குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) -கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

ராசிக்கு 9ம் இடத்தில் இருந்த குருபகவான், அக். 4ல்  10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இந்நிலையில் குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் பார்வை  சிறப்பாக இருப்பதால் செல்வமும், செல்வாக்கும் பன்மடங்கு உயரும்.  குருபலத்தால்  இடையூறை உடைத்தெறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் பார்க்க வேண்டும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருக்கிறார். அவரால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் குடியிருக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

ராகு உங்கள் ராசிக்கு 6-ம் இடமான கடகத்தில் இருப்பதால் செயலில் அனுகூலம் உண்டாகும். ராகு 2019 பிப். 13ல்  5-ம் இடத்திற்கு வருவதால்  குழப்பம் உருவாகலாம்.  கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகரத்தில்  இருக்கிறார். இவரால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதைகள் வரலாம். 2019 பிப்ரவரி 13ல் கேது, ராசிக்கு 11-ம் இடமான தனுசு ராசிக்கு போகிறார். அவரால் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மேன்மை உண்டாகும்.

இனி  பொதுவான பலனைக் காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சமுகத்தில் மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். குருவின் பார்வை பலத்தால் மனதில் துணிச்சல் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும்.  புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபநிகழ்ச்சி குறையின்றி நிறைவேறும். அதற்கு தேவையான பணவசதியும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தாய் வழி உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.

பணியாளர்கள் உழைப்புக்கேற்ற முன்னேற்றம் காண்பர். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவால் சலுகை கிடைக்கும். 2019 மார்ச்13க்கு பிறகு  வேலையில் பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை பெறலாம். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். வங்கியின் நிதியுதவியால் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவீர்கள். புதிய கிளை துவங்க வாய்ப்புண்டு. 2019 மார்ச் 13க்கு பிறகு லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும்.  வணிக விஷயமாக சிலர் வெளிநாட்டுக்கு சென்று திரும்புவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும்.பங்குதாரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் வாழ்வில் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவி விரைவில் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். 2019 மார்ச் 13க்கு பிறகு அந்தஸ்து பலமடங்கு உயரும். மாணவர்கள் குருவின் பலத்தால் தரத்தேர்ச்சி காண்பர்.
ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.   

விவசாயிகளுக்கு வருமானம் உயரும். பசு வளர்ப்பு மூலம் எதிர்பார்த்த ஆதாயம் வரும். 2019 மார்ச் 13க்கு பிறகு  புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. நிலப்பிரச்னையில் சாதகமான தீர்ப்பு அமையும். கை விட்டுப்போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பாலமாகத் திகழ்வர். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபடுவர்.
ஆடை, ஆபரணம் சேரும். திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.

சகோதர வழியில் பண உதவி வரும். அண்டைவீட்டார் அனுகூலமாக செயல்படுவர்.  குருவின் பார்வை பலத்தால் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.  சுய தொழில் புரியும்
பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். 2019 பிப்.13க்கு பிறகு உடல்நலனில் அக்கறை தேவை.

பரிகாரம்:
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
●  பிரதோஷ நாளில் நந்தீஸ்வரருக்கு பாலபிேஷகம்

%d bloggers like this: