Advertisements

நம்பிமலை அற்புதங்கள்!

 

ம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா கத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. `வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.

அடுத்துத் தொடரும் பயண வழியில் சிவசாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம், அருள் ஜோதி ஆனந்த தியான பீடம் எனப் பல ஆசிரமங் கள் உள்ளன. வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அங்கு, முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் மலையேறுகிறார்கள்.

பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார் கள், இப்பகுதி மக்கள். முன்னொரு காலத்தில் உலகம் சுபிட்சம்பெற சிவனும், பார்வதியும் தவம் செய்த இடம் இம்மலை என்பது கூடுதல் சிறப்பு.

மலை மீது ஏறும்போதே  மகேந்திரகிரியைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்டது இந்த மலை. அடர்ந்த வனம்  மற்றும் ஓடைகள் நிறைந்தது இந்த மலைப்பகுதி. மலையின் அற்புதமான சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்து திகழ்கின்றன.

திருப்பதியில் ஏழு மலைகள் எனில், ஏழு ஏற்றங் களுடன் திகழ்கிறது நம்பிமலை. ஒவ்வொரு ஏற்றத்திலும் ஏறும்போது அதிகம் மூச்சு வாங்கு கிறது. ஆனாலும், அடுத்தடுத்த ஏற்றங்களில் ஏறுவதற்கு மனம் சலிப்பதில்லை. இறையருளே அதற்குக் காரணம் எனலாம். வயதானவர்கள், நம்பியை தரிசிக்க இந்த வழியாக நடந்து செல்ல இயலாது. அவர்கள் ஜீப்பைப் பயன்படுத்து கிறார்கள்.

வழியில் பல இடங்களில் சிறு சிறு ஓடைகளாக குறுக்கிடுகிறது நம்பியாறு. இது `மாயவன் பரப்பு’ என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின்னர் `கடையார் பள்ளம்’ வழியாக தாய்ப்பாதம் எனும் இடத்தைத் தொட்டு, நம்பி கோயிலை வந்தடைகிறது. பல வகை மூலிகைகளின் சாரத்தை ஏற்று, நோய் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது நம்பியாறு.

கோயிலுக்கு வேண்டிய தீர்த்தம் எடுக்கப்படுவ தால், இந்த ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக் கூடாது என்ற தடை உள்ளது.

நம்பியாற்றைக் கடந்துதான் நம்பி கோயிலுக்குச் செல்ல முடியும். ஆற்றைக் கடக்க பாலம் அமைத் திருக்கிறார்கள். பாலத்தின் அருகில், இடப்புறமாக படிக்கட்டுகள் செல்கின்றன. அதன் வழியே கீழே இறங்கினால், சிறு காவல் தெய்வங்களுக்குப் படையல் போடும் காட்சியைக் காணலாம். பாலம் அமைந்துள்ள பகுதி பள்ளத்தாக்காக திகழ்கிறது.

இங்கு நிகழும் அற்புதங்கள் நம்மை வியக்க வைக்கும். உதாரணத்துக்கு ஒன்று… சங்கிலிபூதத்தார் வழிபாடு தென்பகுதியில் பிரசித்திப்பெற்றது. இந்தத் தெய்வத்துக்கான கோமரத்தாடிகள் (சாமியாடிகள்), குறிப்பிட்டதொரு வைபவத்தின் போது, ஆற்றுக்குள் மூழ்கி… முந்தைய வருடம் ஆற்றில் போடப்பட்ட இரும்புச் சங்கிலியை மிகத் துல்லியமாகத் தேடி எடுத்து வருவார்களாம்!

ஆற்றுப் பாலத்தைக் கடந்தால், இடப்புறத்தில் மிக உயரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக் கிறார் திருமலை நம்பி. கோயில் அமைந்திருக்கும் முகட்டின் அடிவாரத்தில் புற்று ஒன்று வழிபாட் டில் உள்ளது. அதில் 201 சித்தர்கள் இருப்பதாகவும், தினம் ஒருவர் வீதம் நம்பிமலை பெருமாளைப் பூசிப்பதாகவும் நம்பிக்கை. அவர்கள் பூஜை செய்த பிறகே அர்ச்சகர்கள் பூஜையைத் தொடர்வார் களாம். நம்பிமலையில் எல்லா திருவிழாவும் விசேஷம்தான். ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையில் நடைபெறும் உறியடித்திருவிழா மிக மிக விசேஷம். அதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

எழிலார்ந்த சூழலில் கோயில்கொண்டிருக்கும் மலைமேல் நம்பியை தரிசித்தோம். சிறிய அளவிலான கோயில்தான். ஆனால் பெருமாளின் அழகும், அருள் திறனும் நம்மைப் பெரிதும் ஈர்த்து விடுவதை நம்மால் அனுபவபூர்வமாக உணர முடிகிறது. `நம்பி வாருங்கள், நம்பி மலைக்கு! நீங்கள் நாடியதை எல்லாம் நானே உங்களை நாடி வந்து நிறைவேற்றுவேன்’ என்று தண்ணருள் பொழியும் கண்ணழகால் சொல்லாமல் சொல் கிறான் அந்த அழகன்.

மலை மேல் நம்பியை நாம் சனிக்கிழமை தோறும் நாம் தரிசிக்கலாம். நின்ற நிலையில் நமக்கு அவர் அருளாசி தருகிறார். “வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவர் இந்த நம்பி; நம்பினோரை ஒரு போதும் கைவிடமாட்டார்” என்கிறார்கள், அங்கிருந்த பக்தர்கள்.
மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும்  இந்த நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும்,  கோயிலையும் சங்கிலிபூதத்தார் தெய்வம் காவல் காப்பதாக ஐதீகம்.

நம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும்  இந்த நம்பி ரிஷிகேசனாக `மலைமேல் நம்பி’ என்று திகழ, திருக்குறுங்குடி திருத்தலத்திலுள்ள கோயி லில் நின்ற நம்பி – திரிவிக்கிரமனாகவும், இருந்த நம்பி – ஸ்ரீதரனாகவும், கிடந்த நம்பி – பத்ம நாபனாகவும், அந்தக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள கோயிலில், திருப்பாற் கடல் நம்பி என்ற பெயரில் வாமனனாகவும் அருள்பாலிக்கிறார்கள்.

பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! நாமும் இந்த இரண்டு தலங்களையும் தரிசித்துத் திரும்பிய தருணத்தில், நம் மனத்தில், நம்பியின் அருளால், நம்பியின் அம்சமாக அவதரித்த நம்மாழ்வார், நம்பியைப் போற்றிய ஓர் அகச்சுவைப் பாடல் எதிரொலித்தது.

எங்ஙனேயோ அன்னைமீர்காள்!
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே!

ஆழ்வாரின்  இந்தப் பாடலுக்கேற்ப நம் மனமும் மலைமேல் நம்பியை விட்டகல விருப்ப மின்றி, ஒன்றிப்போனது அவன் பாதாரவிந்தங்களில் என்றே சொல்லலாம். நீங்களும் ஒருமுறை நம்பிமலைக்குச் சென்று வாருங்கள்; மலைமேல் நம்பியின் திருவருளால் மகத்தான வாழ்வைப் பெற்று மகிழுங்கள்.


பாதங்களும் தீர்த்தங்களும்!

மகேந்திரகிரிக்குச் செல்லும் அடியார்களில் பலர், இந்த மலைப் பகுதியில் உள்ள பாதங்களைத் தரிசிக்க விரும்புவார்கள். இங்கே, சுப்ரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்ச குழி, பெரிய பாதம், அகஸ்தியர் பாதம், அம்பிகை சியாமளாதேவி பாதம், அம்பிகை மனோன்மணி தாயார் பாதம், கிருஷ்ண பாதம், தாயார் பாதம் ஆகியவற்றை   மிகுந்த சிரமத்துக்கிடையே தரிசித்து வருவார்களாம் பக்தர்கள். இப்போது வனப்பகுதியில் செல்ல அனுமதி கிடைப்பதில்லை.

மேலும் இங்கு அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், மகேந்திர மோட்ச தீர்த்தம், நயினா அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிகோவில் தீர்த்தம், ஆஞ்சநேயர் கோட்டை தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. பஞ்சவடி என்ற ஐந்து குழிகளைவுடைய தீர்த்தமும் இங்குள்ளது.

இந்த இடத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம்   செய்தார் கள் என்றும் கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் கோட்டை என்ற இடம் வானரங்கள் வாழுமிடமாகக்  கருதப்படுகிறது. இவ்விடத்திலிருந்துதான் அனுமான் இலங்கைக்குச் சென்ற தாக நம்பிக்கை. அப்போது அவர் நீராடிய இடமே ‘அனுமன் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது.

சிவனடியார் பாதம் அருகில் உள்ள பஞ்சவடிக்கு பக்கத்தில் தேவ வனம் என்ற மலர்த் தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் சித்தர்கள் மலர் பறித்து  சிவபெருமானையும், பார்வதி தேவியையும் தினசரி வழிபட்டு வருகிறார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. இங்குள்ள ஒரு கல்வெட்டில் `தேவ வனம் மானுடர்கள் செல்லக் கூடாது’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கவனத்துக்கு…

தற்போது இந்த இடங்களுக்குச் செல்ல இயலாது. நம்பி மலைக் கோயிலை தரிசிக்கச் செல்லலாம். ஆனால்,  பாத தரிசனம் மற்றும் சில தீர்த்தங்கள் அமைந்திருக்கும் மகேந்திர கிரியின் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல தமிழக வனத்துறை அனுமதி பெறவேண்டும். அனுமதியும் எளிதில் கிடைக்காது. அனுமதியின்றி மலைக்குள் சென்றால், 25 ரூபாய் ஆயிரம் வரை வனத்துறை அபராதம் விதிக்கும். சில தருணங்களில் சிறைத்தண்டனைக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, வனத்துக்குள் செல்ல முயற்சி செய்யவேண்டாம்.

அதேபோல் நம்பிகோயிலுக்குச் செல்ல விரும்பும் அன்பர்கள், ஏற்கெனவே சென்று வந்த அன்பர்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் பெறுவது மிக அவசியம். (மேலும் விவரங்களுக்கு: 94428 34236).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: