ஜீரோ டு ரூ.4 கோடி… ஒரு கிராமத்து தொழிலதிபரின் கதை!

தேனிக்குப் பக்கத்தில் உள்ள உரக்குண்டான் என்கிற கிராமம். 25 வீடுகள்கூட இங்கு இருக்காது. இந்தக் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து இன்று ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் எம்.நட்ராஜ். கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. சென்னை கோவிலம்பாக்கத்தில்  இருக்கும் அவரது நிறுவனமான வி.எல் ஃபேஷன்ஸில் அவரைச் சந்தித்தோம்.

“நான் பிறந்தது சின்னக் கிராமம். என்னுடன் பிறந்தவர்கள் ஏழு பேர். வீட்டில் வறுமையான சூழல். 15, 16 வயதாகிவிட்டால், வேலைக்குச் சென்று சம்பாதித்தாக வேண்டும் என்கிற கட்டாயம். இந்த நிலையில், என்னைக் கஷ்டப்பட்டுத்தான் 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார்கள். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பதால், நான்கைந்து ஆண்டுகள் வெவ்வேறு வேலைகளைப் பார்த்தேன். பின்னர் மீண்டும் படிப்பின்மீது ஆர்வம் வந்து 12-ம் வகுப்பு முடித்தேன்.  அதன்பின்பு,  உத்தமபாளையத்திலுள்ள என் அக்காவின் வீட்டில் தங்கி, தனியார் கல்லூரியில் பி.பி.எம் பட்டப்படிப்பு படித்தேன்.

எனது அக்காவும், மாமாவும் டெய்லரிங் வேலை பார்த்துவந்ததால், கல்லூரியில் படிக்கும்போது மாலை வேளையில் அதனைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். ஆனால்,  சில மாதங்களிலேயே  டெய்லரிங்மீது எனக்குத் தீவிரமான காதல் வந்து விட்டது. விதவிதமான ஆடைகளைத் தைக்க வேண்டும் என்கிற வெறி உருவானது.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், 2006-ம் ஆண்டு சென்னைக்கு வந்து கிண்டியிலுள்ள அப்பேரல் டிரெயினிங் & டிசைன் சென்டரில் ஆடைத் தயாரிப்புத் துறையில் ஓராண்டுப் பயிற்சி பெற்றேன். அதன்பின் சில நிறுவனங்களில் தர நிர்ணயிப்பாளராக வேலை பார்த்தேன்.

இறுதியாக வேலை பார்த்த நிறுவனத்தில் ஆர்டர் எடுப்பது, சாம்பிள் தயாரிப்பது, ஆடை வடிவமைப்பது, தரம் நிர்ணயிப்பது, பேக்கிங் செய்து விற்பனை செய்வது என அனைத்தையும் கற்றுக்கொண்டேன். ஆனால், அந்த நிறுவனம் நஷ்டமடைந்ததால் மூடிவிட்டார்கள்.

வேலையிழந்த நான் அடுத்து வேறு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போவதைவிட சொந்தமாகத் தொழில் தொடங்கினால் என்ன என்று சிந்தித்து, உடனே செயலில் இறங்கினேன். உறவினர்களிடம் வாங்கிய கடன், என்னிடமிருந்த தங்க நகை அனைத்தையும் விற்று ரூ.3 லட்சம் திரட்டினேன். கோவிலம்பாக்கத்திலேயே சிறியதொரு இடத்தில் ஐந்து தையல் மெஷின்கள், ஐந்து பணியாளர்களுடன் 2012-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்.

முதலில் சுடிதார் மெட்டீரியல் தயாரிப்பதற்காக வெட்டிய துணிகளை வாங்கிவந்து, அதைத் தைத்துக் கொடுக்கும் வேலையைச் செய்தேன்.  சென்னையில் இருக்கும் மொத்த விற்பனைக் கடைகளுக்குக் காலையிலேயே சென்று துணிகளை வாங்கிவந்து, அன்று மாலைக்குள் தைத்துத் தந்துவிடுவேன்.

ஆரம்பத்தில் பீஸ் ரேட் அடிப்படையில்தான் (ஒரு பீஸ் ரூ.35) வேலை பார்த்தேன்.  இதில் கொஞ்சம் லாபம் கிடைத்ததும், வங்கிக் கடன் வாங்கித் தொழிலை விரிவுபடுத்த நினைத்தேன்.  வங்கிக் கடன் பெற  நினைத்த போது, என்னை நம்பி வங்கிக் கடன் தர மறுத்து விட்டார்கள். தொடர்ச்சி யாக ஆறு மாத காலம் பல வங்கிகளிடம் கேட்டும் கடன் பெற முடியவில்லை.

அப்போதுதான் ‘பாரதிய யுவசக்தி டிரஸ்ட்’ பற்றித் தெரிந்துகொண்டு, உதவி கேட்டேன். அவர்கள் எனது நிறுவனத்தைப் பார்வை யிட்டு, நான் எப்படி பிசினஸ் செய்ய வேண்டும், வங்கியில் கடனுதவி பெற என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, எனது தொழிலை நெறிப்படுத்தினார்கள். அவர்கள் சொன்னபடி செய்ததால், எனக்கு முதன்முறையாக ரூ.4.5 லட்சம் வங்கிக் கடன் கிடைத்தது. அப்போது தான் என் தொழில்மீது எனக்குக் கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டு, என்னாலும் சாதிக்க முடியும் என்கிற எண்ணம் உருவானது. 

இந்த வங்கிக் கடன் மூலம் கூடுதலாக 15 தையல் எந்திரங்களை வாங்கினேன். பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதற்பேற்ப அதிகரித்தேன்.   துணிகளை வாங்கித் தைத்துத் தந்ததிலிருந்து மாறி, நானே மொத்தமாகத் துணிகளைக் கொள்முதல் செய்து, அவற்றை முழுமையான ஆடையாக உருவாக்கி, சந்தைப்படுத்தும் பணியில் இறங்கினேன். துணிகளை சென்னை, பெங்களூரு, அகமதாபாத் எனப் பல்வேறு நகரங்களில் கொள்முதல் செய்தேன். நான் தயாரித்த துணிகளை சென்னை யிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளிலும் விற்கக் கொடுத்தேன்.

ஆடைத் தயாரிப்பினைப் பொறுத்தவரை, பணியாளர்கள் வாரச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பது வழக்கம். ஆனால், அவர்களது வேலையில் வேகம் இருந்ததே ஒழிய, தரம் குறைவாகவே இருந்தது. தவிர, அடிக்கடி வேலை மாறியும் வந்தனர்.  இதனால் எனது உற்பத்தி பாதிப்படைந்தது. இதற்கொரு தீர்வாக, தொழிலாளர் களை மாதச் சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தினேன். வேலையில் வேகத்தைவிட தரத்திற்கு முன்னுரிமை தந்தேன். இதனால் எனது தயாரிப்புகளுக்கு வாடிக்கை யாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவானது. நான் தேடித் தேடிச் சென்று விற்ற நிலை மாறி, வாடிக்கை யாளர்கள் எங்களது நிறுவனத்திற்கு வந்து தயாரிப்புகளை வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறியது.

வருமானம் வர வர, வங்கியில் வாங்கிய கடனை திருப்பித் தந்துவிட வேண்டும் எனக் குறியாக இருந்தேன். இதனால் வங்கிகள் எனக்குக் கூடுதல் கடன் தர முன்வந்தன. முதல் கடனை அடைத்தவுடன் அடுத்து ரூ.10 லட்சம், அடுத்து ரூ.35 லட்சம் என்று அடுத்தடுத்த இலக்கு களுக்கேற்ப கடனுதவி பெற்றுத் தொழிலை விரிவுபடுத்தினேன். சென்னைக்குப் புதிதாக வந்தபோது நான் வெளியூர் என்பதால், என்னால் வங்கிக் கணக்குகூட தொடங்க முடியவில்லை. அந்த நிலையில் இருந்து இன்று ரூ.35 லட்சம் கடன் பெறுகிற அளவுக்கு என் தகுதியை உயர்த்திக் கொண்டிருக்கிறேன்.

சென்னையில் மட்டுமே இயங்கிவந்த நிறுவனத்தை எங்கள் கிராமத்தை ஒட்டியுள்ள தேனி, சின்னமனூர் நகரங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறேன். மொத்தம் 150 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் பலர் பெண்கள்.

நாங்கள் லோக்கல் தயாரிப்புகள் மட்டுமின்றி, பிராண்டட் மெட்டீரியல்களையும் தயாரிக்கிறோம். குறிப்பாக, ஸ்டிங் (Sting), போ அண்டு ஸ்டெர்ன் (Bow and Stern) ஆகிய பிராண்டட் சட்டைகளை நாங்கள் தயாரிக்கிறோம். தற்போது சென்னையில் ‘ஜிவிவி ஃபேஷன்ஸ் கலெக் ஷன்ஸ்’ என்ற பெயரில் இரண்டு சில்லறை விற்பனையகங்களைத் தொடங்கியுள்ளோம். இவற்றின்மூலம் பொதுமக்களின் ரசனையை நேரடியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இன்று எனது நிறுவனத்தின் ஆண்டு டேர்ன்ஓவர் சுமார் ரூ.4  கோடி. வருங்காலத்தில் இதை இன்னும் பலமடங்காகப் பெருக்க வேண்டும். பத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை யகங்களைத் தொடங்க வேண்டும். வாடகைக் கட்டடத்திலிருந்து சொந்தக் கட்டடத்திற்கு மாற வேண்டும். ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்படி உயர வேண்டும் என்பதுதான் என் லட்சியம்’’ என நம்பிக்கையோடு பேசி முடிக்கிறார் நட்ராஜ்.

இன்று சிறு மரமாக இருந்தாலும், விருட்ஷமாக வளரத் துடிக்கும் நட்ராஜ், எதிர்காலத்தில் நிச்சயம் சாதிப்பார்!  

One response

  1. நம்பிக்கை தரும் பதிவு. முயன்றால் முன்னேறலாம்.

%d bloggers like this: