Advertisements

ரெய்டு… அடுத்த குறி தம்பிதுரை!

சுழல் நாற்காலியில் வந்தமர்ந்த கழுகார், ‘‘ ‘ஆறுச்சாமி வந்துட்டாம்லே…’ என்று மிரட்டுகிறது ‘சாமி ஸ்கொயர்’ ட்ரைலர். ஆனால், நிஜ ஆறுச்சாமியோ தினம் தினம் மிரட்டப்படுகிறார்’’ என்று இன்ட்ரோ கொடுத்தார்.

‘‘யாரய்யா இந்த நிஜ ஆறுச்சாமி’’ என்றோம்.

‘‘வேறு யார்? எடப்பாடி பழனிசாமிதான். தினம் தினம் ஏதாவது ஒரு குடைச்சலில் சிக்கிக்கொள்கிறார் மனிதர். முதலில் அவருக்கே ஏகப்பட்ட குடைச்சல். ரோடு கான்ட்ராக்ட் தொடங்கி, எல்லாவற்றையும் கண்கொத்தி பாம்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சி மற்றும் சமூக நல அமைப்புகள், குத்திக் குடைய ஆரம்பித்துவிட்டன. நீதிமன்றம் வரை இழுத்துப்போட்டு உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டுள்ளனர். இதற்கு நடுவில் ரெய்டு, வம்பு, வழக்கு என்று தலைக்கு மேல் கத்திகளாகத் தொங்குகின்றன.’’

‘‘ம்க்கும்… நீர் ஏதோ எடப்பாடி பழனிசாமிக்கு வக்காலத்து வாங்குவது போலல்லவா பேசுகிறீர். அவராவது, மிரட்டப்படுவதாவது. மனிதர், கல் மாதிரியல்லவா அசையாமல் இருக்கிறார்’’

‘‘வெளியில் பார்ப்பது ஒரு ரூபம்… உள்ளுக்குள் இருப்பவை பல ரூபங்கள். உண்மையில் மனிதர் நொந்து போயிருக்கிறார். காப்பாற்றிவிடும் என நம்பியிருந்த டெல்லிச்சாமியே கொஞ்ச காலமாக குடைச்சல் கொடுக்க ஆரம்பித்திருப்பதால், தன் ஆட்களை விட்டு திருப்பித் தாக்கும் வேலைகளைச் செய்து பார்க்கிறார். ஆனால், எதுவும் எடுபடுவதாகத் தெரியவில்லை. அடுத்தடுத்து அம்புகளைப் பாய்ச்சுவதில் டெல்லிச்சாமி குறியாகவே இருக்கிறது.’’

‘‘அடுத்த அம்பு ரெடியா… குறிவைக்கப்படும் தலை எதுவோ?’’

‘‘அ.தி.மு.க ஆட்சியைப் பதம் பார்ப்பதற்காக, ரெய்டு அம்புகள் அடுத்தடுத்து பாயக்கூடும் என ஏற்கெனவே நாம் பேசியிருக்கிறோம். அந்த வகையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்குதான் அடுத்த குறி. தம்பிதுரை நாடாளுமன்றம் சார்ந்த ஐந்து கமிட்டிகளில் தலைவர், உறுப்பினர், சிறப்பு அழைப்பாளர் என்கிற பதவிகளிலும் இருக்கிறார். அப்படிப்பட்டவர், பி.ஜே.பி-க்கு சாதகமாகத்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அ.தி.மு.க-வினர் மற்றும் அதிகாரிகள்மீது ரெய்டு நடவடிக்கைகள் பாயும் போதெல்லாம் பி.ஜே.பி-யைத் தாக்க ஆரம்பித்துவிடுகிறார். சமீபத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டபோது,  ‘தி.மு.க-வுடன் கூட்டணி போடப்போகிறது பி.ஜே.பி. அதனால், தி.மு.க சொல்லித்தான் இந்த ரெய்டு நடக்கிறது’ என வெளிப்படையாகவே வெடித்தார் தம்பிதுரை. இதை ரசிக்காத டெல்லி, மத்திய உளவுத்துறையை முடுக்கிவிட்டுள்ளது. தம்பிதுரையின் பொறுப்பிலுள்ள நாடாளுமன்றக் கமிட்டிகளுக்கான பணப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் லென்ஸ் வைத்துத் துருவுகிறார்கள்.’’

‘‘இதெல்லாம் சுண்டைக்காய்… இதை வைத்து என்ன செய்ய முடியும்?’’

‘‘அடுத்து பரங்கிக்காயே இருக்கிறது. தம்பிதுரை தரப்பில், மருத்துவக் கல்லூரி ஒன்று ரெடியாகி வருகிறது. இதில் ஏகப்பட்ட விதிமீறல் நடந்திருப்பதாக மத்திய அரசுக்குத் தகவல்கள் போயிருக்கின்றன. உள்ளூர் அ.தி.மு.க எதிர்கோஷ்டியினர், பக்காவாக விசாரித்து விதிமீறல்களைப் பட்டியலிட்டு அனுப்பியுள்ளார்களாம். இந்த விஷயத்தைக் கையில் எடுத்துள்ளனர் மத்திய உளவுத் துறையினர். இதேபோல அவரது தரப்பின் அறக்கட்டளைகள் நடத்திவரும் மற்ற கல்வி நிறுவனங்கள் பற்றியும் விசாரித்து வருகிறார்களாம். தம்பிதுரைக்கு நெருக்கமான ஒருவர் கரூரில் ஃபைனான்ஸியராக இருக்கிறார். இதேபோல அவருக்கு நெருக்கமான மேலும் 12 பேர் பல்வேறு பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களையெல்லாம் ஸ்கெட்ச் போட்டு தகவல்களைத் திரட்டிவருகிறார்கள். இவர்களில் சிலர், வெகுசீக்கிரத்திலேயே வருமானவரித் துறை அல்லது சி.பி.ஐ வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள்.’’

‘‘ஆக, சீக்கிரமே க்ளைமாக்ஸ் வரும் என்று சொல்லும்.’’

‘‘பின்னே… நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழெட்டு மாதங்கள் இருந்தாலும், அதற்கான முஸ்தீபுகளைச் செய்தாக வேண்டுமே! அதனால்தான், மத்திய அரசு வேகம் காட்ட ஆரம்பித்துள்ளது. எடப்பாடி அரசின் பவர் சென்டர்களாக வலம்வரும் கான்ட்ராக்ட் கம்பெனிகளில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளன. ஒன்று, முதல்வர் எடப்பாடியின் நெருக்கமான உறவினருக்குச் சொந்தமானது. மற்றொன்று, கடலில் கற்களைக் கொட்டும் வேலையை செய்யும் மூன்றெழுத்து நிறுவனம். மேலும், நாமக்கல்லைச் சேர்ந்த மூன்றெழுத்து பெயர்கொண்ட நிறுவனத்தையும் சேர்த்து, அந்த நிறுவனங்களின், ‘ஆக்டிவ் பார்ட்னர்கள், சைலன்ட் பார்ட்னர்கள், துணை நிறுவனங்கள்’ என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது’’

‘‘அடுத்து..?’’

‘‘வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியத்தின் மீதும் மத்திய அரசின் துறைகள் கண் வைத்துள்ளன. லேட்டஸ்டாக, சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறையினர் ஒருசேர வட்டமடிக்கும் ஓரிடம்… தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் தலைமை அலுவலகம்தான். பணிவு அமைச்சர் என்று பெயர் எடுத்தவருக்கு நெருக்கமான இரண்டு முக்கிய அதிகாரிகள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லையாம். ஏற்கெனவே, கமிஷன் எல்லாம் கொடுத்து டெண்டர் எடுத்தவர்களிடம் போய், எங்களுக்கும் கொடு என்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்களாம். அந்த நிறுவனங்கள் தலையில் அடித்துக்கொள்கின்றன. திருப்பதியை நினைவுபடுத்தும் ஒரு நிறுவனத்துக்கும், பக்கத்து மாநிலத்து முதல்வரின் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் மூன்றெழுத்து சென்னை நிறுவனத்துக்கும் டெண்டரில் அதிக முக்கியத்துவத்தை இந்த இரண்டு அதிகாரிகளும் தருகிறார்களாம். இந்த மூன்றெழுத்து நிறுவனம், தமிழக அரசின் முக்கிய பதவியில் இருந்தவருக்கு நெருக்கமானது. இந்த நிறுவனம் சார்பில், காஞ்சிபுரத்தில் 3,000 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் தரம் சரியில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், வருகிற 24-ம் தேதியன்று சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு டெண்டர் ஒன்று வரவுள்ளது. ‘அதைப் பெறப்போவது யார்’ என்கிற சஸ்பென்ஸில் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் ஆர்வமாய்க் காத்திருக்கிறார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த சத்தியமான நிறுவனம் ஒன்றும், ஏழுமலையானை நினைவுபடுத்தும் இன்னொரு கம்பெனியும்தான் இந்த ரேஸில் முக்கியமாக இருக்கின்றனவாம்.’’

‘‘இந்த நேரம் பார்த்து, ஆளும்கட்சிமீது ஊழல் குற்றச்சாட்டுகளாக அடுக்கியிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்?’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல அமைச்சர்களின் துறைகளில் என்னென்ன நடந்திருக்கிறது; என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பக்காவாக பட்டியலைத் திரட்டி வைத்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். ஊழல்கள், வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், பினாமி கம்பெனிகள் பற்றிய ஆவணங்கள் எல்லாம் கையில் வைத்திருக்கிறாராம் ஸ்டாலின். தற்போது பொறுப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரே இதற்கு உதவிக்கொண்டுள்ளனராம். அந்த அளவுக்கு, அவர்கள் எல்லாம் நொந்து போயிருக்கிறார்களாம். அதனால்தான் பக்காவாக ஆவணங்களையெல்லாம் அள்ளிக் கொடுத்துள்ளனர். அந்த தைரியத்தில்தான் முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே போய் நின்றுகொண்டு, 3,120 கோடி ரூபாய் ஊழல் என்று குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார் ஸ்டாலின்.’’

‘‘அதுதான், ‘சம்பந்திக்கு கான்ட்ராக்ட் கொடுப்பதில் என்ன தவறு? என்று வெளிப்படையாகவே பதிலடி கொடுத்துள்ளாரே பழனிசாமி?’’

‘‘அதைத்தான் தவறு என உலக வங்கி விதிகளை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதையெல்லாம் மீறினால், தமிழ்நாட்டுக்கு நிதி தருவதற்கு உலக வங்கி தடைபோட்டுவிடும். பிறகு, வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டமுடியாது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘முதல்வர் துறையிலேயே இப்படி முறைகேடு நடப்பதால்தான் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என்று அத்தனை அமைச்சர்களும் ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்’ என்றும் விளாசியிருக்கிறார். இதை சும்மா விடப்போவதில்லை தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அமைச்சர்கள் பலரையும் லஞ்சக்கறையுடன் நடமாட வைப்பது என்று தி.மு.க தீர்மானித்துவிட்டது. அதனால், முதலில் ஊழல் கண்காணிப்புத் துறையிடம் வரிசையாகப் புகார்களைக் கொடுக்க தி.மு.க ரெடியாகி வருகிறது. அப்படியே கவர்னரைச் சந்தித்தும் புகார்களை அடுக்குவார்களாம். நடவடிக்கை ஏதும் இல்லாதபட்சத்தில், நீதிமன்றப் படியேறு வார்களாம். இதற்கான பணிகளில்தான் தற்போது தி.மு.க வழக்கறிஞர் அணி மும்முரமாகியுள்ளது.’’

‘‘ஓஹோ.’’

‘‘குட்கா விவகாரத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், அவரின் கூட்டாளிகள்… என்று ஐந்து பேரை முதலில் சி.பி.ஐ கைது செய்தது. அடுத்தகட்டமாக, டி.எஸ்.பி மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோரையும் வளைத்து விசாரித்து வருகிறது. ஆனால், அதற்கு மேல் இந்த விஷயம் வேகமெடுக்கவில்லை. இதையும் கையில் எடுக்கிறது தி.மு.க. ‘லஞ்சமாகப் பணம் கொடுத்தவர்களை முதலில் கைது செய்துவிட்டது சி.பி.ஐ. ஆனால், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்களைக் குறைந்தபட்சம் விசாரணைகூட செய்யவில்லை. முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தற்போதைய தமிழக டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய மூவரையும் காப்பாற்ற, கீழ்மட்டப் பதவிகளில் இருப்பவர்களை பலிகடா ஆக்குகிறார்கள்’ என்ற புகாருடன் நீதிமன்றப் படியேறத் தயாராகிவருகிறது தி.மு.க. அத்துடன், ‘நீதிமன்ற மேற்பார்வையில் குட்கா விவகார விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை வைப்பார்களாம்.’’

‘‘இதற்கெல்லாம் எடப்பாடி தரப்பிலிருந்து பதிலடி என்னவோ?’’

‘‘நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று காமெடி பண்ண ஆரம்பித்திருப்பதுதான் பதிலடி. நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி, சென்னையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து பேசுவதற்காகத்தான் செப்டம்பர் 19-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ‘தி.மு.க நம்மைச் சீண்டுகிறது. நமக்குக் கெட்ட பெயரை உருவாக்கும் வகையில் முதல்வர் ஊரில் நின்றுகொண்டு ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்’ என்று பொங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்தியதற்கு காங்கிரஸ் அரசு செய்த உதவிதான் காரணம் என்று டெல்லியில் வைத்து ராஜபக்சே கூறியிருக்கிறார். இதை மக்களிடம் கொண்டு போகவேண்டும்‘ என்று பேசியிருக்கிறார். இரண்டையும் கனெக்ட் செய்த எடப்பாடி, ‘ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 25-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்’ என்று அறிவித்துவிட்டார்.’’

‘‘ம்… அவர்கள் பங்குக்கு எதையாவது செய்துதானே ஆகவேண்டும்’’ என்று நாம் சொல்ல, தலையாட்டிக் கொண்டே நடையைக் கட்டினார் கழுகார்.

Advertisements

One response

  1. நம். முன்னோர்கள் வாழ்வியலை கடை பிடித்து கொண்டு வாழ வேண்டும்

%d bloggers like this: