Advertisements

குட்கா… ஜார்ஜை பேச வைத்தது யார்?

ராஜநடை போட்டு வந்த கழுகார், நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால்போட்டபடி சுற்றுமுற்றும் பார்வையை வீசினார்.
‘‘என்ன இது, ஏதோ தர்பாரில் வந்து உட்கார்ந்தது போல பந்தா விடுகிறீர்?’’ என்றோம்.
‘‘இல்லை, நாற்காலி சார்ந்த ஒரு சங்கதி கேள்விப்பட்டேன். அதில் அமர்ந்தாலே ராஜயோகம் கிடைத்துவிடுமாம். அப்படி ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துவிட்டு வந்திருக்கிறார் ஒரு தலைவர். அதுதான் நானும் உட்கார்ந்து பார்த்தேன்.’’

‘‘சரி… சரி… உமக்கும் ராஜயோகம் உண்டாகட்டும். முதலில் அந்தத் தலைவர் யார் என்று சொல்லும்.’’
‘‘எப்போதுமே ஜோசியம், பரிகாரம் என்றெல்லாம் பழக்கப்பட்ட போயஸ் தோட்டத்து வாடை வேறு யார் மீது வீசப்போகிறது… தினகரனேதான். சமீபத்தில், திருவனந்தபுரம் அரண்மனையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்ததாம். எதற்காக அழைக்கிறார்கள் என்று தெரியாமல் அதைத் தள்ளித்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் அங்கே விசிட் அடித்திருக்கிறார். பலமான வரவேற்பு காட்டிய அரண்மனை வாரிசுகள், அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்களாம்.’’
‘‘ஓ, அதுதான் நீர் சொன்ன நாற்காலியோ!’’
‘‘ஆம், ‘நேரு ஒரு தடவை இதில் வந்தமர்ந்தார், பின்னர்தான் பிரதமரானார். அடுத்து, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த சிம்மாசனத்தில் வந்தமர்ந்தார். பிரதமராகிவிட்டார். இப்போது நீங்கள் உட்காருகிறீர்கள். நிச்சயமாக தமிழகத்தை ஆளும் யோகம் உண்டு’ என்று சொல்லி குஷியூட்டினார்களாம். அங்கு பிரஸ்னம் பார்க்கும் சிலர்தான், ‘தினகரனின் ராசி, ராஜயோகம் கொண்டதாக இருக்கிறது’ என்று சொன்னார்களாம்.’’
‘‘அதுசரி, இவரை அழைத்து கௌரவிப்பதால் அரண்மனைக்காரர்களுக்கு என்ன லாபம்?’’
‘‘எல்லாவற்றிலும் லாபக்கணக்கு இருக்குமா என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் யோகக்காரர்களை அழைத்து கௌரவிப்பது அரண்மனை வழக்கம் என்கிறார்கள். அப்படித்தான் அவர்களும் அழைத்து கௌரவித்ததாக தினகரன் தரப்பிலிருந்து செய்தியைக் கசியவிட்டுள்ளனர்.’’
‘‘இதில் ஏதும் சதுரங்க வேட்டை சமாசாரம் எல்லாம் இல்லைதானே?’’ என்று சொல்லி சிரித்த நாம், ‘‘சரி, அமைச்சர் நாற்காலி கதை என்னவாயிற்று?’’ என்று கேட்டோம்.

தானும் குலுங்கிச் சிரித்த கழுகார், ‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்மீதான குட்கா வழக்குதான் தற்போது வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. ‘அவருக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கே உலை வைத்துக்கொண்டிருக்கிறதே இந்த குட்கா’ என்று சக அமைச்சர்கள் பலரும் புலம்பித் தீர்க்க ஆரம்பித்துவிட்டனர். அமைச்சர், டி.ஜி.பி, முன்னாள் கமிஷனர் ஆகியோரின் வீடுகள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ., குட்கா அதிபர் மாதவராவ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தது. இவர்களை ஐந்து நாள் சி.பி.ஐ காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்கிறார்கள். இவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, அமைச்சர் உள்ளிட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் சி.பி.ஐ சீக்கிரமே இறங்கும் என்கிறார்கள்.’’
‘‘விஜயபாஸ்கர் இதை எப்படி எதிர்கொள்வார்?’’
‘‘அவர் தெம்பாக இருக்கிறார். ‘கைதா… நானா..?’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம் விஜயபாஸ்கர். ரெய்டு நடந்த மறுதினமே வழக்கமான பணிகளில் பிஸியாகிவிட்டார். அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை என்று அமைச்சருக்கு நெருக்கமான வட்டத்தினர் சொல்கிறார்கள். சி.பி.ஐ சோதனைக்கு மறுநாளே கோட்டையில் நிதி ஆயோக் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்றார் விஜயபாஸ்கர். அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் சகஜமாகவே பேசிக்கொண்டிருந்தார். அன்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவத் துறை சார்பில் நடந்த பட்டிமன்றம் ஒன்றை நீண்ட நேரம் அமர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். ‘இவரோட கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே’ என இவரின் உதவியாளர்களே திகைத்துப் போனார்கள்.”
‘‘முதல் தடவை ரெய்டு என்றால்தானே யோசிக்க வேண்டும். பழகியிருக்கும்.’’
‘‘ரொம்பத்தான் நக்கலடிக்கிறீர். ரெய்டுக்குப் பிறகு மூன்று முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜயபாஸ்கர். மூன்றாவது முறையும், பதவியிலிருந்து விலகியிருக்கும்படி கேட்டுள்ளார் முதல்வர். ஆனால், ‘அந்தப் பேச்சுக்கே இடமில்லை’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் விஜயபாஸ்கர். அதற்கு ஒரு லாஜிக் காரணமும் சொன்னாராம். ‘குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்ததே தி.மு.க     எம்.எல்.ஏ அன்பழகன்தான். தற்போது சி.பி.ஐ என் வீட்டில் ரெய்டு செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. என்னைப் பதவி விலகச் சொன்னால் அது தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றியாகிவிடும்’ என்று விஜயபாஸ்கர் சொன்னாராம். ‘தி.மு.க-வுடன் கூட்டணி சேரவே பி.ஜே.பி இப்படி சி.பி.ஐ ரெய்டு நடத்துகிறது’ என்று .மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாக மீடியாக்களிடம் சொன்னார். அதன்பின் அவரும் விஜயபாஸ்கரும் இணைந்து சுற்றுப்பயணங்கள் செய்ததையும் மத்திய உளவுத்துறை நோட் அனுப்பியுள்ளது.’’
‘‘ஆகக்கூடி, விஜயபாஸ்கரைக் கண்டால் அனைவருமே நடுங்கத்தான் செய்கிறார்கள் போல?’’
‘‘முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் குமுறித் தீர்த்திருக்கிறார் பார்த்தீரா? தவறே செய்யாத தன் பெயர் இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் இழுக்கப்பட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். குட்கா விவகாரம் குறித்து ஜார்ஜ் பல விஷயங்களை வெளியில் சொல்லப்போகிறார் என சில மாதங்களாக ஒரு பேச்சு இருந்தது. இடையில் சில காலம் வெளிநாட்டில் இருந்த அவரிடம் இதுபற்றி சிலர் இங்கிருந்து பேசினார்கள். இதன் பின்னணியில் மிகப்பெரிய திட்டமிருப்பதாகக் பேச்சிருக்கிறது. இப்போது பொறுப்புகளில் இருக்கும் சிலர்தான் ஜார்ஜை பேசவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். பதவியில் இருக்கும் அவர்கள் பேசமுடியாது அல்லவா? அதாவது, கீழ்மட்ட அதிகாரிகள் சிலரை சிக்கவைத்துவிட்டு, உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அமைச்சர் என்று அனைவரையும் தப்ப வைக்கும் வகையில்தான் ஜார்ஜை பேசவைத்துள்ளனர் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’
‘‘ஓ.. கதை அப்படிப் போகிறதா?’’
‘‘சி.பி.ஐ பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இல்லை என்றெல்லாம் சொன்ன ஜார்ஜ், சென்னை மாநகர காவல்துறை குற்றப்பிரிவில் அப்போது துணை ஆணையராகப் பணியாற்றிய ஜெயக்குமார் பற்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சில வார்த்தைகளையும் இடையில் செருகியதை ஊன்றிக்கவனித்தால் அது புரியும். அதாவது, முழுக்க முழுக்க கீழ்மட்ட அதிகாரிகள்தான் இந்தத் தவறைச் செய்தனர் என்பதுபோல வழக்கைத் திசைதிருப்பி விட்டுள்ளார் ஜார்ஜ். விழுப்புரம் எஸ்.பி-யாக தற்போது இருக்கும் ஜெயக்குமார், இதைப்பற்றி வெளிப்படையாகவே குமுறித் தீர்த்துவிட்டார். ‘சீனியர் ஐ.பி.எஸ்-களைக் காப்பாற்ற மற்றவர்களை பலிகடா ஆக்குவதா’ என அப்போது கீழ்மட்ட அதிகாரிகளாகப் பணியாற்றிய பலரும் உள்துறை செயலாளரிடம் ஜார்ஜ் பற்றி புகார் சொல்வதற்கும் தயாராகிவருகிறார்கள்.’’
‘‘தி.மு.க இடைத்தேர்தலுக்குத் தயாராகிவிட்டது போலவே?’’
‘‘தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தி.மு.க சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல். அதனால், திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் வெற்றியைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் தி.மு.க-வினர். சென்னையில் செப்டம்பர் 8 அன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் கூட்டத்தில் இதுபற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது தொடங்கி வேட்பாளர்கள் தேர்வு வரை, சம்பந்தப்பட்ட இரண்டு மாவட்டச் செயலாளர்களிடமும் தனியாகவும் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.’’
‘‘அழகிரியின் அடுத்த மூவ்?’’
‘‘திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியைவிட, திருவாரூர்மீதுதான் முதலில் கண்பதித்துள்ளார் அழகிரி. திருவாரூரில்தான் அழகிரி பிறந்தார். சென்னையில் நடத்திய அமைதிப் பேரணியில் திருவாரூரைச் சேர்ந்த நலன்விரும்பிகளும் பங்கேற்றனர். அழகிரியால் டாக்டர் சீட் பெற்ற ஒரு மாணவி, குடும்ப சகிதம் பங்கேற்றாராம். இதையெல்லாம் மனதில் வைத்து, திருவாரூருக்கு ஒரு டீமை அனுப்பிவைத்தாராம் அழகிரி. அவர்கள் அலைந்து திரிந்து நடத்திக்கொண்டிருக்கும் சர்வே முடிவுகள், அழகிரி மீது அங்கே அனுதாபம் இருப்பதாகக் காட்டுகிறதாம்.’’
‘‘ஓ… சர்வே அளவுக்குப் போய்விட்டாரா?’’
‘‘சர்வேயில் பங்கேற்கும் பலரும், ‘கட்சியில் உறுப்பினராவதற்குத்தானே ஆசைப்படுகிறார் அழகிரி… இதைக்கூட செய்யக் கூடாதா’ என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்களாம். ‘அவர் இங்கே போட்டியிட நினைத்தால், நாங்கள் ஜெயிக்க வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்’ என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்டு சந்தோஷமாகிவிட்ட அழகிரி, விரைவில் திருவாரூருக்கு விசிட் அடிக்கிறார். தேதி குறிப்பிடப்படாமல் போஸ்டர்களை தயாரித்து அழகிரிக்கே வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார்களாம் திருவாரூரைச் சேர்ந்த தி.மு.க-வினர் சிலர். அந்தத் தொகுதியில் உள்ள மு.க.ஸ்டாலின் அதிருப்தியாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அவர்களையே பூத் கமிட்டி போடச் சொல்லிவிட்டாராம் அழகிரி.’’
‘‘அடடே!’’
‘‘அ.தி.மு.க தரப்பில்தான் மின்னல் வேகம் காட்டப்படுகிறது. கருணாநிதி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு வந்தாரா? சட்டசபையில் எத்தனை தடவை பேசினார்? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் அ.தி.மு.க-வினர். துறைவாரியாக அ.தி.மு.க ஆட்சியில் திருவாரூர் தொகுதிக்குச் செய்த நலத்திட்டப் பணிகளையெல்லாம் புத்தக வடிவில் தொகுத்து வழங்க உள்ளார்கள். தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இவர்களைக் குறிவைத்து காய்நகர்த்த ஆரம்பித்திருக்கின்றனர் தினகரன் கட்சியினர். ஆக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திருவாரூர் திகுதிகுக்க ஆரம்பித்துவிட்டது’’ என்றபடியே பறந்தார் கழுகார்.

Advertisements
%d bloggers like this: