Advertisements

குறிஞ்சிப் பூ அரிது… தேன் அதனினும் அரிது!

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரிலும் ஆரளவின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு’ என்கிறது குறுந்தொகை.

`அரிதினும் அரிது குறிஞ்சிப் பூ; அதனினும் அரிது அதிலிருந்து கிடைக்கும் தேன்’ என்று சங்க இலக்கியம் கொண்டாடும் சிறப்பு பெற்றது குறிஞ்சித் தேன். உலகில் கிடைக்கும் அனைத்து வகை தேன்களிலும் உயர்வானது இது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பல்வேறு உயிரினங்களை வாழவைக்கிறது. குறிப்பாக, மனிதர்களின் நோய் தீர்க்கவும் பயன்படுகிறது.

நீலகிரி மலையில் தோடர்கள், கொடைக்கானல் மற்றும் பழனி மலைப் பகுதிகளில் உள்ள பளியர் இன மக்களின் விருப்ப உணவும் மருந்துமாக இருக்கிறது குறிஞ்சித் தேன். இந்த மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் இருப்பதற்கு குறிஞ்சித் தேனும் ஒரு காரணம் என்கிறார்கள். பழங்குடி வைத்தியத்தில் குறிஞ்சித் தேன் முக்கிய இடம் வகிக்கிறது.
குறிஞ்சிச் செடியில் பல்வேறு வகைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி என இதில் பல வகைகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக் குறிஞ்சி மிகவும் விசேஷமானது.
குறிஞ்சித் தேனில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. `இந்தத் தேன், ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். செரிமானக் கோளாறுகளையும் தீர்க்கும்’ என்கிறார்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள். குறிஞ்சி பூக்கும் காலங்களில் பிற பூக்களை தேனீக்கள் நாடுவதில்லை. அதனால், இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும் தேனை, `தனிப் பூந்தேன்’ (Unifloral Honey) என்று அழைக்கிறார்கள்.

கொடைக்கானல், நீலகிரி மலைப் பகுதிகளில் தற்போது குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ‘‘குறிஞ்சித் தேன்  மருத்துவ குணம் வாய்ந்தது. வயிற்றுவலி, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இதைப் பயன்படுத்துகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்கவும் இது பயன்படும்.  
சுத்தமான குறிஞ்சித் தேன் இன்னும் சந்தைக்கு வரவில்லை. குறிஞ்சித் தேனைப் பத்தாண்டுகள்வரை  சேமித்துவைக்கலாம். குறிஞ்சித் தேன் இயற்கையின் அருட்கொடை’’ என்கிறார் கொடைக்கானல் சுற்றுச்சூழல் ஆர்வலர் வீரா.

சித்த மருத்துவத்தில்  மலைத் தேன், கொசுத் தேன், கொம்புத் தேன் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. குறிஞ்சித் தேனின் மகத்துவம் பற்றி சித்த மருத்துவர் வி.விக்ரம்குமாரிடம் கேட்டோம்.

“சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் தேன் பற்றி நிறையவே கூறப்பட்டிருக்கின்றன. இதற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. குறிஞ்சிப் பூக்களுக்கும் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. தசைப்பிடிப்பு,  மூட்டுவலி, வீக்கம் மற்றும் எலும்பு நோய்களுக்கு குறிஞ்சிப் பூவை வெறுமனே கசக்கி வலி உள்ள இடத்தில் தடவுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். 

ஒரு குறிஞ்சிச் செடியில் சராசரியாக 1,768 பூக்கள் பூக்கும். ஒவ்வொரு பூவிலிருந்தும் ஏறத்தாழ 4 மி.லி தேன் கிடைக்கும். அதன்படி ஒரு செடியிலிருந்து  7,000 மி.லி தேன் சேகரிக்கலாம். குறிஞ்சித் தேன் மற்ற தேனைவிட அடர்த்தியாகவும் கருமையாகவும் காணப்படும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  கிடைப்பதால் குறிஞ்சித் தேனுக்கு மரியாதை செலுத்தும்விதமாக பழங்குடி மக்கள் விழா நடத்தி, கொண்டாடுகிறார்கள்…’’ என்கிறார் விக்ரம்குமார்.

Advertisements
%d bloggers like this: