ரகசிய சந்திப்பை அறிந்து உஷாரானார் எடப்பாடி!’ – உளவுத்துறை கொடுத்த ரெட் அலர்ட்

தினகரன் – பன்னீர்செல்வம் ரகசிய சந்திப்பின் மூலம் அ.தி.மு.க கூடாரத்துக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. `கொங்கு மண்டலம் கையில் அதிகாரம் சென்றுவிட்ட கோபத்தில்தான், மீண்டும் தினகரனை சந்திக்க விரும்பினார் ஓ.பி.எஸ். இதை அறிந்துதான் இணைப்பு முயற்சிக்கு சம்மதம் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

சென்னை அடையாற்றில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “பன்னீர்செல்வம் என்னை நேரில் சந்தித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் பொதுவான நண்பர் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. கடந்த வாரம் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று தூது அனுப்பினார்” என்றார். இதற்கு, பதில் கொடுத்த பன்னீர்செல்வம், “அ.தி.மு.க-விலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு டி.டி.வி.தினகரன் இன்றைக்கு ஒரு புது பிரச்னையைத் தாமாகவே சிந்தித்துப் பேசியிருக்கிறார். தங்க.தமிழ்ச்செல்வனை முதலில் பேட்டி கொடுக்க செய்துவிட்டு, இப்போது அவர் பேசியிருக்கிறார். 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி, மதுரையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அ.தி.மு.க மீது தொண்டர்கள் எவ்வளவு பற்றும் பாசமும் வைத்து இருக்கிறார்கள் என்பது அந்தக் கூட்டத்தில் தெரிந்தது. இதைப் பார்த்ததும் டி.டி.வி.தினகரன் குழப்பமான மனநிலைக்கு வந்திருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பு பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, தினகரனை அழைத்து சமுதாய விழா நடத்தினார். அதில் டி.டி.வி.தினகரன் பேசும்போது, கதிர்காமுவிடம், 50 கோடி ரூபாய் தருகிறேன் என்று நாங்கள் அழைத்ததாகப் பொய்யாகக் கூறியிருக்கிறார். `கதிர்காமு யாரால் வெற்றி பெற்றார்’ என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் கூட்டத்தில், பா.ஜ.க-வுடன் சேர்ந்து நான் தமிழக அரசைக் கலைத்துவிட்டு முதலமைச்சராக வர ஆசைப்படுகிறேன் என்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை கூறி, சேற்றை வாரி என் மேல் வீசியிருக்கிறார்” என்றார். 

பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் நடத்திய செய்தியாளர் சந்திப்புகள் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ கதிர்காமுவை முன்வைத்து பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள், தினகரன் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. `அம்மா செல்வாக்கில்தான் வெற்றி பெற்றோம்’ என அறிக்கை விடுமாறு அவருக்கு தினகரன் தரப்பினர் நிர்பந்தம் கொடுக்கின்றனர். அவர் எடப்பாடி பக்கம் வந்துவிடுவார் எனத் தொடக்கத்திலிருந்தே பேசி வந்தனர். தங்க.தமிழ்ச்செல்வன் சமாதானம் செய்து வைத்ததால்தான் அவர் தினகரனுடன் இருக்கிறார். ஆட்சி அதிகாரம் கொங்கு மண்டலம் கையில் இருப்பதை, தென்மாவட்டத்தில் உள்ள சில சமுதாய பிரமுகர்கள் விரும்பவில்லை. `நாம் அடித்துக்கொண்டிருப்பதால்தான் அதிகாரம் எடப்பாடி பழனிசாமி கைக்குப் போய்விட்டது. இருவருமே தெருவில் நிற்கிறோம்’ என்ற அடிப்படையில்தான் தினகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர். 

அன்று நடந்த இந்தச் சந்திப்பு குறித்து உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு அறிக்கை கொடுத்தார். இதையடுத்தே, பன்னீர்செல்வத்துடன் சமரசத்துக்கு உடன்பட்டார் எடப்பாடி பழனிசாமி. இதற்குக் காரணம், தினகரனைவிட பன்னீர்செல்வம் பெட்டர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதற்கு இந்தச் சந்திப்புதான் பிரதான காரணமாக அமைந்தது. குறிப்பாக, `முதலமைச்சர் பதவியை தேவையில்லாமல் இழந்துவிட்டார் பன்னீர்செல்வம். நாம் எந்தக் காலத்திலும் பதவியைவிட்டு இறங்கிவிடக் கூடாது. இதை வைத்து லீடராக வர வேண்டும். யார் சொல்லியும் பதவியை ராஜினாமா செய்துவிடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

ஆட்சி மீது குறை சொல்லி, `பதவியை ராஜினாமா செய்யுங்கள்’ எனப் பேசியே ஓய்ந்துபோனார் ஸ்டாலின். `நம்பர் ஒன்’னாக வர வேண்டும் என்றால், பன்னீர்செல்வத்தைக் கையில் எடுக்க வேண்டும்’ என்பதில் தெளிவாக இருந்தார் பழனிசாமி. இவை அனைத்தும் இப்போதுதான் பன்னீருக்குப் புரிபடத் தொடங்கியிருக்கிறது. இப்போது, தனக்குப் பின்னால் சொந்த சமூகம் வர வேண்டும் என நினைக்கிறார். அதற்கு தினகரன் இடையூறாக இருக்கிறார். நேற்றைய பேட்டியில், `கதிர்காமுவை நான்தான் வெற்றி பெற வைத்தேன்’ எனக் கூறுவது இதன் தொடர்ச்சியாகத்தான். இருவருக்கும் இடையேயான அந்தப் பொதுவான நண்பர் யார் என்பதைச் சொல்வதில் உளவுத்துறையும் ரகசியம் காக்கிறது” என்றார் விரிவாக. 

%d bloggers like this: