Advertisements

ஜெயலலிதா மரணம்… விலகுமா மர்மம்? – ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்!

றுமுகசாமி ஆணையம்’- 2017, செப்டம்பர் 25-ல் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அரசாணை வெளியிடப்பட்டு, நியமிக்கப்பட்ட இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம் ஓராண்டைக் கடந்திருக்கிறது. 2016 செப்டம்பர் 22-ல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் ஆகிவிட்டன.  ஓராண்டாக ஆணையத்தில் நடைபெற்றுவரும் விசாரணை முதல் குளறுபடிகள் வரையிலான  ஒரு மினி ஸ்கேன் ரிப்போர்ட் இது

குருமூர்த்தி போட்ட பிள்ளையார் சுழி

‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்’ என்று முதலில் சொன்னது பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ அல்ல; பா.ஜ.க ஆதரவாளரும் ‘அ.தி.மு.க-வை மறை முகமாக இயக்குபவர்’ என்றும் சொல்லப்படுகிற ஆடிட்டர் குருமூர்த்திதான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை முன்வைத்தார். அதன்பிறகு 7.2.17-அன்று ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தத்தைத் தொடங்கியபோது குருமூர்த்தியின் குரலை எதிரொலித்தார்.  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் இதே கோரிக்கையை முன்வைத்தார். ஆனாலும் எவற்றையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை.

அப்போது சசிகலா நிழலில் இருந்தது தமிழக அரசு. பிறகு, சசிகலா குடும்பத்தை விலக்கிவைத்துவிட்டு, பழனிசாமியும் பன்னீரும் சேர்ந்தபிறகுதான் விசாரணை ஆணையம் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஆவலுடன் எதிர்பார்த்த…

ஆணையம் அமைக்கப்பட்டதும்  ஆறுமுகசாமி, ‘ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் ஆணையத்தில் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். விசாரணை ஆணையம் இயங்குவதற்காக எழிலகம் கலச மகால், முதல்மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது.   ஆரம்பத்தில் விசாரணை ஆணையத்தின் ஆயுட்காலம் மூன்றுமாதங்கள் என்று சொல்லப்பட்டது. சாட்சியம் அளிக்க முதலில் அழைக்கபட்டவர் தி.மு.க-வைச் சேர்ந்த டாக்டர்.சரவணன். ‘மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் விண்ணப்பத்தில் இடம்பெற்றிருந்த  ஜெயலலிதாவின் கைரேகை போலியானது’ என்ற குற்றச்சாட்டை அவர் தெரிவித்திருந்தார். எனவே அவரிடமிருந்தே விசாரணையை ஆரம்பித்தது ஆணையம். ஆரம்பத்தில் வாரத்தின் ஐந்து நாள்களும் விசாரணை ஆணையம் செயல்பட்டது. விசாரணையைத் தொடக்குவதற்கு முன்பே அறுபது நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், வாரத்தின் ஐந்து நாள்களும் ஆணையம் பரபரப்பாக இயங்கியது.

 

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை எழுப்பிய ஜெ.தீபா முதல் அவருடைய தம்பி தீபக் வரை வரிசையாக சாட்சியம் அளித்துவந்தனர். ஆனால், ஆணையம் மட்டுமன்றி பொதுவெளியில் இருந்தவர்களும் எதிர்பார்த்த முக்கியமான சாட்சியம் சசிகலாவுடையதுதான். ஜெயலலிதாவுடன் முப்பது ஆண்டுகள் இருந்தவர், அப்போலோவில் மற்றவர்கள் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்குத் தடையாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் அவர்தானே!

‘ஜெய் ஹனுமான்’ பார்த்த ஜெயலலிதா!

‘போயஸ்கார்டனிலிருந்து விசாரணை ஆரம்பிக்கப்படும்’ என்று  ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டாலும், போயஸ் கார்டனைச் சேர்ந்தவர்களைக் காலம்தாழ்த்தியே விசாரணைக்கு அழைத்தது ஆணையம். அந்த வரிசையில் சசிகலா தரப்பு வாக்குமூலத்தை அவருடைய வழக்கறிஞர் ராஜசெந்தூர் பாண்டின் தாக்கல் செய்தார்.

‘2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவு ஜெயலலிதா பாத்ரூமில் பல்துலக்கச் சென்றார். பாத்ரூமிலிருந்து ‘சசி சீக்கிரம் வா, எனக்கு மயக்கம் வருகிறது’ என்று சத்தம் கேட்டது. அதைக் கேட்டு  சசிகலா வேகமாக ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அவரைத் தாங்கிப்பிடித்துக் கட்டிலில் அமர்த்தினார். அதற்குள் ஜெயலலிதா மயக்கம் அடைந்தார். அதேநேரம் சசிகலாவின் உறவினரான மருத்துவர் சிவக்குமாரும் ஜெயலலிதா அறைக்கு வந்தார். முதலுதவி சிகிச்சையை அவசரமாக ஆரம்பித்ததுடன்  அப்போலோ மருத்துவமனைக்குத் தகவலும் சொல்லப்பட்டது.  இந்தப் பரபரப்பில் டேபிள் பெல்லை சசிகலா அடித்ததும், சத்தம் கேட்டு வீட்டின் கீழே இருந்த ஜெயலலிதாவின் தனிப் பாதுகாவலர்கள் கந்தசாமி, வீரபெருமாள் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவின் அறைக்குள் வந்தார்கள். அப்போலோ மருத்துவமனையின்  ஆம்புலன்ஸ்  கார்டனுக்கு வந்து சேர்ந்தது. முதல்மாடியில் மயக்கமாக இருந்த ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அதே ஆம்புலன்ஸில்  சசிகலாவும் சிவக்குமாரும் உடன் சென்றார்கள்” என்றது சசிகலாவின் வாக்குமூலம்.

 

அதேபோல், ஜெயலலிதா மரணம் அடைந்த நிமிடங்கள் குறித்து, “டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா பெட்டில் படுத்துக்கொண்டு டி.வி-யில் ‘ஜெய் ஹனுமான்’ சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.ஜெயலலிதாவிற்கு காபி கொடுக்கப்பட்டது.  ‘சீரியல் முடிந்தபிறகு குடிக்கிறேன்’ என்று சொல்விட்டு, சீரியல் முடிந்தவுடன் காபியைக் கையில் வாங்கியுள்ளார். அப்போது, திடீரென ஜெயலலிதாவுக்கு வலிப்பு ஏற்பட்டதுபோல் உடலில் நடுக்கம் ஏற்பட்டு, நாக்கை வெளியே நீட்டினார். அதைப் பார்த்ததும்  அருகில் இருந்த சசிகலா ஜெயலலிதாவைத் தாங்கிப் பிடித்து ‘அக்கா, அக்கா’ என்று சத்தம் போட்டதும், அருகில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவியை ஆரம்பித்தனர். ஒருமுறை கண்ணைத் திறந்து பார்த்த ஜெயலலிதாவின் கண்கள் மறுபடியும் மூடிக்கொண்டன. அதைப் பார்த்து சசிகலாவும் மயக்கம் அடைந்துள்ளார்” என்றது அவரது  வாக்குமூலம்.

இட்லியா, பாதாம் அல்வாவா?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ‘இட்லி சாப்பிட்டார்’, ‘உப்புமா சாப்பிட்டார்’ என அ.தி.மு,க வின் நிர்வாகிகள் நாள்தோறும் வெவ்வேறு கருத்துகளைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துவந்தனர். ஆனால், விசார ஆணையம் அமைக்கப்பட்ட சில மாதங்களில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை நேரில் பார்க்கவில்லை. எங்களைப் பார்க்க சசிகலா குடும்பத்தினர் விடவும் இல்லை. ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் அப்போது பொய் சொன்னோம். அதற்காக இப்போது மன்னிப்பு கேட்கிறோம்” என்று சொல்லி  ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிரவைத்தார். இது விசாரணையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

விசாரணை அடுத்த கட்டம் நோக்கி நகரத் தொடங்கியது. அப்போலோ மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஜெயலலிதா மருத்துவ மனையில் என்ன சாப்பிட்டார் என்று விசாரிக்கப்பட்டது.

மூன்றுதொகுதிகளில் நடைபெற்ற  இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றபோது, போயஸ் கார்டனிலிருந்து பாதாம் அல்வா கொண்டுவந்து கொடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பின் அறிக்கையில் சொல்லப் பட்டது. ஜெயலலிதாவுக்கு சுகர் அதிகமாக இருந்தபோது அவருக்கு ஏன் இனிப்புகள் வழங்கப்பட்டன என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் அப்போலோ ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவின் உணவு குறித்து அளித்த தகவல்கள் மாறுபட்டன. இன்றுவரை ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா இல்லையா, நீரிழிவு நோயாளியான அவருக்கு ஏன் இனிப்புகள் வழங்கப்பட்டன’ என்பதற்குத் தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை.

விஸ்வரூபம் எடுத்த வீடியோ விவகாரம்!

ஆறுமுகசாமி ஆணையத்தில் விஸ்வரூபம் எடுத்த மற்றொரு விவகாரம் அப்போலோவில் ஜெயலலிதா இருக்கும் வீடியோக் காட்சியை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான வெற்றிவேல் வெளியிட்டது. ஆர்.கே.நகர்த் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வீடியோவை வெளியிட்டார் வெற்றிவேல்.

‘இது அப்போலோவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல’ என்று ஒருபுறம் சர்ச்சை எழ, ‘விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவரும்போது எப்படி வீடியோவை வெளியிடலாம்?’ என்று ஆணையம் தரப்பு கேள்வி எழுப்பியது. வெற்றிவேல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

 

ஆனால், அப்போலோவுக்கு ஆணையம் நேரடி விசாரணைக்குச் சென்றபோது வீடியோ எடுக்கப்பட்ட அறை குறித்து நீண்ட ஆய்வை மேற்கொண்டனர். இறுதியில் அந்த வீடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டதுதான் என்று உறுதியானது.

செயலாளர் மாற்றத்திலும் அரசியல்!

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப் பட்டவுடன் அந்த ஆணையத்திற்குச் செயலாளர் என்ற பதவியில் சட்டத்துறையில் பணியாற்றிய பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். டிசம்பர் மாதம்வரை பணியில் இருந்த அவரைத் திடீரென மாற்றியது தமிழக அரசு. அவருக்குப் பதிலாக கோமளா என்ற அதிகாரியை ஆணையத்தின் செயலாளர் பதவிக்கு நியமித்தார்கள். ஆனால், கோமளா நியமிக்கப் பட்ட சில நாள்களிலேயே அவர்மீதும் சர்ச்சை எழுந்தது. கோமளாவின் கணவர் பாபு, வழக்கறிஞராக இருக்கிறார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவர் நெருக்கமானவர்.தேர்தல் ஆணையத்தில் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அவர் ஆஜராகியதற்கான ஆவணங்களும் வெளியாகின. கோமளா செயலாளர் பொறுப்புக்கு வந்தபிறகே, ஆணையத்தில் நடைபெறும் விசாரணைகள் எல்லாம் ஊடகங்களில் வெளியாகின. இது குறித்து சசிகலா தரப்பு கடும் கண்டனத்தை ஆணையத்திடம் தெரிவித்தது. மேலும், கோமளாவை ஆணையத்தின் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திகேயன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம்  புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
 
சாட்சியம் அளித்த 95 பேரும், விசாரணைக்கே வராத அமைச்சர்களும்!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது முதல் இதுவரை 95 சாட்சிகள் வரை விசாரிக்கப் பட்டுள்ளார்கள். சசிகலா, அவரின் உறவினர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என்று நீளமான பட்டியல் இது. ஆனால், ‘விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அம்மாவின் மரணத்தில் மர்மம் உள்ளது’ என்று  ‘தர்மயுத்தம்’ தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் இதுவரை விசாரணைக்கு அழைக்கப்படவில்லை. அதற்குமுன்னால் இந்தச் சர்ச்சையைக் கிளப்பிய குருமூர்த்தியை விசாரணை ஆணையம் அழைத்தபோதும், ‘எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்று, ஆஜராகத் தொடர்ச்சியாக மறுத்துவருகிறார் குருமூர்த்தி.

 

அதேபோல், ஆணையத்தில் சாட்சியம் அளித்த பலரும் ‘மருத்துவமனையில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் இருவருக்கும் தெரியும்’ என்று சொல்லியுள்ளார்கள்.ஆனால், இதுவரை ராதா கிருஷ்ணனையோ, விஜய பாஸ்கரையோ ஆணையம் விசாரணைக்கு அழைக்கவில்லை. இது ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல் அப்போலோ ஊழியர்கள் வரை!

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதா வீட்டின் சமையல்காரர் ராஜம்மாள், பாதுகாவலர்கள் என போயஸ் கார்டனைச் சேர்ந்தவர்களுக்கு வரிசையாக சம்மன்கள் பறந்தன. அதே போல் மருத்துவர்கள் தரப்பில் அரசு மருத்துவர்களையே முதலில் விசாரணைக்கு அழைத்தது ஆணையம்.ஆனால், அரசு மருத்துவர்கள் “நாங்கள் சிகிச்சை செய்ய அழைக்கப்படவில்லை. மாறாக, முதல்வருக்கு நடைபெறும் சிகிச்சைகள் குறித்து மேற்பார்வை செய்யவே அரசு தரப்பில் எங்களை அழைத்திருந்தார்கள்” என்று சொல்லி நழுவிக்கொண்டார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் பங்கு முக்கியமானது. ஆனால், ஆணையமோ ஆரம்பத்தில் எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்பதில் அக்கறை காட்டாமலே இருந்தது. சாட்சிகள் பலரும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டதால் நீண்ட நாள்களுக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல், அப்போலோ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போலோ மருத்துவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக சாட்சியம் அளித்துள்ளார்கள். அப்போலோ மருத்துவமனைக்கு ஆணையம் தரப்பு நேரடியாக விசிட் செய்து விசாரணை மேற்கொண்டது. ஜெயலலிதா இருந்த அறை முதல் அறுவைச் சிகிச்சை அறைவரை ஆய்வு மேற்கொண்டது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஆணையம் தரப்பினர் மறைத்துவிட்டதாக சசிகலா தரப்பு குற்றம்சாட்டியது. ஆணையம் தரப்போ, ‘ஆணையம் எதை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்கிறதோ அதை மட்டுமே வெளியிட முடியும்’ என்று பதில் சொன்னது.

ஆச்சு ஒரு வருஷம்!

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு  ஓராண்டை நெருங்கிவிட்டது. ‘மூன்றுமாதங்களுக்குள் விசாரணையை முடித்துவிட வேண்டும்’ என்ற உத்தரவோடு தொடங்கப்பட்ட ஆணையம் இரண்டு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆறுமாதமும், அதன்பிறகு நான்கு மாதமும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆணையம் அமைவதற்குப் பன்னீர்செல்வம் காரணமாக இருந்தாலும் சாட்சிகளிடம் நடத்திய குறுக்குவிசாரணை பன்னீருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. பல்வேறு சாட்சிகள் ‘பன்னீர் செல்வத்துக்கு எல்லாம் தெரியும்’ என்ற ரீதியில் சாட்சியம் அளித்துள்ளார்கள். இதனால் பன்னீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க-வில் இருக்கும் சில நிர்வாகிகள் ‘பன்னீருக்கு ஆணையத்தின் வழியாக சிக்கல் ஏற்பட்டிருப்பது எடப்பாடிக்குத் தெரியும். அதை ரசித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள்.

இதுவரை ஆணையத்தின் விசாரணை எப்போது முடிவடையும் என்று தெரியாத நிலையில், சசிகலாவிற்கு எதிராகவோ, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவோ எந்த ஒரு வலுவான வாக்குமூலமும் சிக்கவில்லை என்பதை ஆணையத்தின் தரப்பில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இரு அணிகள் இணைப்புக்காக ஒரு ஆணையத்தை அமைத்துவிட்டு அது எந்தக் குறிப்பிட்ட இலக்கையும் எட்டாத நிலையில், எப்போது இந்த விசாரணை முடியும், எப்போது அறிக்கை தாக்கல் செய்யப்படும், விசாரணை ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று மில்லியன் டாலர் கேள்விகள் பல காத்திருக்கின்றன.


டாப் 10 கேள்விகள்

ஜெயலலிதா மரணம் குறித்து அ.தி.மு.க-வினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல கேள்விகள் உள்ளன. அவற்றில் சில:

1. 2016 செப்டம்பர் 22 அன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தாரா, இல்லையா?

2. ஆம்புலன்ஸில் ஜெயலலிதாவுடன் பயணித்தவர்கள் யார் யார்?

3. மருத்துவமனையில் ஜெயலலிதா மேற்கொண்ட உணவுக்கட்டுப்பாடு என்ன… சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது ஏன்?

4. ‘காவிரிப் பிரச்னை குறித்து அப்போலோவில் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசித்தார்’ என்று சொல்லப்பட்ட தகவல் உண்மைதானா?

5. அப்போலோவில் சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினரைத் தவிர யாருமே ஜெயலலிதாவுடன் இல்லாதபோது (பின்னாளில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த) பொன்னையன் போன்றவர்கள், ‘ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருக்கிறது’ என்று அடிக்கடி கருத்து தெரிவித்தது எப்படி?

6. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம்வரை எந்தச் சந்தேகத்தையும் தெரிவிக்காமல், தன் பதவி பறிபோகும் சூழலில் ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம்’ என்று சர்ச்சை கிளப்பியது ஏன்?

6. ‘கவர்னரைப் பார்த்து சிகிச்சை அறையில் இருந்தபடியே ஜெயலலிதா கைகாட்டினார்’ என்றும் ‘இல்லை’ என்றும் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப் படுகின்றனவே, இதுகுறித்து அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவின் கருத்து என்ன?

7. ‘ஜெயலலிதாவின் உடல்நிலை சீராகிவிட்டது. எப்போது டிஸ்சார்ஜ் ஆவது என்பதை ஜெயலலிதாவே முடிவு செய்வார்’ என்று அப்போலோ மருத்துவமனை பிரதாப் ரெட்டி அறிவித்தது எந்த அடிப்படையில்?

8. அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆறுமுகசாமி ஆணையத்தால் விசாரிக்கப்படுவார்களா?

9. இடைத்தேர்தல்களுக்காகத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட படிவத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகையா, இல்லையா?

10. ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோதும் சிசிடிவி கேமிராப் பதிவுகள் இருந்திருக்குமே, அவை எங்கே?

Advertisements
%d bloggers like this: