குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) -விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

 

ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ள குருபகவான் அக்.4ல் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இங்கு குருபகவான் சாதகமற்று  இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. இனி ஓராண்டுக்கு வருமானத்திற்கான வாசல் திறந்தே இருக்கும்.  சேமிப்பு பன்மடங்கு அதிகரிக்கும். வீண்செலவு இனி உண்டாகாது. சனிபகவான்  ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பது சிறப்பானதல்ல. ஏழரைச்சனி என்றாலும் அவரது 10ம் இடத்துப்பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். ராகு 9-ம் இடமான கடகத்தில் இருப்பது சிறப்பானதல்ல. அவர் 2019 பிப். 13ல்  8-ம் இடமான மிதுனத்திற்கு பெயர்வதால் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். கேது 3-ம் இடமான மகரத்தில் இருந்து நன்மையளிக்கிறார். 2019 பிப்.13ல் கேது 2-ம் இடமான தனுசு ராசிக்கு மாறிய பின் நன்மை குறையும். 

இனி பொதுவான பலனைக் காணலாம். குருபகவான் உங்கள் ராசியில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. எந்த பிரச்னை குறுக்கிட்டாலும் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.  பொருளாதார வளம் பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் மேலோங்கும். இனிய பேச்சால் சமூகத்தில் நற்பெயர் உருவாகும்.  குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடக்கும். கோயில் திருப்பணிக்கு பெரிய அளவில் உதவி செய்வீர்கள்.  பொதுநலன் கருதி தர்மச்செயல்களிலும் ஈடுபடுவீர்கள். தந்தை வழியில் அசையாச் சொத்து கிடைக்க யோகமுண்டாகும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. மகான்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். சுபவிஷயத்தில் இருந்த தடை அகலும். பருவவயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அன்பால் அரவணைப்பர். குடும்பத்துடன் விருந்து, விழாக்களில் அடிக்கடி பங்கேற்க வாய்ப்புண்டு. நண்பர்களுடன் அடிக்கடி பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள்.

பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட சலுகைகள் இனி தாமதமின்றி வந்து சேரும். பொறுப்புடன் செயல்பட்டு நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் விண்ணப்பித்த கோரிக்கை கிடைக்கும்.  பணி தொடர்பாக வெளியூர் சென்று வெற்றியுடன் திரும்புவர். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.  கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். ஏழரைச்சனியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் விதத்தில் வருமானம் இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். கடன் பிரச்னை முற்றிலுமாக தீரும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான சூழ்நிலை அமையும். 

கலைஞர்கள் கடந்த கால உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவர். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். சிலருக்கு அரசு வகையில் பரிசு, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள்  நல்ல வசதியுடன் காணப்படுவர். விரும்பிய  பதவி கிடைக்கும் என்பதால் நாற்காலி கனவு நிறைவேறும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு கூடும்.

மாணவர்களுக்கு குருபலத்தால் நினைவாற்றல் பெருகும். ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் நன்றாக படிப்பர். உயர்கல்வி வாய்ப்பு விரும்பிய கல்வி நிறுவனத்தில் எளிதாக கிடைக்கும். புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வம் உண்டாகும். நண்பர்களுடன் கல்விச் சுற்றுலா செல்ல இடமுண்டு. விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவர். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கால்நடை  வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். 2019 மார்ச் 13 க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்கும். அரசு வகையில் கடனுதவி பெற்று சிலர் விவசாயத்தை விரிவுபடுத்துவர். 

பெண்களுக்கு குருவின் பார்வையால் நன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி குறைவின்றி நடந்தேறும். கணவர் மற்றும் குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் பெருகும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமை காண்பர்.  தனியார் துறையில் வேலைக்கு செல்லும் பெண்கள் 2019 மார்ச் 13க்கு பிறகு பதவி உயர்வு  பெறுவர்.

பரிகாரம்:
●  சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
●  பவுர்ணமியன்று அம்மனுக்கு பால் அபிஷேகம்

%d bloggers like this: