சன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்!

நீங்கள் சன்ஸ்க்ரீன் லோஷனைத் தினம் பயன்படுத்துபவரா? கரு பாதிப்பை எற்படுத்தும் 3 முக்கிய இரசாயன பொருட்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்!

நம்மில் பலர் தினம் பயன்படுத்தும் பிரபல சன்ஸ்க்ரீன் லோஷன்களில் உள்ள வேதிபொருட்கள் மூலம் கருவுறாமை பாதிப்பு மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்குப் பிறப்பு குறைபாடுகள் எற்படக்கூடிய ஆபத்து உள்ளதாக ஹாங்காங்கைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டு காலமாக, பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் ஜீப்ரா மீன்கள் எனப்படும் ஒரு வகை மீன் மற்றும் ஹாங்காங் கடற்கரையில் 30 இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கடல்நீர் மாதிரிகள், கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

“ஜீப்ரா மீன்களின் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மரபணு அமைப்பு மனிதர்களின் மரபணு அமைப்பை ஒத்திருப்பதால், மனிதர்களுக்கு உணவு சங்கிலியுடன் கடக்கும் இந்த மாசுபடுதலின் விளைவு மற்றும் மனித வளத்தின் மீதான நீண்ட கால தாக்கம் ஆகியவற்றைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறியுள்ளார், பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியரான கெல்வின் லியுங் சீஸ்-யின்.

பென்சோபினோன் -3 (பிபி -3), எத்தியில்சைல் மெத்தோக்சைசிமமேட் அமிலம் (ஈ.எச்.எம்.சி) மற்றும் எக்டோகிரிலீன் (ஒ.சி.சி) ஆகிய மூன்று அல்ட்ரா வயலட் (யு.வி) வடிகட்டிகளை ஆய்வு மாதிரிகளில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை பிரபல சன்ஸ்க்ரீன் லோஷன்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் சராசரி 6,000 முதல் 14,000 டன் அளவிலான சன்ஸ்க்ரீன் படிமங்கள் கடலில் கலக்கப்படுவதாக 2015 ஆண்டில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. இவை நேரடியாக கடலில் கலப்பவையாகவும் கழிவு மூலம் கடலில் கலப்பவையாகவும் உள்ளது. இந்த இரசாயின கழிவுகள் கடல்வாழ் உயிர்களால் உட்கொள்ளப்பட்டு அவற்றின் உற்பத்தி திறனை பாதிப்பதாக ஹாங்காங்கில் நடந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பல ஆண்டுகாலமாக இந்த நச்சு கலப்பு கடலில் கலக்கப்பட்டு வந்துள்ளதால், இது கடல் உணவுகள் மூலமாக மனிதருக்கும் பரவி கருச்சிதைவு, கருதரிப்பதில் சிக்கல், கருவில் உள்ள குழந்தைக்குப் பிறப்பு குறைபாடுகள் போன்ற அபாயங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பேராசியர் லியுங், இரசாயனங்கள் உள்ள சன்ஸ்க்ரீன்களுக்குப் பதிலாக மக்கள் இயற்கையான, கனிம அடிப்படையிலான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும் சூரியக்கதிர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஆடைகளை அணியவும் பரிந்துரைக்கிறார்.
எதிர்காலத்தில், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலியல் மீது UV வடிகட்டிகளின் நீண்ட கால தாக்கத்தை தெரிந்துகொள்வதற்கு மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப் போவதாக லியூங்கின் குழு திட்டமிட்டுள்ளது.

%d bloggers like this: