ஏடிஎம்.மில் ஸ்கிம்மர் கண்டறிவது எப்படி?: கோவை காவல்துறை விளக்கம்

கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று காலை நந்தகுமார் என்பவர் பணம் எடுக்க சென்றார். ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை செருகிய போது, அந்த இடத்தில் ஸ்கிம்மர் கருவி

பொருத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக கனரா வங்கியின் கிளை மேலாளர் பார்த்திபனுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்திபன் ஏடிஎம் இயந்திரத்தை ஆய்வு செய்தார். அப்போது ஏடிஎம் கார்டு செருகும் இடத்தில் ஸ்கிம்மர் கருவியும், பாஸ்வேர்டு டைப் செய்யும் இடத்திற்கு மேல் பகுதியில் பின் எண்களை திருடும் வகையில் பின்ஹேல் கேமராவும் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தார். இதை தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனையிட்டதில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் ஏடிஎம் மையத்தில் நுழைந்து ஸ்கிம்மர் மற்றும் பின்ஹேல் கேமரா பொருத்தி சென்றது தெரிய வந்தது.

 இதுகுறித்து கனரா வங்கி கிளைமேலாளர் பார்த்திபன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். காரில் வந்த கும்பல் இதில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் பயனாளிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் முன்பு கார்டு செருகும் இடத்தில் உள்ள பகுதியை நன்கு அசைத்து பார்த்து அதே கலரில் ஸ்கிம்மர் கருவி ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  பாஸ்வேர்டு டைப் செய்யும் இடத்திற்கு அருகில், மர்ம நபர்கள் கேமரா பொருத்தியிருந்தாலும், அதில், எண்கள் தெரியாமல் இருக்க பயனாளிகள் இடதுகையால் கீபோர்டை மறைத்து கொண்டு வலது கையால் பாஸ்பேர்டை டைப் செய்ய வேண்டும்.

அவ்வாறு எண்களை டைப் செய்யும் போது, விரல்களின் அசைவு கூட வெளியில் தெரியாமல் இருத்தல் வேண்டும்.   ஏடிஎம் மையம், பெட்ரோல் பங்க், ஓட்டல்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தும் போது, மற்றவர்கள் அறியாத விதமாக பாஸ்வேர்டுகளை டைப் செய்ய வேண்டும். பாஸ்வேர்டை மற்றவர் கேட்கும் படியோ, பார்க்கும் படியோ பயன்படுத்த கூடாது.  ஏடிஎம் மையங்களில் சந்தேகப்படும் வகையில் ஏதாவது கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு காவல் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. 

%d bloggers like this: