Advertisements

குட்கா விவகாரத்தில் அப்ரூவர் யார்?

நியூஸ் ஜெ என்கிற பெயரில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர் எடப்பாடியும் பன்னீரும். இனி இதுதான், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி. இதன் லோகோ அறிமுக விழாவுக்காக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழில் அள்ளிவிடப்பட்ட விளம்பரங்கள் 50 பக்கங்களுக்கும் மேல். ஜெயலலிதா இருந்தபோது நமது எம்.ஜி.ஆரில் இத்தனைப் பக்கங்களுக்கு விளம்பரங்கள் வந்ததாக நினைவில்லை’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘அசத்துகிறார்களே!’’

‘‘நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி, தற்போதைக்கு பாலிமர் நிறுவனத்தின் கன்னட சேனல் உரிமையைப் பெற்றுத்தான் ஆரம்பித்துள்ளனர். பெயர் மாற்றத்துக்கு விரைவில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறுவார்களாம். இப்போதைக்கு சேனலின் லோகோ, இணையதளம் மற்றும் ஆப் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. கூடவே ஏகப்பட்ட பிரச்னைகளும் தொடங்கிவிட்டன.’’
‘‘ஆரம்பிக்கவே இல்லையே?’’
‘‘இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி, ‘ஜெயலலிதா ஒரு தொலைக்காட்சியை உருவாக்கினார். ஆனால், இன்றைய தினம் அது யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தோமோ, அவர்களிடம் சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் இது’ என்றார். ஆனால், ஜெயா தொலைக்காட்சியின் உரிமை எப்படி அ.தி.மு.க என்ற கட்சியிடம் இல்லாமல், சசிகலா குடும்பத்திடம் இருந்ததோ… அதேபோல், நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் உரிமையும் கட்சியின் பெயரில் இல்லை. அது, Mantaro Network Private Limited என்ற நிறுவனத்தின் தொலைக்காட்சி. இந்த நிறுவனத்துக்கு, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குநர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் மகன் டாக்டர் விவேக், அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடியின் நண்பரான வாழப்பாடி குபேந்திரன் ஆகியோர்தான் இயக்குநர்கள். எடப்பாடியின் இன்னொரு நண்பரான இளங்கோவன் குடும்பத்துக்கும் பங்கு உள்ளது. ஆனால், சேனலுக்கான மறைமுகச் செலவுகள் பலவும், அ.தி.மு.க-வின் இதர வருமானங்களிலிருந்தே போகின்றன. சிலரின் கட்டுப் பாட்டில் இருக்கும் சேனலுக்கு கட்சியின் பணம் செலவு செய்யப்படுவதை அறிந்து கட்சியின் முக்கியப்புள்ளிகளே முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.’’

‘‘சரி, தொலைக்காட்சியை ஆரம்பித்து விட்டார்கள். நிர்வகிக்கச் சரியான ஆட்கள் வேண்டாமோ?’’
‘‘அதற்கா பஞ்சம். தி.மு.க குடும்பத்தைத் சேர்ந்த சன் தொலைக்காட்சியின் பயிற்சிப் பட்டறையில் வித்தை கற்றவர்கள்தான், இப்போது ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியின் முக்கியத் தூண்கள். ஒருகாலத்தில் சன் டி.வி-யில் கோலோச்சிக் கொண்டிருந்த சாக்ஸ் எனப்படும் சக்சேனா, ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவர்தான் தற்போது புதிய சேனலின் சி.இ.ஓ. சன் நியூஸில் ஆசிரியராக இருந்த திருஞானம், இங்கே நியூஸ் எடிட்டர். இதேபோல சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள்தான் நியூஸ் ஜெ சேனலில் பல்வேறு பொறுப்புகளிலும் அமர்த்தப்பட்டுள்ளனர்.’’
‘‘ஓஹோ! சன் + கலைஞர் = நியூஸ் ஜெ என்று சொல்லும்.’’
‘‘ஆனால், ஆரம்பத்திலேயே ஏழாம் பொருத்தம் ஆகிப்போனதுதான் பிரச்னை. அரசுக்குச் சொந்தமான சென்னை கலைவாணர் அரங்கத்தில் செப்டம்பர் 12 அன்று விழா நடைபெற்றது. சன் தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான ‘வணக்க்க்கம்’ புகழ் நிர்மலா பெரியசாமிதான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். மேடையின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் எடப்பாடி மற்றும் பன்னீர் படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன. கடுப்பான கட்சிக்காரர்கள் சிலர், ‘அம்மா படம் எங்கே… புரட்சித் தலைவர் படம் எங்கே…’ என்று கூச்சலிட்டனர். ‘அம்மா படம் வரும்’ என்று சொல்லிக் கூட்டத்தை அமைதிப்படுத்தினார் நிர்மலா பெரியசாமி. பிறகு, ஜெயலலிதாவின் படம் மட்டும் வந்தது. எம்.ஜி.ஆரின் படம் கடைசிவரை வரவே இல்லை.’’
‘‘காலத்தின் கோலம்?’’
‘‘இன்னொன்றும் நடந்தது. மேடையில் வடஇந்திய நடனம் அரங்கேற்றப்பட்டது. ஆடியவர்களின் ஆடை மிகவும் மோசமாக இருந்ததால், அரங்கில் இருந்த பெண்கள் முகம்சுளித்தனர். நடனத்தைப் பார்த்து பன்னீர் பயங்கர அப்செட். ‘இதுபோன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் நானும் முதல்வரும் பங்கேற்கும் விழாவில் ஏன் சேர்க்கிறீர்கள்?’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடுகடுத்தார் அவர்.’’
‘‘ஓ… இதற்கே டென்ஷனாகிவிட்டாரா?’’
‘‘வேறொரு காரணமும் இருக்கிறது. அன்றைய தினம் பழனி, பன்னீர் மற்றும் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றிருக்கிறது. ‘விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்கவேண்டும்’ என்று கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். உடனே, ‘வேலுமணி மீதும்தான் புகார் கிளம்பியுள்ளது. அவரையும் நீக்குங்கள்’ என்று சிலர் கூறியுள்ளனர். வாக்குவாதம் காரசாரமாக, ‘எதைச் செய்வதானாலும் பாரபட்சம் இல்லாமல் செய்யுங்கள்’ என்று சொன்னாராம் பன்னீர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், ‘வேலுமணி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிவிட்டார். ஆனால், விஜயபாஸ்கர் விவகாரம் சி.பி.ஐ வரை போய்விட்டது’ என்று கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் வார்த்தைகள் தடித்தபோதும் அமைதியாகவே இருந்தாராம் முதல்வர். கூட்டத்துக்குப் பிறகு பன்னீர் தன்னைச் சந்தித்த ஆதரவாளர்களிடம், ‘இவர்கள் போகும் பாதை சரியில்லை. எந்த எல்லைக்குப் போகிறார்கள் என்று பார்க்கிறேன். தேவையான ஆதாரங்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று சொன்னாராம். விரைவில் அ.தி.மு.க-வுக்குள் கும்மாங்குத்து இருக்கலாம்.’’
‘‘அதையும் சேனலில் ஒளிபரப்புவார்கள்தானே?’’
‘‘ஊமை குசும்பனய்யா நீர். ஊடகங்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காகவே, சேனல் அறிமுக நிகழ்ச்சிக்கு 45 நிமிடங்கள் தாமதமாகத்தான் வந்தார் விஜயபாஸ்கர். மூன்றாவது வரிசையில் அமர்ந்தவரைத் தேடிப்பிடித்து, படம் எடுத்துத் தள்ளினர் போட்டோகிராபர்கள்.’’
‘‘சரி, குட்கா வழக்கு எப்படிப் போகிறது?’’
‘‘சென்னையில் இன்னும் ரெய்டுகளும் விசாரணையும் தொடர்கின்றன. வழக்கின் சூத்ரதாரியான குட்கா ஆலை அதிபர் மாதவ ராவை அழைத்துப்போய், அவருடைய குடோனில் வைத்து விசாரித்தனர் சி.பி.ஐ அதிகாரிகள். குட்கா முறைகேட்டின்போது இந்த ஏரியாவில் பணியாற்றிய ரயில்வே டி.எஸ்.பி-யான மன்னர்மன்னன், தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோரை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விஜயபாஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியாக ஆரம்பத்தில் இருந்தவர்தான் இந்த சம்பத். அவரிடம் விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளியில் வரும் என்பதால், விஜயபாஸ்கர் இப்போது காற்றிறங்கிப் போனவராகக் காணப்படுகிறாராம்.’’

‘‘மாதவ ராவிடமிருந்து உருப்படியாக ஏதாவது கிடைத்ததா?’’
‘‘கணக்கு லெட்ஜரில் சங்கேத வார்த்தைகளில் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட லஞ்சம் பற்றிய விவரங்கள் இருந்தன. தனது வாக்குமூலத்திலும் அதையெல்லாம் ஒப்புக்கொண்டுவிட்டாராம் மாதவ ராவ். இத்துடன், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்று தெரிகிறது. இரண்டு பெயர்களை இந்தக் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதில் சி.பி.ஐ உறுதியாக உள்ளது. ஒருவர், மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், மற்றொருவர் டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் என்று அடித்துச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’
‘‘அதெப்படி அத்தனை உறுதியாக இருக்கிறார்கள்?’’
‘‘மாதவ ராவின் குடோனுக்கு முதலில் சென்றவர், ஜார்ஜுக்கு நன்கு அறிமுகமானவரும், மத்தியக் குற்றப்பிரிவில் முக்கியப் பணியில் இருந்தவருமான ஓர் இன்ஸ்பெக்டர்தான். அடுத்து, போலீஸ் அதிகாரி ஜெயக்குமார் டீம் ரெய்டு போனதாம். அப்போதுதான், ‘ரெய்டு நடத்த வேண்டாம். திரும்பி வரவும்’ என்று கமிஷனர் ஆபீஸிலிருந்து மாநகர உளவுத்துறை அதிகாரி ஒருவர் போனில் உத்தரவிட்டாராம். இதுவும் சி.பி.ஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. முதலில் சென்ற இன்ஸ்பெக்டர், தற்போது சென்னை கடற்கரை பிரதேசத்தை ஒட்டியுள்ள ஸ்டேஷனில் பணிபுரிகிறார். அவரை அழைத்து விசாரிக்கப்போகிறார்களாம்.’’
‘‘ஆக, சீக்கிரமே கள்ள ஆடுகள் சிக்கும் என்று சொல்லும்?’’
‘‘நிச்சயமாக. இந்த வழக்கை மேலும் வலுவாக்கி, இதை வைத்தே மாநில ஆட்சியாளர்களுக்குக் குடைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் சி.பி.ஐ-க்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மென்ட். ஆதாரங்கள் பலவும் அல்வா துண்டு போலக் கிடைப்பதால், குஷியாகவே சி.பி.ஐ இருக்கிறது. என்றாலும், யாராவது ஒருவரை அப்ரூவர் ஆக்க வேண்டும். அப்போதுதான் வழக்கு பலமாகும் என்று சி.பி.ஐ நினைக்கிறது. அவர் யார் என்பது சீக்கிரமே தெரியவரும்’’ என்ற கழுகாருக்கு போன் அழைப்பு வந்தது.
பேசியவர், ‘‘முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி, ‘ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்க மத்திய உள்துறையை தமிழக கவர்னர் ஆலோசிக்கத் தேவையில்லை’ என்று சில நாட்களுக்கு முன்பு சொன்னார். ஆனால், பன்வாரிலால் புரோஹித் மத்திய உள்துறையின் கருத்தைக் கேட்டிருக்கிறார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்’’ என்றபடி பறந்தார்.

Advertisements
%d bloggers like this: