Advertisements

முத்தம்… ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்!

உன் முத்தம் ஒரு மோசடி
அதைப்போல் பற்றாக்குறையான ஈகை
வேறொன்றுமில்லை’

– கவிஞர் மகுடேசுவரன்.

ந்தக் கவிதையில் கவிஞருக்கு அதீத எதிர்பார்ப்பு. எவ்வளவு கொடுத்தாலும், `இன்னும் வேண்டும்’ என்று கேட்கிற வேட்கை. உண்மையில், அறிவியல்ரீதியாக முத்தம் தரும் பலன்கள் அற்புதமானவை. அண்மையில், சென்னையில் பாலியல் தொடர்பான ஒரு சர்வதேச மாநாடு (International Conference on Sexology) நடந்தது. இதில் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானி நாம் சியோல் பார்க் (Nam Cheol Park) உரையாற்றியது கலக்கல் ரகம். அவர் எடுத்துக்கொண்ட டாபிக், `முத்தம்.’ மனிதர்களுக்கு ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஆரம்பித்து, மன அழுத்தம் குறைப்பதுவரை முத்தத்தின் அருமை பெருமைகளை 40 நிமிடங்கள் அவர் பட்டியலிட, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

`அன்பின் வெளிப்பாடு’, `ஆபாசம்’… இப்படி இருவேறு எல்லைகள் முத்தத்துக்கு உண்டு. பள்ளிக்குச் செல்லும் குழந்தையிடம் `ஒண்ணு கொடுக்க மறந்துட்டியே செல்லம்…’ என்று முத்தத்தைக் கேட்டு வாங்கும் அப்பாக்களும் இங்கே உண்டு. வீட்டின் நடு ஹால்… கும்பலாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பம்… திடீரென்று ஒரு முத்தக்காட்சி… பதறிப்போய் சேனலை மாற்ற ரிமோட்டைத் தேடும் அப்பாக்களும் உண்டு. அமெரிக்கக் கவிஞர் சில்வியா பிளாத், ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ், ஃபிரெஞ்ச் கவிஞர் விக்டர் ஹியூகோ… என முத்தம் குறித்து பொன்மொழிகள் எழுதிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்களின் பட்டியல் வெகு நீளம்.

90-களில் நடிகர் கமல்ஹாசன் எந்தெந்தப் பிரபல நடிகைகளுக்கெல்லாம் முத்தம் கொடுத்திருக்கிறார், இன்னும் யார் யாருக்கெல்லாம் கொடுக்கவில்லை என்று கணக்குவைத்திருந்த ரசிகர்களெல்லாம் இருந்தார்கள். `ஃப்ளையிங் கிஸ்’-ஸைப் பிரபலப்படுத்தியதில் தமிழ் சினிமாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. சரி… முத்தம் என்பது என்ன? ஒரு செயல்… ஏதோ ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு சமாசாரம்… அவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை. 

முத்தம் நம் வாழ்க்கையோடு எப்படி இயைந்த ஒன்றாக இருக்கிறது, அதன் வகைகள், முத்தம் கொடுக்கும் விதங்கள், அது தரும் நன்மைகள் குறித்தெல்லாம் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் விவரிக்கிறார். “அன்பை, காதலை, பரிவை, காமத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் முத்தம். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நடு ரோட்டில் யாரென்றே தெரியாத ஒருவருக்கு முத்தம் கொடுப்பதுகூட சகஜமான ஒன்று. ஒருவரை வரவேற்கும்விதமாக, நட்பை வெளிப்படுத்துவதற்காக, மரியாதை கொடுப்பதற்காக இப்படிச் செய்வார்கள். சில நாடுகளில் ஒரு முறை, சில நாடுகளில் இரு முறை, ஃபிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் மூன்று முறை முத்தம் கொடுப்பதெல்லாம் வழக்கம்.

முத்தம் என்பது இயல்பான ஓர் உணர்ச்சி (Instinctual)… பசி, தாகம் எடுப்பது மாதிரியானது. குழந்தைக்கு அம்மா வாரியணைத்து முத்தம் கொடுப்பதும், காதலன் காதலிக்குக் கொடுப்பதும் அன்பின் மிகுதியால் ஏற்படுகிற இயல்பான ஒன்று. 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் நம் வேதங்களிலேயே முத்தம் குறித்த குறிப்புகள் இருக்கின்றன. வாத்ஸ்யாயனர் முத்தத்தின் வகைகள், அது ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் குறித்து `காமசூத்ரா’வில் மிக விரிவாக எழுதியிருக்கிறார். உலகம் முழுக்க இலக்கியப் பாடல்களில், கவிதைகளில் இது பிரதானமான பேசுபொருளாக இருந்திருக்கிறது.

பல்வேறு வகையான முத்தங்கள் இருக்கின்றன. காதலோடு ஓர் ஆண் பெண்ணுக்கோ, பெண் ஆணுக்கோ கொடுப்பது; அம்மாவோ, அப்பாவோ பரிவோடு குழந்தைக்குக் கொடுப்பது; மரியாதையின் பொருட்டு ஒருவரின் புறங்கையில் முத்தமிடுவது; மதச் சடங்குகளின் பொருட்டு கொடுப்பது (சர்ச்சுகளில் பிரார்த்தனை முடிந்து அப்பம் வழங்கிய பிறகு புறங்கையில் கொடுப்பார்கள்); அமைதிக்காகக் கொடுப்பது (Kiss of Peace)… யூதர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த வழக்கம் இருக்கிறது; மரியாதைக்காகக் கொடுப்பது… இஸ்ரேல் உள்ளிட்டப் பல நாடுகளில் இது நடைமுறையில் இருக்கிறது; நட்பின் பொருட்டுக் கொடுக்கும் முத்தம் (Friendship Kiss); பாலியல் சாராத முத்தங்கள் (Non Sexual Kisses); புனித முத்தங்கள் (Holy Kisses), (இயேசு கிறிஸ்துவுக்கு ஜுடாஸ் முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தது).

புனித ஜான் பால் போப் (Pope John Paul II) முதன்முறையாக ஒரு நாட்டுக்குப் போனால், அந்த நாட்டின் தரையை முத்தமிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர் (Cardinal), பிஷப் போன்றவர்களைப் பார்க்கப் போகிறவர்களில் சிலர் அவர்களின் கால்களை முத்தமிடுவார்கள். இந்துக்களில் பலர் கோயில் தரையை, வாழ்ந்த மண்ணை முத்தமிடுவதுண்டு. 

முத்தம் கொடுப்பது எப்படி?

முதலில் வாயைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாக்கு, பல் சுத்தமாக இருக்க வேண்டும். முத்தம் கொடுப்பதற்கு முன்பாக பூண்டு, வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டிருக்கக் கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. பிரியப்பட்டால் மின்ட் ஃப்ளேவர் மிட்டாய், ஏலக்காய் போன்றவற்றை சாப்பிடலாம்.

முத்தத்தை சரியான தருணத்தில் (Moment) கொடுக்க வேண்டும். முதல் தடவையாக முத்தம் கொடுப்பதாக இருந்தால், திடீரென்று கொடுத்து துணையை மிரட்டிவிடக் கூடாது. துணைக்குத் தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் கொடுக்கவே கூடாது. நம் காதலியோ, காதலனோ அவர்களும் நமக்கு எதிர்வினை ஆற்றுவதற்கான அவகாசம் கொடுக்க வேண்டும். நம் முத்தத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்த வேண்டும். ஆனால், கட்டாயப்படுத்தக் கூடாது. முதல் முத்தம் மிக ஆழமாக இருக்கவேண்டிய அவசியமில்லை; மென்மையாக இருந்தாலே போதுமானது. அந்த நெருக்கம், நம் துணையை இன்னும் நெருக்கமாக்க வழி செய்யும். 

மனரீதியாக, உணர்வுரீதியாக, உடல்ரீதியாக நன்மைகள் கிடைக்க அதிகமாக முத்தம் கொடுக்க வேண்டும்; துணையைக் கட்டிப்பிடிக்க வேண்டும். இன்றைக்கு மரியாதை, தொழில் காரணமாக யார் யாரையோ கட்டிப் பிடிக்கிறோம்; கட்டிப்பிடித்து, முத்தம் கொடுக்கவேண்டிய துணையை மறந்துவிடுகிறோம். முத்தத்தின் பலன்களை நினைவில் கொள்வோம்; யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதையும் முடிவுசெய்து கொள்வோம்’’ என்கிறார் மருத்துவர் காமராஜ்.

உளவியல் ஆலோசகர் நப்பின்னை முத்தம் குறித்து விவரிக்கும் சமூகக் காரணிகள் அர்த்தம் பொதிந்தவை… 

 

“முத்தத்தை எதற்காகப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் அது தரும் மருத்துவப் பலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

`நீயும் நானும் ஈருடல், ஓருயிர்’ என்பதை மனிதர்கள் வெளிப்படுத்தும் வழிமுறைதான் முத்தப் பரிமாற்றம்; அன்பை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல், செயலாகக் காட்டுகிற விஷயம்; இருவேறு மனிதர்களுக்கு இடையில் ஓர் உணர்ச்சிப் பிணைப்பை (Emotional Bond), பந்தத்தை ஏற்படுத்தும் செயல். 

தாய் தரும் முத்தம் குழந்தைக்கு அம்மாவிடம் ஒரு நம்பிக்கையை, நெருக்கத்தை உண்டாக்குகிறது;

ஆண்-பெண் உறவில் மிக முக்கியமாகத் தேவைப்படுவது நெருக்கம் (Intimacy). இது இருந்தால்தான், திருமண உறவே பலப்படும். திருமண வாழ்க்கையில், ஆணும் பெண்ணும் பரஸ்பரம் நேசம்கொள்வதற்கு முத்தம் உதவுகிறது. ஏதோ ஒரு தவறு… இருவரில் ஒருவர் மன்னிப்புக் கேட்கவேண்டிய சூழல்… அதை வார்த்தைகளில் கேட்காமல், உடல்மொழியில் கேட்கும்போது இணைக்கு நம் மேல் நம்பிக்கை பிறக்கும். அதற்கு முத்தம் உதவும். முத்தம் சிலருக்குப் பிடிக்காமலும் போகும்; அது விவாகரத்துவரை கொண்டு போய்விடுவதும் உண்டு. அதற்கு வாழ்க்கைத்துணை சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவை காரணமாக இருக்கலாம். சிலருக்கு முத்தத்தால் நோய்த் தொற்று ஏற்படும் என்கிற அதீத பயம் இருக்கும். அதனாலும் முத்தத்தைத் தவிர்ப்பார்கள்.
 
தாம்பத்ய உறவுக்கு, அதற்கான சுமுகமான சூழலுக்குத் தயார்படுத்துவது முத்தம்தான். இது இல்லையென்றால், ஆணும் பெண்ணும் அன்யோன்யத்தை உணர முடியாமல் போய்விடும். பல விவாகரத்துகள் இந்த அன்யோன்யம் இல்லாததால்தான் நடக்கின்றன. `அவர் எனக்கு முத்தம்கூடக் கொடுத்தது கிடையாது’, `அவ அசிங்கமா இருக்கா…’ என்பதெல்லாம் முத்தம் கொடுக்காமல் போனதால் ஏற்பட்ட எதிர்வினைகளே. 

முத்தத்தைச் சரியான முறையில் கொண்டு சேர்க்காததுதான் இன்றைக்குப் பல பிரச்னைகளுக்குக் காரணமாகிறது. பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்தத் தவறிவிடுகிறார்கள். விளைவு..? யார் தூக்கிக் கொஞ்சினாலும், அவர்களிடம் குழந்தை ஒட்டிக்கொண்டுவிடுகிறது. இதுதான் பல பாலியல் வன்கொடுமைகளுக்கும் காரணமாகிறது. முத்தத்தை உரிய முறையில் அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இன்றைக்கு இருக்கிறது’’ என்கிறார் நப்பின்னை.

`வெகு நீளமானது, ஆழமானது ஃபிரெஞ்ச் முத்தம்’ என்கிறார்கள். `நாங்கள் அதையெல்லாம் எப்போதோ பார்த்தவர்கள்’ என்பதை உணர்த்துகிறது ஒரு குறள்.

`பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.’

அதாவது, `மென்மையான மொழியைப் பேசும் இவளின் வெண்மையான பற்களுக்கு இடையில் ஊறும் நீர் பாலோடு, தேன் கலந்ததைப்போல இருக்கிறது’ என்பது இதன் பொருள்.
 
`மகிழ்ச்சி என்பது ஒரு முத்தத்தைப் போன்றது.  அதை அனுபவிப்பதற்கு, நீங்கள் யாருடனாவது அதைப் பகிர்ந்துகொண்டே ஆக வேண்டும்’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல வானொலி தொகுப்பாளர் பெர்னார்டு மெல்ட்ஸர் (Bernard Meltzer). மறுக்க முடியாத உண்மை!


முத்தத்தின் வகைகள்

நெற்றியில் (Forehead) முத்தமிடுவது: ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss) – இதுதான் மிக நீளமான, ஆழமான முத்தம். உதட்டோடு உதடு பதித்து, நாக்கோடு நாக்கைத் தொட்டுக் கொடுப்பது. வெகு நேரம் நீடிக்கும் முத்தம்.

சாதாரண முத்தம்: உதட்டை லேசாக டச் பண்ணிவிட்டு விட்டுவிடுவது.

மென்மையான முத்தம் (
Light Kiss): கீழ் உதட்டை மட்டும் முத்தமிடுவது.

பட்டாம்பூச்சி முத்தம்
(Butterfly Kiss): ஒரு காதலன் காதலிக்கோ, ஒரு காதலி காதலனுக்கோ கண்ணில் கொடுப்பது; முத்தம் கொடுக்கும்போது கண் இமைகள் மூடிக்கொள்ளும், இமைகள் வந்து இறக்கைகள் போல் மறைக்கும் என்பதால் இதற்கு இந்தப் பெயர்.

ஸ்பைடர்மேன் முத்தம்
(Spiderman Kiss): ஆணும் பெண்ணும் தலைகீழாக இருந்துகொண்டு ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் முத்தம். ஸ்பைடர் மேன் தலைகீழாக நின்றுகொண்டு தன் காதலிக்குக் கொடுக்கும் முத்தத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இது அந்த வகை.

உதட்டோடு உதடு: குறைந்தபட்சம் 20 விநாடிகள் கொடுப்பது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: