Advertisements

வராமல் தடுக்கலாம்… வந்தாலும் ஜெயிக்கலாம்!

நீரிழிவு நோயாளிகள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் புதிய புதிய சிகிச்சைகளும், கண்டுபிடிப்புகளும் மருத்துவ உலகில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நல்ல தரமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ள நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் பரணீதரனிடம் பேசினோம்… நீரிழிவு மேலாண்மையைப் பொருத்தவரையில், நடைமுறையில் நாம் பல இடங்களில் கவனம் செலுத்துவதில்லை.

உதாரணமாக, கிளைசெமிக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில், உயர் ரத்த சர்க்கரை அல்லது குறை ரத்த சர்க்கரை போன்ற மோசமான விளைவை காணலாம். சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும்போது மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதோடு மட்டும் நின்றுவிடுகிறோம். மேலும், நீரிழிவு மேலாண்மையில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று கவனிக்கப்படாத ஹைபோ கிளைசெமிக் நிகழ்வுகள்.
கட்டுப்படுத்தப்படாத மற்றும் சிக்கல்கள் நிறைந்த நீரிழிவு நோயாளிகளுக்காகவே தற்போது Ambulatory Glucose Profile என்னும் கருவி நமக்கு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்வேன். இந்த புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிக்கலான நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலாக இருக்கும் ரத்த சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணித்து கட்டுப்படுத்த முடியும். நடைமுறையில் ரேண்டம் சோதனை மற்றும் HbA1c முறைகளை பின்பற்றி வருகிறோம்.
AGP கருவியைப் பற்றி அறியும் முன், குளுக்கோஸ் மாறுபாட்டை (Glucose Variability) முதலில் புரிந்து கொள்வோம். நாளொன்றுக்கு 90 முதல் 140 mgs / dl வரை ரத்த சர்க்கரை அளவை நமது உடல் இயல்பாக பராமரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் முறையான வாழ்க்கை முறை மற்றும் மருந்துகளை சரியான வழிமுறையோடு எடுத்துக்கொள்வதை பராமரிக்கப்படாவிட்டால், குறைந்த ரத்த சர்க்கரை அளவிலிருந்து, உயர் ரத்த சர்க்கரை அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை கிளைசெமிக் மாறுபாடு (Glycemic variability) என அழைக்கிறோம்.
ரத்த பரிசோதனையை ரெகுலராக மேற்கொள்ளாவிட்டால், கிளைசெமிக் மாறுபாடு கண்காணிப்பை எளிதில் தவறவிடலாம். கிளைசெமிக் மாறுபாட்டை கண்காணிப்பது முக்கியமாகச் சொல்லப்படுவதற்கு காரணம், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி ஏற்றத்தாழ்வு ஏற்படும் நிலையில் எதிர்காலத்தில் இதய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் மட்டுமே. நீரிழிவு சிகிச்சையின் தரத்தை மதிப்பிடுவதற்கான தரநிலையாக HbA1c சோதனை நம்பகமான முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றாலும்,
3 மாத கால இடைவெளிகளில் ஏற்படும் குளுக்கோஸ் வெளிப்பாட்டை அறிய உதவும் HbA1C அளவீடானது, தினசரி குளுக்கோஸ் வெளிப்பாட்டு அளவுகளை கண்டறிய உதவாது. நோயாளிகள் நாள் முழுவதும் உயர் மற்றும் குறை குளுக்கோஸ் அளவுகளை பல்வேறு நேரங்களில் அனுபவிக்கக்கூடும் என்பதால் HbA1c அளவீடை மட்டும் நம்பும்போது மாறுபட்ட குளுகோஸ் கட்டுப்பாட்டால் பிற்காலத்தில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
AGP (Ambulatory Glucose Profile)
இதயநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராம்(ECG) போலவே இந்த AGP முறையில், ஒருவரின் குளுக்கோஸ் சுயவிவரத்தை, நம்பகமான முறையில் முன் கணிப்பு மற்றும் செயல்திறன் கொண்ட தரநிலை காட்சிப்படுத்தலை வழங்குகிறது. Flash Glucose Monitoring System (AGP) ஒரு சிறிய நாணயத்தைப் போன்று வட்டவிலான சென்சாரை கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளியின் மேல்கையின் பின்புறத்தில், நீரில் கரையாததும், எளிதில் அப்புறப்படுத்தக்கூடியதுமான இந்த சென்சாரை பொருத்திவிடுவோம்.
தோலோடு ஒட்டிக்கொள்ளக்கூடிய ஸ்டிராப் ஒன்றில் இந்த சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். அதை 2 வாரங்கள் வரை கைகளில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த சென்சார் அமைப்பானது தோலின்கீழ் செருகப்படும் ஒரு சிறிய இழை மூலம், குறுக்குவெட்டு திரவத்தில் வெளிப்படும் குளுக்கோசின் அளவை தொடர்ச்சியாக அளவிடுகிறது.
ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் குளுக்கோஸ் அளவைப் பதிவு செய்து, இரண்டு வாரங்களுக்குள் 1,340 குளுக்கோஸ் அளவீடுகளை கைப்பற்றி கொடுப்பதன் மூலம் சிகிச்சையளிக்கும் மருத்துவருக்கு நோயாளியின் முழுமையான குளுக்கோஸ் விவரத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒரு மொபைல் போனைப்போல இருக்கும் ரீடரைப் பயன்படுத்தி சென்சார் மூலம் எடுக்கப்பட்ட தரவுகளை மருத்துவரால் படிக்க முடியும்.
யாருக்கெல்லாம் இது அவசியம் தேவைப்படுகிறது?
தன்னுடைய குளுக்கோஸ் அளவீடுகளை தொடர்ந்து கண்காணிக்க விரும்பும் அனைத்து நீரிழிவு நோயாளிகளுமே இதை உபயோகிக்கலாம். இருந்தாலும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. குறை மற்றும் உயர் ரத்த சர்க்கரைக்கு இடையே ஏற்ற இறக்கங்களோடு, சர்க்கரை கட்டுப்பாட்டை மீறும் பழக்கம் உள்ள நீரிழிவு நோயாளிகள், உயர் HbA1c உடன், புதிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பவர்கள்,
அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதற்கேற்ற சிகிச்சைகளை முடிவெடுக்கவும் இன்சுலின் சிகிச்சையில் பல மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் ரத்தச் சர்க்கரைக் குறைவை சரிப்படுத்தவும், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இறக்கங்களோடு இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வரவும், கர்ப்பகால சர்க்கரை நோய் இருக்கும் பெண்கள் சர்க்கரை அளவை அவ்வப்போது தெரிந்து கொண்டு, அதற்கேற்ற மருத்துவமுறைகளை பின்பற்றவும்,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குளுகோஸ் அளவை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இந்த AGP கட்டாயம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அவ்வப்போது வீட்டிலேயே சுயமாக செய்ய வேண்டிய ரத்தப் பரிசோதனை, 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய HbA1c ரத்தப்பரிசோதனை சாப்பாட்டுக்கு முன்பு மாத்திரை எடுத்துக் கொள்ள மறந்து போவது,
இன்சுலின் ஊசியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிப்பது போன்ற நீரிழிவு நோயாளிகளுக்கு தலைவலியைக் கொடுக்கும் பிரச்னைகளுக்கு AGP பெரும் தீர்வாக இருக்கிறது. மொத்தத்தில் தான் ஒரு நீரிழிவு நோயாளி என்பதை மறந்துவிட்டு, மற்றவர்களைப் போலவே அன்றாட வாழ்க்கையை எளிதாக நடத்த முடியும். குறைவான செலவும் கூட.
மருந்துகளில் வந்துள்ள முன்னேற்றங்கள்
முன்பெல்லாம் நீரிழிவு நோய்க்கு கொடுக்கப்படும் மாத்திரைகளால் சர்க்கரை அளவு கட்டுப்படாமலே இருக்கும். இப்போது புதிதாக Sodium-glucose Cotransporter-2 (SGLT2) Inhibitors என்று சொல்லப்படும் மாத்திரைகள் வந்துள்ளது. உடலில் உள்ள குளுக்கோஸை சீறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். இதை எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு குறைவதுடன், உடல் எடையையும் குறைக்க முடியும். இதயத்திற்கும் தீங்கு விளைவிக்காது என உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து இது.
இன்சுலின் ஊசி உபயோகிப்பவர்கள் கூடவே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளும்போது இன்சுலின் அளவை படிப்படியாக குறைப்பதோடு, ஒரு கட்டத்தில் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதை நிறுத்தி விடலாம். குளுக்கோஸ் சிறுநீர் வழியே வெளியேறும் என்பதால், SGLT எடுத்துக் கொள்பவர்கள் சிறுநீர்த்தொற்று ஏற்படாமல் இருக்க, நீர் அதிகமாக அருந்துவதும், சுகாதாரத்தை கடைபிடிப்பதும் முக்கியம். 
இன்சுலின் ஊசியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி…
கண்டிப்பாக இதிலும் நல்ல முன்னேற்றங்கள் வந்துள்ளன. நடைமுறையில் நீரிழிவு நோயாளிகள் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், வாரம் ஒரு முறை மட்டும் போட்டுக் கொள்ளக்கூடிய இன்சுலின் ஊசி மருந்துகள் வந்துவிட்டன. அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது இது.
ஏனெனில், சாதாரண இன்சுலின் ஊசியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, போட்டுக் கொள்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வெளியே அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். ஆனால், புதுவகை இன்சுலின் மருந்தில் இதற்கெல்லாம் அவசியம் இல்லை. அறை வெப்ப நிலையில் வைத்திருந்து, வாரம் ஒரு முறை போட்டுக் கொண்டாலே போதுமானது.
நீரிழிவு தடுப்பூசி பற்றி…
குழந்தைகளுக்கு வரும் டைப் 1 நீரிழிவு நோய்க்கு மட்டும் நீரிழிவு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும், சோதனை நிலையில் இருப்பதால் முழுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. வந்தாலும், முற்றிலுமாக நோயைக் குறைக்கவும் செய்யாது. ஆனால், தன்னைத்தானே தாக்குவதற்காக உடலின் பாதுகாப்பு அம்சத்தை தூண்டுவதாக கண்டறியப்பட்ட ஒரு வைரஸ் மீது இந்த தடுப்பூசி செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி நடைமுறைக்கு வரும்போது ஒவ்வொரு ஆண்டும் பெருகக்கூடிய புதிய நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும்.

Advertisements
%d bloggers like this: