குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) -கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2)

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் அக்.4ல் 3ம் இடமான விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். குரு 3ம் இடத்தில் சாதகமற்று இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும்  முறியடித்து முன்னேறுவீர்கள். சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பதால் வீண் விரோதம் உருவாகலாம். சனி சாதகமற்று இருந்தாலும் அவரது 3-ம் பார்வை  மூலம் நன்மை கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதாகும். பொருளாதார வளம் தருவார். 2019 பிப். 13ல் ராகு உங்கள் ராசிக்கு 10ம் இடமான மிதுனத்திற்கு மாறிய பின் நன்மை குறையும். கேது தற்போது 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு வகையில் பிரச்னை உருவாகலாம். அவர் 2019 பிப்.13ல் 4-ம் இடமான தனுசு ராசிக்கு வருகிறார். அவரால் உடல்நல பாதிப்பு வரலாம்.

இனி  பொதுவான பலனைக் காணலாம். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. குருவின் பார்வையால் அனுகூலம் உண்டாகும். வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். சிலர் கடன் வாங்கி வீடு கட்டவும் வாய்ப்புண்டு. வாகன யோகமும் உண்டாகும். குடும்பத்தில்  வசதி பெருகும். குருவின் 7ம் பார்வையால் திருமணத்தடை நீங்கும். சுபநிகழ்ச்சிகள் மனம் போல விமரிசையாக நடந்தேறும். புதுமணத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7 ம் இடத்திற்கு குருபார்வை கிடைப்பதால் மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். 2019 மார்ச் 10க்கு பிறகு கணவன், மனைவி இடையே  பிரச்னை ஏற்பட்டு மறையும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. நிர்வாகத்தினரிடம் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.

கல்வி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரைவில் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மீள்வீர்கள்.  குருவின் 5,7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வையும், சனியின் 3-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருப்பதால்  பணமழை கொட்டும். அதிர்ஷ்டவசமாக திடீர் வருமானம் வரும்.  புதிய வியாபார முயற்சி வெற்றி பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். புதிய பங்குதாரரால் தொழில் மேம்படும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும்.  2019 மார்ச் 10க்கு பிறகு அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும்.

கலைஞர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது. குருவின் பார்வை பலத்தால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனைக் காண்பர். தொண்டர்களுக்காக அதிகப் பணம் செலவழிக்க வேண்டாம். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் இழுபறி நிலை நீடிக்கும். எதிர்கால நன்மை கருதி மக்கள்சேவையில் ஈடுபடுவீர்கள். 

மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையும். கடினமான பாடத்தைக் கூட விரைவில் புரிந்து கொள்வீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உயர்கல்வி யோகம் உண்டாகும். மேல்படிப்பிற்காக விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு அக்கறை தேவை. விவசாயிகள் நல்ல வளம் காண்பர்.  புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். கறுப்பு நிற தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மூலம்  லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்களுக்கு குருவின் பார்வையால் தேவை பூர்த்தியாகும். சகோதர வழியில் நன்மை உண்டாகும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  ஆடை, ஆபரணம் சேரும். ஆனால் யாருக்காகவும் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.  2019 மார்ச் 10க்கு பிறகு கணவருக்காக விட்டுக் கொடுப்பது நல்லது. உறவினர்களிடம் நெருக்கம் வேண்டாம். உடல்நிலை திருப்தியளிக்கும். 2019 மார்ச் 10க்கு பிறகு உடல்நலனில் கவனம் தேவை.

பரிகாரம்:
●  சனிக்கிழமையன்று பெருமாளுக்கு துளசி மாலை
●  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயர் வழிபாடு
●  வியாழக்கிழமையில் குருபகவானுக்கு அர்ச்சனை

%d bloggers like this: