள்ளார் விசாகா கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால். முருகனின் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், கீழ்மட்ட அதிகாரிகள் என்று பலரையும் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டியிருக்கிறது. முருகன் அதே பதவியில் நீடித்தால் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால், அவர் விரைவில் மாற்றப்படலாம் என்கிறார்கள்’’ என்ற கழுகார் பறந்தார்.

%d bloggers like this: