திகார் தயார்… வளைக்கப்படும் விஜயபாஸ்கர்!

ழுகார் வந்ததும், தயாராக வைத்திருந்த பொக்கேவை நீட்டி, ‘‘நீர் தீர்க்கதரிசி’’ என்றோம். ‘‘ஜூ.வி-யில் ‘அம்பலமாகும் ஆவணங்கள்… ஆட்டம் காணும் அரசு’ என்று தலைப்பு வைக்கிறீர்கள். புதன்கிழமை காலையில் ஜூ.வி வெளியாகிறது. அன்றைய தினமே அதிரடியாக ரெய்டுகள் அரங்கேறுகின்றன’’ என்று நாம் சொன்னதும் வாய்விட்டுச் சிரித்த கழுகார், உடனே செய்திகளுக்குள் புகுந்தார்.

‘‘அநேகமாக, விஜயபாஸ்கருக்கு திகார் ஜெயிலில் ஓர் அறை தயாராகிவிட்டது. தொடர்ந்து அவரையே குறிவைத்து ஏகப்பட்ட ஆவணங்களைத் திரட்டி வைத்திருக்கிறது  சி.பி.ஐ. ஏற்கெனவே பல தடவை சர்ச்சைகளில் சிக்கினாலும், தப்பித்துக்கொண்டே இருந்த விஜயபாஸ்கர், இம்முறை வகையாகச் சிக்குவார் என்கின்றன சி.பி.ஐ வட்டாரம். ஆகஸ்ட் 29-ம் தேதி குட்கா ஆலை அதிபர் மாதவ ராவிடம் சி.பி.ஐ அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். ‘அவர் கொடுத்த வாக்கு மூலமும், சில போன் உரையாடல் விவரங்களும் விஜயபாஸ்கரை வளைக்கப் போதுமானவை’ என்கிறார்கள் சி.பி.ஐ வட்டாரத்தில்.’’
‘‘அப்படியா?’’
‘‘ஆர்.கே நகர் இடைத்தேர்தல் சமயத்தில்தான் விஜயபாஸ்கர் முதன்முதலில் ரெய்டில் சிக்கினார். அவர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங் களின் அடிப்படையில்தான், அப்போது அந்தத் தொகுதியின் தேர்தலே ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து ஏகமாகப் பணம் விளையாடியது தொடர்பான ஆவணங்கள் அவை. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலருடைய பெயர்களும் அடிபட்டன. விஷயம் நீதிமன்றம் வரை கொண்டுசெல்லப்பட்டு, வழக்காகவும் மாறியுள்ளது. ஆனால், அதில் அடுத்தகட்ட நகர்வுகள் ஏதுமில்லை. அதேசமயம், குட்கா வழக்கு வேகமெடுத்துவிட்டது. ஏற்கெனவே விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டபோதே, அவரை அமைச்சரவை யிலிருந்து நீக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால், எதுவுமே நடக்கவில்லை.’’

‘‘அந்த அளவுக்குப் பலசாலியா விஜயபாஸ்கர்?’’
‘‘அவர் பலசாலியா என்று தெரியாது. ஆனால், மற்றவர்கள் வீக்காக இருக்கிறார்களே! அவரை எதிர்த்துப் பேசுவதற்கு அமைச்சரவையில் யாருக்குமே தைரியம் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது. ‘கூவத்தூரில் நான்தான் எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாத்து இந்த ஆட்சியைத் தக்கவைத்தேன். என்னை விலகச் சொன்னால், ஆட்சியே கவிழ்ந்துவிடும்’ என மிரட்டினார் அவர். ‘எதற்கு வம்பு’ என்று அனைவருமே வாயைமூடிக்கொண்டு விட்டார்களாம். அதன்பிறகு, அவரவர் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். கொஞ்ச காலம் வம்பில்லாமல் போய்க்கொண்டிருந்த சூழலில்தான், மறுபடியும் பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. தமிழக அரசை ஏதாவது ஒரு பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களைத் திரட்டி வைத்துள்ளது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு.

தேவைப்படும்போதெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்தும்விடுகிறது. விஜயபாஸ்கரை ஆரம்பம் முதலே கழுகுக்கண்கொண்டே பார்த்து வருகிறது மத்திய அரசு. குட்கா வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டதும், அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ஒரு வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது என்றால், அதில் தென்மண்டலப் பகுதியில் இருக்கும் சி.பி.ஐ அதிகாரிகள்தான் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், குட்கா வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இடம்பெறவில்லை. எல்லோருமே டெல்லி அதிகாரிகள். இதிலிருந்தே மத்திய அரசின் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளலாம்.’’
‘‘ஓஹோ!’’
‘‘ஒரு மாதத்துக்கு முன்பே டெல்லியிலிருந்து சி.பி.ஐ டீம் தமிழகம் வந்து, குட்கா வழக்கு குறித்த விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தது. தமிழகம் முழுவதும் இருக்கும் குட்கா குடோன்கள், அதன் உரிமையாளர்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்தது. இதையெல்லாம் விஜயபாஸ்கரும் தெரிந்தே வைத்திருந்தார். சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டபோதே, தன் தலையில் கத்தித் தொங்குவதை உணர்ந்துகொண்டு மிகவும் ஜாக்கிரதையாகச் செயல்பட்டுவந்தார். எந்தவொரு சூழ்நிலையிலும் பதவியை மட்டும் காவு கொடுத்து விடக் கூடாது என்பதிலும் தெளிவாகவே இருந்தார். காரணம், அதுதான் தனக்கான பாதுகாப்புக் கவசம் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. தனக்கு இருந்த டெல்லி தொடர்புகளை வைத்து, ‘இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா’ என்று பேசிப் பார்த்தார். ஆனால், அவருக்குச் சாதகமாக எதுவும் அமையவில்லை.’’
‘‘அதனால்தான் சி.பி.ஐ ரெய்டுக்கு சில நாட்கள் முன்னதாக வருமானவரித் துறை ஆவணங்கள் வெளியில் கசிந்தனவா?’’
‘‘இருக்கலாம். வருமானவரித் துறை ஆவணங்கள் கசிந்தபோதே, ‘அடுத்து ஏதோ நடக்கப்போகிறது’ என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உணர்ந்துவிட்டார். விஜயபாஸ்கரை பதவி விலகுமாறு கேட்டு, முதல்வர் சார்பில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தூதுபோனார். அவருக்கு விஜயபாஸ்கர் கொடுத்த பதில், முதல்வருக்கே ‘ஷாக்’ தந்துவிட்டதாம்.’’

 

‘‘அப்படி என்னதான் சொன்னார்?’’
‘‘வருமானவரித் துறை ஆவணங்கள் கசிந்த போதே, இந்த சந்திப்பு நடந்ததாம். அப்போது, ‘சி.பி.ஐ ரெய்டு, அது இது என்று அடிக்கடி நடக்கிறது. மீண்டும் எதுவும் நடக்கலாம். எனவே, முன்கூட்டியே நீங்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிட்டால், கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்டபெயர் ஏற்படாமல் இருக்கும்’ என்று பக்குவமாகப் பேசினாராம். உடனே விஜயபாஸ்கர், ‘இதை நீங்களாகச் சொல்கிறீர்களா? முதல்வர் சொல்லி வந்திருக்கிறீர்களா?’ என்றாராம். அந்த அமைச்சர் குழப்பமாகி, ‘முதல்வர் நேரடியாகவா வந்து சொல்வார்? அவர் சொன்னதைத்தான் நான் உங்களிடம் வந்து பேசுகிறேன்’ என்றாராம். டென்ஷனான விஜயபாஸ்கர், ‘எல்லோரும் சேர்ந்து என்னைக் காட்டிக்கொடுக்கப் பார்க்கிறீர்களா? முதல்வர் துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமலா நான் இருக்கிறேன். நான் சிக்கலில் இருக்கும்போது, பதவியைப் பறிக்க நினைத்தால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிடுவேன்’ என்று கண்கள் சிவந்தாராம். உடனே, அமைதியாகக் கிளம்பி விட்டாராம் அந்த மூத்த அமைச்சர்.’’
‘‘முதல்வரின் ரியாக்‌ஷன்?’’
‘‘சி.பி.ஐ சோதனை நடந்து முடிந்ததும், அன்று மாலையே முதல்வரைச் சந்தித்தாராம் விஜயபாஸ்கர். முன்புபோல அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்காமல், பேச்சில் கொஞ்சம் கடுமை காட்டினராம் முதல்வர். ‘இத்தகைய  சூழலில் நீங்கள் பதவியில் நீடித்தால் ஆட்சிக்குப் பிரச்னை அதிகரிக்கும்’ என்று முதல்வர் சொல்ல, அதைத் தொடர்ந்து தன் தரப்பு பற்றி எடுத்து வைத்துப் பேசினராம் விஜயபாஸ்கர். இதற்கெல்லாம் முதல்வர் வெளிப்படையாக பதில் தரவில்லை.’’
‘‘சரி, தமிழக டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 35 இடங்களில் சோதனை நடைபெற்றதே?’’
‘‘இதில் டி.ஜி.பி நிலை கொஞ்சம் பரிதாபம் என்கிறார்கள். அவரது வீட்டில் சோதனை நடத்தப்படவிருக்கும் விஷயம், முன்கூட்டியே அவருக்குத் தெரியாத அளவுக்கு சி.பி.ஐ ரகசியம் காத்துள்ளது. வழக்கம்போல அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். தடதடவென வீட்டுக்குள் நுழைந்த சி.பி.ஐ அதிகாரிகள், ‘யாரும் எங்கும் செல்லக் கூடாது’ என்று சொல்லிவிட்டனர். மாநிலத்தின் டி.ஜி.பி-யாக இருக்கும் தன்னை, இப்படி ஹவுஸ் அரெஸ்ட் நிலைக்குத் தள்ளியதில் நிறையவே மனவேதனை அடைந்துவிட்டாராம் ராஜேந்திரன்.’’
‘‘ஓ… அதனால்தான் முதல்வரைச் சந்தித்தாரோ?’’
‘‘ஆம்… இனியும் இந்தப் பதவியில் இருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துதான், முதல்வரைச் சந்திக்கப்போனபோதுகூட, தன் சொந்த காரையே பயன்படுத்தியுள்ளார். அந்த அளவுக்கு மனநெருக்கடியில் இருந்துள்ளார். ஆனால், இந்த ரெய்டு மூலமாகக் குறிவைக்கப்பட்டது அவரல்ல, சென்னையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்.’’
‘‘ஜார்ஜ் மன்னர் என்று நீதிமன்றத்தாலேயே குட்டுப்பட்டவராயிற்றே அவர்!’’
‘‘அவரேதான். ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம், குட்கா வழக்கு குறித்து சி.பி.ஐ அதிகாரி ஒருவர் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, ‘இந்த வழக்கில் முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மீதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. அவரை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம்’ என்று சிரித்தவாறு சொல்லியுள்ளார். ஜார்ஜ் விஷயத்தில் சி.பி.ஐ படுவேகம் காட்டுகிறது. அதனால்தான் ரெய்டு முடிந்த கையோடு கைது படலமும் ஆரம்பமாகிவிட்டது. புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மாதவ ராவ் வளைக்கப்பட்டுவிட்டார். அடுத்து விஜயபாஸ்கரும் ஜார்ஜும் வளைக்கப்படக்கூடும். அவர்களை டெல்லிக்கு விசாரணை என்ற பெயரில் அழைக்க உள்ளனர். விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கை இருக்கலாம். குட்கா விவகாரத்தில் இங்கு கைது செய்யப்படுபவர்களையும் டெல்லிக்குக் கொண்டுசென்று விசாரிக்கவே சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. இதற்காகவே திகார் ஜெயிலில் அறைகள் ரெடியாக இருக்கின்றன.’’
‘‘ஓர் அமைச்சரே ஊழல் வழக்கில் கைதானால், ஆட்சிக்குத்தானே கெட்டபெயர்?’’
‘‘அதைத் தவிர்க்கும் வகையில்தான், கைதுக்கு முன்னதாக விஜயபாஸ்கரிடம் ராஜினாமா கடித்தை வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறது முதல்வர் அலுவலகம். அவர்தான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறார். அதற்குப் பதிலாக, ‘சூழ்ச்சிகளைத் தகர்த்து வெற்றிபெறுவேன்’ என்றொரு அறிக்கையை எழுதிக் கொடுத்து, அதை அ.தி.மு.க-வின் அதிகாரப் பூர்வ நாளேடான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’வில் வர வைத்துவிட்டார் விஜயபாஸ்கர்.’’
‘‘மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தும் ஏன் இந்த ரெய்டு?’’
‘‘டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தேன். ‘அடுத்தடுத்த ரெய்டுகள் மூலம் தமிழகமே ஊழலில் திளைப்பதாகத் தேசத்துக்கு உணர்த்துவதுதான் நோக்கம்’ என்கிறார்கள். ‘அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லோரும் தப்பானவர்களாக உள்ளனர். இவர்களிடமிருந்து தமிழக மக்களை மீட்பதற்கு ஓர் அவதார புருஷன் வரமாட்டாரா?’ என்பது போன்ற ஒரு பிரசாரம் கிளம்பும். தாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் நடிகரை முழுநேர அரசியலில் இறக்குவார்கள். ‘இதுதான் பிளான்’ என்கிறார்கள்’’ என்ற கழுகார், கிளம்புவதற்குமுன் அழகிரி பற்றி ஒரு தகவல் சொன்னார். 
‘‘அமைதிப் பேரணி முடிந்ததுமே மைக் பிடித்து உறுமுவதற்கு அழகிரி தயாராகத்தான் இருந்தாராம். ஆனால், எதிர்பார்த்த கூட்டத்தைத் திரட்ட முடியாததால், அவர் படு அப்செட்டாம். அதனால்தான், ‘இந்தப் பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை’ என்று மட்டும் மீடியாக்களிடம் சொல்லிவிட்டு, தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்குப் போய் ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டாராம். அங்கே வைத்துத் தன் மகன் உட்பல பலரையும் லெஃப்ட் அண்டு ரைட் வாங்கியதாகத் தகவல்.’’

%d bloggers like this: