இயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…

ஐம்பது வயதிற்கு மேல், உடல் பல நோய்களின் மேய்ச்சல் காடாக உள்ளது. எந்த உபாதையும் தராமல், எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல், இருளில் ஒளிந்திருக்கும் திருடனைப் போல, பல நோய்கள் மறைந்திருக்கும்; இது சம்பந்தப்பட்டவருக்கே தெரியாது. உதாரணம்… நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய், கை விரல்களில் ஏற்படும் நடுக்கம்.
ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், மறைந்திருக்கும் பல நோய்களை கண்டுகொள்ள முடியும். தக்க சிகிச்சை அளித்து, முதுமையில் ஏற்படும் இயலாமையைத் தவிர்க்க முடியும்.

முதுமைப் பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி, உடற்பயிற்சிக்கு உண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், பக்கவாதம் ஏற்படுவதை ஓரளவிற்கு தடுக்க முடியும். மேலும், மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து, மறதி நோயும் வராமல் காக்கலாம்.
தியானம், யோகா பயிற்சி
தொடர்ந்து தியானம் மற்றும் பிராணாயாமம் பயிற்சி செய்பவர்களுக்கு, மனச்சோர்வோ, மறதி நோயோ வருவதில்லை. மேலும், ‘பார்க்கின்சன்ஸ்’ நோய் உள்ளவர்களுக்கு, யோகா பயிற்சி மூலம் கை நடுக்கமும், தசை இறுக்கமும் வெகுவாக குறைகிறது.
ஆரம்ப நிலையில் உள்ள பார்க்கின்சன்ஸ் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதால், இயலாமையைத் தவிர்த்து, தன் சுய தேவைகளை தானே செய்து கொள்ள முடியும். உரிய நேரத்தில் தொடர்பு கொண்டால், பிசியோதெரபிஸ்ட், வீட்டிற்கே வந்து நோயாளிக்கு தக்க சிகிச்சை அளிப்பார்.
நோயாளிக்கு தேவையான கைத்தடி, நடை வண்டி, சக்கர நாற்காலி, படுக்கை போன்ற உபகரணங்களை வழங்கவும் ஏற்பாடு செய்வார்.
சொந்தக்காலில் நிற்பது
எவ்வளவு வயதானாலும், குழந்தை மனநிலையில் இருக்கவே பலரும் விரும்புவர். ‘நம்மை மற்றவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்; அரவணைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற ஆசை இருந்தால், நீங்கள், மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய நிலையே உருவாகும். இதனால், உங்கள் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு வந்து விடும். எந்தவொரு சின்ன வேலையாக இருந்தாலும், யாருடைய துணையும் இல்லாமல், நீங்களாகவே செய்யப் பழகுங்கள்.
தனிமையை தவிர்த்தல்
முதுமையின் முதல் விரோதி தனிமை. மனச்சோர்வு, மறதி நோயால் பாதிக்கப்படுவதற்கு, தனிமை முக்கிய பங்கு வகிக்கிறது. முதுமையின் மடியில், தனிமையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு, மூப்பின் மோசமான விளைவுகள், இரு மடங்கு அதிகமாக ஏற்படக் கூடும் என்பது, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்து. எதைச் செய்தாவது தனிமையைத் தவிர்க்க வேண்டும்.
‘வயதாகி விட்டது; இனி தொல்லைகள் வருவது இயல்பு’ என்று எண்ண வேண்டாம். தொல்லைகளை தவிர்த்து, இயலாமை எண்ணம் வருவதை தடுக்க முடியும் அல்லது அதற்கு தக்க சிகிச்சை அளிக்க முடியும். இதற்குரிய முயற்சியை, நடுத்தர வயதிலிருந்தே துவங்க வேண்டும்.
முறைப்படி பரிசோதனை, தினமும் உடற்பயிற்சி, சிறுதானியங்கள் அடங்கிய உணவுப் பழக்கம், தடுப்பூசி போட்டுக் கொள்வது, தினமும் தியானம் செய்வது, முடிந்தளவிற்கு சொந்தக்காலில் நிற்பது, இதோடு தேவையான பண வசதியை வைத்துக் கொண்டால், முதுமையில் ஏற்படும் இயலாமையை விரட்டி, பிறர் உதவியின்றி சொந்தக்காலில் நிற்க முடியும்!

டாக்டர் வி.எஸ்.நடராஜன்,
முதியோர் நல மருத்துவர், சென்னை-.

%d bloggers like this: