Advertisements

ஆன்மிக ஞானமருளும் சனி சந்திரன்?

சனி, சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான ஆளுமை, ஆதிக்கம், காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மிக முக்கியமான ஆயுள்காரகன் என்ற அமைப்பும், கர்மகாரகன் என்ற இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மந்தன் என்ற பெயர் உண்டு.

சனைச்சரன் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது மிக மிக மந்தமாக, மெதுவாக வலம் வருபவர், நகர்பவர் என்று பொருள். சனிபகவான் ஸ்தோத்திரத்தில் ‘சனைச்சராய நமஹ’ என்பது காலப்போக்கில் மருவி, சனீஸ்வராய நமஹ என்று வழக்கத்தில் வந்து, சனீஸ்வரர் என்று ஆகி விட்டது. சனி ஒரு ராசியில் 2½ ஆண்டுகள் இருப்பதாக கோச்சாரக் கணக்கு, ராசிக்கட்டத்தில் உள்ள 12 ராசிகளை முழுமையாக வலம் வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் இந்த 30 ஆண்டுகளை ஒரு காலக்கெடுவாக வைத்திருக்கிறார்கள். சனியின் ஒரு சுற்று முடியும்போது (அதாவது 30 ஆண்டுகள்) ஒவ்வொருவரின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், மாற்றங்கள், மறுமலர்ச்சி நிகழும்.

ஒவ்வொருவர் பிறக்கும்போது சனி இருந்த ராசி, வயது, சனியின் சுழற்சியை வைத்து மங்கு சனி, பொங்கு சனி, மரண சனி என குறிப்பிடுவார்கள். முதல் சுற்று, இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று என்று சொல்பவர்களும் உண்டு. சனிபகவானின் தசா காலமும் மிகவும் அதிகமாகும். அதாவது 19 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலே அதிகமாக வழிபடக்கூடிய, பூஜிக்கக்கூடிய கிரகம் சனியாகும். அவரவர் பிறந்த ராசிக்கு கோச்சாரப் பெயர்ச்சியில் 7½ சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச் சனி என பல வகைகளில் பலன்களை தருவார். கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம், தொண்டு, இரக்கம் போன்றவற்றை பிரதிபலிப்பவர். அதனால் தான் ‘சனி வழி தனி வழியாகும்’.சந்திரனுக்கு சாஸ்திரத்தில் மிக முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சந்திரன் மாதுர்காரகன், அதாவது தாய், தாய்வழி உறவுகள் பற்றி பிரதிபலிப்பவர்.

மனோகாரகன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். அமைதி இல்லாமல் இருப்பார்கள், கோபம், ஆவேசம், பிடிவாதம், முரண்பாடு, சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல், பித்தன், பிதற்றன், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படும். ‘மதிநலம் மனநலம்’ என்று சொல்வார்கள். அதன்படி நாம் ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். ஆகையால்தான் இவர் இருக்கும் ராசி வீடு ஒருவரின் ஜனன ராசி என்ற சிறப்பை பெறுகிறது. சனிக்கும், சந்திரனுக்கும் பலவகைகளில் பொருந்தாத்தன்மை, முரண்பாடுகள் உள்ளது. 9 கிரகங்களுக்கும் பலவகைகளில் ஒத்துப் போகாத தன்மைகள் இருந்தாலும் சனிக்கும், சந்திரனுக்கும் மிகவும் அதிகமாகும். சந்திரன் தினக்கோள் 27 நட்சத்திரங்களை மிக அதிவேகமாக பயணித்து, 30 நாட்களில் ராசி மண்டலத்தை கடக்கிறது.

இப்படி அதிவேகமாக பயணிப்பதால் பயணக்கிரகம் என்ற பெயர் ஏற்பட்டது. இதே விஷயத்தை சனியுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தலைகீழ் மாற்றமாக உள்ளது. சந்திரனுக்கு ராசிமண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள், சனிக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 வருடங்கள். சனி மந்தம், சந்திரன் வேகம், சனி இருள், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. புனர்பூ தோஷம் சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் என்று சொல்லப்படுகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருப்பது. சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது. சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது. சனி, சந்திரனை பார்ப்பது, இருவரும் சம சப்தமமாக பார்ப்பது, கிழமை, தேதிகள் மூலம் இருவருக்கும் தொடர்பு ஏற்படுவது புனர்பூ தோஷமாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும்.

இல்லற வாழ்க்கையில் இருக்கும்போது பலவிதமான எண்ணங்கள் அலைமோதும். முடிவு செய்ய முடியாமல் திணருவார்கள். அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள், திட சித்தம் என்பது அறவே இருக்காது. இவர்களை வசியப்படுத்துவது மிகவும் எளிது. மிகச் சுலபமாக பிறரின் கைப்பாவையாக ஆகி விடுவார்கள்.
இந்த சனி, சந்திரன் அவரவர்கள் ஜாதகப்படி சேருகின்ற ராசி, இடத்தைப் பொருத்து பலன்கள் மாறும். இந்த சேர்க்கைக்கு பலவகைகளில் சாதகம், பாதகம், ஏற்றம், இறக்கம், நிறை, குறைகள் இருக்கும். கிரக சேர்க்கைகள் மூலம் வரும் யோகங்கள் நிறைகுறைகளுடன் தான் இருக்கும். மகாபாக்கியவான்கள், பூர்வ புண்ணியம் மிகுதியாக இருக்க பிறந்தவர்களுக்கு நிறைகள் அதிகமாக இருக்கும். சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகள், உழைப்பிற்கு இலக்கணமாகத் திகழ்பவர்கள், சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும்.

தியாக சீலர்களாக இருப்பார்கள். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுவார்கள். மனசாட்சிக்கு கட்டுப்படும் மகானுபாவர்கள். தலைமைப் பதவிகள் இவர்களைத் தேடி வரும். தன்னலம் கருதாமல், பொதுநலம் கருதுபவர்களாக இருப்பதால் பொதுத் தொண்டு, சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். நாட்டின் உயர்பதவிகளில் அமரக்கூடிய பாக்கியமுடையவர்கள். அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்களை ஏற்படுத்தி தொண்டு புரிபவர்கள். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் காப்பகங்கள், கருணை இல்லங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி, பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவும் கரங்களுக்கு சொந்தக்காரர்கள். இல்லாதோர், இயலாதோருக்கு இரக்கம் காட்டுபவர்கள். மக்களுக்கு செய்யும் தொண்டே மகேஸ்வரனுக்கு செய்யும் பூஜையாகக் கருதுபவர்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள் என பலவழிகளில் ஒரு அர்ப்பணிப்பு வாழ்க்கையை இந்த இரண்டு கிரகங்களும் அமைத்துக் கொடுத்து விடும்.

சிற்றின்பம் பேரின்பம் சனி, சந்திரன் இருவரும் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், பரிவர்த்தனை, வர்கோத்தமம் போன்ற பலவகையான ஜோதிட சாஸ்திர கணக்குப்படி உயர் உச்ச ஸ்தான பலத்தில், ராசி, நவாம்ச சக்கரத்தில் அமரும்போது பிறந்தவர்கள். இந்த உலக இகபர சுகங்களை, இல்லற சிற்றின்பத்தை நுகர்வார்கள். கர்மவினைக்கு காரகம் வகிக்கும் சனிபகவான் இப்படிப்பட்டவர்களை, அவரவர் பிறவிவினைக்கு ஏற்ப பக்குவப்படுத்தி ஞான மார்க்கப் பாதையில் கொண்டு விட்டு விடுவார். ஒரு சிலர் இல்லறத்தில் இருந்து கொண்டே பக்தி மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இவர்களில் பலருக்கு பிரம்மச்சரிய யோகம் வாய்க்கும். துறவறம், சன்யாச யோகம் ஏற்படும். பூர்வ ஜென்ம கர்ம வாசனை விதிப்பயன் காரணமாக, பிறவிப் பிணிக்கு மருந்தாக
தத்துவ, வேதாந்த ஞான மார்க்கத்துக்கு இந்த சந்திரன், சனி கிரக அமைப்பு ஒருவரை அழைத்துச் செல்லும்.

இவர்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், நிர்வாகத்திறன் மிக்கவர்களாகவும், கலைகளில் தேர்ச்சி உடையவர்களாகவும், மெய் ஞானிகளாகவும், தத்துவவாதிகளாகவும், வேதாந்திகளாகவும், சாஸ்திர விற்பன்னர்களாகவும், பண்டிதர்களாகவும் இருப்பார்கள். நம் பாரத நாட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல ஞானவான்கள், துறவிகள், சித்தர்கள், குருமார்கள், தீர்க்கதரிசிகள், ரிஷிகள், முனிவர்கள், மடாதிபதிகள், யோகீஸ்வரர்கள், பீடாதிபதிகள், தவசீலர்கள், அருளாளர்கள், அவதார புருஷர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி இந்த உலகில் தோன்றி மகாபுருஷர்களின் ஜாதக அமைப்பில், தத்துவ வேதாந்த கர்ம காரகனான சனிபகவானின் ஆளுமை, அம்சம் உள்ளது. மனம், சிந்தனை, சொல், வாக்கு போன்றவற்றிற்கு அதிகாரம் படைத்த சந்திரனின் அருள்மிகுந்து காணப்படுகிறது. பல அருளாளர்களின் ஜாதகங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது, ஜாதக கட்டத்திலே மறைந்து இருக்கின்ற விஷயம் நமக்கு புலப்படுகிறது.

சனி  சந்திரன் சேர்க்கை பெற்ற ஞான ஜாதகங்கள் துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க்கை, ஞானப்பாதை, மாயை மற்றும் பற்றுகள் விலகி, ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருட்பெருஞ்ஜோதியை நெஞ்சத்திலே தரிசிக்க சன்யாச யோகம் அவசியம். சந்திரன், சனி இருவரும் இந்த யோகத்தைத் தருவார்கள். லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருந்தால் சன்யாச யோகம். லக்னத்திற்கு, சந்திரனுக்கு, சுக்கிரனுக்கு 7ல் சனி நின்றால் சன்யாச யோகம். லக்னத்தில் இருந்தும், சந்திரனில் இருந்தும் சனி 5ஆம் வீட்டில் இருந்தாலும், பார்த்தாலும் சன்யாச யோகம். அதே போல் 10ஆம் வீட்டில் இருந்தாலும், பார்த்தாலும் சன்யாச யோகம். சனியும், சுக்கிரனும் எந்த வகையில் சம்பந்தப்பட்டாலும் பற்றற்ற வாழ்க்கை அமையும்.
உதாரண ஜாதகம்…

ஆதிசங்கரர்

கடக லக்கினம், லக்னாதிபதி சந்திரன் மிதுன ராசியில், சனி. தனுசு ராசியில் இருந்து சமசப்தமப் பார்வை, மேலும் 5ல் கேது.குருநாணக் ரிஷப ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருப்பது.

ஸ்வாமி விவேகானந்தர்
 

கன்னி ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருப்பது.

 
ஸ்வாமி அரவிந்தர்
 
தனுசு ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருப்பது.
 
ஏசு கிறிஸ்து
 
மீன ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்து இருப்பது.

கௌதம புத்தர்
 
துலாராசியில் சந்திரன், மேஷ ராசியில் சனி. சம சப்தம பார்வை.
 
ஸ்ரீவேதாந்ததேசிகர்
 

மகரத்தில் சந்திரன், கடகத்தில் சனி சமசப்தம பார்வை.

 
பாலகங்காதர திலகர்
 
மீனத்தில் சந்திரன், குரு, ராகு. மிதுனத்தில் சனி. 10ஆம் பார்வை.
 
ஸ்ரீ காஞ்சி பெரியவர்
 
விருச்சிகத்தில் சந்திரன், கன்னியில் சனி, 3ஆம் பார்வை. சந்திரன் சனி நட்சத்திரமான அனுஷத்தில் இருப்பது.
 
ஸ்ரீராமர்
 

கடகத்தில் சந்திரன், துலா ராசியில் சனி. 10ஆம் பார்வை.


சீரடி சாய்பாபா
 
கடகத்தில் சந்திரன், துலாம் ராசியில் சனி. 10ஆம் பார்வை பிறந்த தினம் சனிக்கிழமை.
 
ஸ்ரீராமானுஜர்
 
மிதுனத்தில் சந்திரன், குரு. தனுசில் சனி. சமசப்தம பார்வை.
 
மெகர் பாபா
 

துலா ராசியில் சனி, சந்திரன் இருவரும் சேர்க்கை.

 
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
 
தனுசு ராசியில் சனி, கன்னியில் சந்திரன். சனி 10ஆம் பார்வை.
 
யோகிராம் சுரத்குமார்
 

துலாம் ராசியில் சந்திரன், சிம்மத்தில் சனி. 3ஆம் பார்வை.

குறிப்பு

ஆன்மிக ஞானம், பக்திமார்க்கம், சன்யாச யோகம், இகபர சுகங்களில் பற்றற்ற நிலை போன்றவற்றை அருளுவதற்கு ஜாதக கிரக கட்டங்களில் பல்வேறு அமைப்புக்கள், அதாவது ஞானமோட்சகாரகன் கேது, சாஸ்திர ஞானத்தை அருளும் குரு மற்றும் பல கிரக சேர்க்கைகள் மூலம் ஞானிகளாகவும்,
துறவிகளாகவும், தீர்க்கதரிசிகளாகவும் திகழ முடியும். ஆனால் பழம்பெரும் ஜோதிட சுவடிகளில் உள்ள குறிப்புக்களின்படி ஒருவருக்கு சந்திரன், சனி சம்பந்தம் பெறுவதால் தான். பல குருமார்களும், தத்துவ மேதைகளும், ஞானிகளும் தோன்றுவார்கள் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த அமைப்புக்களின் சராம்சப்படி பல்வேறு சித்த, ஞான அவதார புருஷர்களின் ஜாதகத்தில் இந்த சனி, சந்திரன் சம்பந்தம் மிகச் சரியாக அமைந்துள்ளதை காணலாம்.

Advertisements
%d bloggers like this: