நாளைய பயம்

நாளை என்கிற எதிர்பார்ப்போடுதான் மனித ஓட்டம் தொடர்கிறது. எதிர்காலம் குறித்து சிறு வயதிலிருந்தே சிந்திக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால், `இந்த நொடி கடந்து போய்விடுமே’ என்கிற எண்ணம்கொண்டவர்கள் எதிர்காலம் குறித்து அதீதமாகக் கற்பனை செய்துகொள்கிறார்கள்; பயப்படுகிறார்கள். `நாளை என்ன ஆகுமோ’ என்ற பயத்தில் `இன்றை’த் தொலைத்துவிடுகிறார்கள். இந்த பயத்துக்கு ‘குரோனோபோபியா’ (Chronophobia) என்று பெயர். கிரேக்கத்தில் ‘குரோனோஸ்’ என்றால் நேரம் என்று அர்த்தம்.

யாருக்கு வரும் இந்த பயம்?


* `நேரம் வேகமாக நகர்கிறதே’ என்ற எண்ணம்கொண்டவர்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள்.
* வேலை இழப்பு, நேசித்துக்குரியவரின் மரணம், விவாகரத்து போன்றவற்றை எதிர்கொள்கிறவர்கள்.
* மரணம் குறித்து பயப்படும் வயதானவர்கள்.
* அட்ரீனல் குறைபாடு, ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள்.
* `காலம் விரயமாகிறதே’ என்கிற எண்ணம் காரணமாக, சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்த பயத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
* மரபுவழியாக பாதிக்கப்படுபவர்கள்.
* இயற்கைப் பேரிடர்களில் சிக்கிக்கொண்டவர்கள்.
* வியாபாரத்தில் தோல்வி அடைந்தவர்கள்.
அறிகுறிகள்: வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறுவிதமான அறிகுறிகள் தோன்றும். தலைச்சுற்றல், மயக்கம், அதிகப்படியான வியர்வை, மரணம் பற்றிய சிந்தனை, அழுகை, தெளிவற்ற நிலை போன்றவற்றைப் பொதுவான அறிகுறிகளாகக் குறிப்பிடலாம்.
சிகிச்சைகள்: இந்த பயத்தைப் போக்க முடியாது. ஆனால், மனநல சிகிச்சைகள் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஹிப்னோதெரபி (Hypnotherapy) இந்த பயத்துக்கு நல்ல சிகிச்சை. `எதிர்கால பயத்தைத் தடுப்பதில் என்.எல்.பி
(Neuro-Linguistic Programming – NLP) என்கிற நரம்பியல் மொழி நிரலாக்கச் சிகிச்சையும் பெரிதும் உதவும்’ என்கின்றன ஆய்வுகள். யோகா, தியானம், பிராணாயாமம் ஆகியவற்றின் மூலம் மனச்சோர்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் இந்த பயத்திலிருந்து மீள உதவுமாம்.

%d bloggers like this: