Advertisements

தினகரனைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால்?’ – ஓ.பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம்

எங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர் மூலம் நான் தினகரனைச் சந்தித்தேன். ஆனால், அப்போது அவர் பேசியதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எங்கள் இருவருக்கும் தெரிந்த நண்பர் மூலம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னைச் சந்தித்துப் பேசினார் என்று டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “டி.டி.வி.தினகரன் புதிதாக ஒரு குழப்பத்தை உருவாக்குகிறார். தங்க.தமிழ்ச்செல்வன் மூலம் புதிய பேட்டியைக் கொடுக்க வைத்துவிட்டு பின்னர், அதை அவரே கூறியுள்ளார். ஆட்சியைக் கவிழ்க்க முடியாத விரக்தியில் குழப்பமான மனநிலையில் உள்ளார்.

எனக்கும் தினகரனுக்கும் பொதுவான நண்பர் கேட்டுக்கொண்டதால், அவரை நான் சந்தித்துப் பேசினேன். நான் தினகரனைச் சந்தித்தது 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி. ஆனால், இந்தச் சந்திப்பு நடந்து முடிந்து 2 மாதங்களுக்குப் பின்னரே ஆகஸ்ட் 21-ம் தேதி அணிகள் இணைப்பு நடைபெற்றது. தினகரன் மனம் திருந்தியிருப்பார் என்ற எண்ணத்தில் நான் அவரைச் சந்தித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றுவது குறித்து என்னிடம் பேசினார். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணத்திலேயே அவர் பேசியதால், அந்தக் கருத்துக்கு உடன்படாமல் நான் திரும்ப வந்துவிட்டேன். அவர், கோரிக்கை வைத்ததாலேயே நான் அவருடன் பேசினேன். நான், டி.டி.வி.தினகரனைச் சந்தித்தது யாருக்கும் தெரியாது. அரசியல் நாகரிகம் கருதி நான் யாரிடமும் சொல்லவில்லை. நாங்கள் இணைந்த பிறகு அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் என்னிடம் மன்னிப்புக் கோரினார். எந்தநிலையிலும் கட்சிக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. தினகரனைச் சந்தித்ததற்கும் என்னுடைய சகோதரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கெனவே நான் 3 முறை முதலமைச்சராக இருந்துவிட்டேன். அந்தத் திருப்தியே போதும். எந்தக் காலத்திலும் எனக்குப் பதவி ஆசை இல்லை’’ என்றார். 

Advertisements
%d bloggers like this: