டெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி!

போகிற போக்கைப் பார்த்தால், அடுத்தடுத்த தேர்தல்களில் ‘நோட்டா’ முன்னிலை பெற்று, அத்தனை அரசியல் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது’’ என்ற பீடிகையுடன் நுழைந்தார் கழுகார்.
“நான்கு மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், நோட்டா பற்றி நீர் பேச ஆரம்பித்துவிட்டீர். ஏதும் ஸ்லீப்பர் செல் வேலைகள் நடக்கின்றனவா?’’ என்று கேட்டோம்.

“அப்படித்தான் என வைத்துக்கொள்ளும். ‘நோட்டா’ திரைப்படத்துக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் விடாமல் கைதட்டி ரசிக்கிறது இளைய பட்டாளம். 2016-ல் ஜெயலலிதா நோயில் வீழ்ந்தது தொடங்கி, இன்றுவரையிலான தமிழக அரசியல் நிகழ்வுகளை இரண்டரை மணி நேரத்துக்குள் காட்சிப்படுத்தியுள்ளனர். நிஜங்களை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி சபாஷ் போட வைக்கிறது படக்குழு.’’
“அடடே, ஆனந்த விகடன் சினிமா விமர்சனத்துக்கான தகவல்களையெல்லாம் இங்கே சொல்ல ஆரம்பித்துவிட்டீரே!’’
“இது அரசியல் படம். நாமும் பேசித்தானே ஆகவேண்டும்’’ என்ற கழுகார், “சரி, இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் – தினகரன் முக்கோண மோதல் செய்திகளைக் கேளும்’’ என்றபடி தயாரானார்.
“பன்னீர் தன்னைத் தனியாக வந்து ஒரு தொழிலதிபரின் வீட்டில் சந்தித்தார் என்று தினகரன் கொளுத்திப்போட்டாலும் போட்டார்… டெல்லி வரை பற்றிக்கொண்டுவிட்டது. இதனால் இப்போதைக்கு லாபமடைந்தவர், எடப்பாடி பழனிசாமிதான். கூடவே இருந்து குடைச்சல் கொடுத்த பன்னீருக்கு தினகரன் மூலமாகவே செக் வைக்கப்பட்டுவிட்டது. வேறு வழியே இல்லாமல், ‘ஆமாம், சந்தித்தது உண்மைதான். கட்சியைக் காப்பாற்றுவதற்காகச் சந்தித்தேன். ஆனால், இது எடப்பாடியுடன் இணைவதற்கு முன்பாக நடந்தது. அங்கே இணைந்த பிறகு, தினகரனுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என்று இப்போது சொல்லியிருக்கிறார் பன்னீர்.’’

“ஆனால், கடந்த வாரத்தில்கூட அதே தொழிலதி பரின் வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடானதாக தினகரன் மீண்டும் கொளுத்திப் போட்டிருக்கிறாரே?’’
“அது உண்மைதான். ஆனால், இது தினகரன் கொளுத்திப்போட்ட திரியா… அல்லது தங்க தமிழ்ச்செல்வன் வைத்த குண்டா என்று தனியாக ஒரு ட்ராக் ஒடிக்கொண்டிருக்கிறது. அதற்கு, அப்புறம் வருகிறேன். விரைவில் பன்னீரின் பதவி பறிபோகும் அளவுக்கு டெல்லி பி.ஜே.பி மேலிடத்தில் கொதிக்க ஆரம்பித்திருப்பதுதான் ஹைலைட். ‘என் பக்கம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். 25-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் பன்னீர் சொன்னதை நம்பித்தான் பி.ஜே.பி மேலிடம் ஆரம்பத்தில் பன்னீருக்கு பச்சைக்கொடி காட்டியது. பத்து எம்.எல்.ஏ-க்களைத் தேற்றுவதற்குக்கூட பன்னீருக்குத் தெம்பில்லை என்பது போகப்போகத்தான் டெல்லிக்கு புரிந்தது. அப்புறம் படாதபாடுபட்டு அவர் துணை முதல்வர் ஆனார்.’’
“இதெல்லாம் தெரிந்த கதைதானே.’’
“கேளும்… பெயருக்குத்தான் துணை முதல்வர். ஆனால், நிஜத்தில் அவர் காற்றுப்போன பலூனாகி விட்டார். எடப்பாடி தரப்பிலும் மரியாதை இல்லை… டெல்லியிலும் மரியாதை இல்லை. முட்டி மோதியும் தனக்கான தேவைகளை அவரால் நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில், ‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்கிற முடிவுக்கு பன்னீர் வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தன் நண்பரான கோட்டூர்புரத்து கான்ட்ராக்டர் மூலம் இரண்டாவது தடவையாக தினகரனிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நாள் குறித்துள்ளார்.’’
“முதல்முறையாக சந்தித்த கதையை முதலில் சொல்லும்”
“அது சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு, எடப்பாடி தன் கையை உயர்த்தத் தொடங்கிய நேரம். எடப்பாடி அணிக்கு 60 நாள் கெடு கொடுத்திருந்தார் தினகரன். அப்போதுதான் முதல்முறையாக தினகரனும் பன்னீரும் சந்தித்துள்ளனர். பழம் நழுவி பாலில் விழுவதுபோல பன்னீரே வந்துவிழுகிறது என குஷியாகிவிட்டார் தினகரன். அப்போது தர்மயுத்தம் தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருந்தார் பன்னீர். 2017, ஜூலை 12-ம் தேதி இரவு 11 மணிக்கு பன்னீரின் மருமகன் காரில், உதவியாளர் ரமேஷுடன் அந்த கான்ட்ராக்டர் வீட்டுக்குப் பன்னீர் சென்றுள்ளார். இருபது நிமிடங்கள் மட்டுமே பேசியதாக தினகரன் இப்போது சொல்கிறார். ஆனால், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்ததாம் பேச்சுவார்த்தை. அப்போது தனக்கே உரிய பணிவைக் காட்டிய பன்னீர், ‘சார், ஆறு மாதங்கள் மட்டும் நான் முதல்வர் பதவியில் இருந்துகொள்கிறேன். உங்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என ஒருபோதும் நினைக்கவில்லை’ என்று வார்த்தைக்கு வார்த்தை ‘சார்’ போட்டாராம்.’’
“பணிவோ பணிவு… பிரமாதம்!’’
“நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், மறுநாளே டெல்லியிலிருந்து ஒரு தகவல் வர, ஷாக் ஆகிப்போனாராம் பன்னீர். இந்த சந்திப்பு குறித்து மோப்பம் பிடித்தது போலவே இருந்திருக்கிறது அந்தத் தகவல். அதைத் தொடர்ந்துதான் அந்தப் பேச்சுவார்த்தையை மொத்தமாக மறைத்துவிட்டு, எடப்பாடி அணியுடன் கைகோத்துள்ளார். பழையபடி சசிகலா, தினகரன் குடும்பத்தினருக்கு எதிரான விமர்சனங்களையும் ஆரம்பித்துள்ளார்.’’
“இப்போது அத்தனையும் வம்பாகப் போய்விட்டதே’’
“துணை முதல்வராக இருந்தாலும், தனக்காகவும் தன் ஆட்களுக்காகவும் எதையும் செய்யமுடியாத சூழல். கூடவே, டெல்லியின் தயவும் இல்லாத நிலையில்தான், இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடானது. ஆனால், அது நடக்கவில்லை. சந்திப்புக்கான நேரத்தை தினகரனிடம் அந்த கான்ட்ராக்டர் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று கேட்டுள்ளார். தினகரன் அப்போது பிடி கொடுக்கவில்லையாம். ‘வெயிட் பண்ணுங்க’ என்று மட்டும் சொல்லியுள்ளார். ஆனால், அடுத்தடுத்த நாள்களில் பன்னீரின் பேச்சுக்கள், தினகரனை டென்ஷனாக்கியுள்ளன. செப்டம்பர் 30 அன்று சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், தினகரன்மீது பன்னீர் ஓவராகவே தாக்குதலைத் தொடுத்தார். ‘20 ரூபாய் நோட்டுக்காரர்’ என தினகரனைக் குறிப்பிட்ட பன்னீர், ‘தற்போது பெட்டிக்கடைகளில் 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள்.
ஆர்.கே.நகரிலேயே இந்த நோட்டு செல்லலை… தமிழ்நாட்டுல யாருமே இந்த நோட்டை வாங்குறது கிடையாதுப்பா…’ என்று கடைக்காரர்கள் கூறிவிடுகிறார்கள்’ என்றெல்லாம் நக்கல் அடித்தார் பன்னீர். கடுப்பான தினகரன் தரப்பு, ‘இனியும் பொறுப்பதில் பிரயோஜனம் இல்லை’ என்று பொங்க ஆரம்பித்தது. இதன் விளைவாகத்தான் தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக ‘சந்திப்பு’ ரகசியம் உடைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்துக்காக மதுரைக்கு குஷியாகச் சென்ற நேரத்தில் பன்னீரின் இமேஜ் உடைக்கப்பட்டது. சும்மா ஒன்றும் அவர்கள் விஷயத்தை உடைத்துவிடவில்லை. கோட்டூர்புரம் சந்திப்பின்போது பன்னீர் நடந்து வருவது, போவது என எல்லாவற்றையும் தினகரன் டீம் வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாம்.’’
“எடப்பாடி தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லையே!’’
‘‘இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? பி.ஜே.பி தரப்பிலும் பன்னீர் மீது நம்பிக்கையை இழந்து வெகுநாள்களாகின்றன. ‘தன்கூட வந்தவர்களில் பாண்டியராஜன் ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவியை வாங்கிக்கொடுத்தார். அதுவும் அவர் ஏற்கெனவே இழந்தது இல்லாமல், சாதாரண துறை. தனக்கு மட்டும் வகையான பதவிகளாக வாங்கிக்கொண்டார்’ என்று குமுறல் குரல்கள் ஆதரவாளர்கள் மத்தியில் கேட்கின்றன. நம்பி வந்த மற்றவர்களுக்கும் பதவிகள் ஏதுமில்லை என்பதால் பலரும் தினகரன் மற்றும் எடப்பாடி பக்கம் தாவ ஆரம்பித்துள்ளனர். கிட்டத்தட்ட தனி மரமாகிவிட்டார் பன்னீர். எல்லாவற்றையும் மௌனமாக ரசித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி.’’

“இது எடப்பாடிக்காக தினகரன் தரப்பு செய்துகொடுத்த ரகசிய அசைன்மென்ட்டோ?’’
“திட்டம் போட்டு செய்தது போலத் தெரியவில்லை. ஆனால், பன்னீர் க்ளீன் போல்டு ஆவதில் தினகரன், எடப்பாடி என இருவருக்குமே செம குஷிதான்.’’
“பன்னீரின் தம்பி ராஜா, தினகரனைச் சந்தித்ததாக சொல்கிறார்களே?’’
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆர்.கே.நகரில் தினகரன் வழக்கமாக தங்கும் அப்பார்ட்மென்ட்டில்தான் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது ராஜா உருக்கமாக, ‘அண்ணனின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எப்போதும்போல, அண்ணனை அரவணைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னாராம். ஆனால், ‘எதுவானாலும் நேரடியாக வந்து பேசச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் தினகரன்”.
“இத்தனை களேபரங்களுக்கு இடையில் கவர்னரை எடப்பாடி சந்தித்துப் பேசியிருக்கிறாரே?’’
“ஏற்கெனவே திருப்பதியில் வைத்து துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் தொடர்ச்சியாகத்தான் கவர்னரைச் சந்தித்திருக்கிறார். இதில் 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு, பல்கலைக்கழக இடம் விவகாரம் என்று பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். இறுதியாக, தற்போது டெல்லியில் பிரதமருடனான சந்திப்பு நடந்துள்ளது. பன்னீர் தரப்பின் இரட்டை வேடம் குறித்து விரிவாகவே டெல்லி பி.ஜே.பி தலைவர்களிடம் எடுத்துரைத்தாராம் முதல்வர். ஏற்கெனவே விஷயம் தெரிந்து பன்னீர் மீது டெல்லி பி.ஜே.பி தரப்பு கோபத்திலிருக்க… தன் பங்குக்கு எண்ணெய் ஊற்றியிருக்கிறார் எடப்பாடி. இதையடுத்து, அமைச்சரவையிலிருந்தே பன்னீர் சீக்கிரம் கழட்டிவிடப்படுவார் என்று தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் தீர்ப்பையொட்டி இது நிகழக்கூடும். டெல்லி க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால், தெம்பாக ஊர் திரும்பியுள்ளாராம் எடப்பாடி’’ என்றபடி கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,
“தங்க தமிழ்ச்செல்வன் போட்ட குண்டு என்று ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா? அந்த விஷயத்துக்கு வருகிறேன். பன்னீர் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இருவருமே தேனி மாவட்டத்தில் அரசியல் செய்பவர்கள். பெரியகுளம் எம்.பி தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது இருவரும் அவருக்குப் பக்கபலமாக நின்றார்கள். இருவருக்குமே தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் கடும் பகை. இதில் ஒவ்வொரு முறையும் ஜெயித்து, அமைச்சர், முதல்வர் என உயர்ந்தார் பன்னீர். இப்போது மீண்டும் தினகரனிடம் பன்னீர் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருப்பதை தங்க தமிழ்ச்செல்வன் ரசிக்கவில்லை. பழைய பகையைத் தீர்த்துக்கொள்ளும் வகையிலும், மீண்டும் தினகரனுடன் நெருங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் தங்க தமிழ்ச்செல்வனே இந்த விஷயங்களையெல்லாம் வெளியிட்டுவிட்டார். வேறு வழியில்லாமல் தினகரனும் வழிமொழிந்துவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது’’ என்றபடியே பறந்தார்.


எம்.பி-க்கு தம்பி பாப்பா!
‘ஒ
ரு எம்.பி-க்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறது’ என்று தினகரன் பக்கம் இருக்கும் வெற்றிவேல் ஒரு விஷயத்தைத் தட்டிவிட, ‘யார் அந்த எம்.பி… அவரின் அப்பா யார்’ என்றெல்லாம் விவாத மேடை கணக்காக பேசிக்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவி ஒருவர், தங்களுடைய வீட்டுப் பிரச்னை தொடர்பாக தன் அம்மாவுடன் வந்து அந்த எம்.பி-யின் அப்பாவைச் சந்தித்துள்ளார். அதன்பின் அந்த மாணவியை நெருங்கிவிட்டாராம் அந்த எம்.பி-யின் தந்தை. அந்தப் பெண்ணை திண்டுக்கல் அழைத்துச் சென்று தங்கியது, போனில் பெண்ணின் குடும்பத்தாருடன் அவர் பேசியது என எல்லாவற்றையும் கடந்த ஆறேழு மாதங்களாக ஃபாலோ செய்து திரட்டி வைத்திருக்கிறது தினகரன் தரப்பு.
இதெல்லாம் எம்.பி-யின் தந்தைக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பமானபோது, பிரச்னை ஆரம்பமாகியுள்ளது. ‘கலைத்துவிடு… வீடு வாங்கித் தருகிறேன்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார் எம்.பி-யின் தந்தை. ஆனால், சமாதானம் ஆகவில்லை. சட்டப்பூர்வமான அங்கீகாரம் வேண்டும் என்பதால் பிடிவாதமாகக் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். அந்தக் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் எம்.பி-யின் தந்தை பெயரை சேர்த்துள்ளனர். இப்போது அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்காவிட்டால், அனைத்துத் தகவல்களையும் வெளியிடுவேன் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் வெற்றிவேல். எதற்கெடுத்தாலும் மைக்கைப் பிடித்து மணிக்கணக்காக முழங்குவதில் வல்லவரான அந்த எம்.பி-யின் தந்தை, தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பவர். இதற்குப் பழிதீர்க்க இந்த விஷயம் கிடைத்த குஷியில் இருக்கிறது தினகரன் தரப்பு

%d bloggers like this: