மறக்கத் தெரிந்த மனமே… அல்சைமர் அலர்ட்!

செப்டம்பர் 21 உலக அல்சைமர் தினம்

ன்று, வயதானவர்களை  பாதிக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அல்சைமர் (Alzheimer) நோய். சாதாரணக் குடிமக்கள் தொடங்கி, அரசியல் தலைவர்கள்வரை பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் அதிக அளவில் மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் 6-வது இடத்திலிருக்கிறது அல்சைமர்.  இந்தியாவில், ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்திருக்கும் இந்த நோய் குறித்து போதிய அளவுக்கு விழிப்புஉணர்வு ஏற்படவில்லை.

65 வயதைத் தாண்டியவர்களே அல்சைமர் பாதிப்புக்கு அதிகம் உள்ளாகிறார்கள். எந்த அடிப்படைக் காரணங்களுமின்றி, யோசிக்கும் திறன், ஞாபகசக்தி, நடத்தை தொடர்பான மாற்றங்களை அல்சைமர் ஏற்படுத்தும். காரணம் தெரியாததால், மற்ற பிரச்னைகளைப்போல அல்சைமரை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியாது.

‘டிமென்ஷியா’ (Dementia) எனப்படும் தீவிர மறதிநோயின் ஒரு நிலைதான் அல்சைமர். பொதுவாக, முதுமை காரணமாக ஏற்படும் மறதிநோயை ‘டிமென்ஷியா’  என்பார்கள். இதில் இரண்டு வகை உண்டு. உடல்சார்ந்த பிரச்னைகள் காரணமாக ஏற்படும் மறதிநோயை ‘முதன்மை டிமென்ஷியா’ (Primary Dementia) என்றும், எந்தக் காரணமுமின்றி ஏற்படும் மறதிநோயை ‘இரண்டாம் நிலை டிமென்ஷியா’ (Secondary Dementia) என்றும் வகைப்படுத்துகிறார்கள். இரண்டாம் நிலை டிமென்ஷியாவின் ஒரு வகைதான் அல்சைமர்.

உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான அல்சைமர் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி, உலக அல்சைமர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அல்சைமர் நோயின் அறிகுறிகள், விளைவுகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் விரிவாகப் பேசினார்.

“அல்சைமர் எதனால் ஏற்படுகிறது என்பது இன்றுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை. வயது மூப்பு காரணமாக சிலருக்கு அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், மூப்படையும் எல்லோரையும் இந்த நோய் பாதிப்பதில்லை. 
19 வயதுக்கு மேற்பட்ட எவரும் இந்த நோயால் பாதிக்கப்படலாம். 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் பாதிப்புக்கு, மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என  உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. அல்சைமர் பாதிக்கப்பட்டவர் களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு மற்றும் தைராய்டு குறைபாடு இருக்கலாம்.

அறிகுறிகள் என்னென்ன?

* அண்மையில் நடந்த நிகழ்வுகள்,  உரையாடல்கள், சந்திப்புகள் அனைத்தையும் மறந்துவிடுதல்.

* பொருள்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு, அது தெரியாமல், யாரோ திருடிவிட்டதாகச் சொல்வது.

* பழக்கமான இடங்களில் நின்றுகொண்டு  திசை தெரியாமல் விழிப்பது.

* நேரம், காலம், ஆண்டுகள் தெரியாமலிருப்பது அல்லது மறந்துவிடுவது.

* தெரிந்த வார்த்தைகளையும் சொற்களையும்கூட மறந்துவிட்டு, பொருத்தமற்ற வார்த்தைகளை அதிகம் உபயோகிப்பது.

 

* சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது.

* பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பது.

* குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையே மறந்துவிடுவது.

* எந்தச் செயலையும் ஆரம்பிக்க தயக்கம் காட்டுவது, முடிவெடுக்க முடியாமல் திணறுவது.

இவற்றில் எந்த அறிகுறிகள் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அல்சைமர் நோயை முழுமையாகச் சரிசெய்ய முடியாவிட்டாலும், நோயாளியைச் சரியான முறையில் கவனித்துக்கொள்வதன் மூலம், பாதிப்பின் வீரியத்தைக் குறைக்கலாம். அல்சைமர் நோய் அடையாளம் காணப்பட்டவர்களை, நன்றாக கவனித்துக் கொண்டால், ஒன்பது முதல் பதினைந்து ஆண்டுகள்வரை அவர்கள் உயிர்வாழ வாய்ப்பிருக்கிறது.

மூன்று நிலைகள்

அல்சைமரால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும்.

* முதல் நிலையில், நோயாளியின் உடல் ஆற்றல் குறையும். பணிச்சூழலில், ‘என்ன வேலை செய்துகொண்டிருந்தோம்’ என்பதை மறந்துவிட்டதுபோலத் தோன்றும். இரண்டு முதல்  நான்கு ஆண்டுகள்வரை இந்த நிலை தொடரலாம்.

 

* இரண்டாவது நிலையில், முழுமையாக மறதி ஏற்படத் தொடங்கும். இந்த நிலையிலிருக்கும் நோயாளிகள் எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே இருப்பார்கள். இவர்களால், தனித்துச் செயல்பட முடியாது. மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளாமல் இருப்பது, பேச்சுக்கிடையில் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை முற்றிலுமாக மறந்து திணறுவது, அடிக்கடி பதற்றமடைவது, அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைக்கூட மறந்துவிடுவது (காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதுகூட மறந்துபோகும்) போன்றவை இரண்டாம் நிலை அல்சைமருக்கான முக்கிய அறிகுறிகள். அன்றைய நிகழ்வுகளைக்கூட மறக்கும் இவர்களுக்கு, தங்களின் பழைய வாழ்க்கை நினைவுகள் மறக்காது. இரண்டு முதல் பத்து ஆண்டுகள்வரை இந்த நிலை அல்சைமர் தொடரலாம்.

* மூன்றாவது நிலையில், தன்னையே யாரென மறந்துவிடுவார்கள். கண்ணாடி முன்னால் நின்றுகொண்டிருக்கும்போதுகூட, தன்னையே அடையாளம் தெரியாமல் திணறுவார்கள். அதிக நேரம் தூங்கும் இவர்களுக்கு சிறுநீர் வெளியேற்றம், மலம் கழிப்பது யாவும் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். இந்த இறுதிநிலை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள்வரை தொடரக்கூடும். உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதைக்கூட இவர்கள் மறந்துவிடுவதால், கண்காணிப்பு இல்லாமல் இவர்களை விடுவது ஆபத்தில் முடியலாம்.

பாதுகாப்பு முறைகள்

* அல்சைமரால் பாதிக்கப்பட்டவரை, எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திலும் அடிக்கவோ, திட்டவோ கூடாது. அதே நேரம், அவர்கள் உங்களை அடித்தாலோ, திட்டினாலோ உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் செயலாற்றுங்கள்.

* அவர்களுக்கு எது சரி, எது தவறு என்பதைப் புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது என்பதால், எந்த விஷயத்திலும் அவர்களைக் குற்றவாளிபோல நடத்தக் கூடாது.

 

* மொழித்திறனில் தடுமாற்றம் ஏற்படும் நோயாளிகளுக்கு, பேச்சுப் பயிற்சி கொடுக்கலாம்.

* இரண்டாவது நிலை பாதிப்பிலுள்ள நோயாளிகளுக்கு, தினமும் காலையில் எழுந்தவுடன் அன்றைய நாள், தேதி போன்றவற்றைச் சொல்லித்தர வேண்டும். பாதையை மறப்பவர்களுக்கு, அதை வரைபடமாக்கிக் கொடுக்க வேண்டும்.

* இரண்டாவது நிலை பாதிப்புள்ளவர்கள், தனித்துச் செயல்பட முடியாமல் திணறுவார்கள். எனவே, அவர்களின் அனைத்து செயல்பாடுகளின்போதும் யாராவது ஒருவர் உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்.

* இயல்பிலேயே இடங்களையும் பாதைகளையும் மறக்கும் அல்சைமர் நோயாளிகளைப் புது இடத்துக்கு இடமாற்றம் செய்வதென்பது, அவர்களின் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும். எனவே, முதியோர் இல்லங்களில் சேர்ப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

* இறுதி நிலையிலுள்ள நோயாளிகளுக்குச் சாப்பிடுவது, நடப்பது போன்ற அன்றாட வேலைகளை எப்படிச் செய்வதென்பதே மறந்துவிடும். எனவே வீல்-சேர் வாங்கிக் கொடுத்து, உடன் ஒரு நபர் இருந்து கவனித்துக்கொள்ளவும்.

* நோயாளியிடம் அவர் யார், எப்படி வளர்ந்தார், என்னவெல்லாம் செய்தார் என்பதைச் சுவாரஸ்யமான கதை வடிவில் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.”

அல்சைமரால் பாதிக்கப்பட்டவரை கவனிப்பவர், அவர் மீது கோபம் கொள்ளாதவராக, அவரை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும். தனக்கு யார் பணிவிடை செய்கிறார், எதற்காகப் பணிவிடை செய்கிறார் என்பதெல்லாம் நோயாளிக்குத் தெரியாது. எனவே, எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், அன்பின் காரணமாக கவனித்துக்கொள்பவர் மட்டுமே கேர்-டேக்கராக இருக்க வேண்டும். மேலும், அவர் நோயாளியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டியது அவசியம்.

 


 

கவனம்… கேர் டேக்கர்ஸ்!

ல்சைமர் நோயாளிகள், பல நேரங்களில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வார்கள். எந்தச் செயலையும் செய்து முடித்த பிறகு, ‘இப்ப ஆரம்பிப்போமா?’ என்பார்கள். (உதாரணம்: சாப்பிட்டு முடித்த பின்னர், அதை மறந்துவிட்டு சாப்பாடு வேண்டுமெனக் கேட்பது). குடும்ப உறுப்பினர்களின் பெயர், முகங்களையெல்லாம் மறந்துவிட்டு, `யார் நீ…’ எனக் கேள்வி கேட்பார்கள். அவர்களின் அனைத்து செயல்களையும் பொறுத்துக்கொண்டு அன்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத ஒருவரை நியமித்து அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லித்தருவதற்கு பதில், வீட்டிலுள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் பொறுப்பெடுத்துக் கொண்டு செயல்படுவது சிறப்பு.


%d bloggers like this: