Advertisements

ஆயுஷ்மான் பாரத் இன்ஷூரன்ஸ்… யாருக்கு நன்மை?

ந்தியாவில் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவை மத்திய அரசே ஏற்கும் வகையில், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ அல்லது ‘பிரதம மந்திரி ஜன ஆரோக்யா யோஜ்னா’ என்னும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றியைத் தேடித் தரும் திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் இருக்கும் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் நினைக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அமெரிக்காவின் காப்பீட்டுத் திட்டமான ‘ஒபமாகேர்’ என்பதுடன் ஒப்பிட்டு, இது ‘மோடிகேர்’ என்று சிலர் குறிப்பிடுகிறார்கள்.

 

ஏற்கெனவே, தமிழகத்தில் ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’, ஆந்திராவில் ‘ஆரோக்கிய ஸ்ரீ’, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்களில் ‘முக்கிய மந்திரி ஸ்வஷ்ட் பீமா யோஜனா’, ஒடிசாவில் ‘பிஜு கிருஷிக் கல்யாண் யோஜனா’ எனப் பல்வேறு மாநிலங்களில், வெவ்வேறு காப்பீட்டுத்  திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. இந்த நிலையில், புதிதாக அமல்படுத்தப்பட உள்ள இந்தக் காப்பீட்டுத்  திட்டம் எந்த வகையில் மற்ற காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து மாறுபடு கிறது, இது யார் யாருக்கெல்லாம் பயனளிக்கும், இதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

 

மாபெரும் காப்பீட்டுத் திட்டம்

2018-19-ம் ஆண்டு பட் ஜெட்டில் அறிவிக்கப் பட்டது இந்தத் திட்டம். இந்தத் திட்டம் மூலம் ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வீதம் 10 கோடி குடும்பங்கள் வரை பயன்பெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவிகிமான 50 கோடி பேர், இந்த மருத்துவக் காப்பீட்டால் பயன் பெறுவார்கள் என்கிறது மத்திய அரசு. உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இது இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தத் திட்டம் மருத்துவக் காப்பீடு வழங்குவ துடன், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் 1.50 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் (Health and Wellness Centres (HWC) புதிதாகத் தொடங்கப்பட உள்ளன. ஏற்கெனவே, இதில் 18 ஆயிரம் மையங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. இங்கு யோகா மற்றும் பிசியோதெரபி மையங்கள், பரிசோதனைக் கூடங்கள், இலவச மருந்துகள், தொலைப்பேசி மூலம் ஆலோசனை வழங்கும் மையம் ஆகியவையும் இடம்பெறுகின்றன.

 

யாரெல்லாம் பயனாளிகள்?

2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூகப் பொருளாதாரம் மற்றும் சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஏழை மக்கள், நலிவுற்ற கிராமப்புற குடும்பங்கள், அடையாளம் காணப்பட்ட நகர்ப்புறத் தொழிலாளர் குடும்பங்கள் என 10.74 கோடி குடும்பங்களை இலக்காகக்கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.

கிராமப்புறப் பயனாளிகள்

ஒரே ஓர் அறை மட்டுமே உள்ள கூரை வீட்டில் வசிப்பவர்கள், 16 வயதிலிருந்து 59 வயது வரை உள்ளவர்கள் யாரும் இல்லாத குடும்பங்கள், 16 முதல் 59 வயதிற்கு உட்பட்ட ஆண் இல்லாத பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பத்தினர், உடல் ஊனமுற்ற நபரைக்கொண்ட அல்லது வேலை செய்யும் உடல்திறன் இல்லாத உறுப்பி னரைக் கொண்ட வயதுவந்த நபர் எவரும் இல்லாத குடும்பங்கள், பட்டியல் இனத்தவர்கள் (SC/ST), நிலமற்ற தொழிலாளர் குடும்பங்கள், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மிகவும் புராதனமான பழங்குடிகள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடி மைகள் ஆகியோர் இந்தத் திட்டத்தில்  பயனாளி களாகச் சேர்க்கப்படுவர்.

நகர்ப்புறப் பயனாளிகள்

நகர்ப்புறங்களில் கந்தல் பொறுக்குபவர்கள், பிச்சையெடுப்பவர்கள், இல்லப் பணியாளர்கள், வீதி வியாபாரிகள், செருப்பு தைப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிளம்பர்கள், மேஸ்திரிகள், கூலித் தொழிலாளர்கள், பெயின்டர்கள், வெல்டர்கள், தனியார் நிறுவனங் களில் பணியாற்றும் காவலாளிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், தோட்ட வேலை செய்பவர்கள், கைவினைஞர்கள், டெய்லர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், சிறிய நிறுவனங்களில் பணிபுரியும் பியூன்கள், வெயிட்டர்கள், எலெக்ட் ரீஷியன்கள், மெக்கானிக்குகள், காவலாளி, சலவைத் தொழிலாளர்கள்  உள்ளிட்ட தொழில் செய்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மத்திய அரசின் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (Rashtriya Swasthya Bima Yojana (RSBY),  முதியோர் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் (Senior Citizen Health Insurance Scheme (SCHIS) ஆகியவை இந்தப் புதிய திட்டத்தில் இணைக்கப்படுகின்றன. அவர்களும் இதில் சிகிச்சை பெற முடியும்.

தமிழ்நாட்டின் பயனாளிகள்

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்துடன் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தையும் இணைத்து செயல் படுத்த ஒப்பந்தமாகியுள்ளது. அதனால் சமூகப்  பொருளாதாரம் மற்றும் சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Socio-Economic Caste Census-2011) அடிப்படையில் 77 லட்சம் பயனாளிக் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 1.57 கோடிக் குடும்பங்கள் பயனாளிகளாக இருக்கிறார்கள்.

தற்போது மத்திய அரசு கொடுத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகவே இருக்கலாம் என்பதால், அதற்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பணிகள் முடிந்தபிறகே பயனாளிகளின் விவரம் வெளியிடப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குக் கூடுதல் பயன்கள் என்னென்ன?

தமிழகக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ரூ.1 முதல் ரூ.1.5 லட்சம் வரை நான்காண்டுக் காலத்திற்கு அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை குறிப்பிட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறலாம். ஆனால், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவப் பலன்களைப் பெறமுடியும். இரண்டையும் இணைத்துச் செயல்படுத்துவதால், பயனாளியாகத் தேர்வாகும் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதாரப் பலன்கள் வழங்கப்படும்.

இதுவரை மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தில் 1,027 மருத்துவப் பலன்களைப் பெற முடிந்தது. பரிசோதனைகள், மருந்துகள், பராமரிப்புச் சிகிச்சைகள், அறுவை சிகிச்சை, உயர் அறுவை சிகிச்சை ஆகியவையும் இதில் அடங்கும். தற்போது மத்திய அரசின் காப்பீட்டுடன் இணைத்துச் செயல்படுத்துவதால், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தில் இருந்து, மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத 423 சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

குடும்பத்தின் அளவு, வயது என்ற எந்த வரம்பும் இந்தத் திட்டத்தில் கிடையாது. மருத்துவ ஆலோசனைக் கட்டணம், மருந்துகள், ரத்தப் பரிசோதனை, நோயாளிகளுக்கான உணவு, பயணச் செலவு, சிகிச்சை முடிந்தபின் ஏற்படும் செலவு உள்ளிட்டவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பயனாளிகள், நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் எவ்வித ரொக்கப் பரிமாற்றமும் செய்யாமல் சிகிச்சை பெற இயலும். இந்தத் திட்டத்தின் கீழ் அரசு  நிர்ணயித்தத் தொகையின்கீழ் சிகிச்சைகள் வழங்கப்படும். அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கியதாக இந்தத் தொகை அமையும். நோயாளிகள் எவ்வித ரொக்கமும் செலுத்த வேண்டியதில்லை. காகிதப் பரிவர்த்தனையும் இல்லாது பலன்கள் பெறலாம்.

காப்பீட்டுப் பிரீமியம் செலுத்துவது யார்?

இந்தத் திட்டத்தில், மத்திய அரசு தேர்ந்தெடுத்த 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் 60 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவிகித நிதியுடன் எஞ்சிய பயனாளிகளுக்கான 100 சதவிகித பிரீமியத்தை மாநில அரசே கட்டுகிறது. பயனாளிகள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை. தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில், ஏற்கெனவே தமிழ்நாட்டில் அமலிருக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் அப்படியே இடம்பெற்றுள்ளன என ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் தேசிய சுகாதார நிறுவன முதன்மை செயல் அலுவலர் டாக்டர் இந்து பூஷன் குறிப்பிட்டார். எனவே, தமிழகத்துக்கு இது புதிய திட்டமல்ல. ஆனால், மத்திய அரசின் நிதி, கூடுதல் மருத்துவப் பலன்கள், மருத்துவக் காப்பீட்டின் வரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவை கூடுதல் பலனாகக் கிடைக்கப்போவது நல்ல விஷயமே! 


நீங்கள் பயனாளியா என்பதை எப்படி உறுதி செய்யலாம்?

இந்தத் திட்டத்தில் பயனாளியா என்பதை <https://abnhpm.gov.in> என்ற இணையதளத்திலேயே உறுதி செய்துகொள்ளலாம். இணையதளத்தின் Am I Eligible என்ற இடத்தில் க்ளிக் செய்தால், உங்கள் தொலைபேசி எண் கேட்டும். அதைப் பதிவு செய்தால், அதற்கு 6 இலக்க OTP எண் (ஒருமுறை பயன்படுத்தும் எண்) வரும். அந்த எண்ணைப் பதிவு செய்தபிறகு உங்களின் பெயர், ரேஷன் கார்டு எண், தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, நீங்கள் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளியா என்பதைக் கண்டறிய முடியும்.

Advertisements
%d bloggers like this: