Advertisements

புகழுடன் வாழவைக்கும் அசுவினி!

நட்சத்திர குணாதிசயங்கள்

லகின் அனைத்து உயிரினங்களையும் நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக் கற்றைகளால் ஆளுமை செய்கின்றன.

இதன் அடிப்படையில், நவகிரகங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை நட்சத்திரங்களுக்கும் தந்தார்கள், நம் முன்னோர்கள். நம்முடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் நட்சத்திரங்களை ஒட்டியே கடைப்பிடிக்கப்படுகின்றன.

அதேபோல், ஜோதிடம் சார்ந்த ஞானநூல்களும் 27 நட்சத்திரங்களைப் பற்றிய பல குறிப்புகளையும், அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் குறித்தும் விரிவாக விளக்குகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களையும் அதில் பிறந்த அன்பர்களின் குணாதிசயங்களையும் தொடர்ந்து அறிவோம். இந்த இதழில் அசுவினி நட்சத்திரம்!

சுவினிக்கு அதிபதி ஞானகாரகனான கேது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த உங்களைப் பற்றிப் பல ஜோதிட நூல்கள் உயர்வாகப் பேசுகின்றன. அவற்றுள் பழம்பெரும் ஓலைச் சுவடியான நட்சத்திர மாலை, `பொய்யுரை ஒன்றுஞ் சொல்லான்; புகழ் பெற வாழ வல்லன்…’ என்று கூறுகிறது. அதாவது, `நெருக்கடி நேரத்திலும் உண்மையைச் சொல்லும் உத்தமர்களாக இருப்பீர்கள்; மனதாலும் உடலாலும் பலசாலியாக விளங்கும் நீங்கள், வம்புச் சண்டைக்குச் செல்லமாட்டீர்கள்; வந்த சண்டையை விடமாட்டீர்கள்’ என்று பொருள்.

ஜாதக அலங்காரம் எனும் நூல், `செய் கருமம் வழுவாமல் செய்வன், மடவார் நேயன், தியாகி, தீரன்…’ என்று இயம்புகிறது. அதாவது, நீங்கள் எந்தச் செயலையும் விதிமுறை மீறாமல் செய்து முடிப்பதில் வல்லவர்; எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள்; அதே சிந்தனையாக இருப்பீர்கள். புத்திக் கூர்மை உடையவர்களாக விளங்குவதால், மற்றவர்களைப் பார்த்தவுடன் அவர்களுடைய உள் மனதைப் புரிந்துகொள்வீர்கள். ஆடை, ஆபரணங்களை அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும். தாம்பூலம், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றை விரும்புவீர்கள். இளமையில் வறுமையை அனுபவித்தாலும், முதுமையில் வளமை பெற்று வாழ்வீர்கள் என்று பொருள்.

`அர்த்தவாம்சாபி…’ என்று தொடங்கும் யவன ஜாதகப் பாடல், உங்களை தனவான், சாமர்த்தியவான், வலிமையுள்ளவன் என்று போற்றுகிறது.

வீரதீர கிரகமான செவ்வாயின் ராசியான மேஷத்தில் இந்த நட்சத்திரம் வருவதால், இதில் பிறந்த நீங்கள் தன்மானம் அதிகம் உள்ளவர்களாகவே இருப்பீர்கள். இருபத்தேழு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாகத் திகழ்வதால், எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்கவேண்டும் என்ற சிந்தனை உங்களிடம் காணப்படும். பிரகாசமான கண்களைப் பெற்றிருப்பதால் கம்பீரமான தோற்றத்துடன் அழகாகக் காணப்படுவீர்கள். பலருக்கு நெற்றி உயர்ந்திருக்கும்; காது மடல்கள் விரிந்திருக்கும்; பல் வரிசையும் சீராக இருக்கும்.

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல் அல்லாமல், சுய அறிவுடன் யோசித்து பதில் கூறுவீர்கள். பிடிவாதம் இருக்கும். பள்ளிப் படிப்பில் மதிப்பெண் குறைவாகப் பெற்றாலும், கல்லூரிப் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, பரிசு, பதக்கம் பெறுவீர்கள். உங்களைச் சுற்றி நண்பர் கூட்டம் அதிகம் இருந்தாலும் ஒரு சிலருடன்தான் நெருங்கிப்பழகுவீர்கள். அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இசை, ஓவியத்தையும் விட்டு வைக்கமாட்டீர்கள். தாய்மொழிக்கு ஈடான புலமை அந்நிய மொழிகளிலும் உண்டு. மேடைப் பேச்சுக்கு அஞ்சமாட்டீர்கள். துணிச்சலுடன் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பீர்கள்.

உத்தியோகத்தில் நேர்மையாக இருப்பீர்கள். அதனால் மூத்த அதிகாரியுடன் சில நேரங்களில் மோதல் வரும். கடின உழைப் பாலும் நிர்வாகத் திறமையாலும் சாதாரண நிலையிலிருந்து விரைவில் பெரிய பதவியில் அமர்வீர்கள். பத்திரப் பதிவு, வானியல், வங்கி, மருத்துவம் ஆகிய துறைகளில் பலர் திறம்பட நாட்டுக்கு சேவை செய்வீர்கள்.

45 வயதிலிருந்து சிலர் சொந்தத் தொழிலில் ஈடுபடுவீர்கள். ரசாயனம், மருந்து, மின்சாரம் சம்பந்தப்பட்ட வியாபாரம் சாதகமாக இருக்கும். ஜாதகத்தில் செவ்வாயும் கேதுவும் வலுவாக அமைந்திருந்தால், ரியல் எஸ்டேட், கட்டடம் ஆகிய துறைகளில் செல்வந்தர்களாகத் திகழ்வீர்கள்.

சுக்கிரன் வலுவாக இருப்பவர்களுக்கு மட்டும் காதல் வெற்றிபெற்று, கல்யாணத்தில் முடியும். மனைவியை அதிகம் நேசிப்பீர்கள். பிள்ளைகளின் மீது தீராத பாசம் வைத்திருப்பீர்கள். சிறுவயதிலேயே அவர்கள் நெஞ்சில் நீதி, நேர்மை போன்ற தர்ம சிந்தனைகளை விதைப்பீர்கள். 24 முதல் 30 வயதுக்குள்ளேயே வீடு, வாகனம் ஆகியவை அமைந்துவிடும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வீர்கள். நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வயதுக்குள் அரசியலிலோ ஆன்மிகத்திலோ ஈடுபட்டு புகழ் அடைவீர்கள்.

பைல்ஸ், முதுகுத் தண்டுப் பிரச்னை, கணுக்கால் வலி போன்றவற்றால் அவ்வப்போது சிரமப்படுதும் உண்டு. ஆனாலும் விரைவில் அவை நீங்கி சுகம் பெறுவீர்கள். 55 வயதிலிருந்து நீங்கள் சார்ந்திருக்கும் மதம், இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காக உழைப்பீர்கள். நீண்ட ஆயுள் உண்டு.

இனி, இந்த நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதத்திலும் பிறந்த அன்பர்களின் இயல்பு மற்றும் பலாபலன்கள் குறித்து விளக்கமாக அறிவோம்.

முதல் பாதம் (கேது + செவ்வாய் + செவ்வாய்)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி செவ்வாய். ஆகவே, அசுவினி – முதல் பாதத்தில் பிறந்தவர்கள், சுய உழைப்பால் முன்னேறுவார்கள். உள்ளதை உள்ளபடி பேசுவார்கள். அதர்மத்தைத் தட்டிக் கேட்பார்கள். சுயமாகச் சம்பாதித்து, செல்வம் சேர்ப்பார்கள். ஆடம்பரத்தில் நாட்டம் உள்ளவர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவார்கள். இருந்தாலும் கொஞ்சம் முரட்டுத்தனமும் முன்கோபமும் இருக்கும்.

6 வயது வரை சளி, வயிற்றுக் கோளாறு, காய்ச்சல் ஆகியவற்றால் உடல் நலம் பாதிக்கப்படும். படிப்பைவிட விளையாட்டுகளில்… குறிப்பாக தடகளம், கபடி, துப்பாக்கி சுடுவது போன்றவற்றில் ஆர்வம் பிறக்கும். பெற்றோர் மீது பாசம் இருந்தாலும் தனித்துச் செயல்படுவார்கள். சிலருக்கு விடுதி யில் தங்கிப் படிக்கும் சூழ்நிலை உருவாகும். சிலர், சகோதரர்களால் ஏமாற்றம் அடைவார்கள்.

நண்பர்களுக்காகவும் கொள்கைகளுக் காகவும் எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள். சூடான, காரமான உணவுகளை விரும்புவார்கள். உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தமாட்டார்கள். தன்னை அவமதித்தவர்களை தண்டிக்கவேண்டும் என்ற உணர்வு இருக்கும். இவர்களில் பலருக்கு ஆண் வாரிசு அதிகம் உண்டு.

26 முதல் 31 வயது வரை மற்றும் 47 முதல் 53 வயது வரையிலான காலகட்டத்தில் நெஞ்சு வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்தக் காலகட்டத்தில் பொருள் இழப்பு, வீண் பழி வந்து நீங்கும். அவ்வப்போது பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வசதியான வாழ்வு உண்டு.

பரிகாரம்:  எல்லாவற்றிலும் வெற்றி அடைய, இவர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை சஷ்டி திதிகளில் சென்று வணங்கி வருவது நல்லது.

இரண்டாம் பாதம் (கேது + செவ்வாய் + சுக்கிரன்)

இரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சுக்கிரன். இதில் பிறந்தவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள். இசை, நடனம், நாட்டியம் ஆகியவற்றில் இவர்களுக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். சிறுவயதிலேயே உயர் ரக வாகனத்தில் உலா வருவார்கள். பார்ப்பதற்கு அழகாகவும் பளிச்சென்ற கண்களும் மற்றவர்களுடன் எளிதில் பழகும் சுபாவமும் இவர்களுக்கு உண்டு. செல்வம் சேரும். படிப்பில் பாராட்டும் பரிசுகளும் பெறுவார்கள்.

நட்பு வட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் விரும்பும்படி இதமாகப் பேசுவார்கள். தர்மம் தலைகாக்கும் என்று நம்புபவர்கள். நொறுக்குத் தீனியை அதிகம் விரும்புபவர்கள். இனிப்பையும் லேசாகப் புளிக்கும் தயிரையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். புகழ்பட வாழ்வார்கள். சிறு வயதிலேயே சொந்த வீடு அமையும்.

25, 26, 29, 35, 38, 44, 49, 53 வயதுகளில் இவர்கள் எதிலும் பொறுமையாக செயல்படுவது நல்லது. காதலித்துக் கல்யாணம் செய்துகொள்வார்கள். மனைவி மீது தீராத பாசம் வைத்திருப்பார்கள். பிள்ளைகளை நாலும் தெரிந்தவர்களாக வளர்ப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரம் தருவார்கள். இந்தப் பாதத்தில் பிறந்தவர்களிடம் அவர்களுடைய சகோதரி பாசமாக இருப்பார். தாய்ப் பற்று இவர்களுக்கு அதிகம் உண்டு.

பரிகாரம்: ஏகாதசி திதி நாளில் உப்பிலியப்பனைத் தரிசித்து வழிபட்டு வருவதால், சகல நலன்களும் கைகூடும்.

 

மூன்றாம் பாதம் (கேது + செவ்வாய் + புதன்):

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி புதன். இதில் பிறந்தவர்கள் நாசூக்காகப் பேசுவார்கள். நுண்ணறிவு படைத்தவர்கள். அன்புக்குத் தலை வணங்குபவர்கள். அனைவரும் விரும்பும்படி நடந்து கொள்வார்கள். கல்வியில், குறிப்பாக கணிதம், உளவியல், வானவியல் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள். ஆனால், அறிவுபூர்வமாக வாதிடுவார்கள். மனதாலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கமாட்டார்கள்.

யாரேனும் இவர்களை அவதூறாகப் பேசினாலும் கலங்கமாட்டார்கள். நான்கு வயதுக்குள் நுரையீரல் கோளாறு வந்து நீங்கும். செஸ், பில்லியர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை விரும்புவார்கள். அவ்வப்போது இவர்களுக்கு ‘தன்னை யாரும் மதிக்கவில்லையே’ என்ற எண்ணம் வரும். வயலின் இசையை ரசிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் பேராசிரியராகவோ, கல்விக்கூட நிர்வாகியாகவோ, சமூக விழிப்புணர்வுக்கு கவுன்சிலிங் தருபவராகவோ இருப்பார்கள். காதலில் விருப்பம் இருக்காது. சமூகத்தில் எதையாவது சாதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்து, தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள்.

வசதி இருந்தும் எப்போதும் எளிமையை விரும்புவார்கள். சிலருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும். 14, 15, 19, 24, 27, 33, 37, 42, 51, 55, 64 ஆகிய வயதில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

பரிகாரம்: திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயிலில் அருளும் பிரயோகச் சக்கரம் ஏந்திய வரதராஜப் பெருமாளை இவர்கள் வழிபட்டு வருவதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.

நான்காம் பாதம் (கேது + செவ்வாய் + சந்திரன்):

நான்காம் பாதத்துக்கு அதிபதி சந்திரன். இதில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நகைச்சுவையாகப் பேசுவார்கள். ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். குலப்பெருமையை கட்டிக் காப்பவர்களாக இருப்பார்கள். தாய்ப் பாசம் இவர்களுக்கு அதிகம் உண்டு. உயர் ரக வாகனங்கள் மீது நாட்டம் இருக்கும்.

உருண்டு திரண்ட தேகமும், தீட்சண்யமான கண்களும், சிரித்தால் குழி விழும் கன்னங்களும் கொண்டவர்கள்; பார்ப்பதற்கு வசீகரமானவர்கள். பாசந்தி போன்ற பால் வகை இனிப்புகளை விரும்பி உண்பார்கள். கடவுள் பக்தி அதிகம் உண்டு. அன்னதானம், வஸ்திர தானம் செய்வார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். சிறு வயதிலேயே சுறுசுறுப்பாக இருப்பவர்கள் ஆதலால், வயோதிகத்திலும் மற்றவர்களை அண்டி வாழமாட்டார்கள். படிப்பில் ஆர்வம் அதிகம் இருக்கும். அனிமேஷன், ஆடை வடிவமைப்பு, விளம்பரம், சுற்றுலா, சட்டம், ஓட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

பலர், இருபது வயதுக்குள்ளேயே புகழின் உச்சிக்கு செல்வார்கள். மனைவியை நண்பராக நடத்துவார்கள். பிள்ளைகளால் பெருமை அடைவார்கள். 24, 25, 29, 33, 34, 39, 42, 43, 51, 52, 60 ஆகிய வயதில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டாகும்.

பரிகாரம்: தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அருளும் வாராஹி அம்மனை வணங்கி வந்தால், நன்மைகள் பெருகும்.


அசுவினி நட்சத்திரம்

நட்சத்திர தேவதை:
அசுவினி தேவர்கள். அமிர்த கலசத்தைக் கையில் வைத்திருக்கும் தேவ வைத்தியர்கள்.
வடிவம்    : குதிரையின் முகத்தைப் போன்று மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.
எழுத்துகள்    : சு, சே, சோ, ல.
ஆளும் உறுப்புகள்: தலை, மூளை.
பார்வை    : சமநோக்கு.
பாகை    : 0.00 – 13.20.
நிறம்    : மஞ்சள்.
இருப்பிடம்    : நகரம்.
கணம்    : தேவ கணம்.
குணம்    : எளிமை.
பறவை    : ராஜாளி.
மிருகம்    : ஆண் குதிரை.
மரம்    : பாலில்லாத எட்டி மரம் (விஷமூட்டி மரம்)
மலர்    :  நீலோத்பலம்.
நாடி    : தட்சிண பார்சுவ நாடி.
ஆகுதி    : அரசு, ஆல்.
பஞ்ச பூதம்    : நிலம்
நைவேத்தியம்: பாலேடு
தெய்வம்    : சரஸ்வதிதேவி
அதிர்ஷ்ட எண்கள் : 6, 7, 9.
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பழுப்பு.
அதிர்ஷ்ட திசை     : வடகிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினம் : வெண் பவழம்
அதிர்ஷ்ட உலோகம் : தாமிரம், பஞ்சலோகம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்: அசுவத்தாமன், பாம்பாட்டிச் சித்தர், அரிச்சந்திரன், ராஜேந்திரச் சோழன்.
சொல்ல வேண்டிய மந்திரம்:ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வசித்யை ச தீமஹி
தன்னோ: வாணீ ப்ரசோதயாத்


`அசுவினி’ திருநாளில்…

ட்சத்திரங்களில் முதலாவதான அசுவினியில் குறிப்பிடத்தக்க சுபகாரியங் களைச் செய்யலாம். திருமணம், பூ முடித்தல், சீமந்தம், புதுமனை புகுதல், குழந்தைக்குப் பெயர் சூட்டல், சிகை நீக்கி காது குத்துதல் ஆகிய வைபவங்களை அசுவினி நட்சத்திரத் திருநாளில் செய்வது நலம் தரும்.
மேலும், முதன்முதலில் வேத சாஸ்திரம் கற்கவும், வாகனம், நவீன ஆடை, ஆபரணங்கள், ரத்தினம் ஆகியவை வாங்கவும் குறிப்பிட்ட ஆபரணங்களை அணியவும் இந்த நட்சத்திர நாள் மிகவும் உகந்தது. மேலும் பொன்னேர் கட்ட, விதைவிதைக்க, மரக் கன்றுகள் நட, கடல் வழிப் பயணங்கள் மேற்கொள்ள, தானியங்கள் வாங்க, பசுத் தொழுவம் அமைக்கவும் அசுவினி நட்சத்திரம் உகந்தது.

Advertisements
%d bloggers like this: