இன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்?!’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா

பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் வருகைக்காகவும் இன்னொரு முக்கியமானவரின் பதிலுக்காகவும் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் யார்… யாருடன் கூட்டணி என்ற விவாதங்கள் அரசியல் களத்தில் அரங்கேறத் தொடங்கிவிட்டன. ` தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த இடத்திலும் நாங்கள் பேசவில்லை. தினகரன், பா.ஜ.க குறித்தும் தவறாகப் பேசுகிறார்கள்’ என நேற்று கமலாலயத்தில்

கொந்தளித்திருக்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை. 

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைக் கடந்த 8-ம் தேதி சந்தித்துப் பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கத்துக்கு மாறான உற்சாகத்துடன் முதல்வர் இருந்ததால், கூட்டணி தொடர்பாகத்தான் பிரதமரிடம் பேசியதாகத் தகவல் வெளியானது. இந்தச் சந்திப்பில் தமிழக நலன்கள் குறித்துப் பேசப்பட்டதாக விளக்கப்பட்டது. இரண்டு தரப்பிலும் கூட்டணி தொடர்பாக எந்தப் பேட்டிகளும் வெளியாகவில்லை. இந்நிலையில், ` எடப்பாடி பழனிசாமியை பிரதமர் சந்தித்ததே, தி.மு.க-வுக்கு சில விஷயங்களை உணர்த்தத்தான். இப்போதும் தி.மு.க தங்கள் அணியைத் தேடி வரும் என பா.ஜ.க தலைவர்கள் நம்புகின்றனர்’ என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது.

இதுகுறித்து தமிழக பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று ஆதரவாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் தமிழிசை. தி.மு.க கூட்டணி குறித்து அப்போது விவாதம் கிளம்பவே, ` இப்படியெல்லாம் யார் தகவல் பரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. கூட்டணிக்காக தி.மு.கவிடம் கேட்டோம் என யார் சொன்னார்கள். இதுகுறித்து ஸ்டாலினிடம் பேசினாரா பிரதமர். அப்படியொரு பேச்சே நடக்காதபோது, இப்படியெல்லாம் ஏன் தகவல் வருகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிந்த பிறகுதான் கூட்டணியைப் பற்றியே நாங்கள் பேசத் தொடங்குவோம். அதிலும், அமித் ஷா சொன்ன பிறகுதான் அனைத்தும் முடிவாகும். தமிழகத்தில் பலவிதங்களில் கூட்டணி உருவாகலாம்.

இதற்கிடையில், அ.தி.மு.கவோடு கூட்டணி; தினகரனை இணைப்பதற்கு முயற்சி என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். ஒரு பொய்க்கு அடுத்தபடியாக இன்னொரு பொய்யான தகவல் பரவுகிறது. நாங்கள் எப்படி தினகரனோடு சமசரம் ஆக முடியும். அத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் நாங்கள் சசிகலாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவில்லை. சசிகலா பக்கம் அத்தனை எம்.பி-க்கள் இருந்தும் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளே போனதும் நிலைமை மாறிவிட்டது. இப்போது தினகரன் பக்கம் இருப்பது தி.மு.க வாக்குகள்தான்.

மோடி எதிர்ப்பில் வரக் கூடிய வாக்குகளும் தினகரனுக்குத்தான் போகப் போகிறது. இப்படியொரு சூழல் இருக்கும்போது, தினகரனோடு நாங்கள் ஏன் சமசரம் தேடப் போகிறோம். `தினகரன் உள்ளே போய்விடுவார்’ என ஸ்டாலின் கூறியபோது, ` அவர் உள்ளே போக மாட்டார்’ என உறுதியாகக் கூறினேன். தினகரன் பக்கம் அவரது சொந்த சமுதாய வாக்குகளும் வந்துவிட்டன. இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஸ்டாலின்தான். இப்படியிருக்கும்போது, ` நாங்கள் ஸ்டாலினுடன் கூட்டணி குறித்துப் பேசுகிறோம்’ எனத் தகவல் பரப்புவது எந்த வகையிலும் நியாயமல்ல’ எனக் கொதிப்போடு பேசியிருக்கிறார். 

“ எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நடத்திய சந்திப்பில் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. இந்த சந்திப்பின் மூலம், `கூட்டணி முடிவாகவில்லை’ என தி.மு.கவுக்கு உணர்த்திவிட்டனர். பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் வருகைக்காகவும் இன்னொரு முக்கியமானவரின் பதிலுக்காகவும் காத்திருக்கிறது. தேர்தல் நெருக்கத்தில்தான் அனைத்தும் முடிவாகும். `எடப்பாடியோடுதான் கூட்டணி’ என பா.ஜ.க இன்னமும் முடிவு செய்யவில்லை. கடந்த சில நாள்களாக ஆளுநர், தலைமைச் செயலாளர் ஆகியோரை ஸ்டாலின் விமர்சித்து வருவதையும் பா.ஜ.க மேலிடம் கவனித்து வருகிறது. இன்னும் எத்தனை நாள் எதிர்ப்பு மனநிலையில் ஸ்டாலின் இருப்பார் எனவும் கணக்குப் போடுகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்” என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

%d bloggers like this: