மாற்று சிகிச்சைக்கு மகத்தான மருத்துவமனை!

இயற்கை மருத்துவம் முக்கியத்துவம் பெற்று வரும் இன்றைய சூழலில் அதுகுறித்து தேவையான தகவல்களைப் பெறவும், அதற்கான பிரத்யேக மருத்துவமனை பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை மிகவும் குறிப்பிடத்தகுந்தது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி ஆகிய 4 முக்கியத்துறைகளுடன் இயற்கை மற்றும் யோகா சிகிச்சையும் கொண்டதாக மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது இந்த மருத்துவமனை. மருத்துவமனை பற்றியும், அதில் செயல்படும் துறைகள் பற்றியும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் பற்றி அறியவும் ரவுண்ட்ஸ் வந்தோம்…

மருத்துவமனையின் இயக்குநரான செந்தில்ராஜ் அதன் பணிகள் குறித்தும், மக்களுக்காக செய்யப்பட்டிருக்கும் வசதிகள் பற்றியும் நம்மிடையே விளக்கினார். ‘‘இந்திய மருத்துவம் என்கிற பெயரில் தமிழக அரசால் 17.09.1970 அன்று அறிஞர் அண்ணா மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை மற்றும் யோகா சிகிச்சை ஆகிய 5 மருத்துவ பிரிவுகள் இருப்பது ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்.

இம்மருத்துவமனையில் மொத்தம் 52 மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள். இவர்களே கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் மிகச் சிறப்பாக இயங்கும் மருத்துவனை ஆகும்.
271 உள்நோயாளிகள் இருக்கிறார்கள். அதுபோல இங்கு வரும் புற நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போது 1500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த மருத்துவமனையில் திங்கள் முதல் வெள்ளி வரை நீரிழிவு, ரத்த கொதிப்பு, உடல் எடைப் பராமரிப்பு, தோல் போன்ற நோய்களுக்கு சிறப்பு புறநோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது.

சிறப்பு சிகிச்சைகள்

சித்த மருத்துவத்தில் தொக்கணம், அட்டைவிடுதல் மற்றும் வர்மம் போன்ற சிகிச்சைகளும், ஆயுர்வேத மருத்துவத்தில் நவரக்கிழி மற்றும் பஞ்சகர்மா போன்ற சிகிச்சைகளும், யுனானி மருத்துவத்தில் ரெஜிமெண்டல் தெரபி மற்றும் கப்பிங் தெரபி போன்ற சிகிச்சைகளும் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் நீராவி குளியல் போன்ற சிறப்பு சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்படுகிறது.

உள் நோயாளிகளின் உணவு

பால், ரொட்டி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் தினந்தோறும் 400 கிராம் ரொட்டி மற்றும் 500 மில்லி பால் வழங்கப்படுகிறது. பொதுவாக உள்நோயாளிகளுக்கு திங்கள் முதல் ஞாயிறு வரை சரிவிகித ஊட்டச்சத்து அடிப்படையில் அமைந்த உணவுப் பட்டியலின்படி அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.

காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், தானிய வகை உணவுகள் என சிறப்பாக வழங்கப்படுகிறது. இதில் இயற்கை மருத்துவத்துக்கு மட்டும் சமைக்காமல் நேரடியாக இயற்கை உணவு வழங்கப்படுகிறது.

இம்மருத்துவமனையில் வளாகத்தினுள் சித்தா, இயற்கை மற்றும் யோக, யுனானி என மூன்று கல்லூரிகள் இயங்குகிறது. அக்கல்லூரிகளில் மொத்தம் 855 மாணவர்கள் பயில்கிறார்கள்.

சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் இங்கேயே சுத்தமான சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் சென்னையில் செயல்படும் அனைத்து அரசு சித்தா, யுனானி, ஆயுர்வேதம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மருத்துவமனை வளாகத்தினுள் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருந்துகளை அதன் தன்மை, தரம் போன்றவற்றை பகுத்தாய்ந்து பரிந்துரைக்கும் அலுவலகம் உள்ளது. தமிழ்நாடு முழுக்க தயாரிக்கப்படுகிற சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற மருந்துகளை விற்பதற்கு உரிமம் வழங்கும் நிறுவனமும் உள்ளது.

சுற்றுப்புறத் தூய்மையானது புற ஒப்படைப்பு பணியாளர்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வசதி இம் மருத்துவமனையின் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளிகளுக்கு 500 லிட்டர் திறன் கொண்ட இரண்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு மருத்துவமனையின் கட்டுப் பாட்டின் கீழ் கேன்டீன் வசதி இல்லை. அவ்வாறான கேன்டீன் உருவாக்கப்பட்டால் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு, மூலிகை உணவு, பாரம்பரிய உணவு வகைகளை புற நோயாளிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்.

இதனால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதுடன் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு பழகி அந்த உணவை அவர்கள் வீட்டில் செய்து பயன் பெறுவார்கள். தற்போது இவ்வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவால் நடத்தப்படும் கேன்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது’’ என்கிறார். 

யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை பற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் மணவாளன் பகிர்ந்துகொள்கிறார். ‘‘தமிழகத்திலேயே யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறையில் உள்நோயாளிகளுக்கான பிரிவு  2015-ம் ஆண்டில் முதன்முதலாக இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. நோயாளிகளுக்காக 100 படுக்கைகள் இந்த வார்டில் உள்ளன.

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் உட்பட அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக பக்கவாதம், உடல் எடை குறைப்பு முதலான பிரச்னைகளுக்குத்தான் அதிகளவில் வருகின்றனர்.

சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலையில் 1 மணிநேரமும், மாலையில் 1 மணி நேரமும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும் மசாஜ் தெரபி, மண் குளியல், வாழை இலை குளியல், நீர் சிகிச்சை போன்றவை தரப்படுகின்றன. இதுபோல் மொத்தத்தில் எட்டு விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’

அக்குபங்சர் மற்றும் ஆற்றல் மருத்துவம் பற்றி டாக்டர் கீதாஞ்சலி பேசுகிறார்.

‘‘இயற்கை மருத்துவத்தில் தற்போது அக்குபங்சர் மற்றும் ஆற்றல் மருத்துவம் வளர்ந்து வரும் துறையாக மாறி வருகிறது. எளிதில் குணப்படுத்த முடியாத தீவிர நோய்களான சிறுநீரகம் செயல் இழத்தல், மலட்டுத்தன்மை, புற்றுநோய் போன்றவையும் அக்குபங்சர் மற்றும் ஆற்றல் மருத்துவத்தில் தரப்படும் சிகிச்சை முறைகளால் குணப்படுத்தப்படுகின்றன.

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்றவற்றைக் குணப்படுத்தா விட்டாலும், அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி நோயாளிகளை வலிகளில் இருந்து காப்பாற்றவும் இச்சிகிச்சை முறை உதவுகிறது.

இதன்மூலம் அவர்களுடைய உடல் தொடர்பான கஷ்டங்களை குறைக்க முடியும். அக்குபங்சர் முறையில் நோயாளிகளுக்கு  நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களில் எது அதிகமாகவும், எது குறைவாகவும் உள்ளது என்பதை நாம் உணர்ந்து சிகிச்சை கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் ஊசிகளைப் பயன்படுத்தி சிகிச்சை தரப்படுகிறது.’’

சித்த மருத்துவத்துறை பற்றி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்தியிடம் கேட்டோம்…‘‘சித்த மருத்துவம் என்பது வெறும் மருந்துகளில் மட்டும் முடிவது இல்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் எவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? தினமும் செய்கிற யோகாசனம் முதலான உடற்பயிற்சிகள் அனைத்தும் அடங்கியதுதான் இந்த மருத்துவம்.

இவ்வாறு பல தனித்தன்மைகளை உள்ளடக்கிய சித்த மருத்துவத்தில், எந்த நோயால் அவதிப்படுகிறோமோ, அதைக் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளும் மற்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டு உள்ளன.

சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்கள் மற்றும் அவற்றால் ஏற்படுகிற பாதிப்புக்களைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்ற நிலையில் எங்களுடைய நிலவேம்பு கஷாயம் உபயோகமாகஇருந்தது. அந்தக் கஷாயத்தினால் கிடைத்த பயன்களால் இன்றைக்கு ஏராளமானோர் சித்த மருத்துவம் பக்கம் திரும்ப தொடங்கி உள்ளனர்’’.யுனானி மருத்துவத்துறை பற்றி டாக்டர் முஸ்தாக் அகமது விளக்குகிறார்.

‘‘யுனானி மருத்துவம் கிரேக்க நாட்டில் உருவான மருத்துவமாகும். அதன் பிறகு அரேபிய நாட்டில் பின்பற்றப்பட்டு முகலாயர்கள் பேரரசு மூலம் இந்தியாவில் கால் ஊன்றி இன்று இந்திய மருத்துவத்தின் ஒரு அங்கமாக யுனானி மருத்துவம் செயல்படுகிறது. ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, நரம்பியல் சார்ந்த நோய்கள், மூளை நோய்கள், காது மூக்கு தொண்டை, மாதவிடாய், கர்ப்பப்பை பிரச்சனைகள், சீரணமண்டல நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்ற நோய்களுக்கு யுனானி சிறப்பாக செயல்படுகிறது.

நம்முடைய மருத்துவமனையில் இந்த மருத்துவத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நாளுக்கு நாள் யுனானி மருத்துவத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.’’ஹோமியோபதி மருத்துவத்துறை பற்றி டாக்டர் சுபஸ்ரீ யிடம்…‘‘ஹோமியோபதி என்பது ஒரு ஜெர்மானிய மருத்துவ முறையாகும்.

உலக அளவில் இரண்டாவதாக அதிகம் பின்பற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும். தாவரங்கள், கனிமங்கள், விலங்குகள் போன்றவற்றிலிருந்து மருந்துகள் எடுத்து அதை இனிப்பு உருண்டைகளாக தரப்படுகிறது. இது முழுக்க முழுக்க பக்க விளைவுகள்  அற்ற ஒரு மருத்துவமுறை. இம் மருந்தை குழந்தைகள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்.

நாள்பட்ட நோய்கள், ஆஸ்துமா, பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை, நாள்பட்ட சளி தொந்தரவு, தோல்  பிரச்னைகள், பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் போன்றவற்றுக்கு சிறப்பான மருத்துவம் ஆகும். ஹோமியோபதி இந்திய மருத்துவத்தில் ஒன்றாக இந்தியா முழுக்க செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து பயனடைகின்றனர்.’’

ஆயுர்வேத மருத்துவத்துறை பற்றி டாக்டர் ரவிச்சந்திரனிடம் பேசினோம்…‘‘ஆயுர்வேத மருத்துவம் என்பது இந்திய பாரம்பரிய மருத்துவ முறையாகும். இதில் எட்டு வகையான மருத்துவ சிகிச்சைகள் இருக்கிறது. நமது மருத்துவமனையில் பொது மருத்துவம், மனநோய், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், கர்ப்பிணி பெண்கள், கண் காது மூக்கு தொண்டை, நோய்த் தடுப்பு, வயது மூப்பு தடுப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றல், இனப்பெருக்கவியல் போன்றவை தொடர்பாக சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

பக்கவாதம், இடுப்பு வலி, சரும நோய், நீரிழிவு, ஈரல் நோய், சுவாச உறுப்பு பாதிப்புகள், புற்றுநோய், கர்ப்பப்பை நோய், குழந்தைகள் ஆட்டிசம் போன்ற நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’சிகிச்சை பெற வந்தவர்களிடம் மருத்துவமனை பற்றிப் பேசினோம்.

வெங்கடேஷ் (சென்னை)

‘‘பல மாதங்களாக முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் உடல்வலியால் அவதிப்பட்டு வந்தேன். ஒரு வாரத்துக்கு முன்புதான் இங்கு சிகிச்சைக்காக சேர்ந்தேன். மண் குளியல், ஆயில் மசாஜ் என சிகிச்சைகள் தரப்பட்டன. அப்போது இருந்ததைவிட இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.’’

கோகுலகிருஷ்ணன் (சென்னை)

‘‘எடை குறைப்பிற்காக இங்கு கடந்த முறை வந்திருக்கிறேன். இப்போது நல்ல மாற்றம் தெரிகிறது. டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள் எங்களுக்குத் தருகிற சிகிச்சை முறைகளால், எந்தவிதமான பாதிப்பாக இருந்தாலும் 100 சதவீதம் குணம் அடையும் என்ற நம்பிக்கை வருகிறது. அந்த அளவிற்கு இங்கு வசதிகள் கிடைக்கின்றன.

ஆனால், சிகிச்சை பெறுவதற்காக, ஒவ்வொரு முறையும் மூன்றாவது மாடிக்கும், மேல் தளத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது. ஸ்பைனல் கார்டு, கால் எலும்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இதனால், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் லிஃப்ட் வசதி செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும். அதேபோல் சுகாதாரப் பராமரிப்பிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.’’

தேன்மொழி(சென்னை)

‘‘எனக்கு 60 வயதாகிறது. நான் உடல் எடை பிரச்னையால் நிறைய மருத்துவர்களை சந்தித்தும் மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டும் வந்தேன். அது என்னுடைய பிரச்னைக்கு தீர்வாக இல்லை.

நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு இந்த மருத்துவமனைக்கு வந்து இயற்கை மற்றும் யோகா பிரிவில் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். தினமும் சமைக்காத உணவுகள், காய்கள், பழங்கள், ஊறவைத்து முளைகட்டிய தானிய வகைகள் போன்றவை வழங்கப்படுகிறது. தற்போது என்னுடைய உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணர முடிகிறது.’’

%d bloggers like this: