ஸ்டாலின் எழுதிய எம்.ஜி.ஆர் கட்டுரை!

ழுகார் வருவார் என்று காத்திருந்தோம். ஆனால், ‘டிங்… டிங்… டிங்’ என்று மொபைல் அலற… வாட்ஸ்அப் மூலமாகச் செய்திகளைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருந்தார் கழுகார்.

  ‘விழா வேந்தன்’ என்றால் அது கருணாநிதிதான். மறைவுக்குப் பிறகு, திரும்பிய பக்கமெல்லாம் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கட்சிக்காரர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையினரின் இந்த வரிசையில், தென்னிந்தியத் தொழில் வர்த்தகக் கழகமும் சேர்ந்துகொண்டுவிட்டது. செப்டம்பர் 22-ம் தேதி இரவு, சென்னையில் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியைப் பற்றி அனைத்துத் தொழிலதிபர்களும் புகழ்ந்து தள்ளினர். கருமுத்து கண்ணன் பேசியபோது, ‘‘தளபதி… தளபதி…’’ என்று ஸ்டாலினை விளித்தது, பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. ‘‘இப்படி பெரும்பெரும் தொழிலதிபர்கள் ஒன்றுகூடி இந்த நிகழ்ச்சியை நடத்தியிருப்பது… அடுத்த ஆட்சி தி.மு.க-தான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது’’ என்றொரு பேச்சைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாட, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது எடப்பாடி அண்டு கோ. ஒருவழியாக நிறைவுக் கட்டத்துக்கு இப்போது வந்துள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நிறைவு விழா நடக்கப்போகிறது. சுமார் 5 லட்சம் பேரைத் திரட்டப்போவதாக மே மாதத்தில் அறிவித்திருந்தனர். தற்போது, 7 லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என்று அந்த இலக்கு உயர்த்தப்பட்டுள்ளதாம். உண்மையில், ஒரு லட்சம் பேர் வந்தாலே சென்னையின் வீதிகள் தாங்காது. இந்தக் கூட்டத்தைத் திரட்டவே, மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ, எம்.பி-க்கள், அமைச்சர்கள் தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டுள்ளனர். இதற்கிடையே, தி.மு.க – காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கண்டித்து 25-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆட்களைத் திரட்டியதிலேயே பாதி சக்தியை இழந்துவிட்ட அவர்கள், 30-ம் தேதியன்று என்ன செய்யப்போகிறோமோ என்று கையைப் பிசைகின்றனர். இதைப் பார்க்கும் கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைகள், ‘‘அழைப்பிதழில் தினகரன் பெயரும் உள்ளது. அண்ணன் டி.டி.வி.தினகரனிடம் கூட்டத்தைத் திரட்டுவது பற்றி ஐடியா கேட்கலாம்’’ என்று கிண்டலடித்துக்கொண்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்காக மலர் ஒன்று தயாராகிவருகிறது. இதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கட்டுரை கேட்டு வாங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கட்டுரை மலரில் இடம்பெறவில்லை என்று ஒரு செய்தி எங்கிருந்தோ கிளம்பிவிட்டது. ஆனால், ‘‘எல்லாவற்றிலும் சிலர் ஏனோ பிரச்னையைக் கிளப்புகிறார்கள். உண்மையில், அழைப்பிதழிலேயே ஸ்டாலின் பெயர் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில், அமைச்சருக்கு இணையான மரியாதையை அவர் பெறுகிறார். அப்படியிருக்க, கேட்டு வாங்கிய ஒரு கட்டுரையை வெளியிடாமல் இருப்போமா? இது அ.தி.மு.க நடத்தும் விழா அல்ல, தமிழ்நாடு அரசு நடத்தும் விழா. எனவே, எந்த இருட்டடிப்பும் இருக்காது’’ என்கிறார்கள் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள்!

சோழப் பேரரசி செம்பியன்மாதேவியின் பழைமையான ஐம்பொன் சிலை, 40 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் கோனேரிராசபுரத்தில் இருந்து திருடுபோனது. அமெரிக்காவின் வாஷிங்டன் அருங்காட்சியகத்தில் தற்போது இருக்கும் அந்தச் சிலையை மீட்கக்கோரி நீதிமன்றப் படியேறினார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் குதித்துள்ளது. வரலாற்றுச் சான்றுகளுடன் அமெரிக்க அருங்காட்சியகத்தினரிடம் நிரூபித்து, சிலையை மீட்பார்களாம். அதேவேளையில், குஜராத் மாநிலத்தில் இருக்கும் விக்ரம் சாராபாய் அருங்காட்சியகத்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்ட ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் தொடர்பான பிரச்னை, பூமராங் ஆகியுள்ளது. ‘அவை தஞ்சையில் இருந்து கடத்தப்பட்டவையல்ல. அதற்கான ஆதாரங்கள் உள்ளன’ என்று சிலைகளைத் திரும்பவும் கேட்டு குஜராத் அருங்காட்சியகத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதேசமயம், ‘அவைதான் ஒரிஜினல் சிலைகள். தஞ்சையிலிருந்துதான் திருடப்பட்டவைதான்’ என்பதற்கான வலுவான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்.

சிலைத் திருட்டுகள், சிலை மோசடிகள் என்று பல்வேறு பிரச்னைகளில் இந்துசமய அறநிலையத் துறை சிக்கிக் கொண்டிருந்த சூழலில், அதன் ஆணையராக இருந்த ஜெயா சமீபத்தில்தான் மாற்றப்பட்டார். புதிய ஆணையராக பொறுப் பேற்றார் டி.கே.ராமச்சந்திரன். ஒரு மாதம்கூட ஆகவில்லை, அதற்குள்ளாக, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் பதவிக்கு இவர் மாற்றப்பட்டுவிட்டார். பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வேண்டி விரும்பி ராமச்சந்திரனை மாற்றியதாகக் கூறப்படுகிறது. உண்மையில், அறநிலையத்துறையில் தொடரத்தான் டி.கே.ராமச்சந்திரன் விரும்பினராம். இவர் இங்கே வந்ததுமே ஓய்வுபெற்ற சிலருக்குப் புதிய பணியிடங்களை உருவாக்கிக் கொடுத்ததும் சர்ச்சையாகியுள்ளது.

தமிழக மருத்துவத்துறையில் உறுப்பு தானம் தொடங்கி பலவற்றிலும் மோசடிகள் நடப்பது குறித்துப் புதிது புதிதாகச் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. உறுப்பு தான மோசடி தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் ‘தவறு நடந்தது உண்மை’ என்று அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், அந்த அறிக்கை மூடிமறைக்கப்பட்டுவிட்டது. இதுதொடர்பாக, ஜூனியர் விகடனில் கட்டுரை வெளியானது. அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் அறிக்கை வாயிலாக இதை வெளிப்படுத்தினர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து மருத்துவத் துறைக்குள்ளேயே குமுறல் பேச்சுகள் கிளம்பிவிட்டன. ‘இந்தத் துறையில் நேர்மையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ஓர் உயர் அதிகாரி கைகாட்டப் படுகிறார். ஆனால், இப்படியோர் அநியாயம் நடந்து கொண்டிருப்பதை அவர் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்?’ என்கிற கேள்விகள் அலையடிக்கின்றன.

‘காற்றாலை மின்சாரத்தில் ஊழல்’ என்று சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின். உண்மையில், அது அனல் மின்சாரம் தொடர்பான பிரச்னையாம். இதை மின்சாரத்துறை அமைச்சர் தரப்பிலிருந்து எடுத்துச் சொல்லியும் மு.க.ஸ்டாலின் தரப்பு மாற்றிக்கொள்ளாமல், காற்றாலை என்றே அழுத்தம் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் மாதத்திலேயே இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்காக மாறிநிற்கிறதாம்.

விஷயம் இதுதான்… தூத்துக்குடியில் உள்ள இந்த் பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்திடமிருந்து செங்கல்பட்டைச் சேர்ந்த அப்போலோ டயர்ஸ் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி ஆட்டோ காம்பனன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்தைப் பெறுகின்றன. இதற்காக தூத்துக்குடியில் தமிழக மின் வாரியத்திடம் அந்தத் தனியார் மின்நிலையம் மின்சாரத்தைக் கொடுத்துவிடும். சென்னை மற்றும் ஈரோட்டில் தமிழ்நாடு மின் வாரியத்திடமிருந்து அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இந்த நடைமுறையில், இடையில் சுமார் 9 கோடி ரூபாய் பெறுமானமுள்ள மின்சாரம் அந்த அனல் மின்நிலையத்திலிருந்து வராமலேயே, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. பிறகு கணக்கீடு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. இது திட்டமிட்ட மோசடி என்று தெரியவந்ததும், இதற்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் ஒருவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட அனல்மின் நிலையத்திடமிருந்து வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை வசூலிப்பதோடு, உரிய நடவடிக்கையும் எடுப்பதற்கான முயற்சி கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமானது. அந்த நிறுவனமோ,  ‘நாங்கள் அனல்மின் நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத் திடம் கொடுத்து விட்டோம். அவர்களிடம் வசூலித்துக் கொள்ளுங்கள்’ என்று கைவிரித்துவிட்டது. ஒப்பந்தம் பெற்றிருக்கும் நிறுவனம், ‘தவணை முறையில் பணத்தைக் கட்டுகிறேன்’ என்று கூறியது. இதை மின் வாரியம் ஏற்கவில்லை. ஒப்பந்த நிறுவனம், பிரச்னையை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிடாமல் தடை ஆணை பெற்றுவிட்டது. காற்றாலையோ… அனல் மின்நிலையமோ… 11 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பது ஸ்டாலினின் அறிக்கைக்குப் பிறகுதான் பொதுமக்களுக்குத் தெரியவந்திருப்பது உண்மை.

கடந்த இதழில் எடப்பாடி அரசின் பவர் சென்டர்களாக வலம் வரும் கான்ட்ராக்ட் கம்பெனிகள் பற்றிச் சொல்லி யிருந்தோம். அந்த லிஸ்ட்டில், நாமக்கல்லைச் சேர்ந்த சத்தியான நிறுவனமும் ஒன்று. சென்னை வடபழனியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் சுமார் 84 கோடி ரூபாய்க்கு அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்கப் போகிறார்கள். இதற்கான டெண்டர் படலம் நடக்கிறது. இந்த ரேஸில் அந்த நிறுவனத்துக்குத்தான் லக்கி பிரைஸ் அடிக்கப் போவதாக ஆரூடம் சொல்கிறார்களாம் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்.

%d bloggers like this: