சபாநாயகருக்கு செக்! – கருணாஸ் காட்டிய ஆட்டம்

ல்லா சேனல்களிலும் மழை குறித்த ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை வரிகள் ஓடிக்கொண்டிருக்க, ரெயின் கோட்டில் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘கவலைப்படாதீர். மாநிலம் முழுக்க ரெட் அலெர்ட் கொடுத்தாலும், அதனால் எல்லா இடங்களிலும் கனமழை என அர்த்தமல்ல. ஒரே நாளில் 200 மி.மீ-க்கு மேல் மழை பெய்யும் வாய்ப்புள்ள மலைப் பிரதேசங்களில் கவனமாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ரெட் அலெர்ட் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, ரெட் அலெர்ட் கொடுத்திருந்தார்கள்’’ என விவரித்த கழுகார், அரசியல் அலெர்ட்களை அடுக்க ஆரம்பித்தார்.

‘‘கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்த கருணாஸ், இப்போது ‘ஹார்ட் அட்டாக்’ டாப்பிக்காக மாறிவிட்டார். ‘முதலமைச்சரே என்னைக் கண்டு பயப்படுகிறார்’ என்று கர்ஜித்தவர், பின்பு அதற்கு வருத்தம் தெரிவித்தாலும் முதல்வரின் கோபம் தணியவில்லை. வேலூர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் கார் கண்ணாடியை உடைத்த பழைய வழக்கை தூசு தட்டினார்கள். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார் கருணாஸ். அதேநேரத்தில் நெல்லை போலீஸ் படை சென்னைக்குக் கிளம்பியது. அக்டோபர் 3-ம் தேதி காலை தன் வீட்டுக்கு போலீஸ் வருவதை வடபழனியைச் சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரி மூலம் அறிந்த கருணாஸ், உடனே மருத்துவமனையில் அட்மிட்டாகிவிட்டார்.’’
‘‘ரொம்பவே உஷார்தான்.’’
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமீமுன் அன்சாரி, தனியரசுவுடன் இணைந்து கருணாஸ் செயல்பட்டு வந்தார்; தினகரன் தரப்புடனும் நெருக்கம் காட்டினார். அது ஆளும்தரப்புக்குப் பிடிக்கவில்லை. இதற்கிடையே, ‘திருவாடானை தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் நடக்கவில்லை. அதற்குக் காரணம் அமைச்சர் மணிகண்டன்தான்’ என்று கருணாஸ் வெளிப்படையாகவே சொன்னார். அதுகுறித்து முதல்வரிடம் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற வருத்தமும் கருணாஸுக்கு இருந்தது. அந்தக் கோபத்தில்தான் தி.மு.க நடத்திய போட்டி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இப்போது ‘கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன்’ என்கிறார். கூவத்தூரில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் கருணாஸ் வசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.’’

 

‘‘அவை எப்போது ரிலீஸ் ஆகும்?’’
‘‘துருப்புச் சீட்டை யாராவது ஆரம்பத்திலேயே எடுத்துப் போடுவார்களா? அவர் எதையும் செய்வதற்கு முன்பாக அவரின் எம்.எல்.ஏ பதவியை காலிசெய்யும் முடிவுக்கு ஆளும்தரப்பு வந்தது. இதுதொடர்பான சட்ட ஆலோசனைகளும் தீவிரம் பிடித்தன. சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். கொறடா உத்தரவை மீறியதாக கருணாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவானது. கூடவே, தினகரன் பக்கம் இருக்கும்  எம்.எல்.ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவானது. இதனால், தினகரன் தரப்பை நாடினார் கருணாஸ். தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், ‘சபாநாயகர் உங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கும் முன்பு, அவருக்கு நீங்கள் நோட்டீஸ் கொடுத்துவிடுங்கள்’ என அவர்கள் கொடுத்த ஆலோசனைதான் இப்போது சபாநாயகருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.’’
‘‘ஓஹோ!’’
‘‘இதை சபாநாயகரிடம் நேரில் கொடுக்கத்தான் பிளான் செய்திருந்தார் கருணாஸ். ஆனால், நெல்லை போலீஸ் வந்ததால் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், தாமதம் செய்யாமல் புதன்கிழமை காலை தன் உதவியாளர் மூலம் சட்டமன்றச் செயலாளர் சீனிவாசனிடம் நோட்டீஸ் கொடுத்துவிட்டார். சபாநாயகர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருதற்கான தனிநபர் நோட்டீஸ் அது. அருணாசலப் பிரதேச சபாநாயகர் நபாம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து, இந்த நோட்டீஸைத் தயார் செய்துள்ளார்கள். ‘சபாநாயகர் தனபால் சட்டமன்றத்தில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறார்’ என்பது நோட்டீஸின் பிரதானக் குற்றச்சாட்டு். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 68-ன்படி இந்த நோட்டீஸ் மீது சட்டசபைச் செயலாளர் விசாரணை நடத்தி, அதன்பிறகு சட்டமன்றம் கூடும் நாளில் இந்தத் தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியும் உள்ளது. 35 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பேரவையில் அனுமதிக்கலாம். 2018 ஜூலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. எனவே, அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் மீண்டும் சட்டசபை கூடும் வாய்ப்பு உள்ளது. அப்போதுதான் இது என்ன ஆகும் என்று தெரியும்.’’
‘‘அதற்கு இப்போதே கருணாஸ் ஏன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்?’’
‘‘அதில்தான் ஒரு சட்ட நுணுக்கம் இருக்கிறது. ‘இந்த நோட்டீஸை சட்டசபைச் செயலாளர் வாங்கிவிட்டதால், இனி சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கையை பிரயோகிக்க முடியாது’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். இதனால், தினகரன் பக்கம் உள்ள மற்ற மூன்று எம்.எல்.ஏ-க்களின் பதவிகளும் தப்பிவிட்டன. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் எந்த நேரமும் தீர்ப்பு வரக்கூடும் என்ற நிலையில், கருணாஸின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. இதை ஆளும்தரப்பே எதிர்பார்க்கவில்லை.’’
‘‘நியாயம்தான்’’ என்று அடுத்த டாப்பிக் மாறினோம். ‘‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஆலோசனை என்ன ஆனது?’’

‘‘அக்டோபர் 11-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் போட்டு, அதில் எடப்பாடி கலந்துகொள்வதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தனர். தினகரன் தரப்பு காட்டிய வேகத்தில் மிரண்டு, 4-ம் தேதியே செயல்வீரர் கூட்டத்தை திடீரென்று ஏற்பாடு செய்தார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14 அமைச்சர்கள் சூழ மதுரைக்கு வந்தார் எடப்பாடி. மதுரை ரிங் ரோடு வேலம்மாள் மருத்துவமனை அருகிலுள்ள 3,500 பேர் அமரக்கூடிய மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த இடைத்தேர்தலின்போது செய்தது போலவே, திருப்பரங்குன்றத்துக்கு 15 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். ‘ஒவ்வொரு அமைச்சரும் பணத்தைக் கணக்கு பார்க்காமல் செலவு செய்து வெற்றிபெற வைக்க வேண்டும்’ என்று பன்னீரும் எடப்பாடியும் பேசினார்கள். ‘நாங்கள் ஆர்.கே. நகர் ஃபார்முலாவை இங்கும் அறிமுகம் செய்துவிடுவோம் என்ற அச்சத்தில்தான் திருப்பரங்குன்றம் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வரே கலந்துகொண்டார்’ என அ.ம.மு.க-வினர் பெருமையாகக் கூறுகிறார்கள்.’’
“செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு வழக்கில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாருக்கு எதிராக திடீர்த் திருப்பம் ஏற்பட்டுள்ளதே?’’
‘‘அதுவும் தினகரன் கைங்கர்யம்தான் என்கிறார்கள். சென்னையைப் பெரும் வெள்ளத்தில் மூழ்கடித்த செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நீதி விசாரணை கோரி, சென்னையில் 2016 ஜனவரி 5-ம் தேதி தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சென்னையை பலத்த மழை தாக்கப்போவதாக மத்திய அரசு 48 மணி நேரத்துக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டும் தமிழக அரசு மெத்தனமாகச் செயல்பட்டதால் பேரிழப்பு ஏற்பட்டது’ என்றார்். இதனால் ஆத்திரமடைந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 3-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு சாட்சியான வக்கீல் பரணிகுமார் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், ‘சென்னையை பலத்த மழை தாக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது உண்மை தான். ஆனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். ஜெயலலிதாவுக்குத் தெரிந்திருந்தால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்திருப்பார். செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான் காரணம்’ என்று சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தினார். ‘பரணிகுமாருக்கும் அமைச்சருக்கும் ஒத்துப்போகவில்லை; அதேசமயம் தினகரன் தரப்பு பரணிகுமாருடன் இணக்கத்தைக் காட்டுகிறது… அதனாலேயே அவர் அமைச்சருக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறார்’ என்று ஆளும்கட்சியில் சொல்கிறார்கள்.’’
‘‘உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிமீதான வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதே?’’
“அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். புகாருக்கு ஆதரவாக மூவாயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘அமைச்சர் மீதான புகாரை விசாரிக்க அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தின் மீது முடிவெடுக்க தலைமைச் செயலாளருக்கு மூன்று மாத அவகாசம் உள்ளது’ என்றார். தி.மு.க வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ‘ஊழல் தடுப்புச் சட்டப் புதிய திருத்தப்படி, அரசு ஊழியர்கள் மீதான புகார்மீது விசாரணை நடத்த கவர்னரிடம்தான் அனுமதி பெற வேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதத்துக்காக விசாரணையை நீதிபதி வரும் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.”
‘‘ஓஹோ.’’
‘‘வேலுமணி மீது மட்டுமல்ல, மின் துறை அமைச்சர் தங்கமணிமீதும் தி.மு.க குறி வைத்திருக்கிறது. மின்சாரத் துறையில் முறைகேடு என ஸ்டாலின் ஏற்கெனவே குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்தும் ஆர்.எஸ்.பாரதி விரைவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. சமீபத்தில் மின்துறையில் நடைபெற்ற பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் ஸ்டாலின் கைக்குக் கிடைத்துவிட்டனவாம். அவற்றையே ஆதாரமாகக் கொண்டு வழக்கைத் தாக்கல்செய்ய உள்ளார்கள். அரசுக் கோப்புகள் எல்லாம் எப்படி எதிர்க்கட்சிக்குச் செல்கின்றன என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இன்னொருபக்கம் அமைச்சர்கள் மீதான மத்திய அரசின் நெருக்கடியும் முதல்வரை ரொம்ப யோசிக்க வைத்துவிட்டதாம்.’’
‘‘அதனால்தான் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளாரோ?’’
‘‘ஆமாம். அக்டோபர் 3-ம் தேதி, முதல்வர் அலுவலகத்திலிருந்து முறைப்படி பிரதமர் அலுவலகத்துக்கு நேரம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்துவது தொடர்பான, முன்னாள் அ.தி.மு.க எம்.பி கே.சி.பழனிசாமியின் வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அக்டோபர் 12-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக இந்த சந்திப்பை நடத்திவிடவேண்டும் என முதல்வர் அலுவலகம் அவசரப்படுகிறது. முதல்வருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் போகிறார். ஏற்கெனவே திருப்பதியில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவை எடப்பாடி சந்தித்தது, அதன்பின் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் டெல்லி சென்று வந்தது… ஆகியவற்றின் தொடர்ச்சியாக சில விஷயங்கள் இந்தச் சந்திப்பில் உறுதி செய்யப்படலாம்’’ என்ற கழுகார், ‘ரெட் அலெர்ட் எச்சரிக்கை ஞாபகம் இருக்கட்டும்’ என்றபடி பறந்தார்.

%d bloggers like this: