காலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி… உயிர் கொடுக்கும் ரிவைவல்!

னியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ், தன் குடும்பத்துடன் சகல வசதிகளுடன் கூடிய அபார்ட்மென்டில் வசித்து வந்தார். சந்தோஷின் வீட்டுக்கு அருகில்  வசித்து வந்தார் மாணிக்கம். மாணிக்கம் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட். நட்பின் காரணமாக மாணிக்கத்தின் மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார் சந்தோஷ். தொடர்ந்து மாணிக்கத்தின் மூலமே பிரீமியம் கட்டிவந்தார்.

சந்தோஷ், பணி மாறுதல் காரணமாக  வெளியூர் சென்றார். மாணிக்கம் பிரீமியம் கட்ட போன் மூலம் நினைவூட்டியும், வேலைச்சுமை மற்றும் வேறு செலவுகளால் பிரீமியம் கட்டாமல் விட்டுவிட்டார் சந்தோஷ். இந்த நிலையில், சந்தோஷ் எதிர்பாராத விதமாக இறந்துபோக,  குடும்பம் நிலைகுலைந்து போனது. சந்தோஷின் மனைவி, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் சென்று பாலிசிக்கு க்ளெய்ம் கேட்டார். சந்தோஷ் தொடர்ந்து பிரீமியம் கட்டாத காரணத்தால் இழப்பீடு மறுக்கப்பட்டது. சந்தோஷின் மனைவிக்கு இன்ஷூரன்ஸ் கம்பெனியின்  பதில்  அதிர்ச்சியை அளித்தது. 

நம்மில் பலர் இதைப்போன்ற இக்கட்டான  சூழலை எதிர்கொண்டிருப்போம். இதில் இன்ஷூரன்ஸ் கம்பெனியைக் குறைசொல்லி எந்தப் பயனும் கிடையாது. உரிய நேரத்தில் பிரீமியம் கட்டாமல் விட்டது நம் தவறுதான். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இன்ஷூரன்ஸ் ஒப்பந்தம்

லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது பாலிசி தாரருக்கும், இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் இடையே உருவாகும் ஒப்பந்தம். அதன்படி,  பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில்  பாலிசிதாரர் பிரீமியம் தொடர்ந்து செலுத்தி வரவேண்டும். பாலிசிதாரருக்கு இறப்பு/இழப்பு ஏற்படும் நேரத்தில் பாலிசியின் சட்டத்திற்குட்பட்டு அந்த இழப்பு இருந்தால், இன்ஷூரன்ஸ் கம்பெனி  இழப்பீட்டுத் தொகையை பாலிசிதாரருக்குத் தரும். 

கருணைக் காலம் (Grace Period)

இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய பிரீமியத்தை பாலிசிதாரர், பாலிசி  ஆவணத்தில் உள்ள தேதிக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தாத பட்சத்தில் கருணைக் காலம் (grace perioed) தரப்படும். இந்தக் கருணை காலத்தில் பிரீமியம் செலுத்தும் முன்பே பாலிசிதாரர் இறந்து போனால், செலுத்தவேண்டிய பிரீமியத் தொகையைக் காப்பீட்டுத் தொகையிலிருந்து  கழித்துக்கொண்டு, மீதத் தொகையை இன்ஷூரன்ஸ் கம்பெனி கொடுக்கும்.

பாலிசிதாரர் உயிருடன் இருக்கும்பட்சத்தில், கருணைக் காலத்தின் கடைசித் தேதிக்குள் பிரீமியம் செலுத்திவிட்டால் (பார்க்க, பிரீமியம் செலுத்தும் கருணைக் காலம்) பிரச்னை இல்லை. கருணைக் காலத்தில் செலுத்தப்படும் பிரீமியம், சரியான நேரத்தில் செலுத்தப்பட்ட பிரீமியமாகவே கருதப்படும்.

காலாவதியான பாலிசி

கருணைக் காலம் முடிந்த பின்பும், பிரீமியம் செலுத்தாத பட்சத்தில் இதை பாலிசிதாரர் செய்த தவறாகவே இன்ஷூரன்ஸ் கம்பெனி கருதுகிறது. பாலிசி தாரருக்கு பாலிசியைத் தொடருவதில் விருப்பமில்லை; அவர் இன்ஷூரன்ஸ் ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என இன்ஷூரன்ஸ் கம்பெனி உறுதியாக  நம்பி, அந்த ஒப்பந்தத்தை முறிக்கிறது. இந்த நிலையில், பாலிசி காலாவதியாகி விடுகிறது. இதனை லேப்ஸ்டு பாலிசி (Lapsed Policy) என்பார்கள். இந்தத் தருணத்தில், பாலிசிதாரர் இறந்துபோனால், இழப்பீட்டைப் பெற இயலாது.

இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் அறிக்கையின்படி, 13-ம் மாதத்தில் தொடர்ந்து பிரீமியம் கட்டிவரும் பாலிசிதாரர்களின் சராசரி சதவிகிதம் 61-ஆகக் குறைந்துள்ளது. மேலும், பாலிசி துவங்கியதிலிருந்து 61-வது மாதத்துக்குள் மூன்றில் இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகள், தொடர்ந்து பிரீமியம் செலுத்தாத காரணத்தால், காலாவதி ஆகியுள்ளன.

காலாவதியாகக் காரணங்கள்

இப்படி பாலிசி  காலாவதியாக  ஆவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில், எதிர்பாராத நேரத்தில் வரும் ரிஸ்க்கை சுலபமாகச் சந்திக்கும் நிதிப் பாதுகாப்பு சாதனமாகக் காப்பீட்டைக் கருதாமல், வருமான வரி விலக்குப் பெறு வதற்கான வழியாகவே பலரும் பார்க்கிறார்கள். பிரீமியம் கட்டி வரி விலக்குப் பெற்ற சில வருடங் களுக்குப் பிறகு, பிரீமியம் செலுத்த மனமில்லாமல் விட்டு விடுவது முக்கியமான காரணம்.

‘நல்ல ஆற்றலுடன், சுறுசுறுப்பாக இருக்கிற எனக்குத் தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. எதிர்காலத்திலும் எவ்வித நோயோ, பிரச்னையோ வராது’ என்கிற ஆழ்ந்த நம்பிக்கை  பாலிசி வாங்கியபிறகு பலருக்கு வருகிறது. அதனால் நான் ஏன் தொடர்ந்து பிரீமியம் செலுத்திப் பணத்தை வீணாக்க வேண்டும் என்கிறவர்கள் ஏராளம். 

எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல் பொருத்தமற்ற பாலிசியை வாங்கியபிறகு, அந்த பாலிசியால் தனக்கு எவ்வித பயனும் இல்லை என்ற ஞானோதயம்  பாலிசிதாரருக்கு காலம் கடந்து வருகிறது. அதனால், அவருக்கு பாலிசியை  தொடர விருப்பம் இருப்பதில்லை.

மொபைல் எண், இ-மெயில், வீட்டு முகவரி போன்றவைகளில்  மாற்றம் இருந்தால், அதனை கம்பெனிக்குத் தெரியப் படுத்தாமல் நிறைய பேர் விட்டுவிடுவார்கள்.  

இதுபோன்ற  பல காரணங்களால், லட்சக்கணக்கான பாலிசிதாரர்கள், தாங்கள் வாங்கிய லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை இடையில் நிறுத்தியிருக்கிறார்கள்.  செயலிழந்த இந்த பாலிசியால் பாலிசிதாரருக்கோ,  இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கோ எந்தப் பயனும் இல்லை. 

தவிர்க்கும் வழிமுறைகள்

பொருத்தமான பாலிசி தேர்வு, முகவரற்ற நிலையில் நேரடித் தொடர்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப உதவி,புதுப்பிக்கப்பட்ட தகவல்  தொடர்புகள் போன்றவை பாலிசி காலாவதியாவதைத் தடுக்கக்கூடும்.

சிறந்த இன்ஷூரன்ஸ் ஆலோசகரைத் தேர்வுசெய்து, அவரின் அறிவுரைகளைக் கேட்டபின், பாலிசிதாரரே சுயமாகச் சிந்தித்துத் தனக்குப் பொருத்தமான பாலிசியைத் தேர்வு செய்யவேண்டும்.

பாலிசியை வாங்கியபிறகு தொடர்ந்து பிரீமியத்தைக் கண்டிப் பாகச் செலுத்தவேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்து, நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருவேளை முகவர் அந்தப் பணி யிலிருந்து விலகிவிட்டால், தயக்க மின்றி இன்ஷூரன்ஸ் கம்பெனி கிளைகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு பிரீமியம் கட்ட வேண்டும்.

பாலிசிதாரர் அனுமதி அளிக்கும் பட்சத்தில், வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து இ.சி.எஸ் (ECS) முறையில் மிகச் சுலபமாக   பிரீமியத்தை ஒவ்வொரு முறையும் வங்கியே மாற்றிவிடும். மேலும், ஆன்லைன் மூலம் 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் பிரீமியத்தை மொபைல் போன், கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டலாம்.

பாலிசிதாரரின் மெயில், மொபைல் எண், வீட்டு முகவரியில் மாற்றம் இருந்தால், உடனடியாக இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பிரீமியம் செலுத்தும் தேதியை முன்கூட்டியே பாலிசிதாரருக்கு நினைவூட்டுவார்கள். அதன்மூலம் காலாவதியாவது தவிர்க்கப்படுகிறது.

உயிர் கொடுக்கும் ரிவைவல்

பிரீமியம் செலுத்தவேண்டிய தேதிக்குள் செலுத்தாத பாலிசி தாரருக்கு இரண்டு வருடம் வரை காலஅவகாசம் தருகிறார்கள். இது சில பாலிசிக்கு வேறுபடலாம். அதற்குள் பாலிசிதாரர் தங்களுடைய பாலிசியைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதுமாதிரி காலாவதியான பாலிசிக்கு உயிர் கொடுத்து பாலிசி தாரருக்குத் திரும்பவும் இன்ஷூரன்ஸ் காப்பீட்டை வழங்கும் முறை ‘ரிவைவல்’ எனப்படுகிறது. பிரீமியம் செலுத்தவேண்டிய தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒருவர் பாலிசியைப் புதுப்பிக்க விரும்பினால், பாக்கி செலுத்த வேண்டிய பிரீமியம் மற்றும் அதற்கு உண்டான காலதாமதக் கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்தினால் பாலிசியைப் புதுப்பிக்கலாம். பாலிசிதாரர் ஆறு மாதங்களுக்குப்பிறகு பாலிசியைப் புதுப்பிக்க விரும்பினால், பாக்கி செலுத்தவேண்டிய பிரீமியம்,

காலதாமதக் கட்டணம் மற்றும் பாலிசிதாரர் தனது உடல்நலம் குறித்த  சுய விளக்க அறிக்கையையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

பாலிசிதாரரின் ரிவைவல் படிவம், உடல்நலம் குறித்த சுய விளக்க அறிக்கையை இன்ஷூரன்ஸ் கம்பெனி ஆய்வு செய்யும். அதில் தவறு இருக்கும்பட்சத்தில். புதுப்பித்தலை இன்ஷூரன்ஸ் கம்பெனி அனுமதிக்காது. அதில் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில். புதிய சட்ட திட்டங்களுடன் பாலிசிக்கு அனுமதி கிடைக்கும். பிரீமியம் மற்றும் காப்பீட்டுத் தொகையில் பெரிய மாறுதல்கள் இருக்காது.

காலாவதியான பாலிசிகளின் பாலிசிதாரர்களை ஊக்குவித்து பாலிசியைப் புதுப்பிக்க சிறப்பு ரிவைவல், தவணை முறை ரிவைவல், கடன் மற்றும் ரிவைவல் போன்ற சலுகைகளை இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் தருகின்றன. இவற்றில் ஏதேனும் ஒரு முறையைத் தேர்வு செய்து பாலிசியைப் புதுப்பிக்கலாம்.

காலாவதியான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் புதுப்பித்து, குடும்பத்திற்கு நிரந்தரமாக முழு நிதிப் பாதுகாப்பைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

%d bloggers like this: